Monday, July 11, 2011

பயனற்ற பூமாலை

சிந்தனையைத் தூண்டாத கல்வி
சங்கடத்தில் உதவாத நட்பு
நம்பிக்கை தாராத பக்தி
பயன்படுத்த இயலாத சக்தி
தன்மதிப்பைக் கூட்டாத செல்வம்
சமயத்தில் இணையாத சுற்றம்
நம்மோடு இருந்தால்தான் என்ன?
இல்லையென்று ஆனால்தான் என்ன?

பயனின்றி பேசுகின்ற பேச்சு
ஆக்ஸிஜன் இல்லாத காற்று
தயார் நிலையில் இல்லாத படைகள்
உடலுறுப்பு மறைக்காத உடைகள்
மனமகிழ்ச்சி  தாராத கூத்து
நடப்படாது கட்டிவைத்த நாற்று
கணக்கின்றி  இருந்தால்தான் என்ன ?
இல்லையென்று போனால்தான் என்ன ?

நோய் நொடிகள் தீர்க்காத மருந்து
நோக்கமற்று எழுதுகின்ற எழுத்து
பார்வையற்று திறந்திருக்கும் விழிகள்
ஒழுக்கமற்ற அழகான பெண்கள்
தாய்தந்தை பேணாத தனயன்
தனனலத்தை துறக்காத தலைவன்
மேற் சொன்ன எல்லாமே வீண்தான்
பிணத்தின்மேல் பூமாலை போல்தான்

Friday, July 1, 2011

தன் முனைப்பு

சில வருடங்களுக்கு முன்பு எங்களூரில் மேற்கு ஊரணியும் மற்ற ஊரணிகளைப் போல
சாக்கடை ஊரணியாகத் தான் இருந்தது

ஒரு மழைமாத முடிவில் ஊரணியின் கிழக்குக் கரையில்ஒரு வேம்பும் அரசும் சேர்ந்து வளர
ஊரார் உற்சாகமடைந்து போயினர்

உடன் ஊர் கூடி முடிவெடுத்து கழிவுகளைக் கொட்டுதலை நிறுத்தி கால் நடைகள் இறங்குதலை தடுத்து
நாள் நட்சத்திரம் பார்த்துஒரு பிள்ளையாரையும் பிரதிஷ்டை செய்து வைத்தனர்

அழுக்கடைந்து கிடந்த குப்பைஊரணி "அரச மரத்து ஊரணி" என பேர் பெற்றுப் போனது. சீண்டுவாரின்றிக் கிடந்த நீர்
தீர்த்தமாகிப் போனது. குப்பைமேட்டுக் குளக்கரை கோவிலாகிப் போக ,ஊருக்கு அக்குளம் புஷ்கரணி ஆகிப் போனது

சில காலம் எல்லாம் நன்றாகத் தான் போனது

வெகு நாட்கள் கழித்து அவ்வூர் வந்த சூறைக் காற்று
புதிய சூழல் கண்டுபொருமிப் போயிற்று

"நீ வரும் முன்பு இக்குளத்தி பெயர் என்ன தெரியுமா குப்பைக் குளம்
உன்னால் அது இன்று புனிதக் குளம் ஆகிப் போனது உனக்கது தெரியுமா " என
அரச மரத்தை அசைத்துப் பார்த்தது

"அப்படியா" எனஅரசு அதிசயித்துக் கேட்க சூறை காற்று
 ராமாயணக் கூனியானது

"அதை கூட பொறுத்துக்கொள்ளலாம் பெயரில் கூடவா உன்னைப் புறக்கணிக்க வேண்டும்
ஊரணிக்கரை அரசமரம் என்பது எப்படி?அரசமரத்து ஊரணி என்பது எப்படி?
நீயே யோசித்து கொள்" எனஒரு விஷ விதையை ஊன்றிப் போனது
விஷ வித்தும் ஒரே நாளில் விஷ விருட்ஷமாக வளர்ந்தும் போனது

" நான் வருவதற்கு முன்பு உன் பெயர் குப்பை ஊரணியாமே" எனச் சொல்லிச் சிரித்தது அரசு
மர்ம ஸ்தானத்தில் விழுந்த அடிபோல கலங்கிப் போனது ஊரணி

"நீ வந்த விதம் ஊருக்குத் தெரியாது எனக்குத் தெரியும்
காக்கை எச்சத்தில்தானே நீ இங்கு கருத்தரித்தாய்
என் குப்பை நீரால் தானே உன் உயிர் வளர்த்தாய் " என்றது

" நானா ?ஊரே வலம் வந்து வணங்கும் நானா?உன் நாற்ற நீர் குடித்தா ?
என் புகழ் பொறுக்காது பொருமலில் பேசுகிறாய் நீ .உன் நாற்ற நீர் எனக்குத் தேவையில்லை.
எனக்கு ஆண்டவன் கொடுக்கும் மழை நீர் போதும் "எனச் சொல்லி
இனி அக்குளத்து நீரை தொடவேண்டாம் தன் ஆணிவேர்களுக்கு உத்தரவிட்டது அரசு

தானின்று அவளுக்கு ஏது வாழ்வென்றுஅகங்காரம் கொண்ட குளமும்
கிழக்கே செல்லும் ஊற்றுகளை திட்டமாய் அடைத்துவைத்தது

ஒருவர் திறனை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் ஒரு நொடியில்
சாம்பலாகிப் போகும் பிரச்சனை,பக்குவமின்மையால் தீயாய் பற்றிக் கொண்டது
நீயா நான யுத்தம் நீண்டு கொண்டே போனது

இவர்களைக் கடந்து போன காலப் பறவைகள் இவைகளின்  முட்டாள் வீம்பு கண்டு கலங்கிப் போயின

நீரின்றி வேம்பும் அரசும் கருகத் துவங்க ஊரார் முகமும் சுருங்கத் துவங்க்கியது

"நீர் இருந்தும் வாடுகிறது எனச் சொன்னால் ஏதோ தெய்வ குற்றம்" இருக்கும் என
ஊரார் எண்ணத் துவங்கினர்.உள்ளூர் கோடாங்கியும்  அவர்களை அனுசரித்தே பாடி வைத்தான்

மீண்டும் நாள் நட்சத்திரம் பார்த்து பிள்ளையரை பெயர்த்தெடுத்து வேறு இடத்தில்
பிரதிஷ்டை  செய்து மகிழ்ந்தனர் கிராமத்தினர்

பட்டுப் போன வேம்பும் அரசும் வெட்டப் பட்டு விறகாகிப் போக
மெல்ல மெல்ல குப்பைகளையும் கூளங்களையும்  ஊர் மக்கள் கொட்டத் துவங்க மேற்கு ஊரணியும்
மற்ற ஊரணியை போல மீண்டும்  குப்பை ஊரணி ஆகிப் போனது

Monday, June 27, 2011

எல்லோரும் கவிஞர்களே


சின்னப் பொண்ணு செல்லப் பொண்ணு
உன்னைத் தாண்டிப் போனா
தாண்டிப் போகும் கன்னிப் பொண்ணும்
கண்ண டிச்சுப் போனா
மண்ணை விட்டு விண்ணில் நீயும்
தாவி ஏற மாட்டியா-அந்த
கம்ப னோட மகனைப் போல
மாறிப் போக மாட்டியா

இனிய நினைவில் தனித்து இரவில்
மகிழ்ந்து நிற்கும் போது
குளிந்த நிலவும் மனதைத் தடவி
கொஞ்சிச்செல்லும் போது
உலகை மறந்து உன்னை மறந்து
பறக்க நினைக்க மாட்டியா-அந்த
உணர்வை கவியாய் சொல்ல நீயும்
முட்டி மோத மாட்டியா

வலிமை இருக்கும் திமிரில் ஒருவன்
எல்லை மீறும் போது
எளியோன் தன்னை எட்டி உதைத்து
பலத்தை காட்டும் போது
உதிரம் கொதிக்க கண்கள் சிவக்க
புலியாய் சீற மாட்டியா-அந்த
வலியைச் சொல்ல நாலு வார்த்தை
நீயும் பேச மாட்டியா

கண்ணில் காணும் காட்சி எல்லாம்
கனவு போலத் தானே
தண்ணீர் மேலே போட்ட கோலம்
தானே வாழ்வு தானே
உண்மை இதனை உணர்ந்து கொண்டால்
முதிர்ச்சி கொள்ள மாட்டியா-அந்த
ராமா நுஜர் போல  நீயும்
உரத்துக்  கதற மாட்டியா

விதையாய் கவிதை அனவரி டத்தும்
வீணே  கொட்டிக் கிடக்குது
விரைந்து வெளியே  விளைந்து வரவே
நாளும் ஏங்கித் தவிக்குது
உணர்வைச் சொல்லில்  குழைத்துப் பார்க்கும்
நுட்பம் புரிந்து போனாலே -உனது
உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
கவிதை என்றே ஆகுமே



Thursday, June 23, 2011

வாழும் வகையறிந்து.....

அந்த அழகிய ஏரியில்உல்லாசப் படகில்
எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்
அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்

அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய் பயணித்துக்கொண்டிருந்தார்கள்

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப்  பயந்து
படகுக்குள்  ஒடுங்கிக் கிடந்தார்கள்

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்


Tuesday, June 21, 2011

நமைச்சல்..

தனித்து நிற்கவா ?
உயரம் கூட்டிக் கா  ட்டவா ?
எப்போதும் பசி வெறியில் திரியும்
தன்முனைப்பு ஓ நாய்க்கு விருந்தளிக்கவா ?
அறிமுகத்திற்கு ஓர் அடையாளம் தேடியா ?
மன முதுகின் அழுக்கெடுக்க சில
நகங்கள் கொண்ட கைகள் தேடியா ?
யதார்த்தப் புறவெளிக் கஞ்சி
குகைக்குள் பதுங்கும் கோழைத்தனமா ?
செயலற்ற தன்மைக்கு வாங்கும்
கௌரவ வக்காலத்தா ?
அறிந்தவைகள் தெரிந்தவைகள்
செரிக்காது எடுக்கும் வாந்தியா ?
புண் மறைக்கப் போடும் பட்டுச் சட்டையா ?
அல்லது
போனபின் சொல்வதற்கு ஒரு
சிறப்புத் தகுதி வேண்டியா ?
நமைச்சலுக்கான காரணம் தெரியாவிடினும்
சொறியாது இருக்க முடியவில்லை
எப்படி யோசித்த போதும்
ஒரு காரணமும் தெரியவில்லை
ஆனாலும்
எழுதாது இருக்க முடியவில்லை

Saturday, June 18, 2011

தோளில் ஆட்டைப் போட்டு...

ஞாபகமிருக்கா...
முதலில் பசி
நம் குடலில் உடலில்தான் இருந்தது
நமது பணிச் சூழல் காரணமாக அதை
நேரத்திற்குள்ளும்
 காலத்திற்குள்ளும் இணைத்தோம்
இப்போது நம் பசியை
கடிகாரம்  தீர்மானம் செய்து கொண்டிருக்கிறது

நினைவிருக்கா...
முதலில் நமது திருமணத்தை
பருவமும் சக்தியும்தான்
தீர்மானம் செய்து கொண்டிருந்தது
அதனை நாம்
வசதி வாய்ப்புகளோடு
இணைத்துவிட்டதால்
திருமணங்கள் இப்போது
பருவம் கடந்தும்
சக்தி இழந்த பின்னும்தான்
சாதாரண்மாக நடந்து கொண்டிருக்கிறது

யோசித்துப் பார்த்ததுண்டா...
முன்பெல்லாம் சந்தோஷத்தை
உடல் பலத்தோடும்
மன நலத்தோடும்
இணைத்து வைத்துருந்தோம்
காலப் போக்கில் அதனை
சௌகரியங்களோடும்
கேளிக்கைகளோடும்
இணைத்துப் பழகிவிட்டதால்
இப்போது சந்தோஷத்தை
வெளியிலிருந்து எதிர்பார்த்து
வீட்டு வாசலில் தவமிருக்கிறோம்

நெனைச்சுப்பார்த்துண்டா..
நம் முன்னோர்கள் எல்லாம்
அவர்களது வாழ்வை
அந்த அந்த நாளோடும் பொழுதோடும்
இணைத்து வைத்திருந்து
வாழ் நாளெல்லாம்
உயிர்ப்போடு வாழ்ந்து மகிழ்ந்தார்கள்
நாம் தான் இன்றை
நேற்றொடும் நாளையோடும்
குத்தகைக்கு விட்டு விட்டு
வாழ் நாளெல்லாம்
சவமாக வாழ்ந்து சாகிறோம்

புராண காலத்துஅரக்கன் கூட
ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி
தன் உயிரை ஒளித்து வைத்தது கூட
அக்கிரமங்கள் செய்தாலும்
 சந்தோஷமாக  வாழ வேண்டித்தான்
நாம் தான்
உயிர்போன்ற அனைத்தையும்
நம்மை விட்டு
வேறெங்கோ விட்டுவிட்டு
ஆழமாக  புதைத்துவிட்டு
கடலுக்குள் வாழ்ந்துகொண்டே
 கடல்தேடி அலையும்
முட்டாள் மீன்போல
வாழ்வுக்குள் சுகம் தேடி
நாயாக அலைகிறோம்
வாழ் நாளெல்லாம் அலைகிறோம்

Wednesday, June 15, 2011

அஹம் பிரம்மாஸ்மி

கடற்கரையில்
கால்கள் நனைத்தபடி நின்றிருந்தேன்

 விரிந்து பரவியிருந்த  கடல் 
காற்றில் அலையும்
நீல வண்ண ஆடைபோலவும்
அலைகள்
வெண்ணிற மணிகள் கோர்த்த
முந்தி போலவும் பட்டது
நினைவும் அனுபவமும்தான்
அதை கடல் எனச் சொல்லிகொண்டிருந்தது

 சீறிவந்த அலையொன்றை
கைகளில் தாங்க முயல
அனைத்தும் வழிந்துபோய்
ஒரே ஒரு துளி மட்டும்
உள்ளங்கையில் தங்கி நின்றது

அதனை விளக்குபோல் தாங்கி
கரையேர முயல
"என்னை இறக்கி விட்டுப் போ"
என கூச்சலிடத் துவங்கியது

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை
"பேரண்டம்போல் விரிந்து கிடக்கும்
சமுத்திரத்தில் நீ ஒரு துளி
நீ குறைந்தால் என்னவாகிவிடப் போகிறது "

அது அலட்சியத்துடன்
"நீயாக எனக்கு பெயர் சூட்டிவிட்டால்
அது என் பெயர் ஆகி விடுமா?
நான் துளி இல்லை நான் கடல்"என்றது

"எனக்குப் புரியவில்லை
நீ எப்படி கடலாக முடியும்"என்றேன்

" நீ நீயாகவே இருப்பதால்
என்னைப் புரிய சாத்தியமில்லை
உன்னை நீ உணர்ந்திருந்தால் மட்டுமே
என்னைப் புரிந்து கொள்ள முடியும் " என்றது

நான் குழம்பிய நிலையில்
 கைகளைச் சாய்க்க
அது கடலோடு இரண்டரக் கலந்து போனது
நான் எப்படிப் பார்த்தபோதும்
எங்கும் கடல் மட்டுமே வியாபித்திருந்தது