Monday, March 21, 2016

வள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்


தெறி"க்கும் புதுக்கவிதைத் துணையுடன்....

இமையது மூடியே
இரசித்திடும் வகையில்
இதமாய்ப் பதமாய்

இருசெவி வழியினில்
இதயம் தொடவென
முயன்று தோற்ற தாலே...

தலையினைச் சுற்றி
மூக்கினைத் தொடுதல்
அலுப்பைத் தந்ததாலே

சுண்டைக்காய்  கால்பணம்
சுமை கூலி முழுப் பணம்
ஆன கதையைப் போல

கருவின் அழகினை
இலக்கண ஒப்பனை
மறைத்துத் தொலைப்பதாலே

சந்தச் சந்தன
குளுமையும் மணமும்

சிந்தனைக் குருதியின்
வேகமும் வெப்பமும்

நேரெதிர் முனையென
என்றும் இணைய
இயலாப் பொருளென

கண்டு கொண்டதாலே
உணர்ந்து தெளிந்ததாலே

அதிரடிப் படையென
உடனடி இலக்கினை
அடைந்திடும் நோக்கினிலே

விழிவழி நுழைந்து
அறிவினை அடைந்திடும்
புதுமொழி கண்டோம் நாமே

சலிக்கும்
மரபினை விடுத்து
புதுவழி கண்டோம் இனிதே

"தெறி"க்கும்
புதுக்கவிதைத்  துணையுடன்
புது யுகம் செய்வோம்  இனியே 

Sunday, March 20, 2016

பாவப்பட்ட அவன்


உட்புறம் தாளிட்டுக்
கதவருகில் அமர்ந்தபடி
யாரேனும் வரமாட்டார்களாவென
வெகு நேரம் காத்திருந்து
மனச் சோர்வு கொள்கிறான்

இழுத்து அடைக்கப்பட்ட
ஜன்னலருகில் அமர்ந்தபடி
அறையினைக் கொதிகலனாக்கும்
வெக்கையில் புழுக்கத்தில் தன்மீதே
கழிவிரக்கம் கொள்கிறான்

தனிமைத் துயர்
குரல்வளை நெறிக்க
யாரேனும் அழைக்கமாட்டார்களாவென
தொலைபேசிக்கு அருகமர்ந்து
மனம் சலித்துப் போகிறான்

யாராவது சிரித்தால்
சிரிக்கலாமென்று ஆவலோடும்
யாராவது பேசினால்
பேசலாமென்று ஆர்வத்தோடும்
காலமெல்லாம் காத்துக்கிடந்தே
கவலை மிகக் கொள்கிறான்

விளைச்சலைப் பெற
முதலில் விதைத்தலும்
வேண்டியதைப் பெற
முதலில் கொடுத்தலும்
காரியம் வெற்றிபெற
முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே...

எதனையோ
எவரையோ
எதிர்பார்த்தபடியே

இன்றும் அவன் எப்போதும்போல்
காத்திருந்து காத்திருந்து
வெந்து நொந்துச் சாகிறான்
பாவப்பட்ட அவன்...

Saturday, March 19, 2016

சமூக நீதியும் சமூக அமைதியும்.....

பட்டப் பகல்
வெட்டவெளி
சுற்றிலும் ஜனத் திரள்

மிக இயல்பாய்
பேசியபடி வரும்
அந்த அழகுத் தம்பதிகள் போலவே

மிக இயல்பாய்
எவ்வித பதட்டமுமின்றி
அந்தக் கொலைகாரர்களும் வருகிறார்கள்.

செய்யத் தக்கதை
செய்வதைப் போலவே..

எவ்வித குற்ற உணர்வோ
பதட்டமோ இன்றி...

மிக இயல்பாய்
இருவரையும் வெட்டிச் சாய்க்கிறார்கள்

ஒரு படப்பிடிப்பை
பார்க்கிற பார்வையில்
பார்த்தபடி நகர்கிறது
திருவாளர் பொது ஜனம்.

டீக்குடித்துத் திரும்புதல் போல்
மிக இயல்பாய்
திரும்பிப் போகின்றன
அந்தக் கொலைவெறி மிருகங்கள்

பொது வெளி
பாதுகாப்பு அற்றுப் போனதை..

மக்களின் சமூக அக்கறை
அழிந்துத் தொலைந்ததை..

மிருகங்கள் அச்சமின்றி
உலவுகிற சூழலை...

மனித நேயம்
கருகிக் தொலைந்ததை..

எல்லாம்
.
உரக்கச் சொல்வதற்குள்
உறுத்தச் சொல்வதற்குள்

யாரை யாரானாலும்
எதற்கு எதற்கானாலும்
இது சகிக்க இயலாதது
என்பதை நிலை நாட்டும்முன்....

எந்தக் கொலையும்
வெட்கக்கேடானது
காட்டுமிராண்டித்தனமானது
அடியோடு அழித்தொழிக்கவேண்டியது என

அனைவரும் உணர்ந்து தெளியும் முன்
தங்கள் வெறுப்பைப்பதிவு செய்யும் முன்

மெல்லத் திசை மாறுகிறது
அந்தப் படுபாதக நிகழ்வு..

வழக்கம் போல

சமூக நீதியும்
சமூக அமைதியும்
சமூகத்திற்கு இரு கண்கள் என்பதுவும்

சட்ட ஒழுங்கின் சீர் கேடும்
பொது ஜனத்தின்
எருமைமாட்டுத்தனமும் 

மிகச் சரியாய்..

உணர்ந்து கொள்ளப்படாமலேயே
வலியுறுத்தப் படாமலேயே
பதிவு செய்யப்படாமலேயே....
.

Thursday, March 17, 2016

அழுது கொண்டிருப்பதற்குப் பதில் .......

 புரியாது எனப்  புலம்பித் திரிந்ததைவிட
புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது எனச்  சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

இல்லையென  என அவநம்பிக்கைகொண்டதை விட
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட

நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

Wednesday, March 16, 2016

இறுக்க நெருக்கம் யாருடன் இருக்கும் ?

இரவுக்கும் இருளுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?-இல்லை
இரவுக்கும் உறவுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

நிலவுக்கும் இரவுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ? -இல்லை
நிலவுக்கும் மலருக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

மனதிற்கும் நினைவிற்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?-இல்லை
மனதிற்கும் கனவிற்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

சொல்லுக்கும் எழுத்துக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?-இல்லை
சொல்லுக்கும் பொருளுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

கவிதைக்கும் உணர்வுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?-இல்லை
கவிதைக்கும் கவிஞர்க்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

சொர்க்கமது ஆனாலும் கூட----

பிடிச் சோறு ஆனாலும் கூட -அது
மிகப்பழசே ஆனாலும் கூட -நீ
பிழிந்துஇட  உண்ணுகிற சுகமே -அது
தேவலோக அமுதுக்குச் சமமே

எட்டுவகைக்  காய்கறிகள் கூட -உடன்
எறாநண்டும்  சேர்த்திருந்தும்  கூட-சோத்தை
தொட்டெடுக்க மறுக்குதடி மனமே-இந்தக்
கூத்துஇங்கு தொடருதடி தினமே

ஒருமொழியே ஆனாலும் கூட-அது
வசைமொழியே ஆனாலும் கூட-அது
திருமொழியாய்த் தெரியுதடி எனக்கு-உன்னைப்
பிரிந்துஇங்கு தவிக்கின்ற எனக்கு

நாகரீக உடையணிந்த மாந்தர்-தினம்
நுனிநாக்கில் கதைத்தாலும் கூட-அது
சோகமேற்றிப் போகுதடி எனக்கு -உன்னை
எண்ணிதினம் துடிக்கிற எனக்கு

குச்சிவீடு என்றாலும் கூட-வசதி
மிகக்குறைவு  என்றாலும் கூட-கண்ணே
நிச்சயசமாய் சொர்க்கமது தானே-அதுவே
கடல்தாண்டப் புரியுதடித் தேனே

கண்ணைவித்து ஓவியத்தை வாங்கி -மனம்
களிக்கின்ற கிறுக்கனவன்  போல-இங்கு
உன்னைவிட்டு வசதிசேர்க்க நானும்-இளமை
வாழ்வதனைத் தொலைக்கிறேண்டி நாளும்

சொர்க்கமது  ஆனாலும் கூட - அது
நம்மூரைப் போலாகா தென்று- கவிஞன்
சொல்லியது சத்தியமாய் நிஜமே-இதனை
அங்கிருப்போர் அறிந்துகொண்டால் நலமே


(குடும்பத்திற்காக ,குடும்பம் பிரிந்து
அயல் நாட்டில்  அல்லறும்  நண்பர்களுக்கு
இக்கவிதை என் எளிய  சமர்ப்பணம் )