Tuesday, January 11, 2022

கொடி காத்த.......

 இன்று ஜனவரி 11


கொடி காத்த குமரன் நினைவு நாள்.


பிறப்பு:அக்டோபர் 4,1904

மறைவு:ஜனவரி 11,1932


   1904 ஆம் ஆண்டு குமாரசாமி பிறந்தார்.

    இவரின் குடும்பம் ஏழை நெசவாளி குடும்பம். 

     இதனால் குமரனால் 10 வயது வரை தான் கல்வி கற்க முடிந்தது.

     குடும்ப சுமை காரணமாக 10 வயதிலேயே வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டியிருந்தது.

    குமரன் நெசவு செய்து நெய்த துணிகளை வாரம் ஒருமுறை ஈரோடு கொண்டு சென்று ஜவுளி கடை உரிமையாளரிடம் கொடுத்து விட்டு அதற்கு உண்டான கூலியும் , அடுத்து நெய்வதற்கு நூலும் வாங்கி வருவார்.

    1921ஆம் ஆண்டு

திருப்பூரில் இயங்கிய திருப்பூர் தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினராகி தேசப்பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார் குமரன்.

    இந்நிலையில் தீபாவளி நெருங்கியது. அப்போதெல்லாம் பட்டாசு அந்நியப் பொருள்.

   தேசபந்து வாலிபர் சங்கத்தின் திட்டத்தின் படி குமரன் காலையில் பட்டாசு கடை மறியல் , மாலையில் கள்ளுக்கடை மறியல் என்று செயல்பட்டார்.

   1932ல் காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது.

   காந்தியடிகள் கைது செய்யப்பட்டிருந்தார்.

   பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. 

   சட்ட மறுப்பு இயக்கம் அதனைச் சார்ந்த மறியல் போன்றவைகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின.

    பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அடக்குமுறை தலை விரித்தாடியது. 

   ஆங்கிலேய அரசு அடக்குமுறையை ஏவிவிடவும், அதனை எதிர்த்து மக்களின் போராட்டமும் மேலும் மேலும் வலுவடைந்தது. 

   எல்லா இடங்களைப் போலவே திருப்பூரிலும் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது, 

   காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது. 

   இந்த தடைகளையெல்லாம் 

மீறி திருப்பூரில் 10-1-1932ல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது. 

   தேசபந்து வாலிபர் சங்கத்தினர் முன்னிலையில் இருந்து ஏற்பாடுகளைச் செய்தனர். 

   அந்த ஊர்வலத்துக்கு அவ்வூர் செல்வந்தரும் மிகப் பிரபலமாயிருந்தவரு

மான ஈஸ்வர கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவாகியது.

    ஊர்வலத்துக்கு முதல் நாள் மக்களிடம் செல்வாக்குள்ள பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

   தலைமை வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த ஈஸ்வர கவுண்டர் வரவில்லை.  ஊர்வலத்துக்கு வர அவர் மறுத்து விட்டார்.

   இந்தச் சூழ்நிலையில் தியாகி பி.எஸ்.சுந்தரம் ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். 

   அவரது தலைமையில் குமாரசாமி, இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி எனும் மாணவன், நாராயணன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்று கொண்டிருந்தது. 

    வீரர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் சென்றனர். 

   ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து போலீஸ் நிலையத்தை நெருங்கியது.

   அப்போது போலீஸ் நிலையத்திலிருந்து இரு உயர் அதிகாரிகள் உட்பட சுமார் முப்பது நாற்பது போலீஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர்.

   ஊர்வலத்தில் வந்த தொண்டர்களைப் போல பல மடங்கு அதிகமான போலீசார் அந்த சிறு ஊர்வலத்தில் வந்தவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துப் புடைத்தனர். 

   அவர்கள் கைகள் சோர்ந்து ஓயும் வரை அடித்தனர்.

   மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன. 

   தொண்டர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிர் பிரியும் நிலையிலும், 

மகாத்மா காந்திக்கு ஜே, 

பாரத மாதாக்கு ஜே என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

   குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீரிட்டு எழுந்து கொட்டியது

   நினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் போலீசார் உதைத்தனர். சிலர் அவன் உடல் மீது ஏறி மிதித்தனர்.

  அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு போலீஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார். 

  குமாரசாமியும், ராமன் நாயரும் ரத்தமும் நிணமுமாக தரையோடு தரையாக வீழ்ந்து கிடந்தனர். 

   மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரத்துக்கு காட்சிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர காதில் எந்த ஒலியும் கேட்கவில்லை. போலீசார் அடித்த அடியில் அவரது கேட்கும் சக்தி முழுமையாகப் போய்விட்டது தெரிந்தது. அவரது உடலில் கை, கால்கள், இடுப்பு, விலா ஆகியவிடங்களில் மொத்தம் பதினான்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இந்த நிகழ்ச்சியின் விளைவாக தியாகி பி.எஸ்.சுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவராக, செவிடராக இருக்க நேர்ந்த கொடுமையும் நடந்தது.

   அடிபட்டு வீழ்ந்த சிலரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர்.

    மற்றவர்களை அவர்களது உற்றார் உறவினர் எடுத்துச் சென்று விட்டனர்.

   இவ்வளவு அடிபட்ட காந்தியத் தொண்டர்கள் போலீஸ் மீது கல் எறிந்து தாக்கியதாகவும், குழப்பம் விளைவித்ததாகவும், அதனால் போலீஸ் தடியடி நடத்தியதாகவும் வழக்கு பதிவாகியது. 

   சுந்தரம், குமாரசாமி, ராமன் நாயர் ஆகியோர் உடல்களைத் தூக்கி சாமான்களை வீசுவது போல ஒரு வண்டியில் வீசினார்கள். 

   மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட குமரன் மறுநாள் 11.1.1932 அன்று உயிர் நீத்தார்.

  அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் தரப்படவில்லை.

   அந்த வீரத் திருமகனின் உடல் ஒரு துணியால் கட்டப்பட்டு மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூளியில் கிடத்தப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. 

   போலீசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால்,அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது. 

   ஒரு வீர தேசபக்த இளைஞனின் உடல், அவன் பிறந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது.

   இத்தகைய வீரர்களின் உழைப்பால் கிடைத்தது தான் இந்த சுதந்திரம்.

   திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது:


"மனமுவந்து உயிர் கொடுத்த

மானமுள்ள வீரர்கள்

மட்டிலாத துன்பமுற்று

நட்டுவைத்த கொடியிது

தனமிழந்து கனமிழந்து

தாழ்ந்து போக நேரினும்

தாயின் மானம் ஆன இந்த

கொடியை என்றும் தாங்குவோம்."


    திருப்பூர் குமரன் நினைவைப் போற்றுவோம்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு...

வெங்கட் நாகராஜ் said...

அவரின் நினைவை இன்றைய வாசிப்பவர்களுக்கு எடுத்துத் தரும் பதிவு.

Post a Comment