Tuesday, September 1, 2020

புலிக் கூண்டுவிட்டு...சிங்கத்தின் குகையில்..

 *குழுவிலிருப்போர் அனைவரின் அன்பான  கவனத்திற்கு:*

********************


1) *நோய்த்தொற்றுப் பரவல் அதிகமாகிறது /  குறையவில்லை என்பதை மனதில் கொள்ளவும்*    *அரசு வேறு வழியில்லாமல் அதிக தயக்கத்துடன் இந்தத் தளர்வுகளை அறிவித்துள்ளது*.


2) *தடுப்பு மருந்து இன்னும் வெளிவரவில்லை*


3) *நோயை குணப்படுத்த நேரடியான மருந்து, மாத்திரை, ஊசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை*.


4) *பாடகர் திரு SPB அவர்கள்  50 நாட்கள் வீட்டிலிருந்தவர்*

   *ஒருநாள் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கு*   *பெற்றதனால்  சுமார் 25 நாட்களாக மருத்துவமனையில் இருக்கிறார்*


5) *பல மருத்துவமனைகள்  சாதாரண பிரச்னைக்கு போனாலே Covid19 Test எடுத்தபின் தான் வைத்தியம் தொடங்குகிறார்கள்*

*எனவே*....


*A) மிக மிக அவசியமான காரணத்திற்கு மட்டும் வெளியில் செல்லுங்கள்*.


*B) முகம்/வாய் இரண்டையும் முழுவதுமாக மூடக்கூடிய முகக்கவசத்துடன் செல்லுங்கள்.*


*C) யாருடனும் பேசும்போது முகக்கவசத்தை அகற்றாமல் பேசுங்கள்*.


*D) கடையிலோ வங்கியிலோ பேருந்து ஆட்டோ பயணத்திலோ அந்நியர்களிடம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்*.


*E) கோவில்களில் கூட்டமிருந்தால் தூரத்தில் இருந்து வணங்கி விட்டு வந்து விடுங்கள்.*


*F) கிட்டத்தட்ட 150 நாட்கள் பாதுகாப்பாய் வீட்டிற்குள் இருந்தோம், அரசு அறிவித்துள்ள தளர்வு காரணமாக நண்பர்கள் இல்லம் / உறவினர் இல்லம் என்று குடும்பத்துடன் பொதுப் போக்குவரத்து பயணத்தில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே கைப்பேசியிலேயே Video Callல் பேசி மகிழுங்கள் உங்களுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது.*


*இந்தக் கருத்துகளை மனதில் கொண்டு நாம் அனைவரும் நலமுடன் வாழ்வோம்*💐💐💐💐💐


(லாக்-டவுன் தளர்த்தப்பட்டதால் புலிக் கூண்டில் இருந்து தப்பிய மனநிலை கொள்ளவேண்டாம்...இப்போது நாம் நிற்பது பசித்த சிங்கக் கூண்டில் ...முன்பை விட கூடுதல் ஆபத்துள்ள இடம்...)

 🙏🙏🙏🙏🙏

Sunday, August 30, 2020

மாண்டிச்சோரி பிறந்தநாள்

 .ஆடிப்பாடி எல்லோரும் கொண்டாடுவோம்

ஆனந்தமாய் இந்தநாளைக் கொண்டாடுவோம்

கூடிப்பாடி மகிழ்வுடனே கொண்டாடுவோம்-மாண்டிச்சோரி

பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்


குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை

அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை

உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்

அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா


பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை

குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என

எல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்

பிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா


திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்

புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை

அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா-அவ்ர்

வந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா


இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்

தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற

சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை

இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா


(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)(சிறு செடியை பிடுங்கி நட்டாலும் வேரைப்போலவே அது இருந்த மண்ணையும் சேர்த்தே எடுத்து நடப் பழகிய நமக்கு இவர் கூற்று புரிதல் கடினம் இல்லையே) 

Saturday, August 29, 2020

அது ஒரு வஸந்த் & கோ காலம்

 நாற்பதாண்டுகளுக்கு முன்பு வாங்கிய

ஒரு இரும்புக்கட்டிலில் அமர்ந்து அதனுடன்

சேர்த்து வாங்கிய இரும்பு பீரோவைப் பார்த்தபடி

இதை எழுதத் துவங்குகிறேன்..


இப்போது அவசியத் தேவையோ இல்லையோ

நினைத்ததும் இலட்சம் ரூபாய் ஆனாலும்

கிரடிட் கார்டை தேய்த்து உடன் பொருளை

வீட்டுக்குக் கொண்டு வருகிற இன்றைய 

தலைமுறையினருக்கு இந்தப் பதிவு

வித்தியாசமானதாகவோ ஏன் ஒருவேளை

கேலிக்கூத்தானதாகவோ தோன்றவே அதிகச்

சாத்தியம்


எண்பதை ஒட்டிய காலங்களில் ஒரு

நடுத்தர ஊழியரின் சம்பளம் என்பது

உத்தேசமாக எண்ணூறு தொள்ளாயிரம்

என்கிற அளவிலேயே இருக்கும்              ..நான்கு இலக்கச் சம்பளம்

என்பது உயர்தரப்பணியாளர்களைக் குறிக்கும்

ஒரு குறியீடாகவே இருந்த காலம்..


கிராமத்தில் இருந்து படித்து

முடித்து அரசுப் பணி கிடைத்து வெளியூர்

வேலைக்குச் செல்வதும் அந்த வேலையின்

காரணமாகவே திருமணத்திற்குப் பெண்கள்

எளிதாக அமைவதுமாக இருந்த காலம்....


அந்தக் காலக் கட்டத்தில் சீர் வரிசையாக

வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும்

கிடைத்துவிடும் சாத்தியம் இருந்த போதும்

புரட்சிகர சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டு

வரதட்சணை சீர்வரிசை வாங்கக் கூடாது என்பதை

இலட்சியமாகக் கொண்ட பலருக்கு

அது ஒரு சோதனைக் காலமே.


பெண் எளிதாகக் கிடைத்தாலும் வசதியான

ஆடம்பரமான வாழ்வுக்கு ஏற்ப ஊதியம்

இல்லையென்றாலும் வருகிற் பெண்ணும்

பெண்ணும் பெண் வீட்டாரும் கௌரவமாக

நினைக்கிற அளவு வீட்டில் அத்யாவசியத்

தேவையெனச் சொல்லத் தக்க கட்டில் பீரோ

குக்கர் கேஸ் ஸ்டவ் டேபிள் நாற்காலி 

மற்றும்தகரப் பொட்டி அல்லாது ரெக்ஸின

சூட்கேசாவது இருக்கவேண்டும் என்கிற

தேவை இருந்த காலம்..


குறைந்த பட்ச மேற்குறித்த தேவைகளை

நிறைவு செய்ய அன்றைய சம்பளத்தில்

குறைந்த பட்சத் தேவை நான்கு மாதச்

சம்பளமாவது வேண்டி இருக்கும்..


கிராமத்தில் இருக்கும் பெற்றோருக்கு

முடிந்ததை அனுப்பியது போக

இங்கு வேலை பார்க்கும் இடத்துத் தேவையான்

ரூம் வாடகை சாப்பாட்டுச் செலவு

இவையெல்லாம் எப்படித்தான்

சிக்கனமாகச் செய்தாலும்

கூட மாதம் இருபதோ முப்பதோ

மிச்சப்படுத்துவதற்குக் கூட பிரம்மப்பிரயத்தனப்

படவேண்டும்....


புரட்சிகர எண்ணத்தையும் விட்டுக் கொடுக்க

முடியாது...அத்யாவசியத் தேவையையும்

நிறைவு செய்யாது இருக்க முடியாது

பணம் சேர்த்து பொருள் வாங்கவும் முடியாது

இப்படிப் பட்ட இடியாப்பச் சிக்கலில்

இருந்த என்போன்ற நடுத்தர மக்களுக்கு

வாயத்த வரப்பிரசாதம் தான் வஸந்த & கோ

மாதிரியான தவணையில் பொருள் கொடுக்கும்

நிறுவனங்கள்....



தொடரும்

Wednesday, August 26, 2020

1500 + 1-------

தெரிந்ததை

தெரிந்தபடி

பிறரும் தெரிந்துகொள்ளும்படி

அதிகம் சுவை கூட்டாது


புரிந்ததை

புரிந்தபடி

பிறரும் புரிந்து கொள்ளும்படி

அதிகம் மெருகூட்டாது


தெளிந்ததை

தெளிந்தபடி

பிறரும் தெளிவுறும்படி

அதிகம் விளக்க முயலாது


கவிதையை விரும்புவோர்

முகம் சுழிக்காது

கவிதையை வெறுப்போர்

விலகி ஓடிவிடாது


கவிதையாயும் இல்லாது

உரையாகவும் இல்லாது

ஏதோவாக

யாதோவாக


பத்தாண்டுகளாக

எவ்விதத் தொய்வுமின்றி

தொடர்ந்து எழுதுவதை...


நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட

நாட்டினர் தொடர்வதும்

நானூறுக்கும் மேற்பட்டோர்

தொடர்ந்து இணைந்து இருப்பதும்


ஆறு இலட்சத்திற்கும்

மேலாக படிக்கப்பட்டிருப்பதுவும்

அதிக மகிழ்வளிக்க..


அதீத உற்சாகத்தோடும்

எனக்கான எல்லையினை

இன்று இன்னும் விரிவுபடுத்தி வைக்கிறேன்...


பதிவர்களாகிய

உங்கள் ஆதரவோடும்

நிறைவான ஆசியோடும்...

Monday, August 24, 2020

ஆத்ம ஞானமும் அல்ப ஞானமும்



ஆரம்பத்தில் 

சீனாவில்

கொரோனாவால் ஏற்பட்ட

ஒரு சில மரணத்திற்கே

பதறிய மனம்.....


இப்போது

உலகெங்கும்

இலட்சக்கணக்கில் என்றபோதும்

சமநிலை பேணுகிறது...


மாலைச் செய்தியில்

மரண அறிக்கையினைக் கேட்கக் கேட்க

உறவுகளை இழந்தது போல்

நடுங்கிய மனம்....


இப்போது

அடுத்த வீட்டில் என்றாலும் கூட

அதை ஒரு தகவலாக மட்டுமே

கணக்கில் கொள்கிறது...


புராணங்களும்

போதனைகளும்

தராத ஞானத்தை

ஒரு நுண்கிருமி தந்து போனது கூட

ஒருவகை நகை முரணே...


இருந்தும் உண்ணாதிருத்தலும்

இல்லாமையால் உண்ணாதிருப்பதும்

விரதக் கணக்கில் சேர்த்த கதையாய்...


உணர்ந்து தெளிந்து பெறும்

ஆத்ம ஞானமும்...


இயலாது அடங்கிப் பெற்ற

இந்த அல்ப ஞானமும்..

இப்போது ஒரே கணக்கில்....

Wednesday, August 19, 2020

அழிவின் விளிம்பில் ....

 இதுதான் வாழ்க்கை !  வெள்ளம் உணர்த்தும் பாடம் !


“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும். 

முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”


இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு


தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்.


இப்போது அவர்கள் பிரச்சினை

எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல

எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்.


முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள். 


பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன.


பரிசுப்பொருள்கள்

தெய்வப்படங்கள்

புகைப்பட ஆல்பங்கள்

ஆடைகள்

உள்ளாடைகள்

புத்தகங்கள்

இசைக்கருவிகள்

இசைப்பேழைகள்

ஸ்பூன்கள்

கண்ணாடிக் கோப்பைகள்

பொம்மைகள்

கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்

உடல் வாசனையுள்ள போர்வைகள்


அழகு சாதனப்பொருள்கள்


கைவிடுவதற்கு முடிவேயில்லாமல் ஏராளமாக இருந்தன.


நீங்கள் கைவிடும்போது உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப்போல உறையச் செய்ய வேண்டும். 


எவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ அவ்வவு கருணயற்றவராக மாறவேண்டும்.

 

ஒரு தூக்கிலிடுபவனைப்போல உங்கள் கண்கள் மரத்துப் போக வேண்டும்.


ஒரு பாலித்தீன் பை அளவுக்கு மட்டுமே எதையும் எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் இருந்தது. அனுமதி இருந்தது.


அவர்கள் ஒரு பிரம்மாண்டமான விற்பனையகத்தின் முன்னால்கூட அப்படி திகைத்து நின்றதில்லை.


தேர்வு என்பது அத்தனை கடினமானதாக இருந்தது. 


அத்தனை உணர்ச்சிகரமானதாக இருந்தது. 


எதுவுமே அவ்வளவு முக்கியமல்ல என்று தோன்றிய கணத்தில் அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது.


கடவுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்.


வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்கள்.


சான்றிதழ்ககளை எடுத்துக் கொண்டார்கள். 


ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கொண்டார்கள்.


ரேஷன் கார்டுகளை, வாக்காளர் அட்டைகளை, ஆதார் அட்டைகளை, வாகனங்களை கைவிட்டு ஓட்டுனர் உரிமங்களை, கடன் பத்திரங்களை இன்னும் என்னென்னவோ! 


முத்திரையிடப்பட்ட காகிதங்களை, ஆவணங்களைத் தவிர நம் வாழ்வை மீண்டும் நீட்டிக்கச் செய்வதற்கு வேறு எதுவுமே முக்கியமல்ல என்பது அவர்களை ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது.


பிறகு வீடுகளை அப்படியே திறந்து போட்டு விட்டு ஒரு பாலீத்தின் கவரை தலைக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி மேட்டு நிலம் நோக்கி தண்ணீரில் வேக வேகமாக நடந்து சென்றார்கள்...


வாழ்க்கையே இவ்ளோதான்... இதிலே,  நான்தான் உத்தமன்... நான்தான் உயர்ந்தவன்...  என் தலைவர்தான் நல்லவரு - வல்லவரு (?)...  என் மதமும், ஜாதியும் தான் ஒசந்த ஜாதி,... என் சாமிதான் ஒசந்தது... இது என்னோட இடம்... நான்தான் பணக்காரன்... இப்படி எத்தனை பாகுபாடுகள்.... "கடைசி"யா இதுல ஏதாச்சும்  கைகுடுத்துச்சா...???.கை கொடுக்குமா...??? .. 


சிந்திப்போம்... 


இதுதான் வாழ்க்கை! இவ்வுலகில் நீங்களோ, நானோ  எதை விட்டுச் செல்ல போகிறோம்...??? 


நாளைக்கு எதை இங்கிருந்து எடுத்துச் செல்ல போகிறோம்...??? 


இருக்கும் வாழ்க்கையில், பிறர் மனம் நோகாமல்  நல்லவைகளை பேசி, முடிந்தவரை  பிறருக்கு உதவி  செய்து... எவருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வோம்...!!!


நான் ௮ப்படித்தான் வாழ நினைக்கிறேன், நீங்கள்👉?

Friday, August 14, 2020

பொறுப்பும் சுதந்திரமும்...

கம்னியூச நாட்டிலிருந்து
ஒரு கொழுகொழுத்த நாயும்

நம்போன்ற
ஜனநாயக நாட்டிலிருந்து
எலும்பும் தோலுமாய் ஒரு நாயும்

எல்லைக் கோட்டில் அதிருப்தியுடன்
சந்தித்துக் கொள்கின்றன

"எங்கள் நாட்டில்
உணவுக்குப் பஞ்சமில்லை
ஆனால் குரைக்கத் தான் முடிவதில்லை "
என்றது கொழுத்தது

"எங்கள் நாட்டில்
எப்போது வேண்டுமானாலும்
யாரைப் பார்த்தும்  குரைக்கலாம்
சோத்துக்குத்தான் பாடாய்ப்படனும்"
என்றது மெலிந்தது

இரண்டும் ஒத்தமனதுடன்
இடம் மாறிக்கொள்ளச் சம்மதித்து
நாடு மாறிக் கொண்டன

பொறுப்பறியா சுதந்திரமும்
சுதந்திரமில்லா பொறுப்புக்களும்
மீண்டும் சலிப்படையத்தான் செய்யும்
என்பதை உணராமலேயே...

இதே காரணத்திற்காக
இவை இரண்டும் மீண்டும்
மாறித் தொலைக்க வேண்டி இருக்கும்
என்பதை அறியாமலேயே