பசித்தலில் குடலில் ஏதும்
பிரச்சனை இல்லை யென்றால்புசித்திடும் உணவு எல்லாம்
நிச்சயம் விருந்து தானே
பசித்தலில் குறைகள் ஏதும்
தொடர்ந்திடக் கூடும் ஆயின்
புசித்திடும் மருந்தும் கூட
நிச்சயம் சுமைபோல் தானே
உறங்கிட முயலும் போதில்
உடனது தழுவும் ஆயின்
உறங்கிடும் இடங்கள் யாவும்
உன்னத மெத்தை ஆமே
உறக்கமே எதிரிப் போலே
உறுத்தியே இருக்கு மாயின்
அந்தப்புற மெத்தைக் கூட
முள்ளென உறுத்தும் தானே
பழகிடும் பாங்க றிந்து
பழகிடக் கூடு மாயின்
துயர்தரும் பகைவர் கூட
விரும்பிடக் கூடும் தானே
பழகிடும் நேர்த்தி தன்னில்
பங்கமே இருக்கு மாயின்
உறவுகள் கூட நம்மை
ஒதுக்கிடக் கூடும் தானே
கவித்திறன் பெற்றுப் பின்னே
கவியது புனைவோம் ஆயின்
நதியெனக் கருக்கள் நம்முள்
மகிழ்வுடன் பாயும் நாளும்
இலக்கண அறிவு இன்றி
இலக்கண மீறல் செய்யின்
குழப்பமே வந்து சூழும்
மனமதில் கொள்வோம் வெல்வோம்
2 comments:
கவிதை நன்று.
உண்மை என சொல்ல வைக்கும் வரிகள்...
Post a Comment