Monday, March 7, 2016

நம்மைக் கூர்ப்படுத்திக் கொள்ளும் நாள்

சமை யலறையிலும்
படுக்கையறையிலும்
சுதந்திரம்  கொடுப்பது போல் கொடுத்து
சுகம் அனுபவிக்கத் தெரிந்தவர்கள்
சமூக வாழ்விலும் கொடுத்து
அந்தச் சுகத்தை
என்று அறியப்போகிறார்கள் ?

பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகத்திற்கு என்று புரிந்துதொலைக்கப் போகிறது ?

அழகிய வயதுப் பெண்
உடல் முழுதும் நகையணிந்து
நள்ளிரவில் சுதந்திரமாக நடமாடக் கூடிய
சூழல் உள்ள நாடே ராமராஜ்ஜியம் என்கிற
காந்தியின் கனவு என்று நிஜமாகித் தொலைக்கும் ?

மொத்தத்தில்
அன்னியரிடமிருந்து கூட
சுதந்திரம் பெற்றிவிட்ட நமக்கு
இந்தச் சமூகத்திடம் இருந்து
என்று அது கிடைக்கப் போகிறது ?

அதுவரை இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்ப் படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்

ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு
நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நாள் என்பதில்
நிச்சயம் கவனமாக இருப்போம்

பரிணாமம் அல்லது யதார்த்தம்

நீங்களாக எதையும் கொடுத்ததில்லை
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துப்  பலனின்றி
நாங்கள் தான் எடுத்துக் கொள்கிறோம்

எடை குறைந்தும்
கூடுதல் விலைகொடுத்தும்
காய்ந்த சொத்தை காய்கறிகளைச்
சந்தையிலிருந்து வாங்கி வந்து
எங்களை அவஸ்தைக்குள்ளாக்கினீர்கள்

வேறு வழியின்றி இப்போது
நாங்களே சந்தை செல்ல
ஆரம்பித்து விட்டோம்

நாலு முறை அலையச்  சங்கடப்பட்டு
வரிசையில் நிற்பது
சுயகௌரவக் கேடென்று
ரேசன் கடையைத் தவிர்த்தீர்கள்

நாங்கள்தான் இப்போது போய்க்கொண்டுள்ளோம்

அதிகக் கூட்டம் எனச் சொல்லியே
மின் கட்டணம் செலுத்தாது நாள் கடத்தி கடத்தி
கடைசி தேதி வர
"ஆபீஸில் அதிக வேலை நீயே கட்டிவிடு "என்றீர்கள்

இந்தக் கடைசி நேர அவஸ்தை எதற்கென்று
இப்பொது நாங்களே  கட்டிவருகிறோம்

விற்கிற விலைவாசியில் ஒரு வரவு
அரைக்கிணறு தாண்டத்தான் சரியாகிறது என
நீங்கள் புலம்பத் துவங்கினீர்கள்

நாங்களும் பணிக்குச் செல்லத் துவங்கிவிட்டோம்

இப்பொது நாட்டுப் பிரச்சனையைத்  தீர்க்க
சட்ட மன்றம் அனுப்பினால்
 நாக்கைத் துருத்தி சண்டையிடுவதிலும்
ஆபாசப் படம் பார்ப்பதிலும்
அதிக அக்கறை கொள்கிறீர்கள்

எங்களுக்குரிய பங்கை நீங்களாகக் கொடுத்து
எங்களை அனுமதிப்பீர்கள் என எதிர்பார்த்து
 ஒவ்வொரு  கூட்டத் தொடரையும்
ஆவலாகப் பார்த்திருந்தோம்
 இதிலும் அதிகம் ஏமாந்து போனோம்

இதையும் நாங்களாக
எடுத்துக்கொண்டாதால் உண்டு
நீங்களாக நிச்சயம் தரப் போவதில்லை என்பதில்
இப்போது நாங்கள் உறுதியாயிருக்கிறோம்

உங்களுக்கு ஒரு பெருமையெனில்
முன் நிற்பதும்
வசதியெனில் மட்டுமே
விட்டுக் கொடுப்பதுவும்
(சாலை மறியலில் முன்  வரிசை  )
சிறுமையெனில் விலகி நிற்பதுவும்
உங்கள் பரம்பரைக் குணம்தானே

பிரசவம் எனச் சொன்னால்
நெஞ்சு நிமிர்த்தி மருத்துவமனை வரும்
எந்த ஆண் மகனும்
அபார்ஷனுக்கும் கருக்கலைப்பிற்கும்
மருத்துவமனை வருவதில்லை எனபதும்
பெண்களாகத் தானே
போய் வருகிறோம் என்பதுவும்
உலகறிந்த விஷயம் தானே ?

Saturday, March 5, 2016

பண்டித விளையாட்டா படைப்பு ?


. "இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை ?
கற்பனை வறண்டு போனதா ?
சமூக அக்கறை குறைந்து போனதா ?"
போகிற போக்கில்
கேள்வியை விதைத்துப் போகிறான் நண்பன்.
அவனுக்கு எப்படிப் புரியச் சொல்வது ?

கொத்துகிறத்  தூரத்தில்
சீறுகிற நாகமாய்
நித்தம் எதிர்கொள்ளும்
அவலங்களும் அசிங்கங்களும்
கணந்தோறும் காயப்படுத்தும்
சிறுமைகளும் துரோகங்களும்
என்னை எப்போதும்
சுடும் நெருப்பில் நிறுத்திப்போக
அதன் தாங்கவொண்ணா பாதிப்பில்
ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
அவைகளைச் சொற்களுக்குள் அடைக்க முயல
அவைகள் அடங்காது சீறிக் கொத்த
ஒவ்வொரு கணமும்
நான் நொந்து வீழ்வதும்
ஒவ்வொரு நாளும்
வேதனையில் சாவதும்
எப்படிச் சொன்னால் அவனுக்குப் புரியும் ?

திடுமெனச்
சீறிக் கிளம்பும் காட்டாற்று வெள்ளம்போல்
உணர்வுகள் பொங்கிப் பெருக
நிலை தடுமாறிப் போக
தலையணைக்குள் மெத்தையினைத்
திணிக்கமுயலும் முட்டாள்போல்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
திணிக்க முயன்று தோற்கிறக்  கணங்களை
வார்த்தைகள் கிழிந்து சிரிக்கிற அவலங்களை
எப்படி அவனுக்கு விளக்கித் தொலைப்பது ?

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளைப் பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ?

இனியும் தங்க முடியாதென
வெளியேறத் துடிக்கும் உயிர்க்கருவும்
இனியும் தாங்க இயலாதென
உந்தித் தள்ளுகிற உள்ளுணர்வும்
இணைவாகச் சேரும் காலத்தையும் கணத்தையும்
எது நிர்ணயம் செய்யக்கூடும்?

பல சமயங்களில்
கறுத்துக் கனத்த கருமேகங்களை
ஒன்று சேர்த்த பெருங்காற்றே
அதனைக் கலைத்துவிட்டுப் போவதும்

எங்கோ தலைதெறிக்கப் போகும்
ஒரு சிறு வெண்மேகம்
சாறல் உதிர்த்துப் போவதும்

விரதங்களும் வேண்டுதல்களும்
வேண்டிய மட்டும் செய்துமுடித்து
இணைகிற இணைப்பு வீணாகிப்போக
வேண்டா வெறுப்பாகப் புணரும் நாளின்
கரு தங்கிச் சிரிப்பதையும்

எப்படி எனப் புரிந்து  சொல்வது  ?
எப்படி அவனுக்குப் புரியச் சொல்வது  ?

Thursday, March 3, 2016

வாழும் வகையறிந்து....

அந்த அழகிய ஏரியில்
உல்லாசப் படகில்
எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்

அதில்
நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்

அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய்ப்  பயணித்துக்கொண்டிருக்க ...

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தை
படகின் வேகத்தை
இதற்கு முன் நடந்த விபத்தை
எண்ணி எண்ணிப்  பயந்து
படகுக்குள்  ஒடுங்கிக் கிடந்தார்கள்

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்

உல்லாசமாக
இரசித்துப்
பயணம் செய்வதற்கு
அது அவசியம் தெரிந்திருக்கவேண்டும்

Wednesday, March 2, 2016

சராசரித்தனத்தின் சிறப்பு

சராசரிப் படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமாகத்தான் இருக்கிறது

இரு துருவங்களுக்கு
இடைப்பட்ட நாடுகளைப்போல

தலைவனுக்கும்  பொதுஜனத்திற்கும்
இடைப்பட்ட தொண்டனைப்போல

தனித்துவமாயும் இல்லாது
ஜனரஞ்சகமாயும் இல்லாது

நடுத்தரப் படைப்பாளியாய் இருப்பது
நல்லதுபோலத்தான் படுகிறது

சராசரி என்பதால்
சீண்டி விட்டுச்  சுகம் காண அலையும்
அறிவு ஜீவிகளின் மனோவிகாரப்
பிடுங்கலும் இல்லை

தனக்கு மேலிருக்கும் எதையும்
உயர்ந்ததாய் எண்ணி மயங்கி
வெகுஜனம் தரும் அர்த்தமற்ற  மரியாதைத்
தொல்லையும்  இல்லை

இலக்கியக் காவலர்களென
பத்துப் பதினைந்து பேர்
ஊரணிப்  பள்ளத்து நீராய்
ஒரு சிறு கூட்டம் கூட்டி
அரிய விடுமுறை நாளைக்
கெடுப்பதும் இல்லை  

 உண்மை  ஆர்வமோ
அடிப்படை அறிவோ  இல்லையெனினும்
 தொடர்பு கொள்ள முயலும்  வெகுஜனம்
அபூர்வமாய்க் கிடைக்கும்
இனிய தனிமைச் சுகத்தைத்
தகர்ப்பதும் இல்லை

ஜோல்னா குர்தா
வித்தியாசமாய் தாடி மீசை
புரியாத வழக்கு மொழி
குழுச்  சேர்க்கும் பிரயத்தனம்
இப்படிக் கூடுதல் சுமைகளைச் சுமக்கும்
அவசியமும் இல்லை

வாசகரின் மாறும் மனோ நிலை
பத்திரிக்கைகளின் மசாலாப் போங்கு
மேடை ஓரம் ஒளிபடரும் இடம்
வீழ்ந்து விடாது நிற்க ஓரிடம்
இவைகளை அறிய ஓடும்
நித்ய மராத்தான் ஓட்டமும்  இல்லை

மொத்தத்தில்
சராசரி படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமானதாக மட்டும் இல்லை
பலவகை யில் கூடுதல்
சந்தோஷமளிப்பதாகத்தான் இருக்கிறது

கேப்டன் விஜயகாந்த் என்ன முடிவு செய்யலாம் ? (2 )

lhttp://yaathoramani.blogspot.in/2016/03/blog-post.html
மேலே  உள்ள முந்தைய பதிவில் முடித்தபடி
கேப்டன் விஜயகாந்த அவர்களுக்கு
இரண்டு வழிகள் தான் மீதம் உள்ளது

முதல் வழி.. தனித்துப் போட்டியிடுவது..

இதற்கு முன்பு தனித்து போட்டியிட்ட போது
இருந்த சூழல் நிச்சயமாக இப்போது இல்லை

அப்போதுஅவர் மேல இருந்த கதாநாயக அந்தஸ்துக்
கொஞ்சம் குறைந்துள்ளது
அவர் குறித்த வாட்ஸ் அப் மற்றும் முக நூல்களில்
அவர் குறித்தான பதிவுகளிலேயே தெரிந்து
கொள்ளலாம்

எனவே தனியாகப் போட்டியிடுவார் எனில்
நிச்சயம் இதற்கு முன்பு தனித்துப் போட்டியிட்டுப்
பெற்ற சதவீதத்தை விடக் குறைவாகத்தான்
வாக்குகள் பெறுவார். அது நிச்சயம் அவருடைய
அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குரியாதாகவே
ஆக்கிச் செல்லும்

எனவே தனித்துப் போட்டியிடுவது அவ்வளவு
உசிதமானது இல்லை

கடைசியாக உள்ள ஒரு வழி
பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைந்துப்
போட்டியிடுவதுதான்

இதில் அவருக்கான பாதக அம்சம்
மதவாதக் கட்சியுடன் இணைந்துவிட்டார்
என எல்லோரும் கூச்சலிடுவார்கள்
அது ஒன்றுதான்

அதுவும் இப்போது செல்லுபடியாகாது

காரணம் இங்குள்ள அனைத்துப் பிரதான
கட்சிகளுமே ஒவ்வொரு காலகட்டத்தில்
அந்தக் கட்சியுடன் சேர்ந்தே
போட்டியிட்டுள்ளார்கள்

சாதகமான விஷயம்...

முதலில் பாதுகாப்பு.

ஆளுங்கட்சியின் அதீத அதிகார துஸ்பிரயோகம்
ஏதுமிருப்பின் அதனைத்  
தாங்கும் சக்தி தி.மு.க வுக்கு உண்டு

நால்வர் அணியினை அதிகம் சீண்டி
அதனை முன்னணிக்கு கொண்டுவரும் தவறினை
நிச்சயம் அதிமுக செய்யாது.

நிச்சயமாக வேண்டுமென்றே தேமுதிக வை
பிரதான எதிரிபோல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும்
முயற்சியிலேயே ஆளுங்கட்சி  ஈடுபடும்

அதனால் ஏற்படும் விளைவுகளைச்
சந்திக்க மத்தியில் ஆளும் ஒரு கட்சியின்
துணையிருப்பின் அது ஒரு
பாதுகாப்பாகத்தான் இருக்கும்

மிகச் சிலத் தொகுதியிலேயே இந்தக் கூட்டணி
வெல்ல முடியும் ஆயினும் அந்த வெற்றி
மத்திய ஆளுங்கட்சியின் கூட்டணி என்கிற வகையில்
கூடுதல் முக்கியத்துவம் பெறும்

அவசியமெனில் அடுத்து  வரும் ராஜ்யசபா
தேர்வினில் தனது கட்சிக்காக ஒன்று அல்லது
இரண்டு இடங்களைப் பெற்று கட்சியின்
எல்லையை விர்வுப்படுத்த முடியும்.

தி.மு.க மற்றும் காங்கிரஸ்ஸுடன் சேருவதன் மூலம்
கிடைக்கும் வேறு வகையான ஆதாயங்கள்
நிச்சயம் பி.ஜே.பி.யுடன் சேருவதன் மூலமும்
குறைவின்றியே கிடைக்கும்

எனவே... இன்றைய சூழலில்..
தே.மு தி..கவுக்கு பி.ஜே பி யுடன் கூட்டணி
வைத்தல் ஒன்றே நிச்சயம் புத்திசாலித்தனமான
முடிவாக இருக்கும்.

இதன் படி தே.மு..தி க. இப்படி முடிவெடுப்பது
அந்தக் கட்சிக்கு நல்லது.சரி

மக்கள் எப்படி முடிவெடுப்பது அவர்களுக்கு
நல்லது..அது....

அடுத்த கட்டுரையில்

Tuesday, March 1, 2016

கேப்டன் விஜயகாந்த் என்ன முடிவு எடுக்கலாம் ?

கர்மவீரர் சொன்னதைப் போல
இரு கழகங்களும் அனைத்து விதத்திலும்
ஒரே குட்டையில் ஊறிய
மட்டைகள்தான் என்பதில் யாருக்கும்
எந்தவித சந்தேகமும் இல்லை.

ஒன்றுக்கு மாற்றாக ஒன்று இருக்கும்படியும்
ஒருவருக்கு மீதான வெறுப்பை மற்றொருவர்
பயன்படுத்திக் கொள்ளும்படியாகவே
தங்களைத் தகவமைத்துக் கொள்வதும்,
இரு கழகங்களின் பலம் .

விஜயகாந்த அவர்களுக்கு அரசியல் ரீதியாகவும்
தனிப்பட்ட முறையிலும் கெடுதல்கள் செய்ததில்
இரு கழகங்களுமே ஒன்றுக்கு ஒன்று
சளைத்ததில்லை.

தொடர்ந்து எதிர்க்கட்சியாக செயல்பட
விடாதது முதல் எதிர்கட்சித் தலைவர்
 பதவியைப் பறித்தது வரை
தொடர்ந்து  அதிமுக  கெடுதிகள்செய்தது என்றால்

திருமண மண்டபத்தை இடித்தது முதல்
தொடர்ந்து செய்த அரசியல் கெடுபிடிகளால்
அதிமுக பக்கம் ஒதுங்கச் செய்ததில்
திமுகவுக்கும் பெரும் பங்குண்டு

எனவே இரு கழகங்களில் எந்தப் பக்கமும்
சாய்வதற்கு நிச்சயம சாத்தியமே இல்லை

அடுத்து இருப்பது மக்கள் நலக் கூட்டணி.

தேர்தலில் சதவீத கணக்கு செல்லுபடியாகும்
இந்தக் காலக் கட்டத்தில் தனித்து நின்றால்
தங்கள் சதவீதக் கணக்கு அம்பலமாகிவிடும்
என்னும் எண்ணத்திலும் ....

இரு கழகங்களின்
மீதான வெறுப்பு ஓட்டுகளைக் கவரலாம்
என்கிற ஆசையிலும்  ...

விளைந்த கூட்டணியாக
ஒருபுறமும் இருக்கும் இக்கூட்டணி
வெல்வதற்கான வாய்ப்புகளை விட
ஓட்டுக்களைப் பிரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்

அப்படியும் ஒருவேளை தப்பித் தவறி
சில குறிப்பிட்ட இடங்களைப் பெற்றுவிட்டாலும்
அவர்களுக்குள் கூட்டணித் தலைவரை
தேர்ந்தெடுக்க நேரும் பட்சத்தில்
நிச்சயம் சிதறித்தான் போவார்கள்

காரணம் முதல்வர்  வேட்பாளரைச்
சொல்லவேண்டியதில்லைஎன்பது மிகச் சரிதான்
ஆனாலும் இன்று அனைத்துக் கட்சிகளும்
அதனால் லாபமோ நஷ்டமோ தங்கள்
முதல்வர் வேட்பாளரை முன்னிருத்துகையில்
அது குறித்து ஒரு முடிவெடுக்கமுடியாமல் இருப்பதே
அதற்கு அத்தாட்சி.

மேலும் அரசியலில்   அவரவர்
கொள்கைகளில் அதிகப் பிடிப்புள்ள
தலைவர்களுடன்..

நமது கேப்டன் அவர்களின். கட்சியை
இணைத்துப் பார்க்க
நமக்கே மனம் ஒப்பவில்லை என்பதுவும்    நிஜம்

அடுத்து இருக்கிற வாய்ப்பு...

தனித்து நின்று மீண்டும் தன் பலம் காட்டும் வாய்ப்பு

அல்லது

பி.ஜெ. பி.கூட்டணியில் சேரும் வாய்ப்பு

(அலசல் தொடரும் )