நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்
என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப் புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச் சுழிப்பு
நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்
என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி
நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்
உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "
"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்
கேட்டவன் குழப்பமடைகிறான்
சீரான வேகத்தில்
நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்
3 comments:
v//எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்//
"நான்" என்பதே இலக்கு என்றால் அந்த நான் எப்போதும் உங்களுடனேயே இருக்கிறதே !!! தியானம் செய்தால் அந்த நான் எட்டிப்பார்க்கும்!! ஓட வேண்டாமே. ஓடுவது மட்டுமே வாழ்க்கை அல்ல.
Jayakumar
இதுவும் கடந்து போகும்...
இலக்கை நோக்கி...... நன்று.
Post a Comment