Friday, April 7, 2017

வரித்துறை ரெய்டும் எதிர் விளைவுகளும்...

ரெய்டு நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது

ஓட்டு எண்ணிக்கைக் காட்டி
மொத்தமாய் வாங்கியவன்

"நல்ல வேளை வாங்கிவிட்டேன்
தேர்தலைத் தள்ளிவைத்தால்
மறுமுறையும் தருவார்கள்தானே "
எனஆவலாய்க் கேட்கிறான்

வாங்கக் காத்திருப்பவன்

"அதற்குள் இவர்களுக்கென்ன கொள்ளை
இத்தனை நாள் பொறுத்தவர்கள்
இன்னும் சில நாள் பொறுத்தால் என்ன ?"
எனப் பொருமுகிறான்

பணம் கிடைக்க வாய்ப்பில்லாத
மாற்றுக் கட்சிகாரன்

"ஒத்திவைத்தால்
இன்னும் செலவழிக்க வேண்டிவரும் தானே
அப்படியாவது அவர்கள் கொள்ளைப்பணம்
கரைந்து தொலையட்டும் "
என வயிறெரிந்துத்  திரிகிறான்

வேறு தொகுதிக்காரனோ
வானம் பார்க்கும்
கரிசல்காட்டுக்காரன் மாதிரி

மருத்துவனையில் சேர்க்கப்பட்ட
தங்கள் பிரதிநிதி குறித்து
"நல்ல சேதி ஏதும் உண்டா ? " என
விசாரித்துச் சலிக்கிறான்

இந்தப் பித்தலாட்ட அரசியல்வாதிகளின்
அரிச்சுவடி அறிந்தவர்களோ
"இதுவும் ஒரு பாம்பு கீரிச்சண்டைப் பம்மாத்து "
என முகம் சுழித்துக் கடக்கின்றனர்

தொலைக்காட்சி மற்றும்
செய்தி ஊடகங்களோ

மற்றுமொரு இலை  விழும்
சப்தம்கேட்டு ஓடும்
"அதுவாய் "
செய்தி சேகரிக்க ஓடிக்கொண்டிருக்கின்றன

மீண்டும் ஒருமுறை
ரெய்டு நாடகம்
சுவாரஸ்யமாய் அரங்கேறிக் கொண்டிருக்கிறது

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நாடகம்தான் ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் என்னென்ன நடக்குமோ...?!

இராய செல்லப்பா said...

மு க அழகிரிக்கு தமிழ்மக்கள் நன்றி செலுத்தவேண்டும். அவரால் தானே இப்போது ஆர் கே நகர் மக்களுக்கு வோட்டுக்கு நாலாயிரம் ரூபாய் கிடைக்கிறது!

வெங்கட் நாகராஜ் said...

மீண்டும் நடக்கிறது நாடகம்....

கபட நாடகம்!

Angel said...

நாடகத்தின் காட்சிகள் தினமும் அரங்கேறுகின்றன அரசியல்நடிகர்கள் அதே கதாபாத்திரத்தை ஏற்கிறார்கள் அவ்வப்போது மேக் போடுவோரும் போட்டவர்களும் மாறி மாறி அப்பாவி மக்களை ஏமாற்றிக்கொண்டு :(

Unknown said...

இப்போதெல்லாம் நாடகத்திற்கு வேஷமே தேவை இல்லை. அனைத்தும் எதார்த்தமாய் மாறிவிட்டது.
வேட்பாளர் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் தர திராணியானவர் என்றும் அதற்கான அவர் காட்டும் சொத்து மதிப்பு சரியா என்றும் மதிப்பீடு செய்ய தேர்தல் ஆணையம் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

G.M Balasubramaniam said...

இன்னொரு நாடகம் அரங்கேறுகிறது இந்த நாடகக் காரர்களின் க்ரீன் ரூம் எங்கே இருக்கிறது

Thulasidharan V Thillaiakathu said...

தினமும் அரங்கேறிக் கொண்டுதானே இருக்கிறது. காட்சிகள் மாறும், கதாபாத்திரங்கள் மாறும் அவ்வளவே!

கீதா

Post a Comment