Tuesday, September 15, 2015

புதுகைப் பதிவர் திருவிழா ( 3 )

எம் படைப்புகள் எல்லாம்...

ஆற்று நீரை எதிர்த்துப்போகும் எனும்
அதீத  எண்ணம் ஏதும் எங்களில்
நிச்சயம் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
எரியாது சிரிக்கும் என்கிற
நினைப்பும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச செய்யவோ

அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ

 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லை

சராசரித்  தேவைகளை அடையவே
அன்றாடம்  திணறும் கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
நாங்கள் படும் அவதிகளை

எமக்குத் தெரிந்த பாமர மொழியில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை

மனம் கீறிப்போகும்
சிறுச்  சிறு அல்லல்களை

அதிக மசாலா கலக்காது
பகிர்ந்துண்டு மனப் பசியாறுகிறோம்

எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
விஞ்ஞானம்  ஈன்றெடுத்த
புதிய  இனிய இனமே

எங்கள் கைகளில்தான் இருக்குது
புதியதோர் உலகு செய்யும்
அதீத அசுர  பலமே

Sunday, September 13, 2015

ஸ்டாலினின் முன்நகர்வும் கலைஞரின் கோபமும்

மாணவர் மன்றம் "புதுயுக சிற்பிகள் "என்கிற பெயரில்
திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்திருந்த
கூட்டத்தில் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டதை
கலைஞர் விரும்பவில்லை என்கிற செய்தி
பத்திரிக்கையில்  வந்ததை
அனைவரும் பார்த்திருக்கக் கூடும்

ஏன் விரும்பவில்லை என்பதை பழைய
அரசியல் நிகழ்வுகள் அறிந்தவர்களுக்கு மட்டுமே
புரியக் கூடிய விஷயம்

அண்ணா அவர்கள் மறைந்து புதிய முதல்வரை
தேர்ந்தெடுக்கவேண்டிய சூழலில் சட்டசபைத்
 தலைவராக நெடுஞ்செழியன் அவர்களும்
மதியழகன் அவர்களும் கலைஞர் அவர்களும்
போட்டியிடுகிற சூழல்

அண்ணாவால் தனக்கு அடுத்தவர் என மக்களுக்கு
அறிமுகப்படுத்தப்பட்ட நெடுஞ்செழியன் அவர்களும்
கட்சியில் அதிக ஆதரவுடைய கலைஞர் அவர்களும்
அவருடன் போட்டியிடக்கூடிய  கட்சிச்செல்வாக்குடைய
மதியழகன் அவர்களும் போட்டி என அறிவிக்கப்பட
தமிழகமே அந்த சட்டசபை உறுப்பினர்களின்
கூட்டத்தின் முடிவை ஆவலுடன்
எதிர்பார்த்திருந்த சூழல்

கட்சிச் சம்பந்தம் இல்லாத அனைவரும்
அண்ணாவால் அதிகம் தனக்கு அடுத்தவர்
என்கிற முறையில் அதிகம் குறிப்பாக உணர்த்தப்பட்ட
நெடுஞ்செழியன் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப் படுவார்
என எதிர்பார்த்திருந்த சூழலில்.....

மூவரும் போட்டியிடுகிற பட்சத்தில் ஓட்டு
பிரிவதன் அடிப்படையில் மதியழகன் கூட
வெல்வதற்குவாய்ப்புள்ளது என சில
கட்சிக்காரர்கள் கற்பனை செய்ய

கூட்டத்தில் போட்டியாளர் என நினைத்துக்
 கொண்டிருந்தமதியழகன் அவர்கள் கலைஞரை
 முன்மொழிய புரட்சித்தலைவர் வழி மொழிய

கலைஞரின் ராஜ தந்திரம் கட்சியில் வென்ற விஷயம்
குறித்து எழுத நிறைய இருக்கிறது

(ஆயினும் கட்டுரைக்கான பிரதான விஷயம்
அது இல்லை என்பதால் அதை இப்போது விட்டுவிடுவோம் )

அவ்வாறு சட்டசபைக் கட்சித் தலைவராக கலைஞர்
அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டாலும் கட்சியில்
செல்வாக்குள்ள தலைவர்களில் ஒருவராக இருந்தாலும்
அண்ணாபோல் எம் ஜீ ஆர் அவர்களைப் போல
கட்சி சாராத பொதுமக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய
தலைவராக இல்லை

எனவே கட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
கட்சிப் பணிகளில் ஈடுபடமுடியாத சபா நாயகரின்
பதவியில் மதியழகனை நிறுத்தி ஓரம் கட்டி
அடிமட்டத்து கட்சிக்காரர்களிடம் அவ்வளவு நெருக்கம்
இல்லாத நெடுஞ்செழியனை வேறு ஒரு மாதிரியாக
டீல் செய்து கட்சியில் தன்னை முழுமையாக
நிலை நிறுத்திக் கொண்டார்

பொது ஜனமக்களிடம் தன்னை மக்கள் தலைவராக
நிலை நிறுத்திக் கொள்ள பதவியின் மூலம்
தன் சுய விளம்பரத்தை அதிகம் செய்து கொண்டார்

அப்போதுதான்  "நாம் இருவர் நமக்கு இருவர் " என்கிற
குடும்பக் கட்டுப்பாடு போஸ்டர் கலைஞரின்
முகம் போட்டு சமூக நலத் துறையினரால் பட்டி தொட்டி
யெல்லாம் ஒட்டப்பட்டது

அதை விமர்சித்துக் கூட அப்போதைய பழைய
காங்கிரஸ் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம்
"இந்தப் படத்தை ஒரு பெண் படித்தால்
என்ன அர்த்தம் கிடைக்கும் " என ஆபாசமாக
விமர்சித்தப் பேச்சு அப்போது அதிகப் பிரசித்தியம்

அரசின் சாதனைகளை விளக்குவதன் மூலம்
கலைஞரை பிரபலப்படுத்த அப்போது உருவாக்கப்
பட்டதுதான் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள்
( அதன்படி நுழைந்தவர்தான் சசிகலா நடராஜன்
என்பதுவும் கூடுதல் தகவல் )

எப்படி கட்சி தாண்டி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
வேண்டிய அவசியம் கலைஞருக்கு ஏற்பட்டதோ
அதே நிலை கனிமொழி மற்றும் அழகிரி அவர்களை
மீறி ஸ்டாலின் அவர்கள் தன்னை நிலை
நிறுத்திக் கொள்ளவேண்டிய அவசியம்
இன்று நேர்ந்துள்ளது

அதை மிகச் சரியாக ஸ்டாலின் அவர்கள் செய்கிறார்

அப்படி ஸ்டாலின் தேர்தலுக்குள் தன்னை நிலை
நிறுத்திக் கொள்வாரேயானால் நிச்சயம் கலைஞரால்
தம் இஷ்டம் போல் குடும்ப உறுப்பினர்கள் யாரையும்
கட்சியின் மிக உயர்ந்த பதவிகளில் நியமனம் செய்வது
சாத்தியப்படாது

அதற்கெனவே ஸ்டாலின் அவர்களின் முன்நகர்வை
கலைஞர் அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை
என்பதே என் வாதம்

தங்கள் விமர்சனம் எதிர்பார்த்து ....

வாழ்த்துக்களுடன்.....

Friday, September 11, 2015

ஒரு சந்தேகம்

எனக்கு திடீரென ஒரு சந்தேகம்
முன்பு அந்நியர்கள் நீதிபதியாக இருந்தார்கள்

அவர்களுக்கு வெப்பம் தாங்காது
அதிலும் நம் கோடை வெப்பம் நிச்சயம் தாங்காது

எனவே அந்தக் காலங்களில் குளிர்பிரதேசம் போகவோ
அல்லது குளிரான அவர்கள் தேசம் போகவோ
கோடை விடுமுறையை நீதிமன்றங்களுக்குக்
கொடுத்திருந்தார்கள்.

அதுசரி இப்போது நம் நீதிபதிகள் எல்லாம்
நமமவர்கள் தானே

புழுதியிலும் வெய்யிலிலும் வளர்ந்த குப்பனும்
சுப்பனும் நீதிபதியானபின்
கோடை விடுமுறை எதற்கு ?

அதுவும் லட்சக்கணக்கான வழக்குகள்
தேங்கிக் கிடக்கிற நிலையில் ?

நீதித்துறை சம்பத்தப்பட்டவர்கள் விளக்கினால்
என் போன்ற பாமரனுக்கு
புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் ?

வள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்

Tuesday, September 8, 2015

மத்யமர்

மனித மனங்களில் எல்லாம்
புதர் மண்டிப் போக
நாடும் காடாகிப் போனதால்
ரொட்டிக்கான தொடர் போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

பொறுக்கப் போகிற பாவனை மறைத்து
வேட்டைக்குச் செல்வதுபோல்
முகமெங்கும் புலிவரிகளை
பூசிக் கொண்டாலும் கூட
நிஜப் புலிகளின் நெருக்கத்தில்
மருங்கிய பார்வையை ஏனோ
மறைக்க முடிவதேயில்லை

பாவப்பட்ட  முட்டாள் ஜந்துக்கள்
புலியெனஏமாந்து ஒதுங்குவதில்
கிடைக்கும் சில சௌகரியங்களும்
தொலையும் சில அசௌகரியங்களும்
ஒப்பனையின் அவசியத்தை
உறுதிப்படுத்திப்போனாலும் கூட

ஒவ்வொரு முறை
ஒப்பனையிடும்போதும்
நோவையும் நோயையும்  மறைக்கவென
விலைமகள் போடும்
மாலைவேளை ஒப்பனையை
ஒப்பிட்டு வேதனையுறும்
மனம் மட்டும் ஏனோ
அடுப்படிப் பூனையாய் ஒடுங்கிப போகிறது

ஆனாலும் இன்றைய
ரொட்டிக்கான போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

Sunday, September 6, 2015

ஆசிரியர் தின விழா

அரிமா சங்கத்தின் சார்பாகச் செய்கின்ற
செயல்பாடுகள் எல்லாம் நகரை ஒட்டியே இல்லாமல்
கிராமப் பகுதிகளிலும் இருக்கவேண்டும் என்ற எங்கள்
ஆளுநர் லயன் எஸ் ராம்சுப்பு எம். ஜே ஃப் அவர்களின்
வேண்டுகோளின்படி இம்முறை ஆசிரியர்
தினவிழாவினைவலையப்பட்டி என்னும்
கிராமத்தில் ஜோதி ஆரம்பப்பள்ளியில்
 மிகச் சிறப்பாகக் கொண்டாடினோம்

திருக்குறள் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியதோடு
பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள்
 புத்தகம் வழங்கி மகிழ்ந்தோம்

பேராசிரியர் டாக்டர் பாரி பரமேஸ்வரன்   மற்றும்
மண்டலத் தலைவர் ஏ. மோஹன் அவர்கள்
மண்டலச் செயலாளர் ஜெயக்கொடி அவர்களும்
சிறப்புரையாற்றி சிறப்புச் செய்தார்கள்

மதுரை பெஸ்ட் அரிமா சங்கத்தின் சார்பாக
அதன்  தலைவர்டாக்டர் சுப்ரமணியன் அவர்களும்

 அரிமா சங்கத்தின் செயலாளர் மற்றும் ..எம் .ஆர்.கே.வி
டிரஸ்டின் பொறுப்பாளர்  என்கிற வகையில்
லயன் ராமதாஸ் அவர்களும் அனைத்து
 ஏற்பாடுகளையும்மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்

அந்த நிகழ்வின் சில புகைப்படங்களை இத்துடன்
இணைத்துள்ளேன்

Tuesday, September 1, 2015

உபதேசம்

அந்தச்  சனிப் பயல்
ஒவ்வொரு முறை கோபப்படும் போதும்
கோபத்தின் விளைவுகள் குறித்து
அவன் நெஞ்சில் பதியும் வண்ணம்
கடுமையாகப் பேசியிருக்கிறேன்

ஒரு சமயம்
அவன் சம்பந்தமே இல்லாமல்
கோபப்பட்டபோது
பொறுத்துக் கொள்ளமுடியாமல்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கிறேன்

நேற்று கூட
ஒன்றுமில்லாத விஷயத்திற்கு
கோபப்பட்டதை
என்னால் தாங்கமுடியாது போக
கன்னத்தில் அறைந்தே விட்டேன்

அப்படியும் அவன் திருந்தியபாடில்லை

இப்போதெல்லாம்
அவன் போக்கை நினைக்கையில்
மனசு படபடக்கிறது
என்னுள் பற்றி எரிவது போல் உள்ளது
உடல் கூட நடுங்கத் துவங்குகிறது

பாழாய்ப் போனவன்
கோபத்தின் அதீத விளைவுகளை
என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறான்
கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை
என்றுதான் புரிந்து தொலைக்கப் போகிறான்