Thursday, October 23, 2014

பதிவர் சந்திப்பு,

தாமரைப் பூத்த தடாகம்
பார்க்கையில் கொள்ளை அழகுதான்
ஆயினும் அது தேக்கிவைத்திருக்கும் குளுமை
அதனினும் மிக அருமையானது
அது பார்வைக்குப் பிடிபடாதது
அந்த சொல்லுக்கு அடங்கா இனிமை
குளத்தினுள்  இறங்கிடத் துணிபவருக்குமட்டுமே
நிறைவாய் கிடைத்திட என்றும் சாத்தியம்

தத்தித் தவழும் குழந்தை
பார்க்கப் பார்க்க  அழகுதான்
ஆயினும் அது தன்னுள் கொண்டிருக்கும்
தெய்வீக மகிழ்வுப் பிரவாகம்
பார்வைக்குப் பிடிபடாதது
அதன் அருமை பெருமை
அதனை அள்ளிக் கொஞ்சத் தெரிந்தவர்கள் மட்டுமே
முழுதாய் அனுபவத் தறியச் சாத்தியம்

சன்னதிக்குள் காட்சிதரும் தெய்வம்
கண்கொள்ளா அருமைக் காட்சிதான்
அதனினும் அதன் அளவிடமுடியா அருட்திறம்
அறிவிற்குப் பிடிபடாததது
நிரூபிக்க இயலாதது
ஆயினும் அதன் அருளும் சக்தி
மாசற்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே
அறிந்து உணர்ந்து பெறச் சாத்தியம்

எழுத்தில் அறிந்த பதிவர்களை
எதிரில் காணுதல் மகிழ்வுதான்
அதனினும் அவர்தம் பண்பு நலம்
நட்புக்கென உயிர்தரும் உயர்குணம்
பதிவில் அறிய முடியாததே
விளக்கியும் புரிய முடியாததே
ஆயினும் அவர்தம் அருமை பெருமைதனை
சந்திப்பில் சந்தித்து  மகிழ்ந்திருப்போர் மட்டுமே
தெளிவாய்  முழுதாய் புரியச் சாத்தியம்

எனவே
பதிவர் அனைவரும் அவசியம் வருவீர்
சந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்

Wednesday, October 22, 2014

சம நிலை

சம நிலை தவறுகையில்தான் எல்லாம்
தாறுமாறாய்ப் போய்த் தொலைக்கிறது

யாருக்காக யாரை இழப்பதில்
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாதவரை இழந்து
இழக்கவேண்டியவரை
இழுத்து அணைத்துக் கொள்கிறோம்

எதனை எதற்காக இழப்பது
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாததை இழந்து
இழக்கவேண்டியதை
இழுத்துப் பிடித்துக் கொள்கிறோம்

போதையில் காமப்பசியில்
கோபத்தில் அதீத ஆசையில்
ஜாதி மத அரசியல் வெறியில்
சம நிலை தவறும் சாத்தியக் கூறுகள்
மிக மிக அதிகம் என்பதால்..

சம நிலை தவறுகையில்தான் எல்லாம்
தாறுமாறாகத்தான் போய்த்
தொலைக்கிறது என்பதால்

சம நிலை தவறச் செய்பவைகளைக்
கொஞ்சம் தள்ளியே வைக்கப் பழகுவோம்

சமநிலை பராமரித்தலே வாழ்வை
அர்த்தப்படுத்தும் என் உணர்ந்து தெளிவோம்

Deepavali kondattam

தீபாவளிக் கொண்டாட்டம்

தான் தன் சுகம் என வாழ்வதை விட
பிறர் சுகம்படக் காரணமாக இருந்து
அதைக் கண்டு மகிழ்தல் மிகச் சிறந்தது என்பதை
கொள்கையாகக் கொண்ட பல நண்பர்கள்
நான் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற
டிலைட் அரிமா சங்கத்தில்  அங்கத்தினர்களாக
உள்ளனர்

அவர்களது உதவியுடன் மதுரை தனக்கன்குளத்தில்
உள்ள உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளுடன்
தீபாவளி விருந்து உண்டு மகிழ்ந்தோம்
விருந்து நட்சித்திர ஹோட்டல் விருந்தினைவிட
மிகச் சுவையாக  இருந்தது (19'10.2014 )

அதேபோல் மதுரை மேலக்குயில்குடியில் உள்ள
மாணவ  மாணவிகளுக்கு இனிப்பு வழங்கியும்
பட்டாசுகள் வழங்கியும் மகிழ்வினைப் 
பகிர்ந்து கொண்டோம்.உற்றார் உறவினருடன்
வீட்டில் செய்து உண்ட இனிப்பினைவிட
இவர்களுடன் உண்டது மிகச் சிறப்பாக இருந்தது
(21.10.2014 )

இப்படிச் செய்ததை பகிர்வது நிச்சயம் தம்பட்டம்
அடித்துக் கொள்வதற்காக இல்லை.அனைவரும்
கொடுப்பதில் உள்ள சுகத்தை  கொடுத்து உணர்ந்து 
அவர்களும் பெரும்மகிழ்வுக் கொள்ளவேண்டும்
என்பதற்காகவே

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Monday, October 20, 2014

மதுரை-தெப்பக்குளம்-வரும் ஞாயிறு

மனம்திறந்து மிகமுயன்று-வரும்
இடர்களைப் புறம்தள்ளி
கனமானப் பதிவுகளைத்-தினம்
தந்தவர்கள் எல்லோரும்
இனம்நாடி வருகின்ற-மிக
இனிதான ஒருநாளே
மணமிக்க மதுரையது- காணும்-
மகிழ்வானப் பெரும்நாளே

பெண்ணிங்கு ஆணுக்கு-எதிலும்
பின்தங்கி இல்லையென்று
பொன்னெழுத்தால் சாதிக்கிற-வலையுலகப்
பெண்டிர்கள் எல்லோரும்
வந்திருந்து சந்திப்பிற்கு-குன்றா
வளம்சேர்க்கும் ஒருநாளே
வண்டியூர் தெப்பமதன்-கிழக்கே
நிகழ்வாகும் திருநாளே

சிந்தித்துச் சிந்தித்து-நாளும்
சிறப்பானப் பதிவுகளைத்
தந்தவர்கள் எல்லோரும்-மனதில்
நிறைந்தவர்கள் எல்லோரும்
எந்தநாள் அந்தநாள்-என
எதிர்பார்த்த ஒருநாளே
இந்தவார ஞாயிரன்று-வருகிற
பதிவர்கள் திருநாளே

சென்னைவலைப் பதிவர்கள்-மிகச்
சிறப்பாகச் செய்ததனை
எண்ணாளும் மனதினிலே-ஒரு
இலக்காகக் கொண்டுயிங்கு
பம்பரம்போல் சுழல்கின்றார்-இளைய
பதிவர்கள் பத்துப்பேர்
சொன்னபடி வந்திடுவீர்-நிகழ்வினை
சிறப்படையச் செய்திடுவீர்

வாழ்த்துக்களுடன்........

Sunday, October 19, 2014

அணிலொத்த சேவை

நான் சார்ந்திருக்கிற
,தலைவராகத் தொடர்கிற டிலைட்  அரிமா சங்கத்தின் மூலம்
எங்களால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை
தேவைப்படுவோருக்கு உறுப்பினர்கள் மற்றும்
நன்கொடையாளர்களின் உதவியுடன் செய்து
வருகிறோம்

அந்த வகையில் இந்த வாரம் 18-10 2004 அன்று விருதுநகரில்
உள்ள ஹெச்ஐவி  உள்ளோர் நலச்சங்கத்தில் உள்ள
பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அந்த நலச் சங்க
ஊழியர்களுக்கு (மொத்தம் 43 +7 =50  )நபர்களுக்கு
தீபாவளிக்கு  இனிப்புகள் மற்றும் புத்தாடைகள்
வழங்கி வந்தோம்

அந்த நிகழ்வின் புகைப்படப் பதிவுகள்


Friday, October 17, 2014

காற்று வாங்கப் போவோம்

காற்று வாங்கப் போனால்
கவிதை வாங்கி வரலாம்-இந்தக்
கூற்று மெத்த நிஜமே-இதை
உணர்ந்து தெளிந்தால் நலமே

இல்லந் தன்னில் அனலாய்
எரித்துக்  கொல்லும் தனிமை-தனித்துச்
செல்லும் போது நெஞ்சில்-தானே
பெருக்கித்  தருமே இனிமை

வீட்டுச் சுவற்றில் எங்கும்
ஒட்டி வைத்தச் செய்தி-நமக்கு
நாட்டு நடப்பைச் சொல்லும்-அதனால்
கருவும் தானே சுரக்கும்

மெல்ல விரியும் கதிர்கள்
மலர்ந்து சிரிக்கும் மலர்கள்-காணும்
உள்ளம் நிறைத்துப் போக-கவிதை
ஊற்று பெருகும் தானே

எனவே நாளும்----

காற்று வாங்கப் போவோம்
கவிதை வாங்கி வருவோம்-இந்தக்
கூற்றைச் சொன்ன கவியை -நாளும்
போற்றி நாமும் மகிழ்வோம்

Tuesday, October 14, 2014

நல்ல மனங்கள் வாழ்க 






சேவை மனப்பான்மை  கொண்டோருக்கும் அது

தேவைப்படுவோருக்கும் மத்தியில்  ஒரு நம்பகமான

 அமைப்பு தேவைப்படுகிறது .

அந்த வகையினில்  நான் தலைவராக

பொறுப்பில் இருக்கிற அரிமா  சங்கத்தின் மூலமாக

முடிந்த வரையில்  இவ்வாண்டுத் துவக்கம் முதல்

ஒவ்வொரு மாதமும் சங்க உறுப்பினர்கள் மற்றும்

சேவைமனம் கொண்டோர் மூலம்

சிற்சில   சேவைகளைச் செய்து  வருகிறோம்

(றேன் இல்லை றோம் )

அந்த வகையில்  வருகிற வாரத்திற்கான  சேவையில்

அதிக   பங்களிப்பைத் தருகிற சேவைச் செம்மல்களை

இந்தப் பதிவின் மூலம் நான் அவர்களை அறிமுகம்

செய்துள்ளேன்

தங்கள்  வாழ்த்து  நிச்சயம் தொடர் சேவைக்கு
அவர்களுக்கும்  எனக்கும் ஊக்கமளிக்கும்

நல்ல மனங்கள் வாழ்க  நாடும் ஏடும்  போற்ற வாழ்க