செல்வம்
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
கோடையை வாடையாக்கி
வாடையை கோடையாக்கி
செல்வந்தர்களின்
உடலையும் மனத்தையும்
நலத்தில் இல்லையாயினும் சுகத்தில் நிலை நிறுத்திப்போகிறது
வறுமை
இரவை இரவாகவும்
பகலை பகலாகவும்
கோடையை கோடையாகவும்
வாடையை வாடையாகவுமே வைத்திருந்து
ஏழைகளின்
உடலையும் மனத்தையும்
சுகத்தில் இல்லையாயினும் நலத்தில் நிலை நிறுத்திப்போகிறது
எப்படி முயன்றும்
முடியாமையால்
முன்னவர்போல்
சுகத்தில் நிலைக்க இயலாமலும்
ஒருபடி இறங்க
இயலாமையால்
பின்னவர்போல்
நலத்தை சுகிக்க முடியாமலும்
பாவம் மத்தியமரின்
உடலும் மனமும் மட்டும்
நாளும் ஏங்கி ஏங்கியே தேய்கிறது
கௌசிக மனம் தானே படைத்த
திரிசங்கு நரகத்தில்
நாளும் உழன்று வாழ்ந்தே சாகிறது