Sunday, April 10, 2016

மாய இடைவெளி



தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் ஒன்று
தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது

உரையாடலில்
பேசுபவனே கேட்பவனாகவும்
கேட்பவனே பேசுபவனாகவும்
மாறிக்கொள்ளுதலைப் போலவே

இந்நாடகத்தில்
பார்வையாளர்களே நடிகர்களாகவும்
நடிகர்களே பார்வையாளர்களாகவும் மாறி மாறி
நாடகத்தை சுவா ரஸ்யப்படுத்திப்  போகிறார்கள்

ஆயினும்
நாடகம் ஒத்திகையற்றததாய் இருப்பதால்
திடுமெனத் தோன்றும்  திருப்பங்கள்
அதிர்ச்சியூட்டிப் போவதால்
பலர் நிலை குலைந்து போகிறார்கள்

இயக்குநர் யாரெனத் தெரிந்தால்
முடிவினை அறியக் கூடுமோ என
புலம்பத் துவங்குகிறார்கள்

புலம்பித் திரிபவர்களுக்கு ஆறுதலாய்
கைகளில் பேரேடுகளைச் சுமந்தபடி
பலர் அரங்கினுள் வலம் வருகிறார்கள்

இதுதான் மூலக் கதையென்றும்
இதுதான் இயக்குநர் வந்து போனதற்கான
உண்மை அத்தாட்சி யெனவும்
இனி அவரின் வருதலுக்கான
உறுதிமொழியெனவும்
அறுதியிட்டுக் கூறுகிறார்கள்

பலர் இதை ஒப்புக்கொண்டு
உடன்பட்டுப் போகிறார்கள்

சிலர் மட்டும் இன்னும் அதிகம்
குழம்பிப் போகிறார்கள்

"ஒரு நாடகத்திற்கு எப்படி
பல கதைகள் இருக்கக் கூடும்
பல இயக்குநர்கள் எப்படிச் சாத்தியம் "

இவர்கள் கேள்விக்கு பதிலேதும் இல்லை

ஒவ்வொருவருவரும்
தத்தம் கதைப்படித்தான்
நாடகம் தொடர்கிறது

முடிவு கூட இதன் படித்தான் என
சாதித்துத் திரிகிறார்கள்

இவர்களின் பிரச்சாரத்தில்
குழுக்கள் கூடிப்போகிறதே தவிர
குழப்பம் தீர்ந்தபாடில்லை

இந்தக் குழுக்களுக்களுக்கு
சிறிதும் தொடர்பே இல்லாது
ஒரு புதிய குழு உரக்கக் கூச்சலிடுகிறது

" இது நிகழ் கலை
இதை எழுதியவன் எவனும் இல்லை
இதை இயக்குபவன் எனவும் எவனும் இல்லை
நடிகன் இயக்குநர் எல்லாம் நாமே
நாடகத்தின் போக்கும் முடிவும் கூட
நம் கையில்தான் " என்கிறது

இது குழம்பித் திரிபவர்களை
இன்னும் குழப்பிப்  பைத்தியமாகிப் போகிறது

பசியெடுத்த
குதிரையின் உடலில்
ஓரடி நீட்டி
கட்ட்ப் பட்ட புல்லினைப் பிடிக்க
குதிரை நித்தம் ஓடி ஓய்கிறது

ஓடினாலும்
நின்றாலும்
அதன் வாய்க்கும் புல்லிற்குமான
இடைவெளி  மட்டும் குறையாது இருத்தல் போல

கேள்விக்கும் புதிருக்குமான
மாய இடைவெளி மட்டும்
குறையாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது

தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது

Saturday, April 9, 2016

"சைத்தான் என்பது மெய் ...

                  

"சைத்தான் என்பது பொய்
அப்படி எதுவும் இல்லை"
எனச்  சொல்பவனைத்  தொடராதே
அவன் அறியாது பேசுகிறான்

கரிய இருள் போர்த்தியபடி
குழிவிழுந்தக்  கண்களோடு
கோரைப் பற்களைக்  கடித்தபடி
கர்ஜித்து வரும் சைத்தான்
அழிந்துக்   காலம் பலவாகிவிட்டது

முன்பு போல அவன்
முட்டாள் சைத்தான் இல்லை
அவன் புத்திசாலி ஆகி
பலயுகங்களாகிவிட்டது

முன்பு போல
கோடாலி கொண்டு மரத்தை வெட்டி
அவன் நொந்து சாவதில்லை

மாறாக
வேரைப்  பிடுங்கி வெந்நீர் ஊற்றிவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறான்

நம்மை வீழ்த்தக் கூட
இப்போதெல்லாம் அவன்
தன் கோரைப் பற்களையும்
கூரிய நகங்களையும்
நம்புவதே இல்லை

நம் வீட்டுக் கூடத்தில்
தொலைக்காட்சிப் பெட்டியில் துவங்கி
உல்லாச உதவாக்கரை நண்பர்களாகத் தொடர்ந்து
நம்மைப்  பாதை தவறவிட்டு ஏமாளியாக்கி
முதலில் நம் நேரத்தை களவாடிக் கொள்கிறான்

பின்
வீண் கனவுகளில்
கற்பனைகளில் மூழ்கவிட்டு
நோக்கமற்று அலையவிட்டு

நாவுக்கும் மனதிற்கும்
குடலை பலியாக்கி

ஆசைக்கும் உணர்வுக்கும்
நம் மனத்தைப் பழிவாங்கி

நம் சக்தி முழுவதையும் உறிஞ்சிக் கொள்கிறான்

முடிவாக
உல்லாசங்களில் கேளிக்கைகளில்
தேவையற்ற ஆடம்பரங்களில்,
போலி கௌரவங்களில்
நம்மை முழுமையாக மூழ்கவிட்டு
நம் வளத்தையெல்லாம் அபகரித்துக் கொள்கிறான்

இப்படித்
தேரிழந்து
ஆயுதமிழந்து
சக்தியிழந்து
மண்பார்த்து நிற்கும்
 நிலையானப் பின்னே

சக்தியற்றவன் உடலில்
சட்டெனப் புகும் நோயினைப் போல்
நமக்குள் முழுமையாய் நிறைந்து கொள்கிறான்

நம்மிடம் இப்போது எதுவுமே இல்லை
ஆயினும்
தொடர்ந்து வாழ
எல்லாமும் வேண்டியதாயும் இருக்கிறது

இப்படியோர்
இடியாப்பச் சிக்கலில்
ஆப்பசைத்து மாட்டிய குரங்காக
செய்வதறியாது கைபிசைந்து நிற்கும்வரை

நமக்கு அன்னியன் போலிருந்த சைத்தான்
இப்போது நமக்குள்
நாமாகவே மாறி
நமக்கே புதிய வேதம் ஓதுகிறான்

" பணத்தைக்  கொண்டு
எதை வேண்டுமானாலும்
செய்ய முடியும்,வாங்க முடியும் என்கிற
இந்த கேடுகெட்ட உலகில்
பணம் சம்பாதிக்க
எந்த கேடு கெட்டதைச்   செய்தால்தான் என்ன ?"
என்கிறான்

சுயநலமாகவோ
தர்க்கரீதியாகவோ
யோசித்துப் பார்க்கையில்
உலக நடப்பினைக்  கூர்ந்துப்  பார்க்கையில் ...

அவன் சொல்வது
சரியாக மட்டும் படவில்லை
நிலை தவறிய நமக்குப்
புதிய கீதை போலவே படுகிறது

வேறு வழியின்றி
நம்மை அறியாது
நாமே சாத்தானாக உரு மாறத் துவங்குகிறோம்

எனவே
"சைத்தன் என்பது பொய்
அப்படி எதுவும் கிடையாது"
இப்படிச் சொல்பவனைத் தொடராதே
அவன் அறியாது பேசுகிறான்

Friday, April 8, 2016

நாட்டுமேல நமக்கெல்லாம் அக்கறையே இருக்குதுண்ணா....

பொறந்தநாள  மறந்துகூட
இருந்திடலாம் மச்சான்-தேர்தல்
நடக்கும்நாள மறந்துநாம
இருக்கலாமோ மச்சான் ?-குழந்த

பொறந்தநாள மறந்துகூட
இருந்திடலாம் மச்சான்-மே
பதினாற மறந்துநாம
இருக்கலாமோ மச்சான் ?-

வருஷமெல்லாம் விழுந்துவிழுந்து
படிச்சபுள்ள மச்சான்-பரிச்சை
நாளுபாத்து தூங்கிபுட்டா
வெளங்கிடுமா மச்சான் ?- அஞ்சு

வருஷமாக எதிர்பாத்து
இருந்தநாளை மச்சான்-லேசா
வெறும்நாளா நினைசுப்புட்டா
நஞ்சிடுவோம் மச்சான்

சீர்செனத்தி நூறுவகை
ஊரறிய வச்சாலும்-தாலி
கட்டினாத்தான் கல்யாணக்
கணக்காகும் மச்சான்

நாட்டுமேல நமக்கெல்லாம்
அக்கறையே இருக்குதுண்ணா-ஓட்டுப்
போட்டாத்தான் உண்மையாகும்
சரிதானா மச்சான் ?

Thursday, April 7, 2016

தலைவர்களைத் தோற்கடிப்போம்....

எக்கட்சித் தொண்டராயினும்
கட்சியைச்  ஜெயிக்க  வைப்போம்
கட்சித் தலைவர்களைத்
தோற்கடிப்போம்

முன்பெல்லாம்
பேருக்காவது
பொதுக் குழுக் கூடி
செயற்குழுக் கூடி
தலைவருக்கு அதிகாரமளிப்பதாக
ஒரு நாடகம் போடுவார்கள்

இந்தத் தேர்தலில்
ஒப்புக்கூட அது இல்லை

அப்படிச் செய்த
ஒரு சில கட்சியிலும்
தொண்டனின் கருத்துக்கு
நேர் எதிராகவே
அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்

நம் கருத்துக்கும்
இனியேனும்
மதிப்பிருக்க வேண்டுமெனில்
எக்கட்சித் தொண்டராயினும்

கட்சித் தலைவர்களைத்
தவறாதுத் தோற்கடிப்போம்

எந்தக் கட்சித் தொண்டராயினும்
கட்சியைச் ஜெயிக்கவைப்போம்
வாரிசுத் தலைவர்களைத்
தோற்கடிப்போம்

தியாகம்
அர்ப்பணிப்பு
விசுவாசம்
எல்லாம் செல்லாக் காசாகி

தலைவரின் வாரீசுகளும்
வாரீசென
அடையாளப்படுத்தப் பட்டவர்களே
தலைமுறை தலைமுறையாய்
தலைமைப் பொறுப்புக்கென
திணிக்கப் படுவதால்...

ஒரு சாமானியனின் குரல்
அரங்கேறும் சாத்தியம்
ஒரு சாமானியன்
தலைவனாகும் சாத்தியம்
அடியோடு ஒழிந்து தொலைவதால்

எந்தக் கட்சித் தொண்டராயினும்
வாரீசுத் தலைவர்களைத்
தவறாது தோற்கடிப்போம்

Wednesday, April 6, 2016

வேராகப் பதிவுலகு இருக்க..

சந்தமதும் சிந்தனையும்
சந்தனமும் குங்குமமாய்
ஒன்றையொன்று சார்ந்துநிற்கும் போது-கவிநூறு
பொங்கிவரத் தடையுண்டோ கூறு

தாளமதும் இராகமதும்
தண்ணீரும் குளுமையுமாய்
மாயக்கட்டுக் கொண்டிருக்கும் போது-கவிஆறு
மடையடங்கிக் கிடந்திடுமோ கூறு

இளமனதும் அனுபவமும்
இலைபோலக் கிளைபோல
பலமாகப் பிணைந்திருக்கும் போது-கவித்தேர்
நிலையடங்கிக் கிடந்திடுமோ கூறு

சீராட்டவும் பாராட்டவும்
தாயாக உறவாக
வேராகப் பதிவுலகு இருக்க-கவிச்சீர்
வழங்குவதில் குறைவருமோ கூறு

Tuesday, April 5, 2016

பருவம் தாண்டிப் பிறந்த காதல்

பருவம் தாண்டிப் பிறந்தக்  காதல்
பாடாய்ப் படுத்துதடி-வயது
வரம்பை  மீறி  மனதுக் குள்ளே
மோகம்  கூட்டுதடி

பார்க்கும் பொருளில் எல்லாம் இருந்து
பாவனைக் காட்டுதடி-என்னைச்
சேர்த்து அணைத்துச்   சொக்க வைத்துச்
சோதனை பண்ணுதடி

இரவில் எல்லாம் விழிக்க வைத்து
இம்சைப்  பண்ணுதடி -பட்டப்
பகலில் கூடக்  கனவில் லயித்து
கிறங்கச் சொல்லுதடி

கருவைக் கொடுத்து முதலில் என்னை
அருகில் அழைக்குதடி-பின்
உருவம் கொடுக்க அலைய விட்டு
வேதனைக் கூட்டுதடி

உறவுக் கூட்டம் நிறையக் கொடுத்து
உணர்வைக் கூட்டுதடி-அவர்கள்
உணர்வுப் பூர்வப்  பதிலைக் காட்டி
உயிரை உலுக்குதடி

 பதிவு எட்டு நூறினைத தாண்டியும்
 ஆர்வம் குறையலையே -நான்கு
நூறுப்  பதிவர் தொடர்ந்த  பின்னும்
தாகம் குறையலையே

பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய பாத்திரமே-அதற்கு
அடிமை ஆனோர் மீண்டு எழுந்திட
இல்லை சாத்தியமே

Monday, April 4, 2016

வார்த்தைகள் உயிர் பெறுவது..

வண்ணங்கள்
நம் கண்களுக்கு
குளிர்ச்சித்  தருபவைகள்தான்

மனதிற்கு
மகிழ்ச்சித்  தருபவைகள்தான்

ஆயினும்
வண்ணங்கள்
குளிர்ச்சிப்  பெறுவதும்
மகிழ்ச்சிப்  பெறுவதும்

ஓவியனின் தூரிகைத்
தன்னைத் தொட்டுத் தழுவுகையில்தான்

ஆயுதங்கள்
நம் உடமைகளுக்கு
பாதுகாப்புத்  தருபவைகள்தான்

மனதிற்குப்
பலம் தருபவைகள்தான்

ஆயினும்
ஆயுதங்கள்
பாதுகாப்புப் பெறுவதும்
பலம் பெறுவதும்

ஒரு வீரன்
அதைத் தாங்கி நிற்கையில்தான்

இல்லத்து உணவு
நம் நாவுக்கு
சுவைத்  தருபவைகள்தான்

உடலுக்கு
சக்தித்  தருபவைகள்தான்

ஆயினும்
அந்த உணவு
சுவைப்  பெறுவதும்
சக்திப்  பெறுவதும்
அன்னையவள் அன்பாய்ப் படைப்பதில்தான்

வார்த்தைகள்
நம் உணர்வுக்கு
உயிர் கொடுப்பவைகள்தான்

நம் நினைவுக்கு
உருக்  கொடுப்பவைகள்தான்

ஆயினும்
வார்த்தைகள்
உயிர் பெறுவதும்
உச்சம் தொடுவதும்
கவிஞனால் கையாளப்படுகையில்தான்