Monday, November 30, 2015

சூழ் நிலைக் கைதிகள்

பிறப்பிடமும் இருப்பிடமும்
சேறுதான் சகதிதான் ஆயினும்
அவைகளுடன் எவ்வித சம்பந்தமுமின்றி
புனித நெருப்பாய்
...
வான் நோக்கியே
நாளும் தவமிருக்கிறது
குளத்தங்கரைத் தாமரை

தர்ம நியாயங்களை
வலிமையே தீர்மானிக்கிற
ஆரண்யங்களில்
வலிமை மிக்கதாக இருப்பினும் கூட

சைவமாகவே  நாளும் வாழ்ந்து
ஆச்சரியப்படுத்துகிறது
காட்டு யானை

தன் இருப்பும் பிழைப்பும்
நோயுடனும் நோயாளியுடனும் தான் ஆயினும்
அவைகளின் நிழல் தன் மீது படராது
ஆரோக்கியத்தின் சின்னமாய்


நாளும்வல்ம் வந்து
நம்பிக்கையூட்டுகிறார்
நாமறிந்த மருத்துவர்

அழகும் இளமையும்
செல்வமும் செழிப்பும்
சுற்றிச் சுற்றி வந்து
பாதத்தில் வீழ்ந்த போதும்
அறிவுத் துடுப்பை வலித்து
உடற்படகின் துணையோடு

உன்னதக் கரைசேர்வதில்தான்
கருத்தாய் இருக்கிறான்
நிஜமான யோகி

நுனிக்கிளை அமர்ந்து
முன்புறம் வெட்டும் முட்டாள்களும்
நூலறுந்தபட்டமாய்
உணர்வுக்காற்றின் வழியோடும்
சராசரிகள் மட்டுமே
சூழ் நிலைகளைக் காரணம்காட்டி

தானும் நொந்து போய்
சூழ்ந்தவர்களையும்
நோகடித்துப் போகிறார்கள்
தன் வாழ்வையும்
வீணடித்துச் சாகிறார்கள்

Sunday, November 29, 2015

.கசாப்புக் கடை தேடும் வெள்ளாடுகள்..

.பணிச்சுமை தாளாது
என் நண்பன் பரிதவித்தபோது
"கொஞ்சம் மென்திறன் வளர்
மன இறுக்கம் குறையும்" என்றேன்

சில நாட்களில்..
கார்பரேட் நண்பன்
கார்பரேட் கவியாகிப் போனான்

கவிதைகளும் சிறப்பாக இருந்தன.
அதுவரை பிரச்சனை ஏதும் இல்லை.

சக கவிஞர் ஒருவர்
"வரலாறு முக்கியம் அமைச்சரே"என
வடிவேலு சொன்னதைப்போல
"கவிதையில்
முற்போக்கு முக்கியம் தம்பி"எனச் சொல்ல
ரொம்பக் குழம்பிப் போனான்
லேசாக தடம் மாறியும் போனான்

அடுத்தமுறை  அவனை சந்தித்த போது..
நேர்வழியில்அலுவலகம் சென்றுகொண்டு இருந்தவன்
சுற்றுவழியில் சுற்றிப்போனான்

காரணம் கேட்டேன்
"ஏழ்மையை வறுமையை
தெளிவாகப் புரிந்துகொள்ள
சேரிகளைக் கண்டுபோவதாகச்" சொன்னான்

புழுதி தூசி தாங்காதவன்
பல சமயங்களில்
தன் கார் கண்ணாடி இறக்கி
சேரிச் சண்டைகளை ரசிக்கத் துவங்கினான்

காரணம் கேட்க
"அவர்கள் வார்த்தைகளை
அதே உச்சரிப்போடு
கவிதையில் பொருத்தினால்தான்
சுருதி கூடும்"என்றான்

வார வேலை நாட்களில்
எப்போதும் பரபரப்பாயிருந்தான்

காரணம் கேட்க
"சனிக்கிழமைக்குள் பதிவினைப் போட வேண்டும்.
அப்போது தான்பின்னூட்டம் அதிகம் வரும்"என்றான்

"மாதம் ஐந்துவீதம்
ஒரு வருடம் பதிவு போட்டால்
அறுபது வரும்
அதில் பத்து பதினைந்து போனாலும்
ஒரு புத்தகம் தேத்தலாமா"என
பார்க்கும்போதெல்லாம் புலம்பத் துவங்கினான்

சனி மாலைகளில்
அவனை தொடர்புகொள்ளவே இயலவில்லை.

காரணம் கேட்டபோது
பதிர்வர்களை பில்டப் செய்வது குறித்தும்
பங்காளிகளாகப் பிரிந்துகிடக்கும்
பதிர்வர்கள் குழு குறித்தும்
அதற்குள் இருக்கும் அரசியல் குறித்தும்
வகுப்பெடுக்கத் துவங்கினான்

தடம்மாறிப் போனவன
இப்போது
திசைமாறிப் போவதுபோல்
எனக்குப்பட்டது

நாட்கள் செல்லச் செல்ல
தோட்டதில் பாதி கிணறாகிப் போக
விளைச்சல் பாதியான கதைபோல

உளைச்சல் தீர
வழிதேடிப் போனவன்
வழியிலேயே உழன்று திரிய

அலுவலக உளைச்சல்
இன்னும் அதிகமாகிப்போனது

வெகு நாட்கள் கழித்து
அவனைச் சந்தித்தபோது
கொஞ்சம் மெலிந்திருந்தான்
தாடி மீசை யோடு
ஒரு சாமியாரைப் போலிருந்தான்

"உடல் சரியில்லையா"என்றேன்
அதற்கு பதில் சொல்லாமல்
ஒரு சாமியாரைப் பற்றி
மிக உயர்வாய்ச் சொன்னான்

"அவர் அப்படியெல்லாம் இல்லையாமே
உனக்குத் தெரியுமா" என்றான்

"எதற்கு " என்றேன்

"அவரிடம் மனப் பயிற்சி பெற்றால்
எல்லாம் சரியாகி விடுகிறதாமே "
என்றான்
 
நான் பதிலேதும் சொல்லவில்லை

எனக்கென்னவோ முன்பு
ஆப்பசைத்து மாட்டிக்கொண்ட
முட்டாள் குரங்குககள் எல்லாம்
புத்தி தெளிந்துவிட்டதைப் போலவும்

புத்திசாலி வெள்ளாடுகள்தான்
கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு
கசாப்புக் கடைக்கே
வழி கேட்டு  அலைவது  போலவும் பட்டது

Friday, November 27, 2015

நரகமாகிவரும் சொர்க்கம்

ஆடைகளை
பகட்டும் நாகரீகமும் தீர்மானிக்க
நொந்து நூலாகிப்போகிறது உடல்

உணவினை
நாவும் மனமும் தீர்மானிக்க
வெந்துச் சாகிறது குடல்

செயல்பாடுகளை
உணர்வும் ஆசையும் தீர்மானிக்க
பாடய்ப்படுகிறது அறிவு

தேவைகளை
விளமபரங்களும் கௌரவங்களும் தீர்மானிக்க
ஓடாய்த் தேய்கிறது செழுமை

தொடர்புகளை
பயனும் "பசையும்" தீர்மானிக்க
போலியாகிப் போகிறது நட்பு

காதலை
சந்தர்பங்களும் காமமும் தீர்மானிக்க
கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு

வெற்றியினைப்
பணமும் ஜாதியும் தீர்மானிக்க
கேலிக் கூத்தாகிறது தேர்தல்

நியாயத்தை
பதவியும் செல்வாக்கும்  தீர்மானிக்க
இறந்து கொண்டிருக்கிறது தர்மம்

மொத்தத்தில்

தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
செயலிழந்து கிடக்க

கேடுகெட்டவை எல்லாம்
அரியனையேறிச்  சிரிக்க
நரகமாகிக் கொண்டிருக்கிறது....

சொர்க்கமாய் இருக்கவேண்டிய
நம் சுக வாழ்வு 

Thursday, November 26, 2015

அதிருப்தி

ஒரு உணர்வாகவோ
ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு

அதுவரை எங்கோ புதைந்து கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது

அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது

என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக  மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது

Wednesday, November 25, 2015

குறைகளும் குற்றங்களும் ...

தவறு என்பது தவறிச் செய்வது
இவன் வருந்தியாகனும்

தப்பு என்பது தெரிந்து செய்வது
இவன் திருந்தியாகனும் என

தவறுக்கும் தப்புக்கும்
தெளிவான எளிமையான விளக்கத்தை
"பட்டுக்கோட்டையார்" அளித்ததைப்போல்

குறைகளுக்கும் குற்றங்களுக் கும்
யாரும்  சரியாக விளக்கம் அளிக்காததால்தான்

குறைகளைக்  குற்றங்களாகவும்
குற்றங்களைக்   குறைபோலும் மதிப்பிடும்
தவறுகளைத் தொடர்ந்து  செய்கிறோமோ ?

நிவாரணப் பணிகளில் தொய்வு
இவைகள்  குறைகளே

இது  இயற்கையின் பெரும் சீற்றம்
நிச்சயம்  அனுமானிக்க முடியாதவையே
ஆதலால்  பொறுத்துக் கொள்ளக் கூடியவை

கட்சிகள் அரசியல் செய்வதை
கண்டு கொள்ளவேண்டியதில்லை

மோசமான நகரமைப்பு
நிச்சயம்குற்றங்களே

அதிகாரம் அளித்திருந்தும்
முறையாக  செயல்படுத்தாததால்
மன்னிக்க முடியாதவைகளே

பொறுப்பில் இருந்த கட்சிகள் இரண்டும்
தண்டிக்கப் படவேண்டியவைகளே

எப்படிச் செய்யப்போகிறோம் ?

Tuesday, November 24, 2015

சராசரி என்பதே விதி

அனைவரும் பார்ப்பதையே
கொஞ்சம் வித்தியாசமாகப் பார்க்கவும்

அனைவரும் உணர்வதையே
கொஞ்சம் வித்தியாசமாய் உணரவும்

அனைவரும் சொல்வதையே
கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லவும்

தெரிந்திருப்பதால்
அவர் படைப்பாளி

" விளக்கம் " கொடுத்தால் மட்டுமே
விளங்கித் தொலைக்கும்படி
ஒரு குழப்பம்  கொள்ளும்படி

"இவைகள் "  சொல்லப்பட்டால் மட்டுமே
என வரையரை செய்துள்ளோர்
வரையரைக்குள் அடங்கும்படி

"இப்படிச் " சொல்லப்பட்டால் மட்டுமே
அது தரப்பட்டியலில் சேரும் என்போர்
மனமது குளிரும்படி...

சொல்லத்தெரிந்திருந்தால்
அவரும் படைப்பாளி

ஆயினும் .....

பின்னதே  சரியெனில்
படைப்புலகில்
மறுப்பேதுமின்றி
அவரே பிரபலப்  படைப்பாளி

 முன்னதே சரி எனில்
சந்தேகத்திற்கு இடமின்றி
அவரைச்  சராசரி என்பதே
படைப்புலகின் விதி 

Monday, November 23, 2015

இறுதிப் போட்டி ?

உடலே மத்தாக
மூச்சே வடமாக
ஐம்புலனும் பார்வையாளனாக

காலமும் உயிரும்  நடத்தும்
கயிறிழுக்கும் போட்டிதான்
நாம் வாழும் வாழ்வா ?

இழுத்து அலுத்து
ஓய்ந்த  உடலது
இயலாது தன் நுனியை
மெல்லத் தொய்யவிட

எரிச்சலுற்ற காலம் தன் நுனியை
காலனிடம் சேர்க்கும் நாள்தான்
நமக்கு கடைசி நாளா ?

வார்த்தைகளை எளிதாய் வெல்லும்
அதீத மௌனம் போல

ஹிம்ஸையின் பேயாட்டத்தை
எதிர்க்காதே வெல்லும்
சக்தி மிக்க அஹிம்ஸைபோல

ரூபத்தை வெட்டிச் சாய்த்து
அரூபம் வெல்லும்
அந்த    நாள்தான்
நமக்கெல்லாம் இறுதி நாளா ?