Sunday, May 28, 2017

நவீன பட்டி விக்கிரமாதித்தர்களாய்...

பத்தாண்டு கால விஸாவில்
ஆறு ஆறு மாதம் எனும் கணக்கில்
ஐந்தைந்து ஆண்டுகள்
இங்கும் அங்குமாய்..

வீடெங்கும் அவசியம்
எனக் கிடந்த
மொத்தத் தேவையையும்
நூறு கிலோவுக்குள்
அடக்கியபடி..

கண்போல் பாதுகாத்த
செடி கொடிகள்
உறவுடன் நட்பையும்
மெல்ல உதறியபடி
சூழலைப் புரிந்தபடி..

எப்படியும்
போகவேண்டியிருக்கும்
திரும்பவேண்டியிருக்கும்
என எப்போதும் கவனம் கொண்டபடி...

எதிலும் அதிகம்
பற்றுக் கொள்ளாதபடி
பட்டுக் கொள்ளாதபடி...

அந்தப் பெருமையை இங்கும்
இந்தப் பெருமையை அங்கும்
பகிர்வதில் ஒரு
அற்பச் சுகம் கண்டபடி
அது ஒன்றே பலன் என்றபடி...

எது நாடு எது காடு
என்னும் குழப்பம் கொண்டபடி...
நவீன மோஸ்தரில்
உடையணிந்தபடி
விமானங்களில்மாறி மாறிப்
பயணித்தபடி....

நவீனப்  பட்டி விக்கிரமாதித்தியர்களாய்
பயணித்தபடியே  இருக்கிறது
ஒரு புதிய இனம்
வளர்ச்சி தந்த வரமா
தவிர்க்க இயலா  சாபமா
என ஒன்றும்  புரியாதபடி

அறியாதவர்கள்
அதிகப்பொறாமை கொள்ளும்படியும்
மிக நன்றாய் அறிந்தவர்கள்மட்டுமே
சிலவற்றை இழந்துதான் 
சிலவற்றைப் பெற்றதனை  
மிகச் சரியாய்ப் புரிந்து  கொள்ளும்படியும் ..

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அறியாதவர்கள் அதிகப்பொறாமை கொள்ளும்படியும் மிக நன்றாய் அறிந்தவர்கள்
அதீத கருணை கொள்ளும்படியும் ..//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
இந்த வரிகளில்தான் நீங்க என் மனதில் அப்படியே நிலைத்து நின்று ஒட்டிக்கொண்டு விட்டீர்கள். உங்களை அப்படியே மானஸீகமாக
அதீதக் கருணையுடன் ஆலிங்கனம் செய்துகொண்டு மகிழ்கிறேன். :)

Angel said...

கொடுத்து வைத்த பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் :) தற்கால வெளிநாட்டு வாழ் பிள்ளைகளின் பெற்றோரின் எண்ணவோட்டங்களை அழகாய் சொல்லியிருக்கீங்க

KILLERGEE Devakottai said...

அயல் தேசங்களுடன் பந்தப்பட்டுப்போனவர்களின் நிலைப்பாடு இதுவே...

Kasthuri Rengan said...

அருமை அய்யா..
கடைசி டிவிஸ்ட் செமை

Unknown said...

பெற்றவர்கள் பக்கத்தில் பிள்ளைகள் இருக்க முடியாத சூழ்நிலையில் ,பெற்றோர்கள் அங்கே செல்வதே நல்லது :)

முற்றும் அறிந்த அதிரா said...

இந்தப் பிரச்சனை இன்னும் ஒரு ஜெனரேசன் வரைதான் நீடிக்கும், பின்னர் எல்லாம் செட்டில் ஆகிவிடும்... இதைத்தெரிந்துதான் வெள்ளைக்காரரும் வெளிநாட்டவரை அனுமதித்து விட்டிருக்கிறார்கள். அடுத்தடுத்த ஜெனரேஷனின் உறவுகள் எல்லாம் வெளிநாட்டவராகவே ஆகிடும்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்வே ஒரு பயணம் தானே...

vijayan said...

மாயமான் வேட்டை.

ராமலக்ஷ்மி said...

எதார்த்தத்தை, உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் விதம் மிக அருமை..

Thulasidharan V Thillaiakathu said...

யாதும் ஊரே யாவரும் கேளிர்......அன்பே எங்கள் உலக தத்துவம்.....இது வந்துவிட்டால்....குழப்பம் எதுவும் வராதோ....

ஆம் மக்கள் குழப்ப நிலையில்...ஆனால் இது அடுத்த தலைமுறையில் ஏற்படாது.....

கீதா

G.M Balasubramaniam said...

ஊரைப் பார்க்க போவதில் அர்த்தம் இருக்கலாம் அங்கே போய் வந்தபின் இங்கு எல்லாமே மோசம் என்னும் எண்ணம் வருபர்களை என்ன சொல்ல

Post a Comment