Monday, March 14, 2016

ஒரு ஜென் கதை

ஒரு ஜென் கதை

அந்த நெடுஞ்சாலைச் சந்திப்பில் ஒரு சிறிய கடை
 வைத்தபடி ஒரு ஜென் குரு இருந்தார்

அவர் ஜென் குரு என அறிந்ததால் அவரிடம்
வாழ்வியல் பாடங்களை உடன் இருந்து
அறியலாம் என ஒரு அறிஞரும் அவருடனிருந்தார்

ஒரு நாள் அந்த வழி வந்த ஒரு வழிப்போக்கன்
ஜென் குருவிடம் "ஐயா நான் வெளியூர்.
பஞ்சம் பிழைக்கவென்று ஒரு நல்ல ஊரைத் தேடிப்
பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்

தங்களைப் பார்க்க கொஞ்சம் விஷயமானவர் போல்
தெரிகிறது .அதனால் கேட்கிறேன்
அதோ அங்கு தெரிகிற ஊர் நல்ல ஊரா ?
அந்த ஊர் மக்கள் நல்ல மக்களா ?
நான் அங்கு சென்றால் நிம்மதியாகச் சில காலம்
இருக்கலாமா ? " எனக் கேட்கிறார்.

அவர் உற்றுப் பார்த்த ஜென் குரு "
ஐயா தாங்கள் எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள்
அந்த ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்
அதைச் சொன்னால் நான் உங்களுக்கு
இந்த ஊர் சரிப்பட்டு வருமா எனச் சரியாகச்
சொல்லிவிடுவேன் " என்கிறார்

அதைக் கேட்ட அந்த வழிப்போக்கன் "ஐயா
அதை ஏன் கேட்கிறீர்கள் .நான் இருந்த ஊரைப் போல
மோசமான ஊரையோ மோசமான மனிதர்களையோ
உலகில் எங்கும் பார்க்க முடியாது
அடுத்தவன் வாழ்வதை பொறுக்காத
பொறாமைக்காரர்கள்
அதுதான் கிளம்பிவிட்டேன் " என்கிறார்

அதைக் கேட்ட ஜென் குரு " நீங்கள்
சொன்னது நல்லாதாய்ப் போயிற்று. ஏனெனில்
உங்கள் ஊரைப் போலத்தான் இந்த ஊரும்,
இந்த ஊர் மக்களும்.
அடுத்தவன் வாழப் பொறுக்காதவர்கள்
எனவே இந்த ஊர் வேண்டாம் " என்கிறார்

அதைக் கேட்ட வழிப்போக்கனும் " நல்லது ஐயா
வேறு ஊர் பார்க்கிறேன் எனத்
தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அவர் சென்ற சில மணி நேரத்தில் அதைப் போன்றே
வந்த வேறொரு வழிப்போக்கன்
 அதைப் போன்றே தான் பஞ்சம் பிழைக்க
புதிய ஊர் தேடிப் போவதைச் சொல்லி தூரமாகத்
தெரிகிற ஊர் நல்ல ஊரா அந்த ஊர் மக்கள்
நல்ல மக்களா எனக் கேட்கிறார்

முதல் வழிப்போக்கன் கேட்டதைப் போலவே
ஜென் குருவும் அவரது பழைய ஊர் மக்கள்
குறித்தும் ஊர் குறித்தும் கேட்கிறார்

அதற்கு அந்த வழிப்போக்கன் " ஐயா என் ஊர் மக்கள்
மிகவும் நல்லவர்கள். உதவும் குணமுடையவர்கள்
ஊரில் மழை இன்றி பஞ்சம் வந்து விட்டது
அதனால் பஞ்சம் பிழைக்க வேறு ஊர் தேடுகிறேன்
நிச்சயம் சில மாதங்களில் எங்கள்  ஊர்
 திரும்பி விடுவேன்

அதுவரை இருக்கத்தான் இந்த ஊரைப்
பற்றிக் கேட்கிறேன்" என்கிறான்

அதைக் கேட்ட ஜென் குரு " அப்படியா ரொம்ப நல்லது
உன் ஊரைப் போலத்தான் இந்த ஊர் மக்களும்
மிக மிக நல்லவர்கள்.உதவும் குணமுடையவர்கள்
தாராளமாக இந்த ஊருக்குப் போகலாம் " என்கிறார்

பாதசாரியும் குருவை வணங்கி தன் பயணம்
தொடர குருவுடன் இருந்த அறிஞர் குழம்பிப் போகிறார்

ஒரே ஊர் எப்படி இரு தன்மை உடையதாய் இருக்கும்
குரு ஏன் ஒருவருக்கு அப்படியும் ஒரு வருக்கு இப்படியும்
சொல்கிறார் எனக் குழம்பி குருவிடமே
விளக்கம் கேட்கிறார்

ஜென் குரு சிரித்தபடி சுருக்கமாக " ஊருக்கெனத் தென
தனிக் குணமில்லை நாம் எப்படி இருக்கிறோமோ
அப்படித்தான் ஊரும் இருக்கும்

முன்னவன் ஊரின் மோசமான பகுதியை மட்டும்
அறிந்திருக்கிறான்.பின்னவன் ஊரின் நல்ல பகுதியை
அறிந்திருக்கிறான்.
ஊரும் அப்படித்தான் இருந்திருக்கும்
இவர்கள் போகிற ஊரும் அவர்களுக்கு அப்படித்தான்
இருக்கும் " என்கிறார்.

அறிஞரும் ஒரு வாழ்வியல் பாடம்
மிக எளிமையாகப் புரிந்ததில் மகிழ்ந்து
குரு நாதரைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தார்

 பின் குறிப்பு  :

 இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான்
ஆனாலும்  இந்தக் கட்சிச் சரியில்லை என்று
அந்தக்  கட்சிக்கும் அந்தக் கட்சி சரியில்லையென்று
இந்தக் கட்சிக்கும்.....

 இந்தச் சங்கம் சரியில்லையென்று  அந்தச்
 சங்கத்திற்கும்   அந்தச் சங்கம் சரியில்லையென்று
இந்தச் சங்கம்   மாற நினைக்கிறவர்களுக்கு
எதற்கும்  ஒரு படிப்பினையாக  இருக்கட்டுமே
என்றுதான் இது  ...

Sunday, March 13, 2016

தினம் நன்மை தடையின்றித் தொடர.....

மாடிமனை கோடியெனத்
தேடியோடிச் சேர்த்ததெல்லாம்
மனதுக்குள் என்னமாற்றம் செய்யும் ? -அது
இன்னுமின்னும் எனக்கேட்டே கொல்லும்

பகலிரவாய் நூறுபெண்ணை
வகைவகையாய் அனுபவித்தும்
சுகம்போதும் எனமனமா சொல்லும் ?அது
அடுத்தொன்றைத் தேடித்தான் செல்லும்

நடுக்கமுடல் எடுத்தபின்னும்
நரைதிரையும் நிறைந்தபின்னும்
இருந்ததெல்லாம் போதுமென்றா எண்ணும் ?-மனது
இருக்கநூறு காரணங்கள் சொல்லும்

மொத்தமாகக்  கற்றுவிட்ட
வித்தைகளும் தத்துவமும்
சித்தமதில்  என்னவினை செய்யும் ?-அது
கூடுதலாய் குழப்பத்தான் செய்யும்

குட்டியிலே சங்கிலியில்
வளர்ந்தவுடன்  சணல்கயிற்றில்
கட்டிவைத்தால் யானையது  அடங்கும்-மாறிச்
செய்துவைத்தால் சங்கடந்தான் மிஞ்சும்

மனமதனை அடக்கிவைத்து
அறிவதனை வளர்தெடுத்தால்
தினம்நன்மை தடையின்றித் தொடரும்-மாறின்
சங்கடமே தொடர்கதைபோல் வளரும்

மதமென்ற ஓரமைப்பை
முன்னோர்கள்  ஆக்கிவைத்த
மகத்துவத்தை  மனமுணர்ந்தால்  போதும் -முன்னே
சொன்னதெல்லாம் மிக எளிதாய் விளங்கும்  

Friday, March 11, 2016

கவிதைப் பெண்ணும் காதல் நண்பியும்

காக்க வைத்து தவிக்க விட்டுப்
பார்த்து ரசிப்பதில்-பின்பு
சேர்த்து  நிறையக் கொடுத்து நம்மைக்
கிறங்க வைப்பதில்

தூக்கம் கெடுத்து விழித்து நம்மை
நினைக்க வைப்பதில்-எதிர்
பார்ப்பு இல்லா நேரம் நம்முள்
தானாய் நிறைவதில்

கைக்கு எட்டும் தூரம் இருந்தும்
எட்டித்  திரிவதில்-கண்கள்
பார்க்க இயலா இடம் இருந்தும்
தெளிவாய்த் தெரிவதில்

ஈர்க்க வைத்துப் பித்தன் போல
அலைய வைப்பதில்-தானே
தேர்ந்த நல்ல அடிமைப் போலப்
பணிந்து நிற்பதில்

பார்க்கும் எதையும் தன்னைப் போல
தெரியச் செய்வதில்-நாம்
பார்க்கும் போது  மட்டும்  தன்னை
மறைக்க முயல்வதில்

கூர்மை யாக எண்ணிப் பார்க்க
கவிதைப் பெண்ணுமே -நாம்
தேர்ந் தெடுத்த    நண்பி(மனைவி ) தன்னை
நினைவில்   நிறுத்துமே

Thursday, March 10, 2016

பாழுங்கிணற்றில் வீசுதல் கூட.....

குடிகாரர்களும்
கொள்ளைக்காரர்களும்
ஆணவக் காரர்களும்

நம் வீட்டு வாசலில்
விதம் விதமாய்
வேஷமிட்டப்படி
விதம் விதமாய்க்
கோஷமிட்டப்படி

நாம்
கையிலேந்தி இருக்கும்
கூர்மிகு வாளினைக் கோரியபடி..

பாதுகாப்பாய்
வைத்துக் கொள்வதாய்
வாக்குறுதி கொடுத்தபடி.

 தனக்கென இல்லை
நம்மைக் காக்கத்தான் என
சத்தியம் செய்தபடி...

முன் அனுபவங்கள்
கொடுத்த மிரட்சியில்
நாம் அவர்களைக் கடந்துப் பார்க்க

 கைகளற்றவன் மீதமர்ந்த
கால்களற்றவனும்

காது கேளாதவன்
வழிகாட்டக் கண்களற்றவனும்...

ஒருவர் தயவில் ஒருவர்
நம் இல்லம் நோக்கி
நகர்ந்து வர....

குழம்பத் துவங்குகிறோம் நாம்
கனக்கத் துவங்குகிறது
அந்தக் கூரிய வாள்

தகுதியற்றவர்களிடம்
கொடுத்து நோவதை விட
கொடுத்துச் சாவதை விட..

கூரிய வாளின்
சக்தி அறிந்திருந்தும்
அதன் பலன் புரிந்திருந்தும்

பாழுங்கிணற்றில் வீசுதல் கூட
சரிதானோ எனப்படுகிறது
"அது  "முட்டாள்த்தனம் என அறிந்திருந்தும்....

Wednesday, March 9, 2016

ஜன நாயகப் போர்வையில்

ஏழை விவசாயிகள்
பெற்றக் கடனுக்கு
வட்டி  வசூல் ஜப்திக் கெடுபிடி

பெரு முதலைகள் பெற்றக்
கடன் தொகையை வெளியிடக் கூட
சட்டத்தில் ஆயிரம்  கெடுபிடி

இல்லாதக் கொடுமையால்
அவமானத் தலைக் குனிவால்
குடிசைகளில் நாளும்  தற்கொலைகள்

நாணயப் பிசகதனை
சொல்லியும் எழுதியும்
மாளிகைகளில் நீளும்  சுக சகஜங்கள்

ட்ராக்டர் கடன் தொகை
கட்டாத விவசாயிக்கு            
போலீஸ் தடியடி

தொள்ளாயிரம் கோடி
கட்டாதவன் தப்பிக்க
மறைவாய்ப் பச்சைக் கொடி

அள்ளிக் கொடுத்தது
" அவன் காலம்"என்பான் இவன்
ஆதாரங்கள் காட்டி

தப்ப விட்டது
"இவன்  காலம் " என்பான் அவன்
ஆக்ரோஷம் கூட்டி

இருவரும் வேஷதாரிகள்
செல்வருக்கு "பல்லக்குத் தூக்கிகள்"
 இனியேனும் புரிஞ்சுக்கோ தம்பி

"ஜன நாயகப்  " போர்வைக்குள்
"பண நாயகம் " போடும் ஆட்டத்தை
இப்போதேனும்  புரிஞ்சுக்கோ  தம்பி

மாபெரும் கவிதைப் போட்டி



விவரங்களுக்கு ...
http://ootru1.blogspot.in/2016/03/blog-post.htmlhttp://ootru1.blogspot.in/2016/03/blog-post.html

Tuesday, March 8, 2016

காலம் கடக்க நினைப்பது

எதைப் பறக்க வைப்பது
எதை  இறக்கி வைப்பது
காற்றுக்கு அது தெரியும்
பறக்க நினைப்பதுதான்
காற்றைப் புரிந்து  கொள்ளவேண்டும்

 எதனைமுளைக்கச் செய்வது
 எதனை மக்கச் செய்வது
மண்ணுக்கு அது தெரியும்
முளைக்க முயல்வதுதான்
தன்னுள் உயிர் கொள்ள வேண்டும்

எதனை   மிதக்கச் செய்வது
எதனை  மூழ்கச் செய்வது
நீருக்கு அது தெரியும்
மிதக்க நினைப்பதுதான்
தன்னை தகவமைத்துக் கொள்ளவேண்டும்

எதனை அணைத்து எரிப்பது
எதனை எரிக்காதுக்  கடப்பது
நெருப்புக்கு அது தெரியும்
நிலைக்க நினைப்பதுதான்
தன்னை திடப்படுத்திக் கொள்ளவேண்டும்

எதனைக் கடத்தி  ரசிப்பது
எதனை அழித்துச் சிரிப்பது
காலத்திற்கு அதுதெரியும்
காலம் கடக்க நினைப்பதுதான்
தன்னைத்  தகுதிப்படுத்திக்  கொள்ளவேண்டும்