Tuesday, January 11, 2022

கொடி காத்த.......

 இன்று ஜனவரி 11


கொடி காத்த குமரன் நினைவு நாள்.


பிறப்பு:அக்டோபர் 4,1904

மறைவு:ஜனவரி 11,1932


   1904 ஆம் ஆண்டு குமாரசாமி பிறந்தார்.

    இவரின் குடும்பம் ஏழை நெசவாளி குடும்பம். 

     இதனால் குமரனால் 10 வயது வரை தான் கல்வி கற்க முடிந்தது.

     குடும்ப சுமை காரணமாக 10 வயதிலேயே வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டியிருந்தது.

    குமரன் நெசவு செய்து நெய்த துணிகளை வாரம் ஒருமுறை ஈரோடு கொண்டு சென்று ஜவுளி கடை உரிமையாளரிடம் கொடுத்து விட்டு அதற்கு உண்டான கூலியும் , அடுத்து நெய்வதற்கு நூலும் வாங்கி வருவார்.

    1921ஆம் ஆண்டு

திருப்பூரில் இயங்கிய திருப்பூர் தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினராகி தேசப்பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார் குமரன்.

    இந்நிலையில் தீபாவளி நெருங்கியது. அப்போதெல்லாம் பட்டாசு அந்நியப் பொருள்.

   தேசபந்து வாலிபர் சங்கத்தின் திட்டத்தின் படி குமரன் காலையில் பட்டாசு கடை மறியல் , மாலையில் கள்ளுக்கடை மறியல் என்று செயல்பட்டார்.

   1932ல் காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது.

   காந்தியடிகள் கைது செய்யப்பட்டிருந்தார்.

   பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. 

   சட்ட மறுப்பு இயக்கம் அதனைச் சார்ந்த மறியல் போன்றவைகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின.

    பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அடக்குமுறை தலை விரித்தாடியது. 

   ஆங்கிலேய அரசு அடக்குமுறையை ஏவிவிடவும், அதனை எதிர்த்து மக்களின் போராட்டமும் மேலும் மேலும் வலுவடைந்தது. 

   எல்லா இடங்களைப் போலவே திருப்பூரிலும் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது, 

   காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது. 

   இந்த தடைகளையெல்லாம் 

மீறி திருப்பூரில் 10-1-1932ல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது. 

   தேசபந்து வாலிபர் சங்கத்தினர் முன்னிலையில் இருந்து ஏற்பாடுகளைச் செய்தனர். 

   அந்த ஊர்வலத்துக்கு அவ்வூர் செல்வந்தரும் மிகப் பிரபலமாயிருந்தவரு

மான ஈஸ்வர கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவாகியது.

    ஊர்வலத்துக்கு முதல் நாள் மக்களிடம் செல்வாக்குள்ள பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

   தலைமை வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த ஈஸ்வர கவுண்டர் வரவில்லை.  ஊர்வலத்துக்கு வர அவர் மறுத்து விட்டார்.

   இந்தச் சூழ்நிலையில் தியாகி பி.எஸ்.சுந்தரம் ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். 

   அவரது தலைமையில் குமாரசாமி, இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி எனும் மாணவன், நாராயணன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்று கொண்டிருந்தது. 

    வீரர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் சென்றனர். 

   ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து போலீஸ் நிலையத்தை நெருங்கியது.

   அப்போது போலீஸ் நிலையத்திலிருந்து இரு உயர் அதிகாரிகள் உட்பட சுமார் முப்பது நாற்பது போலீஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர்.

   ஊர்வலத்தில் வந்த தொண்டர்களைப் போல பல மடங்கு அதிகமான போலீசார் அந்த சிறு ஊர்வலத்தில் வந்தவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துப் புடைத்தனர். 

   அவர்கள் கைகள் சோர்ந்து ஓயும் வரை அடித்தனர்.

   மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன. 

   தொண்டர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிர் பிரியும் நிலையிலும், 

மகாத்மா காந்திக்கு ஜே, 

பாரத மாதாக்கு ஜே என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

   குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீரிட்டு எழுந்து கொட்டியது

   நினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் போலீசார் உதைத்தனர். சிலர் அவன் உடல் மீது ஏறி மிதித்தனர்.

  அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு போலீஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார். 

  குமாரசாமியும், ராமன் நாயரும் ரத்தமும் நிணமுமாக தரையோடு தரையாக வீழ்ந்து கிடந்தனர். 

   மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரத்துக்கு காட்சிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர காதில் எந்த ஒலியும் கேட்கவில்லை. போலீசார் அடித்த அடியில் அவரது கேட்கும் சக்தி முழுமையாகப் போய்விட்டது தெரிந்தது. அவரது உடலில் கை, கால்கள், இடுப்பு, விலா ஆகியவிடங்களில் மொத்தம் பதினான்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இந்த நிகழ்ச்சியின் விளைவாக தியாகி பி.எஸ்.சுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவராக, செவிடராக இருக்க நேர்ந்த கொடுமையும் நடந்தது.

   அடிபட்டு வீழ்ந்த சிலரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர்.

    மற்றவர்களை அவர்களது உற்றார் உறவினர் எடுத்துச் சென்று விட்டனர்.

   இவ்வளவு அடிபட்ட காந்தியத் தொண்டர்கள் போலீஸ் மீது கல் எறிந்து தாக்கியதாகவும், குழப்பம் விளைவித்ததாகவும், அதனால் போலீஸ் தடியடி நடத்தியதாகவும் வழக்கு பதிவாகியது. 

   சுந்தரம், குமாரசாமி, ராமன் நாயர் ஆகியோர் உடல்களைத் தூக்கி சாமான்களை வீசுவது போல ஒரு வண்டியில் வீசினார்கள். 

   மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட குமரன் மறுநாள் 11.1.1932 அன்று உயிர் நீத்தார்.

  அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் தரப்படவில்லை.

   அந்த வீரத் திருமகனின் உடல் ஒரு துணியால் கட்டப்பட்டு மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூளியில் கிடத்தப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. 

   போலீசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால்,அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது. 

   ஒரு வீர தேசபக்த இளைஞனின் உடல், அவன் பிறந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது.

   இத்தகைய வீரர்களின் உழைப்பால் கிடைத்தது தான் இந்த சுதந்திரம்.

   திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது:


"மனமுவந்து உயிர் கொடுத்த

மானமுள்ள வீரர்கள்

மட்டிலாத துன்பமுற்று

நட்டுவைத்த கொடியிது

தனமிழந்து கனமிழந்து

தாழ்ந்து போக நேரினும்

தாயின் மானம் ஆன இந்த

கொடியை என்றும் தாங்குவோம்."


    திருப்பூர் குமரன் நினைவைப் போற்றுவோம்.


Monday, January 10, 2022

உங்கள் நெஞ்சையும் தொடும்..

 நெஞ்சம் தொட்ட ஒரு பதிவு...


காலையில் எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான்  சேகர்.


அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவைத் தயார் செய்யனும் என்பதற்காக மிக வேகமாக சமைத்து கொண்டிருந்தாள்..


ஆனால், தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்பாகவே புறப்பட்டான் சேகர்.


இதைப் பார்த்த மனைவி "ஏன் இவ்வளவு சீக்கிரமாக கிளம்புகிறீர்கள்?" 

என்று வினவினாள்...


அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லிக் கொண்டே கிளம்பினான்...


"நேற்றே சொல்லி இருந்தால் இன்னும் கொஞ்சம் சீக்கிரம் சமைத்திருப்பேனே..

கொஞ்சம் பொறுங்கள் சமையல் முடியப் போகிறது" என்றாள் மனைவி...


"எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா..? எனக்கு

ஆயிரம் பிரச்னை இருக்கிறது.


"ஒருநாள் சாப்பிடாது போனால் ஒன்றும் செத்து விட மாட்டேன்.  நீ போய் நன்றாகச் சாப்பிடு..!" என்று

சொல்லி விட்டு விருட்டென்று வாகனத்தை எடுத்துச் சென்றான்...


மனைவி ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று, சமையலை முடித்து இறக்கி வைத்து விட்டுத் தானும் சாப்பிடாமல் துணிகளைத்  துவைக்கச் சென்று விட்டாள்...!


"சேகர்" ஒரு தபால் அலுவலகத்தில் வேலை செய்கிறான்.

அவன் மனைவி ஒரு ஹவுஸ் வைஃப்.


இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்...


வீட்டில் பெற்றோர்கள் சம்மதம் கிடைக்க வில்லை. அதனால்

பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு, தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து வாங்கிக் கொண்டு தனியாக வந்து விட்டான்..!


இருவருக்கும் திருமண ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

இது பெரிய மன உளைச்சல் ஆகவே இருந்தது சேகருக்கு.


அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தான் சேகர்.


அலுவலகத்தில் சில வேலைகளை தவறாகச் செய்ததால் மேலதிகாரி சேகரை எல்லோர் முன்னும் ரொம்பத் திட்டி விட்டார்..! அதனை

நினைத்த படியே வீடு வந்து சேர்ந்தான்...


மனைவி ஆவலோடு தான் சமைத்த உணவை எடுத்து வந்து பரிமாறத் துவங்கினாள். 

இவனும் சாப்பிட உட்கார்ந்தான்..


சாப்பிட ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தட்டை எடுத்துத் தூக்கி சுவர் மீது அடித்தான்..!


அவள் அப்படியே உறைந்து போய் நின்றாள்..!


"உணவில் காரம் எவ்வளவு போட்டு இருக்கிறாய்..

உனக்கு சமைக்க தெரியாதா?" என்று

கத்திப் பேசத் தொடங்கினான்...


உணவு அவ்வளவா காரம் இல்லை. 

ஆனால், அவன் அலுவலகத்தில் நடந்ததை நினைத்து கொண்டே சாப்பிடவும் தான் அது அவ்வளவு காரம் ஆகிவிட்டது..


"உன்னால் ஒரு காரியம் ஒழுங்காகச் செய்யவில்லை. எல்லாம் என் விதி...


உன்னோடு வாழ வேண்டும் என்பதற்காக என் உறவுகளை எல்லாம் தூக்கி எறிந்தேன்!


உன்னால் ஒரு குழந்தை பெற்று எடுக்கும் பாக்கியம் கூட இல்லை.

உன்னைத் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்திருக்கலாம்.


என் பெற்றோர் பேச்சை அப்பொழுதே கேட்டு இருக்கலாம்.

உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி இருளாக மாறி விட்டது.


அலுவலகத்திலும் இவ்வளவு ஆண்டு வேலை செய்து உனக்குத் தானே கொட்டுகிறேன். என்ன செய்வது?

காதலித்து விட்டேன் அல்லவா..!


இன்னும் நிறைய சம்பாதித்து கொட்டுகிறேன்..

நன்றாக கொட்டிக்கொள்" என அடுக்கிக் கொண்டே போனான்...


அறை கதவை வேகமாக மூடி விட்டு உள்ளே சென்று விட்டான்...!


மனைவி கண் கலங்கிய படி 'தானும் எல்லோரையும் விட்டு விட்டுத் தானே வந்தேன்' என மனதில் நினைத்துக் கொண்டே கண்ணீர் தரையில் விழுந்த படி வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.


மனைவியும் சாப்பிடாமல், அப்படியே தரையில் படுத்து உறங்கி விட்டாள்..!


மறுநாள் காலையில் எழுந்து மறுபடி அவளது பணியை செய்ய ஆரம்பித்தாள்...


சேகர் எதுவும் பேசாமல் செய்து வைத்த சாப்பாட்டையும் எடுத்துக் கொள்ளாமல் விருட்டென்று கிளம்பி போய் விட்டான்..!


அலுவலகம் சேர்ந்த பிறகு தனது பணியை ஆரம்பித்தான்...


அப்பொழுது ஒரு வயதான முதியவர் தலையில் ஒரு பழக் கூடையைச் சுமந்த படி, வியர்வை சொட்ட சொட்ட வந்தார் (மதிய நேரம் உச்சி வெயில் வேறு) பழக் கூடையை இறக்கி வைத்து விட்டு அலுவலகத்தின் உள்ளே வந்தார்...!


தனது சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்து மேசையில் வைத்தார் (பணம் அவரது வேர்வையில் நனைந்து இருந்தது)...


இதைக் கண்ட சேகருக்கு ஒரே ஆச்சரியம்..!


இவ்வளவு வயதான காலத்தில் யாருக்காக இப்படி உழைக்கிறார் என்று? 


அதை மனதில் நினைத்துக் கொண்டே "உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் ஐயா?"

என்று அவரிடம் வினவினான்...


அந்த முதியவர் கடந்த மாதம் பணம் அனுப்பிய ரசீதை காண்பித்து,


"இதே முகவரிக்கு பணம் அனுப்ப வேண்டும்" என்று சொல்லிவிட்டு, அதோடு ஒரு கடிதத்தையும் கொடுத்தார்...


அந்த ரசீதைக் கண்ட சேகருக்கு ஒரே அதிர்ச்சி...!

(அது ஒரு முதியோர் இல்லத்தின் முகவரி)


சேகருக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது..!


'இது எதற்காக, ஏன் அனுப்புகிறீர்கள்?' என்று கேட்க வேண்டும் என்கிற ஆவல் அவனை பிடித்து கொண்டது...


தயங்கிய படியே,

"ஐயா இதைக் கேட்க கூடாது தான். இருந்தாலும் என் மனம் கேட்க வேண்டும் என்று துடிக்கிறது. உங்களிடம் ஒன்று கேட்கலாமா..?" என்று குரல் தாழ்த்திய

படி கேட்டான்...


அவரும் "சொல்லுங்கள் தம்பி" என்றார்.


"நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்கள்..! எதற்காக...! உங்கள் மனைவிக்காகவா...?" என்றான்...


அந்த முதியவர் ஆச்சரியமாக சேகரை பார்த்தார்..!


சேகருக்கு ஒன்றுமே புரியவில்லை,

'தவறாக கேட்டு விட்டோமோ..?' என்று நெஞ்சம் படபடத்தது..!


"நான் இருக்கும் போது என் மனைவியை அப்படி விட்டு விடுவேனா.. தம்பி?" என்று சற்று கம்பீரமாக அந்த முதியவர் சொன்னார்.


சேகர் அமைதியாக அவர் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தான்...


முதியவர் சொல்ல ஆரம்பித்தார்...

"நான் இந்த முதியோர் இல்லத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக பணம் அனுப்புகிறேன்,


இன்று வரை யாரும் இந்த கேள்வியை கேட்டதில்லை.

முதல் முறையாக நீங்கள் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!"


என்று சற்று உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தார்...


"எனக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவி என்கூட த் தான் இருக்கின்றாள். எங்களுக்குக் குழந்தைகள் இல்லை."


"என் மனைவிக்கு வாய் பேச முடியாது!!

எங்கள் திருமணம் ஒரு சுவாரசியமான நிகழ்வு தம்பி" என்று கூறியவர்


கொஞ்சம் தண்ணீர் கேட்டார் சேகரிடம்...

மிக விரைவாக ஓடி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் சேகர்...


சேகர் நாற்காலியின் நுனியில் அமர்த்த படி, "உங்களின் திருமணம் எப்படி நடந்தது? உங்கள்

மனைவியை உங்களுக்கு எப்படித் தெரியும்? அதையும்

சொல்லுங்கள் ஐயா..!

எனக்கு ஆவலாக இருக்கிறது" என்று முதியவர் தண்ணீர் குடித்து முடிப்பதற்குள் சொல்லி முடித்தான்...


முதியவர் சற்று சிரித்த படி மேலே சிந்திய நீரை துண்டினால் துடைத்த படி மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்..!


"என் மனைவியை சிறு வயதிலேயே தெரியும். எங்கள்

வீட்டின் அருகில் தான் குடும்பமாய் இருந்தார்கள்.


அவர் வீட்டில் இவள் ஒரே மகள் தான். அவளுக்கு 10 வயதாக இருந்த பொழுது அவளுடைய தந்தையோடு வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் வாகனம் மோதி அவர் தந்தை இறந்து விட்டார்!!


தன் கண் முன்னே தந்தை இறந்து போனதைக் கண்ட அவளுக்குப் பேச்சு வராமல் போய் விட்டது...


அதன் பிறகு அவளுடைய தாய் பல வீட்டு வேலைகளை செய்து அவளை வளர்த்தார்,

இவளும் வளர்ந்து பெரியவளாகி விட்டாள்...


அவளுடைய குறையை பார்த்த யாருக்கும் அவளின் அன்பு தெரியவில்லை...


அவளுக்கு எல்லோரும் தன்னிடம் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும் ஆனால் யாரும் பேசத்தான் மாட்டார்கள்..!


அவளின் தந்தையின் மரணத்திற்கு பிறகு உறவுகள் எல்லாம் அவரவர் வேலையை பார்க்கச் சென்று விட்டனர்...


திருமண வயது வந்தது. ஆனால் வாய் பேச

முடியாத காரணத்தால் அவளைத் திருமணம் செய்ய யாரும் முன் வரவில்லை...


பிறகு எங்கள் பெற்றோர்கள் பேசி இருவருக்கும் திருமணம் நடந்தது...


காலங்கள் கடந்தது....

எங்களைப் பெற்றவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள்..!


எங்களுக்கும் வயது ஆகி விட்டது. 

ஆனால், என் மனைவி ஒரு குழந்தை மாதிரி தம்பி!" என்று சொன்னவர் குரலில் ஒரு தடுமாற்றம்...


(கையில் வைத்து இருந்த துண்டை எடுத்து கண்களை லேசாகத் துடைத்தார்)


(சேகரின் உள்ளத்தில் ஏதோ ஒன்று குத்த ஆரம்பித்தது)


தன்னை நிதானித்து கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்..


"அவளுக்கு உலகமே நான் மட்டும் தான், என்னைத் தவிர அவளுக்கு வேறு யாரையும் தெரியாது...


ஒரு முறை நான் உடல் நலம் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையாக இருந்தேன்..


வேலைக்கு செல்லாமல் கையில் பணம் வேறு இல்லை.


அப்பொழுது மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக, அவள் அம்மா நினைவாக வைத்து இருந்த ஒரு தங்கக் குண்டு மணியை எனக்காக கடையில் விற்று விட்டாள்!!


பிறகு அந்த பணத்தைக் கொண்டு மருத்துவரிடம் சென்று, 'என் கணவனை எப்படியாவது காப்பாற்றுங்கள்' என்று வாய் பேச முடியாத நிலையிலும், செய்கையாக காண்பித்து மருத்துவரிடம் கெஞ்சி புழுவாக துடித்து போய் விட்டாள்..!


என்று சொன்னவர் கண்கள் இரண்டும் சிவந்து போய் விட்டது....


பிறகு நான் குணமாகி என் வேலையை செய்ய ஆரம்பித்தேன்"


என்று தன்னை திடப்படுத்திக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்...


"அப்பொழுது தான் எனக்கு ஒரு சிந்தனை வந்தது...


ஒருவேளை, எனக்கு முன்பு அவள் இறந்து விட்டாள் பரவாயில்லை;

கடைசி வரை அவளை பார்த்து கொண்ட மன நிறைவு இருக்கும்...


ஆனால், அவளுக்கு முன்பே எனக்கு இறப்பு வந்தால், என் மனைவியின் நிலை என்னாகும் என்று..?


அதற்குதான் இந்த பணம். ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை அனுப்பி விடுவேன்..


அதில் பாதி அந்த முதியோர் இல்லத்தில் கணவன் இல்லாமல் இருக்கும் மற்றவர்களுக்கும், மீதி பாதி தொகையை என் மனைவிக்காகவும் சேர்த்து வைத்து கொண்டு வருகிறேன்..!


அந்த பணத்தோடு ஒரு கடிதம் கொடுத்தேன் அல்லவா..! அதை திறந்து படித்து பாருங்கள் தம்பி..."

என்றார்.


சேகர் நெஞ்சில் ஒரு உறுத்தல்...


கைகள் நடுங்கிய படி கடிதத்தை பிரித்து பார்த்தான்...! அவன்

கண்கள் இரண்டும் கலங்கிய படி இருந்தது..!


அதில்,


"நானும், என் மனைவியும் நலமாக உள்ளோம்... இந்த

மாதம் என்னால் இயன்ற தொகை அனுப்பி உள்ளேன்.


அடுத்த மாதம் இதே போல் கடிதமும், பணமும் வரவில்லை என்றால்.. நான் இறந்து போய் இருப்பேன்...


நீங்கள் வந்து என் மனைவியை அழைத்து சென்று பத்திரமாக குழந்தை போல் கடைசி வரை பார்த்துக் கொள்ளுங்கள்...

இதுவே என் கடைசி ஆசை.."


..........


இதைப் படித்த சேகருக்கு நெஞ்சில் பாரம் கூடியது கை, கால் நடுங்க ஆரம்பித்தது..


கலங்கிய கண்களோடு அந்த முதியவரைப் பார்த்தான்...


"சரி தம்பி, எனக்கு நேரம் ஆகி விட்டது; அதை அனுப்பி விடுங்கள்... எனக்கு ஒரே ஒரு உதவி செய்ய வேண்டும்" என்றார் அந்த முதியவர்.


"என்ன செய்ய வேண்டும் ஐயா?"

என ஆவலோடு கேட்டான்.


"வெளியில் நான் வியாபாரம் செய்யும் பழக்கூடை இருக்கிறது, அந்த பழக்கூடையை கொஞ்சம் தூக்கி விட முடியுமா?" என்றார்...


நெஞ்சில் ஒரு பெரிய பாரத்தோடு அவன் அமர்ந்து இருந்த அலுவலக கூண்டை விட்டு வெளியே வந்தான்..


வெளியே வந்து பார்த்த சேகருக்கு பெரிய அதிர்ச்சி....!


அந்த முதியவருக்கு இடது கை இல்லை...!


இவ்வளவு நேரம் அவருக்கு கை இல்லாததை சேகர் கவனிக்கவே இல்லை..


அவ்வளவு ஆர்வமாக அவர் சொன்னதை மட்டும் தான் பார்த்து கொண்டு இருந்தான்


கண்கள் கலங்கிய படி அந்த கூடையை தூக்கி அவர் தலையின் மீது வைத்தான்...


அது கொஞ்சம் சுமை அதிகமாகவே இருந்தது.


"மனைவி மீது இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறீர்கள்..


உங்களுக்கு ஒரு குழந்தையும், கொஞ்சம் சொத்தும் இருந்து இருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும்?


நீங்கள் உங்கள் மனைவிக்காக இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லையே!!" என்று குரலில் ஒரு நடுக்கத்தோடு சொன்னான்...


இதை கேட்ட முதியவர் சற்று சத்தமாய் சிரித்தார்...


"ஆ...ஆ...ஆ... என் மனைவி நம்பி வந்தது என்னைத் தான்...! சொத்தையோ அல்லது பிள்ளையையோ அல்ல.


அவளுக்காக சுமக்கின்ற இந்த சுமையும் ஒரு சுகமே...!"

என்று சொல்லிக் கொண்டே உச்சி வெயிலில் உற்சாகமாக பழக்கூடையை தலையில் வைத்த படி ஒரு கையால் பிடித்து 

கொண்டு நடக்க ஆரம்பித்தார் அந்த முதியவர்...


சேகரின் கண்களில் கலங்கி நின்ற நீர்....!

பெருந்துளியாய்...!

தரையில் விழுந்தது...!


தரையில் விழுந்தது கண்ணீர் துளி மட்டும் அல்ல...!


அவனின் சுபாவமும்...!


*வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்*

*முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான்* 


*உலகின் ஆகச் சிறந்த காதல் ஜோடிகள்...*


கொண்டு செல்ல ஒன்றும் இல்லை இவ்வுலகில்..  கொடுத்துச் செல்வோம்


உண்மையான அன்பை......🙏

Sunday, January 9, 2022

எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்..

இரசித்...தேன்..பகிர்ந்...தேன்.

 

Saturday, January 8, 2022

இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்..

 முன்பெல்லாம்

எங்களைத் தூரம் பிரித்திருந்தது
எங்களுக்கும் அதனால்
சந்திப்பின் அருமை புரிந்திருந்தது

முன்பெல்லாம்
தொடர்புச் சாதனங்கள்
எமக்கு எட்டாத உயரத்திலிருந்தன
நாங்களும் அதனால்
சாதனங்களை அதிகம் சாராதிருுந்தோம்

முன்பெல்லாம்
எல்லோரும் சமதளத்தில்
இருப்பதாக உணர்ந்திருந்தோம்
நாங்களும் அதனால்
பரஸ்பர புரிதலில் இருந்தோம்

முன்பெல்லாம்
வசதிக்கான சாதனங்கள்
எங்கள் இடத்தை அடைக்கவில்லை
நாங்களெல்லாம் அதனால்
மிக நெருக்கமாகவே இருந்தோம்

எதனை நினைக்கையிலும்
முன்பெல்லாம் என்கிற நினைவு..

இழந்ததையெல்லாம் மனதில்
சுமை ஏற்றிப் போக

இப்போதெல்லாம் நாங்கள்
மனதால் அன்றைய சுகந்த நினைவுகளைச் சுகித்தபடி  

 உடலால் இன்றைய இருப்புக் கணக்கில் மட்டும்
விடுபடாது இருப்பதுபோலவே  இருக்கிறோம்

Friday, January 7, 2022

ஒதுக்கீடு அரசியல்..

 அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அறிக்கை செல்லும் எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பாணையும் செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், 10 சதவீதம் இடஒதுக்கீட்டை பெறுவதற்கான தகுதி வரையறை குறித்து மார்ச் 3வது வாரத்தில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய அரசிற்கு நன்றி தெரிவிக்க மனமில்லாத ஸ்டாலின், ஏதோ தனது கட்சியும் தானும் மேற்கொண்ட பெரிய முயற்சியால் தான் உச்சநீதிமன்றம் மூலமாக இது சாத்தியமானது போல் தன்னையும் தன் கட்சியையும் பாராட்டி கொள்கிறார். இதிலும் பொருளாதார ரீதியில் 10 ஒதுக்கீடு உறுதியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அனைத்து பிரிவினருக்கும் பொதுவான முதல்வர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரராக ஆக முடியாது, 


இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை தயாரித்த அம்பேத்கார் அவர்களே இந்தியாவில் தாழ்த்த பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு நபர் இந்தியாவின் உயர்ந்த பதவி பெற்று விட்டால் தாழ்த்த பட்டவர்களுக்கான சலுகைகளை விடுவித்து விடலாம் என்ற கூறி உள்ளார் ஆனால் இதை யாரும் கண்டு கொள்வதே இல்லை.  நம் நாட்டில் உள்ள ஒதுக்கீட்டு முறையில் குறைபாடுகள் உண்டு. இட ஒதுக்கீட்டினால் பயனடைந்தவர்கள் குடும்பமே மீண்டும் மீண்டும் பயனடைய கூடிய நிலை உள்ளது. இது தடுக்கப்பட வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு தலைமுறைக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற நிலை வரவேண்டும். அப்பொழுது தான் அந்த பிரிவில் உள்ள எல்லோரும் பயனடைவர். இல்லை என்றால் பிற்படுத்தபட்ட பிரிவிலும் ஒரு சிலர் மட்டுமே முன்னேற்றம் அடைவர். ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபடுவதாக சொல்லுபவர்கள் கூட இவர்கள் முன்னேறுவதை விரும்புவதில்லை....(படித்ததும் பகிரத் தோணியது..)

Thursday, January 6, 2022

நல்ல வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வோம்

நாளை நம் தமிழக அரசு ...

தொற்று பரவலைத் தடுக்கும் நோக்குடனும்

நோய் பரவல் குறித்த விழிப்புணர்வை 

நமக்கு ஏற்படுத்தும் எண்ணத்துடனும்

பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளதை

நாம் அனைவரும் அறிவோம்


இந்த பொதுமுடக்கத்தின் நோக்கத்தை

தெளிவாக அறிந்த  நம்மில் பலர் வீட்டை விட்டு

வெளியேறாமல் இருந்தாலும்......


அறியாமையின் காரணமாகவோ

அலட்சியத்தின் காரணமாகவோ.

பலர் இந்த பொது முடக்கத்தின் நோக்கத்தை

சிதைக்கும் வகையில் வெளியே தேவையின்றி 

அலைவதை காவலர்களின் துண கொண்டுதான்

கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.


இதற்காக காவலர்கள் அதிகாலை முதல்

மாலை வரை சாலைச் சந்திப்புகளில் நின்று

சிரமப்படுவதை நாம் இதற்கு முந்தைய

பொதுமுடக்கத்தின் போதே அறிந்திருப்போம்


இது போன்ற சமயங்களில் இவர்கள் யாருக்காகவோ வேலைபார்க்கிறார்கள் என எண்ணம் கொள்ளாது நமக்காக

நமது நலனுக்காக அவதியுறும் அவர்களுக்கு

உற்சாகம் தரும்படியாக அவர்களுக்கு ஏற்படும்

சிறு அசௌகரியங்களை நாம் நினைத்தால்

சரி செய்யலாம் ( அதனை அவர்கள்

எதிர்பார்பபதில்லை என்கிற போதிலும் )


நம் பகுதியில்  நம் வீட்டருகே பணியாற்ற வருகிற

காவலருக்கு அவர்கள் கேட்காமலேயே

இருக்கை கொடுத்து உதவலாம்.


பொது முடக்கத்தின் காரணமாக கடைகள்

ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்பதால்...


குடி தண்ணீர் பாட்டில்களை. கொடுத்து உதவலாம்


முடியுமானால் பதினொரு மணி அளவில்

பிஸ்கெட் அல்லது வேறு நல்ல ஸ்னேக்ஸை

கொடுத்து மகிழலாம்...


நமக்காக அல்லும் பகலும் உழைக்கும்

மக்கள் நலப் பணியாளர்களுக்கு இதுபோன்ற

சூழல்களில் சிறு சிறு கைமாறுகளைச் செய்வதன்  மூலம்

நமது நேசத்தையும் அவர்கள் பால்

நாம் கொண்டுள்ள நன்றியுணர்வையும்

வெளிப்படுத்தலாம்..


அதன் காரணமாகவே அவர்கள் பணி குறித்த

சிறப்பினை எண்ணி எண்ணி

அவர்களே பெருமிதம் கொள்ளச் செய்யலாம்


ஏற்கெனவே சொன்னபடி இதையெல்லாம்

அவர்கள் எதிர்பார்ப்பதில்லை என்றபோதும்

நம் திருப்திக்காகவேணும்....


( இது போன்ற சமயங்களில்  எம் பகுதியில் இதைச்

செய்ததன் மூலம் நானும் எம் தோழர்களும் கொண்ட திருப்தியை

அனைவரும் அடையவேண்டும் என்னும்

நோக்கத்தோடு...அரிமா.வெங்கடசுப்ரமணியன் )


(இதனை தமிழகத்தில் அனைத்துப் பகுதியில்

உள்ளோரும் அறிந்து கடைபிடிக்கும்படிக்கும்படியாக

தங்கள் பக்கங்களில் பகிர்வது கூட ஒரு சேவைதான்)  

வரம் வேண்டா தவமாய்..

 என்மூலம் வந்ததெல்லாம்

என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய்  நினைப்பதில்லை

 வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

Tuesday, January 4, 2022

முதுமை அறிவோம்..

 !! 💖இரண்டாம் குழந்தை பருவம் 💖!! 


வயது கூடக் கூட நம் பெற்றோர்  குழந்தைகளாகி விடுவார்கள். 


முதுமை இன்னொரு குழந்தைப் பருவம். 


சொன்னது மறக்கும். சொன்னதையே திரும்பச்சொல்ல வைக்கும்.


நிறையப் பேச வைக்கும்.

பேசாமல் அடம் பிடிக்கவும் வைக்கும்.


உணவின் மீது பிரியம்/அதீத வெறுப்பு இரண்டும் வரும்.


நோய் கூடும்.

நோய் கூடியதை போலக் காட்டத் தோன்றும்.

நோய் வந்ததை மறைக்கக் கூடத் தோன்றும்.


கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த முதிர்ந்த குழந்தைகளை.


உங்களை வளர்த்தோரை நீங்கள் வளர்க்க இது ஒரு கிடைக்காத வாய்ப்பு.


அமர்ந்து பழங்கதைகள் பேசுங்கள். பிடித்தவற்றைத் தேடிச் செய்யுங்கள். வாங்கிக் கொடுங்கள்.


நானிருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வைக் கொடுங்கள். 


எதிர்காலம் அல்லது இறுதிக் காலம் குறித்த பயம் வர விடாதீர்கள்.


எக்காரணம் கொண்டும் யாரிடத்திலும் அவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்.


எங்கும் விட்டு விடாதீர்கள்.


எது எப்படியோ இந்தத் தாய் தகப்பன் வழியே தானே நாம் வந்தோம்.


அந்த நன்றி மறவாமை வேண்டும்.


பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முதிர்ந்த குழந்தைகளை.


காலங்கடந்த பச்சாதாபத்திலும், கண்ணீரிலும் எந்தப் பயனுமில்லை.


காலத்தின் கட்டாயம்


எனக்கு பிடித்தவை

உங்களுக்கும் பிடிக்கும்


இந்த வரிகள் என்னைப் பெற்ற தாய் தந்தை இருவரும் மனம் குளிர அவர்களின்👴👵 


👣பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது🙇‍♂️(படித்ததில் பிடித்தது..)

Sunday, January 2, 2022

கவிஞனாக சுருக்கு வழி

 விளமதும் மாவும் தேமா

வகையென அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
இலகுவாய்ப் புரியு மாறு
இயற்றிட நானும் நாளும்
பலமுறை முயன்றுப் பார்த்தேன்
பயனிலை தோற்றே வீழ்ந்தேன்

தினம்தினம் இதுபோல் நானும்
தவித்திடும் நிலையைக் கண்டு
மனக்குறைப் போக்கும் வண்ணம்
மகிழ்வது கொள்ளும் வண்ணம்
எனதுயிர் நண்பன் ஓர்நாள்
ஒருவழி எனக்குச் சொன்னான்
வினவிடக் கேட்டு நானே
வியப்பினில் உச்சம் போனேன்

"கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்

"இதந்தரு மனையின் நீங்கி"
எனவளர் கவிதை தன்னை
சுதந்திரத் தாபம் கூட்டும்
சுடர்கவி பாடல் தன்னை
நிதமொரு முறையே நீயே
நயம்பட படித்தால் போதும்
மதகதைக் கடக்கும் நீராய்
கவியது பாயும் " என்றான்

தினம்தினம் காலை மாலை
திருத்தமாய் பாடல் தன்னை
மனனமே செய்தல் போல
மகிழ்வுடன் சொல்லச் சொல்ல
தனத்தனத் தான தான
எனுமொலி இயல்பாய் என்னுள்
இணக்கமாய் இணைந்து கொள்ள
உடன்கவி பிறக்க லாச்சு

இங்கணம் இப்போ தெல்லாம்
எப்பொருள் குறித்தும் பாட
சங்கடம் கொள்வ தில்லை
சந்தமே முதன்மை யென்னும்
சங்கதி அறிந்த தாலே
சஞ்சல மேதும் இல்லை
இம்முறை முயன்றால் நாளும்
இன்கவி பெறலாம் யாரும்

Saturday, January 1, 2022

தொடர்ந்து எழுதும் பதிவர்களுக்காக..

 


சமபந்திதான் ஆயினும்
ருசியான சத்தான சாத்வீகமான
உணவுதான் ஆயினும்..
சரிசமமாகப் பறி,மாறப்பட்டதே ஆயினும்

அள்ளியபடி பல கைகளும்
துழாவியபடி சில கைகளும்
இருக்கக் காரணம்
நிச்சயம் கைகளில்லை

மாறாக
பசித்த வயிறும்
ஏற்கெனவே
அஜீரணத்தில் அவதியுறும் வயிறும் என்பது
பறிமாறுபவனுக்குப் புரியும்..

எனவே
பறிமாறுபவன் தொடர்ந்து
பறிமாறுவதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

நியாயமானதுதான் ஆயினும்
நடுநிலையில் பயன்கருதி எளிமையாகச்
சொல்லப்பட்டதுதான் ஆயினும்

இரசித்துச் பலரும்
கண்டும் காணாதபடிச் சிலரும் 
இருக்கக் காரணம்
நிச்சயம் படைப்பில்லை

மாறாக
பரிசீலித்தேற்கும் மனநிலையும்
ஏற்கெனவே
கொள்கைகளால் நிரம்பிய மனமும் என்பது
படைப்பாளிக்கும் தெரியும்

எனவே
படைப்பாளி தொடர்ந்து
படைப்பதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

பதிவுலகில் தொடர்ந்து எழுதும்
நமதருமைப் பதிவர்கள்  போலவே....