Thursday, September 24, 2015

புதுகை பதிவர் திருவிழா ( 7 ) கால இயந்திர தயவில்

சனிக்கிழமை காலையிலேயே கிளம்புதலே
சரியாக இருக்கும்எனக் கருதி இரண்டு நாட்களுக்குள்ள
ஏற்பாடுகளோடுநான் மாலை புதுகை வந்து சேர்ந்தேன்

ஏற்கெனவே பதிவில் விழா நடக்கும் இடத்திற்கான
வழியினைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததால்
இடத்தைக் கண்டுபிடிப்பது அத்தனை சிரமாக இல்லை

உள்ளே மண்டபத்தில் புதுகை விழாக் குழுவினர்
அனைவரும்பம்பரமாக சுழன்றுப் பணியாற்றிக்
கொண்டிருந்தபோதிலும்முக மலர்ச்சியோடு
என்னை அன்புடன் வரவேற்பதில்
குறைவைக்கவில்லை

சென்னை  கோவை மற்றும் திருச்சிப் பதிவர்கள்
பெரும்பாலானவர்கள்முன்னமே வந்திருந்ததும்
உடன் விழாக் குழுவினருடன் இணைந்து
பணியாற்றிக் கொண்டிருந்தது ரம்மியமான
காட்சியாக இருந்தது

சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிக்
கொண்டிருந்துவிட்டுஅவர்கள் இரவு தங்குவதற்கு
ஏற்பாடு செய்திருந்த இடத்தில்
நன்றாக ஓய்வெடுத்தேன்

காலையில் மிகச் சரியாக எட்டு மணிக்கெல்லாம்
 விழா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தேன்.
பொய்கையில் பூத்திருக்கும் தாமரைபோல
 அல்லிபோலவிழாக் குழுவினர் ஒத்த உடையில்
இருந்ததுஅவர்களை வெளியூர் பதிவர்கள்
குழப்பமின்றித் தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது

மண்டபத்தின் முன்புறம் பதிவுக்கான ஏற்பாடுகளை
மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

இதற்கு முந்தைய சந்திப்பில்
செய்திருந்ததைப் போல ஒட்டு மொத்தமாக இல்லாது
ஐந்து மாவட்டங்களுக்கு ஒருவர் எனத் தனித் தனியாக
பதிவுக்கு ஏற்பாடு செய்திருந்ததும்,
அதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கென தனித் தனியாக
பக்கம் ஒதுக்கி பதிவு செய்ததும் மிகச் சிறப்பாக இருந்தது

அதற்கான காரணம் கேட்டபோது
இதன் மூலம் சட்டென ஒவ்வொரு மாவட்டத்திலும்
எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என அறியவும்
மேடையில் விடுதல் இன்றி அறிமுகப் படுத்தவும்
வசதியாக இருக்கும் என்றார்கள்

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் வித்தியாசமாகவும்
அருமையாகவும்அவர்கள் செய்திருக்கிற ஏற்பாடுகள்
என்னை மலைக்க வைத்தது

அவர்களிடம் எனக்கான அருமையான அடையாள
அட்டையைப் பெற்றுக்கொண்டு சிற்றுண்டிச்
சாலை நோக்கி நடக்கத் துவங்கினேன்

தொடரும்---

Wednesday, September 23, 2015

புதுகை பதிவர் சந்திப்பு, ( 6 )

தாமரைப் பூத்த தடாகம்
பார்க்கையில் கொள்ளை அழகுதான்
ஆயினும் அது தேக்கிவைத்திருக்கும் குளுமை
அதனினும் மிக அருமையானது
அது பார்வைக்குப் பிடிபடாதது
அந்தச்  சொல்லுக்கு அடங்கா இனிமை
குளத்தினுள்  இறங்கிடத் துணிபவருக்குமட்டுமே
நிறைவாய் கிடைத்திடச்  சாத்தியம்

தத்தித் தவழும் குழந்தை
பார்க்கப் பார்க்க  அழகுதான்
ஆயினும் அது தன்னுள் கொண்டிருக்கும்
தெய்வீக மகிழ்வுப் பிரவாகம்
பார்வைக்குப் பிடிபடாதது
அதன் அருமை பெருமை
அதனை அள்ளிக் கொஞ்சத் தெரிந்தவர்கள் மட்டுமே
முழுதாய் அனுபவத்தறியச் சாத்தியம்

சன்னதிக்குள் காட்சிதரும் தெய்வம்
கண்கொள்ளா அருமைக் காட்சிதான்
அதனினும் அதன் அளவிடமுடியா அருட்திறம்
அறிவிற்குப் பிடிபடாததது
நிரூபிக்க இயலாதது
ஆயினும் அதன் அருளும் சக்தி
மாசற்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே
அறிந்து உணர்ந்து பெறச் சாத்தியம்

பதிவர்களின்  பரந்துபட்ட திறத்தினை
பொது நல நோக்கப்    பண்பினை
எழுத்தில்  காணுதல் மகிழ்வுதான்
அதனினும் அவர்தம் பண்பு நலம்
நட்புக்கென உயிர்தரும் உயர்குணம்
பதிவில் அறிய முடியாததே
விளக்கியும் புரிய முடியாததே
ஆயினும் அவர்தம் அருமை பெருமைதனை
சந்திப்பில் சந்தித்து  மகிழ்ந்திருப்போர் மட்டுமே
தெளிவாய்  முழுதாய் புரியச் சாத்தியம்

எனவே
பதிவர் அனைவரும் அவசியம் வருவீர்
சந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்

Tuesday, September 22, 2015

யானையைச் சாப்பிட ----பதிவர் சந்திப்பு ( 5 )

தோட்டத்தில் பாதி கிணறாய் இருந்தால்
வெள்ளாமை வெளங்கின மாதிரிதான் "
என கிராமங்களில் ஒரு
சொலவடை உண்டு

அதைப் போலவே  எந்த ஒரு பொது நிகழ்வுக்கும்
பங்கேற்பாளர்களை விட கலந்துகொள்வபவர்களின்
கூட்டம்அதிகம் இருக்குமானாலும்
(அரசியல்  மற்றும் திருவிழா நீங்கலாக  இதுபோன்ற
சமூக மேம்பாட்டு நோக்கமுள்ள நிகழ்வுகளுக்கு )
 அந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைவதுநிச்சயம் கடினமே

அந்த வகையில் நான் எப்படியும் மாதம்
இரண்டு கூட்டங்கள் நடத்த வேண்டியிருக்கும்

அதற்கென சமூக மேம்பாட்டு நோக்கம் உள்ளோரின்
ஒரு நெடும் பட்டியலிட்டு அதில் கொடுத்தவரிடம்
தொடர்ந்து போகாது மாறி மாறி இருவர் மூவர்
எனத் தொகைஅதிகமாகிவிடாதபடி பகிர்ந்து
வாங்கித் தான் நடத்திக் கொண்டுள்ளேன்

யானையை முழுதாக முழுங்குவது
அரக்கனாயினும் கஷ்டமே
பிய்த்து கொஞ்சம் கொஞ்சமாக எனில்
ஒரு சிறுவன் கூட யானையைத் தின்று விட முடியும்

அந்த வகையில் நமது பதிவர் சந்திப்பிற்கு
புதுக்கோட்டையில்  குறைந்த பட்சம்
பத்துப் புரவலர்கள்

ஆர்வமுள்ள பதிவர்கள் அதிகம்
உள்ள மாவட்டங்களில்குறைந்த பட்சம்
மூன்று புரவலர்கள்

அயல் நாட்டுப்பதிவர்கள் குறைந்தப்
பட்சம் ஐந்து பேர்

எனப் பிரித்து முயன்றோமானால் முப்பது
 புரவலர்கள் கிடைத்துவிட வாய்ப்புண்டு
என்பது எனது கருத்து

என்னைப் பொருத்தவரை நான் என்னை
ஒரு  புரவலராகஇணைத்துக் கொண்டதோடு

அயல் நாட்டிலிருந்து புரவலராகத்  தங்கள்
பங்களிப்பைத் தருமாறு மூவருக்கும்

இந்தியாவில் இருவருக்கும்
வேண்டு கோள் விடுத்துள்ளேன்

இப்படி ஒவ்வொருவரும் பொறுப்பேற்றுக்
கொண்டால்நிச்சயமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
நிதி திரட்டுவதில் மட்டும் அதிகக் கவனம் செலுத்தாது
 பிற நிகழ்வுகளில்கவனம் செலுத்த இயலும்
என்பது எனது கணிப்பு

தங்கள் கருத்தை எதிர்பார்த்து....

Monday, September 21, 2015

ஆய்வின் அவசியம்...

ஆய்வின் அவசியம்...

எந்த அமைப்பும் நிர்வாக ரீதியாக 
ஒரு குறிப்பிட்ட கால அளவில் தன்னை 
ஆய்வு செய்து
கொள்ளவில்லையெனில் அமைப்பிலும் 
செயல்பாடுகளிலும்
தொய்வு ஏற்படுதல் இயல்பே

அதன் காரணமாகவே உலகளாவிய நமது அரிமா
அமைப்பிலும் காலாண்டுக்கு ஒருமுறை ஒரு
வட்டாரத் தலைவர் தன் பொறுப்பில் உள்ள
சங்கங்களின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும்
சேவைகள் குறித்து ஆய்வுக் கூட்டங்கள் 
நடத்த வேண்டும்
என நிர்ணயம் செய்துள்ளார்கள்

அந்த வகையில் எனது பொறுப்பில் இருக்கும் ஐந்து
சங்கங்களின் நிர்வாகஸ்தர்களை அழைத்து ஒரு
வட்டாரக் கூட்டத்தை நடத்தி முடித்தேன்

அந்த கூட்டத்தில் செய்து முடித்த சேவைகளை 
செயலாளரும்
இனி வரும் காலங்களில் செய்ய இருக்கிற சேவைகளை
தலைவரும் 
விளக்கிப் பேசினார்கள்

அந்த வகையில் செய்த சேவைகளை 
பாராட்டும் விதமாகவும்
செய்ய இருக்கிற சேவைகளை 
நினைவூட்டும் விதமாகவும்
அந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது

அந்த  நிகழ்வின் சில காட்சிகள் 
தங்கள் பார்வைக்காகவும்

கருத்துரைக்காகவும் 

Sunday, September 20, 2015

இளைஞர் படை

எந்த ஒரு இயக்கமாயினும் 
அது மிகச் சிறந்த ஆற்றல் மிக்க தொடர்ந்து 
செயல்படுகிற இயக்கமாக
மாறவேண்டும் எனில் அதில் அனுபவமிக்க பெரியோர்களின்
வழிகாட்டுதலும் துடிப்புமிக்க இளைஞர்களின் பங்களிப்பும்
நிச்சயம் தேவை

அந்த வகையில் நான் சார்ந்திருக்கிற 
அரிமா இயக்கத்திலும்
இளைஞர்களை பங்கேற்கச் செய்யும் விதமாக
ஒரு துணை அமைப்பாக லியோ என்கிற அமைப்பை
வைத்திருக்கிறார்கள்

மதுரையில் மிகவும் மோசமான பகுதியாக 
இருந்த எங்கள்
பகுதியை சரிசெய்யும் விதமாக ஓராண்டுக்கு முன்பாக
குடியிருப்போர் நலச் சங்கம் ஒன்றை உருவாக்கி 
பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக  அறுபது
கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி அதனை
காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் 
பராமரித்து வருகிறோம்

கொலை கொள்ளை திருட்டுக்குப் பேர் போன 
எங்கள் பகுதி
தற்சமயம் அவைகளில் இருந்து முற்றிலும் 
பாதுகாக்கப் பட்டப்
பகுதியாக மாறி இருக்கிறது

தொடர்ந்து குடியிருப்பதற்கு உகந்த பகுதியாக 
மாற்றும் விதமாக
தொடந்து சேவை செய்யும் ஒரு அமைப்பும் 
தேவை என்கிற
நோக்கில் இப்பகுதியில் ஒரு அரிமா
 சங்கத்தைத் துவக்கி
கருவேல முட்செடிகளை அகற்றுதல்,
மரக்கன்று நட்டுப் பராமரித்தல்
முதலான வேலைகளைச் செய்தும் வருகிறோம்

அதன் தொடர்ச்சியாக சுற்றுச் சூழலைப்
 பாதுகாக்கும்படியாக
பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற பகுதியாக 
மாற்றும் விதமாக
அது குறித்தே சிந்தித்துச் செயல்படும் 
ஒரு அமைப்பு இருந்தால்
நல்லது அதுவும் இளைஞர் அமைப்பாக 
இருந்தால் நல்லது
என்கிற நோக்கில் புதிய லியோ சங்கம் 
ஒன்றை கல்லூரி
 மாணவர்களைக் கொண்டு 
வினாயகர் சதுர்த்தி அன்று
வட்டாரத் தலைவர் என்கிற 
முறையில் ஆரம்பித்து
அவர்களுக்கு ஒரு அறிமுக வகுப்பை 
நடத்தி முடித்தேன்

மிக்க மகிழ்வாய் இருக்கிறது.
அந்த நிகழ்வின் சில 
புகைப்படங்களை 
இத்துடன் பகிர்ந்து கொள்வதில்மிக்க மகிழ்ச்சி 
 

Thursday, September 17, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 4 )

 தொடர்ந்து மூன்று பதிவர் சந்திப்பிலும்
கலந்து கொண்டவன் என்கிற  முறையிலும்
சமூக இயக்கங்களில் தொடர்ந்து  பொறுப்பு
வகித்து  வருபவன் என்கிற முறையிலும்
மனம் திறந்து  வெளிப்படையாக  சில விஷயங்களைப்
பகிர்தல் நம் பதிவர் சந்திப்பு   மிகச் சிறப்பாக  நடைபெற
உதவும் என நினைத்து இதை  எழுதுகிறேன்

உண்ணாவிரதப் போராட்டம் என்றாலும்  கூட
மேடை அமைப்பு, விளம்பரம் , ஒலிபெருக்கி அமைப்பு
என செலவுக்கு அதிகப் பணம் வேண்டும் என்கிற
இன்றையச் சூழலில் ஒரு பதிவர் சந்திப்புக்கு
நிச்சயம் அதிகம் செலவாகும் என்பது
நாம் அனைவரும் அறிந்ததே

என்னுடைய அனுமானத்தில் சென்னை மதுரையை விட
புதுகை ,மாநிலத்தின் மையப் பகுதியாக இருப்பதாலும்
ஆரம்பம் முதலே  மிக முறையாகவும் தெளிவாகவும்
அனைவரின் கருத்துக்கும்  மதிப்பளித்தும்  ஐயா
முத்து நிலவன் அவர்கள்  தலைமையில்  புதுவைப்
பதிவர்கள் சந்திப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதால்
இந்தப் பதிவர் சந்திப்புக்கு   அதிக எண்ணிக்கையில்
பதிவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்
என நினைக்கிறேன்

அந்த வகையில்  குறைந்த பட்சம் 200 பதிவர்களாவது
கலந்து கொள்வார்கள் என மதிப்பிடுகிறேன்

அந்த பதிவர்களுக்கு நல்ல  முறையில்  காலைச் சிற்றுண்டி
மதிய உணவு இடையில்  இரு ஹை டீ என மட்டும் ஏற்பாடு
செய்தாலே 70 ஆயிரம் வரை உத்தேசமாக ஆகிவிடும்
(100+ 25+ 25 +200 =350 )

இது நீங்கlலாக மேடை  , அடையாள அட்டை
பதிவர்கள்  கைடுஎன இன்ன பிற விஷயங்களுக்கு
குறைந்த பட்சம் 75 ஆயிரம் ஆகிவிடும் .

என்வே குறைந்த பட்சம் 2 இலட்சம்
இலக்காக வைத்து   நிதி திரட்டினால்  ஒழிய
பதிவர் சந்திப்பை சிறப்பாக நடத்தி முடிக்கச்
சாத்தியமில்லை  என்பது  எண்ணம்

இந்த வகையில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாயை
புரவலர்களிடம் இருந்தும்
நன்கொடையாளர்களிடம் இருந்தும்
பதிவுக் கட்டணமாகவும் பிரித்துப் பெற்றால் தான்
போதிய நிதி இலக்கைத் தொட முடியும் என்பது
 என் கருத்து

பதிவர்களில் புரவலர்களெனத் தரத்தக்கவர்களிடம்
இருந்து  5000/

நன் கொடைத் தர மனமுள்ளவர்களிடம் இருந்து
2000 /1000 எனவும்

மற்றவர்களிடம் இருந்து
கட்டணமாக 500 உம் பெற முயற்சிக்கலாம் என்பது
என் எண்ணம்

500 கட்டணம் கட்டாயமில்லை கொடுத்தால்
ஏற்றுக் கொள்ளப்படும்  என அறிவிக்கலாம்
  
( நாம்  நிச்சயம்  கலந்து கொள்ளும் அனைவருக்கும்
ரூபாய் 500 அளவில் செலவழிக்க வேண்டியிருக்கும் )

இது எனது அபிப்பிராயம்  அவ்வளவே

இது சரியாயிருக்கும் என பெருவாரியோர்
முடிவெடுக்கும் பட்சத்தில் நானும் என்னை
ஒரு புரவலாக    இணைந்து கொள்ளச் சம்மதிக்கிறேன்
என இதன் முலம் தெரிவித்துக் கொள்கிறேன்

அனைவரின் கருத்தை   எதிர்பார்த்து ---

Wednesday, September 16, 2015

கணபதி திருவடி


கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது தொலைந்திடும் -இனி
இன்பமே எனஅறி

கஜமுகன் திருமுகம்
கண்டுகளி தினமினி
நிஜமென மருவிடும்-தினம் 
தொடர்ந்திடும் கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
பெருகிடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையினி ஒழிந்திடும் -இனி
நிறைவுதான் எனத்தெளி