Tuesday, February 16, 2016

அம்மணமானவர்களின் ஊரில்.........

மந்தைகளாய்த் தொண்டர்கள் இருத்தலே
தான் தலைவானாகத் தொடர்வதற்கான
மிகச் சரியான தகுதியென்பதில்
தலைவர் மிகக் கவனமாய் இருந்தார்

அதுவரை எதிரியாயிருந்த அணியுடன்
கூட்டு சேரவேண்டிய அவசியம் குறித்து
அடுக்குமொழியில் மிக அழகாகக்
காரணங்களை  அவர் அடுக்கிப் போக
தொண்டர்கள் "அசந்தே" போயினர்

கரகோஷத்தை எதிர்பார்த்த தலைவருக்கு
அவர்களின் மௌனமான சம்மதம்
சங்கடமளிக்க, அதிர்ச்சியளிக்க,
புரியவில்லையோ என்கிற குழப்பத்தில்
கதை சொல்லி விளக்கத் துவங்கினார்

"நமக்கும் அவர்களுக்கும் இடையில்
கொள்கைகளில் கோட்பாடுகளில்
மாறுபாடு இருக்கத்தான் செய்கிறது\
அது குறையவில்லை
அதை நான் மறுக்கவுமில்லை
ஆனாலும் கூட
பொதுவான எதிரியை வீழ்த்துவதற்காக
நாம் ஒன்று சேருவது என்பது
காலத்தின் கட்டாயம் "
என்ற முன்னுரையோடு
கதை சொல்லத் துவங்கினார் தலைவர்

"ஒரு கிராமத்து தோட்டத்தில்
செழித்து வளர்ந்திருந்தது ஒரு வாழைமரம்
அதன் அடியில் கிடந்தது ஒரு மண்ணாங்கட்டி
இருவரும் அருகருகே இருந்தும்
இருவரும் எதிரிகளைப் போலிருந்தனர்
ஒருவருக்கொருவர் உதவியாயில்லை
இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட
ஆதிக்க மனம் கொண்ட
காற்றும் மழையும் அவைகளை ஒழிக்கப் பார்த்தன
காற்றில் வாழை சாய்வது குறித்து
மண்ணாங்காட்டி கவலைகொள்ளவில்லை
மழையில் மண்ணாங்கட்டி கரைவது குறித்து
வாழையும்  வருத்தப்படவில்லை
அவைகள் அழிந்து கொண்டிருந்தன

அந்த சமயத்தில்தான் நம் போல
சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அந்த வாழைக்கும் வந்தது

"மண்ணாங்கட்டி நாம் மிக அருகில் இருந்தும்
சிறு சிறு வேறுபாடுகளை பெரிதுபடுத்தி
மிக விலகிப்போய்விட்டோம்
அது இந்த ஆதிக்கக் காரர்களுக்கு
மிகுந்த வசதியாய் போய்விட்டது
இனியும் இந்த அவலம் தொடரக்கூடாது
காற்று பலமாக வீசினால் நீ என் மீது
சாய்ந்துகொள் நான் சாயமாட்டேன்
மழையெனில் நான் உன்னை மூடிக்கொள்கிறேன்
நீ கரையமாட்டாய்"  என்றது
அது போலவே நாமும் அவர்களும் ..." என
கதை சொல்லி முடிப்பதற்குள்
கரகோஷம் அரங்கத்தை அதிரச் செய்தது

மிகப் பெரிய கொள்கை விளக்கத்தை
ஒரு எளிய கதையில் சொல்லிய தலைவரின்
மதியூகத்தை எண்ணி தொண்டர்கள்
புளங்காகிதம் கொண்டனர்

தலைவர் பெருமையுடன் கூட்டத்தைப் பார்த்திருக்க
முன் வரிசையில் இருந்த தொண்டர் ஒருவர் எழுந்து
"தலைவா நீங்கள் சொல்வது மிகச் சரி
ஆனால் காற்றும் மழையும் சேர்ந்து வந்தால்
என்ன செய்வது ? " என்றான்

தலைவர் அதிர்ந்து போனார்
இப்படி யோசிக்கத் தெரிந்தவன் எப்படி நம்
கட்சிக்குள் வந்தான் எனக் குழம்பியும் போனார்
இதனை வளர விடுவது ஆபத்து என்பது
அவருக்குப் புரிந்து போயிற்று
அவரது பழுத்த அரசியல் அறிவும்
உடன் கைகொடுத்தது

"கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த முயலுகிற இவன்
நிச்சயம் நம் தொண்டனில்லை
எதிரிகளின் ஒற்றன்
இவனை அடித்து வெளியேற்றுங்க்கள் " என்றார்

வெறி பிடித்த கூட்டம் அந்த "முட்டாளை " நோக்கி
அதி வேகமாய் முன்னேறிக் கொண்டிருந்தது

12 comments:

Avargal Unmaigal said...

ஆமாம் இப்படிதான் பலரும் இப்போது திராவிட கட்சி தலைவர்களின் பேச்சை கேட்டு கேள்விகள் கேட்க ஆர்மபித்துவிட்டனர். ஆனால் கேள்வி கேட்கும் தளம் மட்டும் வேறவாகிவிட்டது அதுதான் சமுக வலைத்தளம் இன்னும் சில பழமைவாதிகள் இருப்பதால்தான் கட்சிகள் இன்னும் சிறிது துடிப்புடன் இருக்கிறது

Avargal Unmaigal said...

உங்கள் பாணி மிக அருமையான பாணி தொடருங்கள்

ஸ்ரீராம். said...

அருமையாகச் சொன்னிர்கள். ஒரிஜினல் குட்டிக் கதை!

நிஷா said...

ஹாஹா!கடைசியில் சொன்னதுதான் நம்ம மதுரைத்தமிழன் சாருக்கும் நடக்கும் போல!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நிதர்சனத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நிதர்சனம்....

தனிமரம் said...

யதார்த்தம் இதுதான் ஐயா!

வலிப்போக்கன் said...

மந்தைகளாய்த் தொண்டர்கள் இருத்தலே
தான் தலைவானாகத் தொடர்வதற்கான
மிகச் சரியான தகுதிதான்..அய்யா..த.ம்2

S.P.SENTHIL KUMAR said...

உண்மை!
த ம 2

G.M Balasubramaniam said...

பதிவர் மைய அமைப்பு பற்றி நீங்கள் எழுதுவதாக்கச் சொன்ன நினைவு...!

Unknown said...

இன்றய அரசியலைபிரதிபலிக்கும்அருமையானவரிகள்.பலவருடங்கள்முன்பு திரு.சோ அவர்கள்தயாரித்தளித்த முகமதுபின்துக்ளக் படத்தில் இதுபோல்காட்சிகள்வரும்

Unknown said...

இன்றய அரசியலைபிரதிபலிக்கும்அருமையானவரிகள்.பலவருடங்கள்முன்பு திரு.சோ அவர்கள்தயாரித்தளித்த முகமதுபின்துக்ளக் படத்தில் இதுபோல்காட்சிகள்வரும்

Post a Comment