கூகுள் நம் நடிகர் திலகம் அவர்கள் பிறந்த நாளில் அவருக்குக் கொடுத்த கௌரவம் எனவும் சொல்லலாம்.பகிர்ந்ததன் மூலம் .கூகுள் பெற்ற கௌரவம் எனவும் கொள்ளலாம்.
Thursday, September 30, 2021
Wednesday, September 29, 2021
டாங்க்ஸ் அண்ணே...
அண்ணே அண்ணே இரண்டு கையிலேயும்
வாட்ச் கட்டிக்கிட்டு போறாரே அவ்ரு யாருண்ணே
அவர் தாண்டா நம்ம ஊருக்கு புதிசா
வந்திருக்கிற வாத்தியாரு
ஏண்ணே ரெண்டு வாட்சு கட்டி இருக்காரு
புரோட்டத் தலையா அவருக்கு வசதி இருக்கு
கட்டிக்கிறாரு..இதில உனக்கு என்ன பிரச்சனை
அது இல்ல அண்ணே காசு இருக்குண்ணா
தலைக்கு ரெண்டு தொப்பியும்
காலுக்கு நாலு செருப்பும் போடுவாங்களாஅண்ணே
வாத்தியாருண்ணா தெளிவாத்தான் இருப்பாங்க அண்ணே
காரணம் இல்லாம கட்டமாட்டாங்க அண்ணே
காரணன் தெரிஞ்சிக்கிட்டா..நானும் கூட
கட்டிக்கலாம்னுதான்னே கேட்கறேன். அண்ணே
.
ஓ நீ அப்படி வாரையா...
இவருக்கு இங்கே ,மட்டுமில்லை
அமெரிக்காவுலயேயும். உறவுக்காரங்க இருக்காங்க
அந்த நேரத்தையும் தெரிஞ்சிக்கத்தான் கட்டி இருக்காரு
விளங்கிச்சாடா மாங்கா மடையா..
அப்படி இருக்காதுண்ணே.அடுத்த தெருவில
கை நாட்டு கந்த சாமி மகன் கூட அமெரிக்காவுலதானே
இருக்கான்..அவன் வாட்சே கட்றது இல்லை அண்ணே..
ஆனா கரெக்டா அந்த ஊர் டயத்தை
சொல்லிப் புடுவாருண்ணே..
வேற ஏதாச்சும் காரணம் இருக்கும்ண்ணே
சரி விடு.. ஒன் வழிக்கே வாரேன்,
அவரு எப்படி அந்த ஊரு டயத்தை
சரியாய் சொல்றாரு...
அப்படி வாங்கண்ணே.. அவரு ஈஸியா
ஒரு வழி வச்சுருக்காருண்ணே..
இங்கே பகல்னா அங்க ராத்திரி
அங்கே ராத்திருன்னே இங்கே பகலு
என் கிட்டே டயத்தை கேப்பாருண்ணே
அப்படியே நம்ம் நேரத்தோட இரண்டு மணியை
கூட்டுவாருண்ணே...அம்புட்டுத்தான் அண்ணே
அட பிஸ்கோத் வாயா... நானும் நீயும் இப்படி
ரோட்லேயும் வெய்யிலிலேயும் அலையுரோம்
பகல் ராவு தெரியுது..அவுக எல்லாம்
ஏ.சிக்குள்ளேயே புழங்குறாவங்க
அப்படி உள்ளேயே இருந்தா பகல் ராவு
எல்லாம் ஒண்ணாத்தான் தெரியும்
அப்புறம் எப்படி பொழுது தெரியும்
இப்படி அப்படின்னு மாத்தி கணக்குப் பண்ண முடியும்
நீ காசியைக் கண்டியா ஏ .சியைக் கண்டியா
தெரிஞ்சாத்தான் அவக கஸ்டம் உனக்குப் புரியும்
ஆமாண்ணே நீ சொல்றது சரிதாண்ணே
நான் நீங்க சொல்ற மாதிரி மடையன் தாண்ணே
இல்லாட்டி இதை தெரிஞ்சுக்காம இருப்பேனா..
ஆனா இன்னொரு சின்ன சந்தேகம்ண்ணே
இரண்டு வாட்ச்சுல எது நம்ம வூருது
எது அவுக வூருது எப்படீண்ணே கண்டு பிடிப்பாங்க
அட முட்டாப்பயலே வலது கை நம்ம ஊரு
இடது கை அவக ஊருண்ணு வச்சுக்கிருவாங்கடா
இதுக்கு மேலே எதுவும் கேட்டே தொலைச்சுப்புடுவேன்
ஆமா...
அண்ணே அண்ணே கோவுச்சுக்காத அண்ணே
தெரியாமத்தானே கேக்றேன்.
பகல் ராவே தெரிஞ்சுக்க முடியாதவங்க
எப்படிண்ணே வலது இடது ஞாபகம் வச்சுக்க முடியும்
அந்த டவுட்டுதான் அண்ணே கேக்கறேன்
இதுக்கு எனக்கே வழி தெரியும்
அவங்களுக்கு தெரியாதா....
எப்படி அண்ணே எப்படி அண்ணே
எனக்கும் சொல்லிக் கொடுங்க அண்ணே
எதுக்க வாடா எள்ளு மூக்கா
இப்ப இப்படி எனக்கு எதுக்க நின்னுக்கிட்டா
உன் வலது கை எது
இது அண்ணே
உம். இதுக்கு நேரே இருக்கிறது என் எடது கை
இப்ப உன் இடது கை எது
இது அண்ணே
உம் இதுக்கு நேர இருக்கிறது
என் வலது கை... புரிஞ்சுதா.....
அருமையாச் சொன்னீங்க அண்ணே
உங்களுக்கே இவ்வளவு தெரிஞ்சா
வாத்தியாருக்கு எவ்வளவு தெரியும்
தெரியாமலா ரெண்டு வாட்சு கட்றாங்க
கட்டட்டும் கட்டட்டும் நல்லா கட்டட்டும்
ரொம்ப கஷ்டமானதை ஈஸியா
புரிய வச்சதுக்கு ரொம்ப
டாங்க்ஸ் அண்ணே
Monday, September 27, 2021
Our P.M...our Pride
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல வேண்டும் என்றால் நேரடி விமானம் என்றால் 16 மணி நேரம் ஆகும். பணத்தை மிச்சம் செய்கிறேன் பேர்வழி என்று 2-3 விமானங்களை பிடித்து போனால் 24 மணி நேரத்திற்கும் மேலாக ஆகும். அதுவும் எகானமி கிளாஸ் பயணம் என்றால் கிட்டத்தட்ட தீபாவளி சமயத்தில் நம் ஊரு திருவள்ளுவர் பேருந்தில் பயணிப்பது எப்படி இருக்குமோ அது போல் தான் இருக்கும் நல்ல வேலையாக யாரும் நின்று கொண்டு வர மாட்டார்கள். அதுவே 90 ஆயிரத்தில் இருந்து 1.25 லட்சம் வரை செலவு பிடிக்கும் (2 வழி டிக்கெட்).
இது போன்ற சிரமங்கள் எதுவும் மோடிக்கு கிடையாது, உண்மை தான். சொகுசான விமான பயணமாக தான் அமைந்திருக்கும். இருந்தாலும் 16 மணி நேர பயணம் என்பது உண்மையில் அனைவருக்குமே சிறிது அயர்வை கொடுக்கும். உண்மையான சிரமம் என்பது அமெரிக்காவில் பகல் நேரம் என்பது நமது இரவு நேரம். குறைந்தது 4 மணி நேரமும் அதிக பட்சமாக 10.30-12.30 மணி நேரமும் வித்தியாசம் வரும். போகும் மாகாணங்களை பொறுத்து இது மாறுபடும். அந்த கால சூழலுக்கு ஏற்ப நம் உடம்பு தயார் செய்து கொள்ளவே குறைந்த பட்சமாக 72 மணி நேரமும் அதிக பட்சமாக 1 வாரமும் தேவை படலாம். அதுவும் முதல் ரெண்டு நாட்கள் மிகவும் கொடுமையாக இருக்கும். இரவில் தூக்கமே வராது பகலில் தூங்கி வழிவோம். இது இயற்கை சாதாரண மனிதனோ, மோடியோ அனைவர்க்கும் இது பொருந்தி வரும்.
மோடி இந்தியாவில் விமானம் ஏறும் வரை பல மீட்டிங்களில் கலந்து கொண்டு விட்டு விமானம் ஏறுகிறார் விமானதில் ஓய்வு எடுப்பார் என்று பார்த்தால் நீண்ட விமான பயணம் என்றால் பைல் பார்க்க எதுவாக இருக்கும் என்று ட்வீட் செய்கிறார். அமெரிக்காவில் சந்திக்க போகும் மனிதர்கள் அவர்களிடம் பேச வேண்டியவை என்பதற்கு தன்னை தயார் செய்து கொள்கிறார். அமெரிக்காவில் இறங்கி அவர் இருந்த 64 மணி நேரங்களில் 25 சந்திப்புகள். அது அத்தனையும் வெற்றிகரமாக கையாள வேண்டும் என்றால் எத்தனை உழைப்பு இந்த மனிதருக்கு தேவை பட்டிருக்கும். இதில் QUAD தேச தலைவர்களுடன் சந்திப்பு, ஐ நா சபை மாநாட்டில் சிறப்புரை என்பது எல்லாம் உலகமே உற்று பார்க்க கூடியது அத்தனையும் வெற்றி கரமாக முடித்து நாடு திரும்பியவர், இன்று வந்தவுடன் பிஜேபி கட்சி ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்கில் கலந்து கொண்டார், அதற்கு பின் நேராக மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களோடு பேசுகிறார். அதற்கு பின் வழக்கமான பணிகள். இரவு 7 மணிக்கு தீடிர் என்று கிளம்பி போய் புதிதாக கட்டி வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வை இடுகிறார்.நாடி, நரம்பு என்று உடல் முழுவதும் ஒரு அர்ப்பணிப்பு உள்ள ஒருவரால் தான் இப்படி கருமமே கண்ணாக வேலை பார்க்க முடியும். அதனால் தான் சொல்கிறேன் என் பிரதமர் எனது பெருமை என்று ( MY PM MY PRIDE).
இங்கிவனை நாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்.
வரம் வேண்டா தவம் அறிந்து....
ஒவ்வொரு நொடியும்
எது தேவை எனப்
பார்த்துப் பார்த்துச் செய்த பின்னும்
தன் குழந்தை ஏன்
தன்னைச் சுற்றி சுற்றியே வருகிறது
என யோசித்தபடி
"பாப்பாவுக்கு என்ன வேணும்
என்ன வேணும்" எனக் கொஞ்சுகிறாள் தாய்..
எதுவும் வேண்டாம் என
தலையினை பக்கவாட்டில் அசைத்தபடி
தாயை அணைத்துக் கொள்கிறது குழந்தை
ஈன்றபொழுதினும் பெரிதுவந்து
கண்ணீர் மல்க
இறுகக் கட்டிக் கொள்கிறாள் அன்னை..
மகிழ்ந்து வாழவும்
செழித்து ஓங்கவும்
எல்லாம் வழங்கிய பின்னும்
எது வேண்டும் என
என் பிரஹாரம் சுற்றுகிறான் பக்தன்
என யோசித்தபடி
அவன் வேண்டுதலுக்கு
செவிசாய்த்து காத்திருக்கிறான் ."அவன்"
"குறையொன்றுமில்லை" எனப் பாடியபடி
"அவன்" பெயருக்கே அர்ச்சனை செய்துவிட்டு
நன்றியுடன் நகர்கிறான் பக்தன்
கொடுக்கையில் மகிழ்ந்ததற்காக அன்றி
முதன் முதலாக
கொடுத்ததற்காக மகிழ்ச்சி கொள்கிறான் "அவன் "
Saturday, September 25, 2021
கவிஞரும் கொத்தனாரும்..
சிமெண்ட் கலவை
தயார் செய்யும் முன்
கலவை எந்தப் பயன்பாட்டுக்கு என்பதை
உறுதி செய்து கொள்கிறார் கொத்தனார்
அதைப் பொருத்தே
சிமெண்ட் மணல் தண்ணீரின்
விகித்தாச்சாரத்தை
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறார் அவர்.
கரு அமைந்து
கவிதைப் புனையும் முன்
கவிதை எதனைத் திருப்திப்படுத்தவேண்டும் என்பதை
உறுதி செய்து கொள்கிறான் கவிஞன்.
அதைப் பொருத்தே
மொழி,உணர்வு அறிவின்
விகித்தாச்சாரத்தை
மிகக் கவனமாய் முடிவு செய்கிறான் அவன்..
காங்கிரீட்டுக்கு பூச்சுக் கலவை
பூச்சுக்கு காங்கிரீட் கலவை
நிச்சயம் கட்டுமானத்தின்
உறுதித் தனமைக்கு ஊறுவிளைவிக்கும்
ஊணர்வுப்பூர்வமான கருவுக்கு தர்க்கமும்
தர்க்கரீதியான கவிதைக்கு அதீத உணர்வும்
நிச்சயம் கவிதையின்
தரத்தைப் பாழ்ப்படுத்திவிடும்
ஆம்..
கலவையின் கூர் அறிந்து
கட்டுமானம் செய்கின்ற
நல்ல கொத்தனாரும்
சிறந்த கவிஞரே
ஆம்
"கலவையின் "சீர் அறிந்து
கவிதை கட்டுகிற
நல்ல கவிஞரும்
சிறந்த கொத்தனாரே
Thursday, September 23, 2021
விதைப்பந்துகள்
அனுபவத்தில்
விளைந்து முதிர்ந்தபயனுள்ள வீரியமிக்க விதைகளை
வீணாக்கிவிட விரும்பாது
அறிந்தவர் தெரிந்தவர் அனைவரிடத்திலும்
பயன்பெறட்டும் எனக் கொடுத்துப் போகிறேன்...
மரியாதை நிமித்தம்
பணிவுடன் கனிவுடன்
பெற்றுக் கொண்ட போதிலும்
எவரும் விதைக்கவோ விளைவிக்கவோ
இல்லையெனத் தெரிந்த போது
மிக நொந்து போகிறேன்
இப்போதெல்லாம்
விதைகளை யாரிடமும் கொடுத்தலைத் தவிர்த்து
விதைப் பந்துகளாக்கி
வெளிதனில் வீசிப் போகிறேன்
அது மெல்ல முளைவிட
முகமறியாதவர்கள் ஆயினும்
அதன் மதிப்பறிந்தவர்கள்
அதனைப் போற்றிப் பாதுகாக்க
மிக மகிழ்ந்து போகிறேன்..
Wednesday, September 22, 2021
நிறைவின் சூட்சுமம்
நிறைவின் சூட்சுமம்
எடுப்பதை விட வைப்பது
கூடுதலாய் இருக்க வேண்டும் என்பதில்
கவனமாய் இருக்கிறேன்
இருப்பது எப்போதும்
நிறைவாகவே இருக்கிறது
பெறுதலை விட கொடுப்பது
அதிகமாயிருத்தல் அவசியம் என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்
இருப்பது எப்போதும்
குறையாதே இருக்கிறது
கூலியை விட உழைப்பது
மிஞ்சி இருக்கவேண்டும் என்பதில்
உறுதியாய் இருக்கிறேன்
வளர்ச்சி எப்போதும்
என் வழியிலேயே குடியிருக்கிறது
பதவியை விடத் தகுதி
உயர்ந்திருக்கவேண்டும் என்பதில்
சமரசம் கொள்ளாதிருக்கிறேன்
பதவிகள் எமையடைய
நாளும் தவமிருக்கின்றன
பேசுதலை விட கேட்பது
கூடுதலாய் இருக்கவேண்டும் என்பதில்
சரியாய் இருக்கிறேன்
கேட்பதற்கெனவே ஒரு கூட்டம்
எப்போதும் காத்திருக்கிறது
எழுதுவதை விட படிப்பது
அளவு கடக்க வேண்டும் என்பதில்
அதிக அக்கறை கொள்கிறேன்
எழுதுவதற்கு விஷயங்கள்
வற்றாது பெருகுகிறது
கடந்ததை விட கடப்பதில்
கவனம் அவசியம் என்பதில்
கவனமாகவே இருக்கிறேன்
வாழ்க்கை என்றும் எப்போதும்
இனிதாகவே கடக்கிறது
( இங்கு நான் என்பதும் எனக்கு என்பதும்
என்னை மட்டும் குறிப்பதில்லை
வாழ்வின் சூட்சுமம் அறிந்தவர்கள்
அனைவரையும்தான் )

