Monday, January 13, 2014

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

புராணப் புனைவுக் கதைகள்
தந்த நம்பிக்கையில்
கொண்டாடும் நாட்களை விட

சிறப்பென  உலகு சொல்லும்
நாட்களை மதித்துக்
கொண்டாடும் நாட்களை விட

அறிந்தோ அறியாமலோ சேர்ந்த
கழிவுகளைக் கழித்துக்
கொண்டாடும் இந்த நாளே

நம் உலக வாழ்வுக்கு
கண்கண்ட சக்தியைக்  வணங்கிக்
கொண்டாடும்  இந்த நாளே

விலங்கினமாயினும்
நம்முடன் உழைத்துத் தவித்ததைக்
கொண்டாடும் இந்த நாளே

நம்முடனே நித்தமிருந்து
நம் உயர்வுக்கு உதவுவோரைக் கண்டுக்
கொண்டாடும் இந்த நாளே

உலகத் திருநாள் எதனினும்
உன்னதத் திருநாள் என்பதை
விளக்கிச் சொல்ல வேண்டுமோ ?

தமிழனின் உன்னதத்தை உலகினுக்கு
உணர்த்திடும் திருநாள் என்பதை
எடுத்துச் சொல்ல வேண்டுமோ ?


(பதிவுலக உறவுகள் அனைவருக்கும்
அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் )

Saturday, January 11, 2014

அதீதம்

மாணவிகளை விடத் தன்னை
இளமையாகக் காட்டிக் கொள்ள
அதிக ஒப்பனை செய்து கொள்ளும்
கல்லூரிப் பேராசிரியை
கொஞ்சம் கூடுதல் வயதானவராகத் தெரிய

குழந்தைகளுடன் குழந்தையாய்
வயது ஸ்மரணையின்றி
எளிமையாய் ஆடையணிந்த அந்த
பள்ளி ஆசிரியையோ
இன்னமும் இளமையாய்த்தான் தெரிகிறார்

வாசகனிடம்  தன்
பாண்டித்தியத்தைப் பறைசாற்ற
பல்லுடைக்கும் வார்த்தைகளைக் கொண்டு
புரியாக் கவிபடைக்கும் அந்தக் கவிஞர்
அனைவருக்கும்அன்னியரைப் போலப்பட

புரிந்ததை அனைவரும்
புரிந்து கொள்ளும்படிச் சொல்லுதலே
தன் பாணியாகக் கொண்டப் படைப்பாளியோ
ஏற்கத்தக்கவராய் மட்டுமின்றி
இணைந்து செல்லத் தக்கவாராயும் தெரிகிறார்

அதீதம் என்பதற்கான பொருள்
அகராதியில் "கடந்தது- மேற்பட்டது " என இருக்க
யோசித்துப்பார்க்கையில் அதன் சரியான பொருள்
" அர்த்தமின்மை - முதிர்சியின்மை"
என இருத்தலே சரியெனப்படுகிறது எனக்கு

Thursday, January 9, 2014

பதிவர்களாகிய நமக்கு

காலச் சுற்றினுள்
அடங்காது தனித்து நிற்கும்
ஒரு தினத்தில் வாழ்ந்து பார்க்கவும்
அதன் காரணமாய் காலம் கடக்கவும்

உடல் கூட்டை
உடைத்து வெளியேறும் உயிர்பறவையை
ஒரு நொடியேனும் விழியால் காணவும்
அதன் மூலம் அழிவினை அழிக்கவும்

அண்ட சராசரங்களை
இம்மி பிசகாது இயக்கும் அந்த மாயக் காரனை
கை குலுக்கிப் பாராட்டி மகிழவும்
அவன் மூலமாகவே அவனை அறியவும்

பல காலம்
முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருப்பினும்
நாம் நம்பிக்கையை இழந்தா நிற்கிறோம் ?

வர்ணங்களையே
நீர்த்துப் போகச் செய்யும்
அழகிய ஓவியம் படைக்கத் தெரிந்த
ஓவியர்களாகிய நமக்கு

வார்த்தைகளையே
அர்த்தமற்றதாக்கிப் போகும்
வண்ணக் கவிதைகள் படைக்கத் தெரிந்த
கவிஞர்களாகிய நமக்கு

கற்பனைகளையே
அதிஅற்புத  படைப்புகளாக
உருகொடுத்து அனுபவிக்கத் தெரிந்த
பதிவர்களாகிய நமக்கு

புரியாத புதிர்கள் எல்லாம்
என்றுமேயொரு   பொருட்டா என்ன ?
இன்னும் கொஞ்சம் முயன்றால்
ஊழினையும் உட்பக்கம் காணல்
அத்தனை கடினமா என்ன ?

Tuesday, January 7, 2014

ஈடு இணையற்ற கவி நீதான் இனி

வாக்கியக் குச்சிகளை ஒடித்து
உன் மனோலயப்படி
சுள்ளிகளாக்கி பரப்பி வை
நீள ஒழுங்கு ஒரு பொருட்டில்லை

வார்த்தைகளை
ஊதி ஊதிப் பெரிதாக்கி உப்பவை
இரத்தசோகைப் பிடித்தவன் முகம் போலது
வாக்கியத்திற்கு பொருந்தாவிடினும்
அது ஒரு பொருட்டில்லை

உன் படைப்பை எப்போதும்
ஒரு புதர் போல்
ஒரு புதிர்போல் பராமரி
எதையும் விளங்கச் சொல்லி
சராசரியாகிப் போகாதே

புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்

எவனை மிதித்தோ
எவனை அணைத்தோ
வெளிச்ச மேடையில் ஒரு இடம் பிடி
சந்தேகமே இல்லை
தற்காலக் கவி உலகில்
ஈடு இணையற்ற கவி நீதான் இனி

Sunday, January 5, 2014

நட்பெனும் போர்வை

நீ கேட்கக் கூடாது என
மறைக்கிற எல்லாம்
எனக்குத் தெளிவாகத் தெரிந்தும்
நான் கேட்காதே தொடர்கிறேன்

நீ விரும்ப வேண்டிய
ஆயினும் விரும்பாதவைகளை
தவறியும் நான் உனக்கு
தெரிவிக்க விரும்புவதில்லை

நீ கேடு விளைவிக்கிறவைகளை
கண்முன்னே தொடர்கிறபோதும்
தடுக்க சிறிதும் முயலாது
நான் பார்வையாளனாகவே இருக்கிறேன்

பயனுள்ளவைகளைவிட
பயனற்றதாயினும்
சுவாரஸ்யமானவைகளைப் பகிர்வதிலேயே
நாம் கூடுதல் மகிழ்வு கொள்கிறோம்

உடலில்படாது ஓங்கி வீசும்
ஆடிக்காற்றினைப் போல
நம் சம்பந்தப்படாத உலக விஷயங்களை
நாம் பல மணி நேரம் விவாதிக்கிறோம்

என்ன செய்வது
நட்பு எனும் போர்வையில்
நாம் கொண்டிருக்கிற தொடர்பினை
விடாது தொடர்வதற்கு
இந்த மாய்மாலங்களெல்லாம்
இக்காலச் சூழலில்
அவசியத் தேவையாகத்தானிருக்கிறது

Saturday, January 4, 2014

அது "வாகிப் போகும் அவன்

காலத்திற்கான குறியீடு
தானே என்னும் கர்வத்தில்
கொஞ்சம் முன்பின்னாக
அந்த மணிகாட்டி நடக்க
எரிச்சலில் நிறுத்திவைத்தேன் அதை

காலம் சிரித்தபடி எப்போதும்போல்
நகர்ந்து கொண்டிருக்க
ஒரு நொடியில்
பயனற்றதாகிப் போனது
அந்தக் குறிகாட்டி

மன உணர்வுகளின்
உன்னத வெளிப்பாடு
என்மூலம் மட்டுமே
நிச்சயம் சாத்தியம் என
எகத்தாளமிட்டது கவிதை

ஒரு பார்வையற்றவனின்
உன்னத இசையில்
பெருங்கூட்டமே கண்கலங்கி நிற்க
 கர்வம் தொலைத்த கவிதைச் சொன்னது
" நான் அற்பச் சுமைதாங்கி மட்டுமே"

பதவியும் வசதியும்
தந்த கர்வத்தில்
எல்லாம் நானே என
எல்லாம் எனக்குள் என
எகிறிக் குதித்தான் அவன்

கவனியாதிருந்தும்
சீராயிருந்த மூச்சுக்காற்று
சட்டென சுழிமாறிப் போக
உடல்விட்டு திசை மாறிப்போக
ஒரு நொடியில்"அது "வாகிப் போனான் அவன்

குறியீடுகள் சுமைதாங்கிகள்
அளவீடுகளின் எல்லையினை
குழப்பமின்றி  அறிந்தவன்
வாழத்தெரிந்தவானாகிப்போக
அதை அறியாதவனே  அற்பனாகிப்போகிறான்

Wednesday, January 1, 2014

பொருள் என்பதற்கான பொருள்

பொருட்களின்
 பயன்பொறு த்து
அதன் பயன்பாடுபொறு த்து
 புனிதம் பொறு த்து
அதனதன் இடத்தில்
அந்த  அந்தப் பொருட்களை
தன் செயல்களுக்கு  உதவும்படி
வைப்பதுவும்
தன் வளர்ச்சிக்கு  அதனை
முறையாகப் பயன்படுத்துவதுவே
புத்திசாலித்தனம்

 மாறாக
 இடம் மாற்றிவைப்பது
குழப்பத்தை மட்டுமல்ல
கால விரயத்தை மட்டுமல்ல
பொருட்களின் பயன்பாட்டை மட்டுமல்ல
அந்தப் பொருளையே கூட
அதிகம் பாதிக்கக் கூடும்
அதன் மதிப்பையே கூட
முற்றாக அழிக்கக் கூடும்

ஆயினும்
பொருட்களுக்கு
கூடுதல்  இடத்தையும்
 எல்லா  இடத்தையும்
கொடுத்துவிட்டு
இடமின்றித் திரிவதும்
தடுமாறித்  தவிப்பதுவும்
நிச்சயம் புத்திசாலித்தனமில்லை

பொருள் என்பதற்கான பொருள்
கார் சாவி, செருப்பு ,பேனா எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?
அது ஜாதி மதம் அரசியல்
எனக் கூட
இருக்கலாம்தானே !

இடம் என்பதற்கானப பொருள்
வீடு வாசல் கோவில் மைதானம் எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?  
அது சுயம்  குடும்பம்  உறவுகள்  சமூகம்
எனக் கூட   இருக்கலாம் தானே !