Sunday, April 9, 2017

தேர்தல் சடங்கு

உப்புச் சப்பற்று  இருந்த
எங்கள் ஊர்
சட்டெனக்  கார நெடி கொள்ளும்

மூத்திரச் சந்துகளெல்லாம்
ஒளிபெற்று
மணக்கத் துவங்கும்   

கொடிகளின் சலசலப்பில்
இருபதிலிருந்து எட்டான
ஜாதியப்  பிரிவுகள்

மீண்டும்
முன்போல்இருபதாகி
வன்மம் கூட்டும்

முன்பு எத்தனைமுறை
காவடிஎடுத்தும்
 திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"

"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
எங்கள்குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கேட்டது மட்டுமல்லாது
கேளாததுதம் தருவதாய்ச் சொல்லி
எங்களைக்  கிறங்கவைப்பர்  

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
 "கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

என்னைப்போல்
சில அ ணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமர

கண்ணில் படாது
எங்கோ கிடந்த பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

அவ்வப்போது
"நானே பெரும்பூதம்
நானே கருப்பணச்சாமி " என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்துப்  பின் . . . .

வலம் வந்துப்  பின்

வந்துப் பின் 

பின்....

ஒருபெரிய  வீட்டுச்  சடங்குபோல்
தேர்தல் நடத்தி
முடிவினைச் சொல்லி
மலைஏறிப் போகும்
அதிகாரம் அதிகம் கொண்ட
தேர்தல் ஆணையம்

கார நெடி  கண்ட
எங்கள் ஊர்
மீண்டும்
உப்புச் சப்பற்றுப் போக

ஒளிபெற்று
மணந்த தெருக்களெல்லாம்
மீண்டும்
மூத்திர நாற்றம் கொள்ளும் 

   

6 comments:

Angel said...

தேர்தல்உற்சவ மூர்த்திகள் கிடைக்காததையும் இல்லாததையும் கூட பெற்றுத்தருவோம் என சத்தியம் செய்வார்கள் ..நம் போன்றோர் hibernation செய்யும்நத்தைகளாய் நமது கூட்டுக்குள் :(
ஆகமொத்தம் மூத்திர நாற்றம் நிரந்தரம் நம் அப்பாவி மக்களுக்கு :(


முனைவர் இரா.குணசீலன் said...

அருமை.

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம்

அழகாகச் சொன்னீர்கள் ஐயா

G.M Balasubramaniam said...

ஆர் கே நகரில் இது மீண்டும் தொடருமா

வெங்கட் நாகராஜ் said...

ஆதங்கம் சொன்ன பதிவு...

எனக்குள்ளும் ஆதங்கம்.....

Thulasidharan V Thillaiakathu said...

வாவ்! ஆதங்கம் அருமையான வரிகளில்...முஉலவர்...உற்சவ மூர்த்தி....சாமியாடி.விதைத்தLஎன்று...மக்கள் அம்மணமாய் வாய் பிளந்து....பின்னர்..மலை ஏ
ஏறி.... மணம்... போய் மூத்திர நாற்றம்...ஆஹா எப்படி இவ்வளவு அழகாக சொல்கிநிறீர்கள்....அருமை..மிகவும் ரசித்தோம்...

Yarlpavanan said...

அருமையான கண்ணோட்டம்
நன்றே சிந்திப்போம்

Post a Comment