Wednesday, February 24, 2016

அவரவர் அளவுக்கு ......

என் நண்பன் தன் மகனை
குச்சியால் விளாசிக்கொண்டிருந்தான்
தடுத்து நிறுத்திக்  காரணம் கேட்டேன்

"எத்தனைமுறை சொல்லியபோதும்
கேட்காது தொடர்ந்து
பக்கத்து பையனிடம்
பேனா பென்சில்
திருடிக்கொண்டு வருகிறான்

நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்

கூடியிருந்த பக்தர்களை நோக்கி
கைகளை மிக உயர்த்தி
"கதவுகளைத் திறவுங்கள்
காற்று வரட்டும் "என்றார்
காவியில் இருந்த இளைய துறவி

தனித்து ஆசிரமத்திருக்கையில்
கதவருகில் இருந்த
ஆத்ம சீடனை நோக்கி
"கதவை மூடிப் போ
அவள் மட்டும் இருக்கட்டும்"என்றார்
ஜாலியில் இருந்த அதே துறவி

தமிழர்களின்
பண்பாடு குறித்து
கலாச்சார பெருமை குறித்து
கோடை மழையென
மேடையில்
கொட்டித் தீர்த்தார்
அரசியல்  தலைவர்

கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்துக்  கேட்டுக்கொண்டிருந்தனர்

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

10 comments:

ஸ்ரீராம். said...

சொல்லாமல் சொன்னீர்கள். நன்று சொன்னீர்கள்.

தம +1 செய்தேன். வாக்கு விழுந்ததா என்று கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லை! படுத்தும் தமிழ்மணம்.

வெங்கட் நாகராஜ் said...

பேச்சிற்கும் செயலுக்கும் எத்தனை முரண்....

எங்களுக்கும் பிடித்தது.

மீரா செல்வக்குமார் said...

நச்சென்ற கவிதை...

மனோ சாமிநாதன் said...

உலகத்தின் முரண்பாடுகளை அழகாக, நச்சென்று எழுதியிருக்கிறீர்கள்!

தனிமரம் said...

முரண் பாட்டின் மொத்த வடிவம்! கவிதை ரசித்தேன் ஐயா!

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய நிஜம்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் காலம் உணர்ந்து வாழ்த்துக்கள் த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

இதுதான் யதார்த்த உலகு. நடிக்கும் தலைவர்கள் கூட்டம் ஹிப்போக்ரெட்ஸ்!! அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்

Unknown said...

சிந்திக்கதக்க முரண்பாடுகள்.ரசித்தேன்

Unknown said...

சிந்திக்கதக்க முரண்பாடுகள்.ரசித்தேன்

Post a Comment