Wednesday, June 21, 2017

சின்னச் சின்ன அடிகள் வைத்து சிகரம் ஏறுவோம்...

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
தொடர்ந்து  ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலங்  கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்டக்  கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவால்  ஆனது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டித்  திமிராய் நிற்கும்
மலையே ஆயினும்
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

12 comments:

KILLERGEE Devakottai said...

அருமை தன்னம்பிக்கை வரிகள் நன்று
த.ம.2

Rajeevan Ramalingam said...

அருமையான வரிகள் ஐயா... எல்லாமே சிறிதாக ஆரம்பித்துத்தான் கடைசியில் பெரிதாக வந்து முடியும் என்பதை அழகுறச் சொன்னீர்கள்.

தமிழ்மண ஓட்டு சிறிது நேரத்தில் கணினிக்கு வந்த பின்னர் போடுகிறேன் ஐயா

ஸ்ரீராம். said...

ஆரம்பம் எப்போதுமே சிறிதாகத்தான் இருக்கும். முடிவு சிறப்பாக இருக்கும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாடலின் மெட்கூட நல்லா இருக்குது.

//வானை முட்டித் திமிராய் நிற்கும்
மலையே ஆயினும்
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே//

ஆம். மிகவும் உண்மை. பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம +1

ராமலக்ஷ்மி said...

அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

முயற்சி + பயிற்சி = வெற்றி

G.M Balasubramaniam said...

/ஒன்றிரண்டு ஒன்றிரண்டு என்றே ஏகுவோம் என்றும் என்றும் வெற்றி பெற்று நாங்கள் மீளுவோம்/ சின்ன வயதில் படித்த போர்க் கவிதை நினைவுக்கு வந்தது

Kasthuri Rengan said...

வாய்விட்டு உரக்க படித்து மகிழ்ந்தேன்
தொடர்க அய்யா ...

kowsy said...

ஆம் . சின்னச் சின்ன அடிகள் வைத்துத்தான் சிகரம் தொட வேண்டும்

Unknown said...

அகலக்கால் வைத்தால் அகாலமாய் போய் விடுமே ,சின்ன சின்ன அடிகளே சரி :)

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்! அருமையான வரிகள்!!! ரசித்தோம்

துளசி, கீதா

Post a Comment