Saturday, March 21, 2020

வள்ளுவன் சொன்ன ரகசியம்

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்
(இன்று உலக தண்ணீர் தினம்)

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை ஐயா...

வான் சிறப்பின் ஒவ்வொரு குறளும், ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிற்கு மழையின் சிறப்பை உணர்த்தும்...

Yaathoramani.blogspot.com said...

நம் பதிவுலகில் வள்ளுவம் குறித்து அதிகம் பதிவிடுகிற தங்கள் முதல் வரவு மகிழ்வளிக்கிறது...வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

தண்ணீரின் அவசியம் பற்றி சொல்லி இருப்பது சிறப்பு!

நெல்லைத் தமிழன் said...

கவிதைப் பொருள் சிறப்பு.

//இன்னல் கள// - இன்னல் களைவோம் என்று வந்திருக்கணுமோ?

வெங்கட் நாகராஜ் said...

வான் சிறப்பு - உலக தண்ணீர் தினமான இன்று சிறப்பான பதிவு. தொடரட்டும் உங்கள் சீரிய சிந்தனை பதிவுகள்.

Yaathoramani.blogspot.com said...

நன்றி...தவறுதலாய் அழிந்திருந்தது..சரிசெய்துவிட்டேன்..வாழ்த்துகளுடன்..

G.M Balasubramaniam said...

நாக்கு வறண்டு போகும்போது கிடைக்கும் நீர் போல் இருக்கிறது பதிவு

kowsy said...

நீரின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அத்தனை வரிகளும் சிறப்பு

Post a Comment