Wednesday, May 23, 2018

நம் இணைய தளத்தின் பெருமையை....

எந்த ஒரு கட்சியின்  தலைவனாயினும்
எந்த ஒரு இயக்கத்தின் தலைவனாயினும்
தான் முன்னெடுத்துச் செல்லும்  போராட்டத்திற்கு
முன்  நிற்கவும்  வேண்டும்

 வெற்றியோ தோல்வியோ அதன் முழு
நிகழ்வுகளுக்கும் பொறுப்பு ஏற்கவும்  வேண்டும்

மாறாக கொள்ளு  என்றால் வாயை த் திறந்து
கடிவாளம் என்றால்  வாயை மூடும்
கெட்டிக்கார குதிரை போல

வெற்றி என்றால் தோளை நிமிர்த்துவதும்
தோல்வி என்றால் ஓடி ஒளிவதும் நிச்சயம்
நல்ல தலைவனுக்கு   அழகில்லை

அதிலும் குறிப்பாக தங்கள் உணர்ச்சிகரமான
பேச்சில்  மயங்கி  தன்  சுக துக்கங்களை  மறந்து
களத்தில் நின்று பேராடுபவர்கள் பாதிக்கப்படுகையில்
நிச்சயம் கூடுதல் பொறுப்பெடுக்கவே வேண்டும்

அரசும் மக்களின் அதிருப்தி தலைகாட்டும் போதே
அதுதொடர்பாக கவனம் கொள்ளாது அலட்சிய
மனோபாவம் கொள்வதும் ,பிரச்சனைகள் குறித்து
கவனம் செலுத்தாது  அதைத் தலைமை தாங்கித்
தொடர் பவர்களை வேறு வேறு  வண்ணங்கள் பூசி
கொச்சைப்படுத்த முயல்வது நிச்சயம்  உச்சக்கட்ட
அநாகரிகம்

இதில் மூன்றாவதாக இணைய தள போராளிகள்
தொலைக்காட்சி விவாத விற்பன்னர்கள் வேறு

எரிகிற கொள்ளியில் எங்கோ
 சுகமாய் இருந்து  கொண்டு எண்ணெய் வார்த்தபடி ..

தம் எழுத்தும் பேச்சும் பிரச்சனைகளை இன்னும்
அதிகரிக்கச் செய்யுமே தவிர
நிச்சயம் குறைக்கப்போவதில்லை
எனத்  தெளிவாகத் தெரிந்தும்  விதம் விதமாய்
எழுதியபடி பேசியபடி ... பகிர்ந்தபடி

முன்பும் எப்போதும் பிரச்சனைகளும்  போராட்டங்களும்
அரசின் அலட்சியப்போக்கும் இல்லாமல் இல்லை
இருந்தது

பற்றிய நெருப்பை அணையவிடாதும்  தொடர்ந்து
பரவ விடும் காற்றினைப்போல ஊடகங்கள்
இப்போதைப்  போல அப்போது இல்லை

எந்த ஒரு பிரச்சனைக்கும் தன்னுடைய கருத்தை
உலகமே எதிர்பார்த்திருக்கிற அதீத மனோ நிலையில்
அன்றைய தனி மனிதர்களும் இல்லை

முன்னிருவர் திரும்ப முடியாத அளவு  வெகு தூரம்
மோசமான நிலைக்கு வந்து விட்டனர்
அதன் விளைவுகளை அவர்கள் நிச்சயம் அறுவடை
செய்வர் .பட்டுத் திருந்தட்டும் அவர்கள்

அதைப்  போல்  தொலைக்காட்சி மற்றும்
செய்தித் தாள்களின் மீதான நமபகத் தன்மையும்
படிப்படியாய்க் குறைய ...

நம் இணையத்  தொடர்பில் வெளியாகும்
செய்திகளைத்தான் நம்பத்  தக்கதாக
மக்கள் கொள்ளும்படியான சூழல்  இன்று உள்ளது

எனவே பலம் கூடக்  கூட  பொறுப்புகளும்
கூடவேண்டும் இல்லையேல் பலம் கூடிப்
பயனில்லை என உணர்ந்து...

உணர்வுப் பூர்வமான விஷயங்களில்  மேலும் உணர்வைத்   தூண்டும்படியான பகிர்வுகளைத்
தவிர்த்து

,அறிவுப்பூர்வமான அவசியமான பதிவுகளை  மட்டும்
பதிவோம், பகிர்வோம்  என உறுதி பூணுவோமாக

நம் இணைய தளத்தின்   பெருமையை அருமையை
இன்னும் உயர்த்த உறுதி கொள்வோமாக 


11 comments:

Avargal Unmaigal said...

நீங்கள் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்... இணையத்தில் எழுதுபவரும் சாதாரண மனிதர்கள்தானே அவர்களுக்கும் உணர்ச்சிகள் எழும் போது தன் வசத்தை இழுக்க தொடங்கிவிடுகிறார்கள் இதில் நானும் அடக்கம்...... ஆனால் வதந்திகளை நான் பரப்புவதில்லை ஆனால் சில சமயங்களில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறேன் எழுதியும் விடுகிறேன்... அதை யாராவது சுட்டிக்காட்டினால் திருத்தியும் கொள்கிறேன்

Avargal Unmaigal said...

கவிதையாக சொல்லாமல் இப்படி எழுதிகாக சொன்னால் எனக்கு புரிகிறது..... கவிதையாக் நீங்கள் சொல்லும் போது ஒன்றுக்கு மூன்று தட்வை படிக்க வேண்டியிருக்கிறது

ஸ்ரீராம். said...

அருமையான கருத்து. நூறு சதவிகிதம் சரி.

KILLERGEE Devakottai said...

முடிவில் சொன்னது உண்மை கவிஞரே

எழுத்துக்களில் நாகரீகத்தை 'குழைத்து' தீட்டினால் போதுமானது.

ஆனால் பெரும்பாலும் நாகரீகத்தை 'குலைத்து' விடுகின்றனர்.

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாக... மிகச்சரியாகச் சொன்னீர்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

REVISED:

//இதில் மூன்றாவதாக இணைய தள போராளிகள்
தொலைக்காட்சி விவாத விற்பன்னர்கள் வேறு

எரிகிற கொள்ளியில் எங்கோ
சுகமாய் இருந்து கொண்டு எண்ணெய் வார்த்தபடி .. //

அவர்களுக்கு படியளிக்கும் பரமசிவன்களாக
இடைஇடையே ஏராளமான விளம்பரதாரர்கள் ....
நமக்குத் தாங்கவே முடியாத எரிச்சலூட்டுபவர்களாக ! :(

//பற்றிய நெருப்பை அணையவிடாதும் தொடர்ந்து
பரவ விடும் காற்றினைப்போல ஊடகங்கள்
இப்போதைப் போல அப்போது இல்லை.//

தொழில்நுட்ப வளர்ச்சியின் மிகப்பெரிய
சாதனைகளாத்தான் இதனை நாம் இன்று
எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இருப்பினும் நமக்கு இறுதியில் மிஞ்சுவதோ
வேதனைகள் மட்டுமே. :(

//எந்த ஒரு பிரச்சனைக்கும் தன்னுடைய கருத்தை
உலகமே எதிர்பார்த்திருக்கிற அதீத மனோ நிலையில்
அன்றைய தனி மனிதர்களும் இல்லை.//

அவர்கள் ஒட்டுமொத்த தேச நலனையும்,
பொது அமைதியையும் மட்டுமே
கட்டிக்காக்க விரும்பிய உத்தமர்களாக இருந்து வந்துள்ளனர்.

இன்று அதுபோல யாரும் உண்மையாக பொதுநலனை நினைப்பதாகவே தெரியவில்லை. இன்றைய பெரும்பாலானோர் அனைவருமே சுயநலவாதிகள் மட்டுமே.

//உணர்வுப் பூர்வமான விஷயங்களில் மேலும் உணர்வைத் தூண்டும்படியான பகிர்வுகளைத் தவிர்த்து, அறிவுப்பூர்வமான அவசியமான பதிவுகளை மட்டும்
பதிவோம், பகிர்வோம் என உறுதி பூணுவோமாக!//

மிக அழகாகவும், மிக அருமையாகவும்தான் சொல்லியுள்ளீர்கள்.

இருப்பினும் நம்மில் பலரும், தான் நேரிடையாக பாதிக்காத வரையில், ஒரு பொழுதுபோக்கு இன்பத்திற்காகவாவது, அடுத்தடுத்து வரும் பரபரப்பான செய்திகளையே எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களாக மட்டுமே உள்ளனர். என்ன செய்வது?

தங்களின் இந்த சிறு முயற்சிக்கு என் பாராட்டுகள்.

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக அருமையான வரிகள்! கருத்துகள்!! முழுவதும் அப்படியே சரியே.

துளசிதரன், கீதா

இராய செல்லப்பா said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே! கோபத்தில் தவறாக எழுதிவிட்டாலும், கூடுமானவரை நாமே உணர்ந்து அதைத் திருத்திக்கொள்வதுதான் சரி. அல்லது அடுத்த பதிவில் பிழையைத் திருத்தம் செய்துவிடவேண்டும். அப்போதுதான் நமக்கு நம்பகத்தன்மை உருவாகும்.
-இராய செல்லப்பா சென்னை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

சரியாக சொல்லியிருக்கிறீர்கள். இணைய தளத்தின் அருமை பெருமைககளை இன்னமும் உயர்த்த பாடுபட வேண்டும் அருமையான வார்த்தைகளை கொண்ட சிறப்பான கவிதை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

iramuthusamy@gmail.com said...

அருமை.

Post a Comment