Friday, June 9, 2023

என்றென்றும் புகழ்மங்கா எம்மதுரை வாழியவே

 மஞ்சளோடு குங்குமமும்

மணக்கின்ற சந்தனமும்
மங்களமாய் ஊரெங்கும்
மணக்கின்ற மாமதுரை

சுந்தரனாம் சொக்கனோடு
சரிபாதி எனஆகி
எங்களன்னை மீனாட்சி
எமையாளும் சீர்மதுரை

அன்னைமடித் தவழ்ந்துதினம்
அகம்மகிழும் குழந்தையாக
மண்தொட்டு மகிழ்ந்தோடும்
வைகைநதித் தண்மதுரை

மணக்கின்ற மல்லியதன்
மணம்போல நிறம்போல
குணம்கொண்ட நிறைமாந்தர்
நிறைந்திருக்கும் நன்மதுரை

நகரெல்லாம் விழாக்கோலம்
நாளெல்லாம் கொண்டாட்டம்
தவறாதுக் காண்கின்ற
தவச்சீலம் தென்மதுரை

தூங்காதப் பெருநகரம்
கோவில்சூழ் மாநகரம்
ஓங்குபுகழ் தமிழ்வளர்த்த
ஒப்பில்லாத் திருமதுரை

தென்மதுரை தண்மதுரை
சீர்மதுரை வாழியவே
என்றென்றும் புகழ்மங்கா
எம்மதுரை வாழியவே







3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்க...

Jayakumar Chandrasekaran said...

வாழிய மதுரை. வாழிய நற்றமிழ். வாழிய வாழியவே.
கவிதை சிறப்பு. எளிய சொல்லமைப்பு. குழைந்தைகளும் பாடலாம்.
Jayakumar

வெங்கட் நாகராஜ் said...

மதுரை குறித்த உங்கள் கவிதை நன்று. ரசித்தேன்.

Post a Comment