Sunday, May 15, 2016

தேர்தல்...டுவல்த் ஹவர்

நிகழ்காலச் சிறுதுளிக்கு
நெஞ்சமது மடங்குமெனில்
எதிர்காலம் பாலையாகும்
நிச்சயமாய் எனப்புரிந்து

ஜாதிமதச் சகதியிலே
சறுக்கிவிழ நேருமெனில்
நாதியற்றுப் போகும்நம்
சந்ததிகள் என்றறிந்து

காசுபண ஆசையிலே
கணம்மயங்க நேருமெனில்
ஏதுமற்றுப் போகும்நம்
எதிர்காலம் என்றுணர்ந்து

ஐந்துநொடி நேரத்திலே
அறிவிழக்க நேருமெனில்
ஐந்துவருட நரகமுண்டு
தப்பாது எனத்தெளிந்து

போரதற்குச் செல்லுகின்ற
மன்னவனின் தெளிவோடு
சாவடியை நோக்கிப்போ
சரியான முடிவோடு

வரலாறு ஆகவேணும்
மேமாதம் பதினாறு
தவறாது வாக்களித்துத்
தமிழகத்தைச் சீராக்கு

Saturday, May 14, 2016

தேர்தல் முடிவு- சார்பு அற்றக் கணிப்பு

செய்தி என்பதற்கு ஆங்கிலத்தில்
நியூஸ் ( NEWS ) என்பதை நான்கு திசைகளில்
நடக்கும் நிகழ்வுகளைத்
தொகுத்துத் தருவதுதான் என்பார்கள்.

இப்போது செய்தித்தாள்கள் எவையும்
அப்படிக் கிடைகிற செய்திகளைக் கிடைக்கிறபடி
அப்படியே தொகுத்துத் தருவதில்லை .
மாறாக தன் கருத்தை(VIEWS )
அதில் லேசாகத் திணித்து சரியாகத் தருவதுபோல்
பாவனைதான் செய்கிறார்கள்

அதைப் போலத்தான் தேர்தல் காலங்களில்
கருத்துக் கணிப்பு என்கிற பெயரில் தங்கள்
கருத்துத் திணிப்பைத்தான் செய்கிறார்களே ஒழிய
நிஜமான மக்கள் கருத்தைத் தொகுத்துத்
தருவதில்லை

இதற்கு தொலைக் காட்சி நிறுவனங்களும்
விதி விலக்கானவைகள் இல்லை

அவர்கள் பின்னால் தேர்தல் முடிவுகள்
தங்கள் கணிப்புக்கு மாறுபட்டு இருப்பின்
தப்பித்துக் கொள்ளும்படியாக, முடிவு
சொல்லாதவர்கள்,குழப்பத்தில் உள்ளவர்கள்,
இன்னும் முடிவு எடுக்கவில்லை என்பவர்கள்
எனும்படியாக அதில் குறிப்பிட்ட சதவீதத்தினரை
வேண்டுமென்றே சேர்த்து வைத்திருப்பார்கள்

நாளை அந்த சதவீதத்தை எந்த  ஜெயித்த
பக்கம் சேர்த்தாலும்  நிச்சயம்
அவர்கள் கணித்தது மிகச் சரி என்பதைப்
போல்தான் இருக்கும்

( கடைசியாக வந்த கருத்துக் கணிப்பில் கூட
இழுபறி எண்ணிக்கை   75 )

எனவே அவைகளை வைத்து நாம்
முடிவு எடுக்க வேண்டியதில்லை

எந்தத் கணிப்பையும் சாராது
எந்த மத ஜாதி அபிமானத்திலும் சாராது
மிகக் குறிப்பாக பணத்திற்கு விலைபோகாது
நம் மனம் கட்சிகளையும் , தலைவர்களையும்
கணித்தபடி வாக்களிப்போம்

நம் கணிப்பே மிகச் சரியானக்  கணிப்பாக
இருக்கும்

நிச்சயம் அந்தக் கட்சியே வெல்லும்
அதுவே ஆட்சி பீடமும் ஏறும்

வாழ்த்துக்களுடன்....

Wednesday, May 11, 2016

நூல் வெளியீட்டு விழா...

தொடர்ந்து  எழுதுவது காரணமா ,வயதா
எளிமையாக பு ரியும்படியாக எழுதுவதா
காரணம் எதுவெனத் தெரியவில்லை

ஆனாலும்கூட  வலைத்தளப் பதிவர்கள்
தங்கள் மதிப்புமிக்கப படைப்புகளை
நூலாக வெளியிடும்போது என்னுடைய
வாழ்த்துரையினையோ  ,அணிந்துரையினையோ
பெற்று வெளியிடுவது தொடர்கிறது

 அந்த வகையில்  இது ஆறாவது
அணிந்துரை என நினைக்கிறேன்

கவிஞர்  ரூபன் அவர்கள்  சிறந்த கவிஞர் ,
மனித நேயச் செம்மல் , ஊற்று இலக்கிய மன்ற
ஸ்தாபகர் பொறுப்பாளர் ,அவருடைய
"ஆயுதப் பூ " சிறுகதைத் தொகுப்பு
இலங்கையில் வருகிற மே  25 இல்
வெளியிடப்பட உள்ளது

அந்த அற்புதமான நூலுக்கு  நான் எழுதிய
வாழ்த்துரையை  இங்கு பதிவு செய்வதோடு
அந்த நூல் வெளியீட்டு  விழா    மிகச் சிறப்பாக
நடைபெறவும் ,நண்பர் ,கவிஞர் , ரூபன் அவர்களின்
இலக்கிய சேவையும்,எழுத்துப் பணியும்
சிகரம் தொடவும் , தொடர்ந்து சிகரத்திலேயே
நிலைக்கவும் மனமார்ந்த என் நல்வாழ்த்துக்களைப்
பதிவு செய்வதில்  மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்





ரூபன் என்பது காரணப் பெயர் என்பது 
வலையில் இவரது புகைப்படம் பார்த்து 
நான் எண்ணி இருந்தேன்

அவரது கவிதைகளையும் அதற்கான
 பாடு பொருளையும் வலையில்
படித்து இளகிய மனதுக்குச் சொந்தக்காரார் 
என்கிறமுடிவில்  இருந்தேன்

சுற்றுலாவாக மலேசியாவில் நேரடியாகச் 
சந்தித்த போதுதான்,அவர் அதிரூபன் எனவும்
எத்தனை விசால மனதுக்குச் சொந்தக்காரர்
எனவும் புரிந்து கொள்ளமுடிந்தது

பொருள் ஈட்டும் முகத்தான் இலங்கைவிட்டு
மலேசியாவில் பணி புரிந்து வந்தாலும் கூட
தமிழ்மொழியின் பாற்கொண்ட வற்றாத 
தாகத்தால் மோகத்தால்,சிறந்த கவிஞராய்த்  
தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு 
அல்லாது,உலக அளவில் தன் 
சொந்தப் பொறுப்பில், கவிதை போட்டிகள்
நடத்தி பரிசுகளும் சான்றிதழ்களும்  தொடர்ந்து
வழங்கி வருவதோடு, அதன் தொடர்ச்சியாய்
ஊற்று என்கிற ஒரு இலக்கிய மன்றத்தைத் 
துவக்கிஅதை இன்னும் சிறப்பாகச் 
செய்து வருவதும் தமிழ்கூறும் நல்லுலகம் 
என்றும் போற்றி மகிழக் தக்கது

கவிஞர் ரூபன் அவர்களின் படைப்புகள்  
புத்தகமாக வெளிவருவது மிக்க மகிழ்வளிக்கிறது

சிறப்பின் காரணமாக எல்லை கடந்த
ரூபனின் படைப்புகள், 
அந்தச் சிறப்பின் காரணமாகவே
காலமும் கடக்கும் என்பதை இங்கு பதிவு
செய்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்
யதார்த்தக் கவி. யாதோரமணி

Tuesday, May 10, 2016

தேர்தல்---வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க எளிதான வழிமுறை

உள்ளதில்
நல்லதாக நான்கு ஐந்தைத்
தேர்ந்தெடுத்து வைத்து
பின் அவைகளில்
ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முறை
ஜவுளிக்கும் நகைக்கும்தான்
சரிப்பட்டு வரும்

ஏனெனில்
கடையில் நம் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ள எல்லாமே
நல்லவையே சிறந்தவையே

வேட்பாளர் தேர்வுக்கு
இந்த முறை சரிப்பட்டு வராது

வேட்பாளர்களில்
மிக மோசமானவரை முதலிலும்
அடுத்து மோசமானவரை அடுத்து எனவும்
வரிசையாக கழிக்கக்
கடைசியில் மிஞ்சும்
சுமார் மோசமானவரையே
நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்

ஏனெனில்
தேர்தலில் போட்டியிடுபவர்கள்
யாராகிலும் எந்த விதத்திலாவது
குறையுடனிருக்கவே
நிச்சயம் சாத்தியம்

ஏனெனில் ஜனநாயக அமைப்பு  அப்படி ?

இதில் நல்லவர்களைத்
தேர்வு செய்யும் வாய்ப்பை விட
சுமார் மோசமானவர்களைத் தேர்ந்தெடுக்கவே
நமக்கு வாய்ப்பு அதிகம்

ஏனெனில் நம் ஊரின் நிலைமை அப்படி

மே 16 இல்

இயன்றவரை வேட்பாளரைச் சரியாக நிறுத்து

தவறாது ஓட்டளித்து ஜனநாயகம் காப்போம்

தேர்தல்-----சில உண்மைகள்

 1 )ஆட்சியில் இருந்த கட்சிகள் மீதுதான் ஊழலும்
     ஊழல் குற்றச்சாட்டுகளும் இருக்கச் சாத்தியம்

   எனவே ஆட்சியில் இல்லாதவர்கள் புனிதமானவர்கள்
   எனக் கொள்ளச் சாத்தியம் இல்லை

2 ) எந்தக் கட்சியும் செலவழிக்க வசதி அற்றவரையோ
   தொகுதியில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள
   ஜாதிக்காரர்களையோ போட்டியில் நிறுத்துவதில்லை

   எனவே எந்தக் கட்சியும் ஜாதி மத உணர்வு அற்றது
   என எண்ண வேண்டியதில்லை

3 ) வீட்டிற்கு வெளியில் அரசு செய்ய வேண்டியது
   நிறைய இருக்க, அதற்குத்தான் அரசு என்பதே இருக்க
   வீட்டிற்குத் தேவையான இலவசங்கள்
   தருகிற சொல்கிற எந்தக் கட்சியும் மதிக்கத் தக்கதல்ல

   எனவே ஓட்டளிக்க அதை ஒரு காரணமாகக் கொள்ள
   வேண்டியதில்லை

4 ) மக்களின் எண்ணத்தையும்,தேவைகளையும் மிகச்
   சரியாக எந்தக் கட்சியும் பிரதிபலிக்காமல்
   போவதற்கான காரணமே
   குடும்ப அரசியிலும்,வாரீசு அரசியலுமே

   எனவே எந்தக் கட்சி ஆயினும்,
   குடும்ப உறுப்பினர் எனில்
   வாரீசுகள் எனில் தேர்ந்தெடுக்கத் தயங்குவோம்

5 ) ஏற்கென்வே வென்று தொகுதிக்கு நன்மை
    ஏதும் செய்யாதவர் மீண்டும் வென்று திருந்தி
    நனமைச் செய்யச் சாத்தியமே இல்லை

   எனவே அப்படிப்பட்டவர் எவருமிருப்பின் நிச்சயம்
   அவரைப் புறக்கணிப்போம்

6 ) ஜெயிக்க வாய்ப்பு இருக்கிற கட்சிக்கு
     ஓட்டளிக்க வேண்டும் இல்லையெனில்
     நம் ஓட்டு வீண் என்பதெல்லாம் பம்மாத்துப்
    பிரச்சாரம்

   அதற்காகத்தான் கருத்துக் கணிப்பு
   மாய்மாலம் எல்லாம்

   இந்தத் தேர்தலில் அதிகச் சதவீதம் பெறுகிறக் கட்சி
   நிச்சயம் அடுத்த முறை பிற கட்சிகளால்
   கவனிக்கவும் படும்

   மிகச் சரியாக தன் அரசியல் நடவடிக் கையைத்
  தொடருமாயின் நிச்சயம் அடுத்த முறை
  வெல்லவும் வாய்ப்பு இருக்கும்

   அரசியலே மோசம், போட்டி இடுபவர்கள் எல்லாம்
   மோசம் என ஓட்டளிக்காது இருந்து விட்டுப்
   பின்  வியாக்கியானங்கள் செய்பவர்கள்
  கொஞ்சம் அதிகம் படித்தவர்களும் நடுத்தர ,மற்றும்
   உயர்தர மக்களுமே.

   அந்த இருபது சதவீதம் நிச்சயம் முடிவைத்
   தலைகீழாக்கும் சாத்தியம் அதிகமே.
  அதற்கு டெல்லியே  நல்ல உதாரணம்

  மேலும் இம்முறை புதிய இளைஞர்களின்
 வாக்குகள் நிச்சயம் ஊழல் அரசியல் வாதிகளுக்கோ
.ஜாதி மத அரசியல் வாதிகளுக்கோ
  போக நிச்சயம் சாத்தியமில்லை

  கட்சி வாக்களர்களை மீறி, நடு நிலையாளர்களின்
 வாக்குகள் இந்தத் தேர்தலில் முடிவினைத்
  தீர்மானிக்கும்படியாக 100 % வாக்களிக்க முயல்வோம்

  நல்லதே நிச்சயம் நடக்கும்.

 நம்பிக்கையுடன் வாக்களிப்போம்

Monday, May 9, 2016

அரசியல் வாதிகள் மடையர்களா ?இல்லை நாம் தான் அப்படியா ?

அரசியல் வாதிகள் எல்லாம்
செவிடர்களா ?
இல்லை மடையர்களா ?

இல்லை நாம் தான் அப்படியா ?

"கல்வியில் கொள்ளையை ஒழியுங்கள்
கல்விக் கொள்கையை மாற்றுங்கள் "
என்றால்

கல்விக் கடன் தருகிறோம்
கல்விக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் "
என்கிறார்கள்

வேலைக்கு உத்திரவாதம் தாருங்கள்
வேலை வாய்ப்பைப் பெருக்குங்கள்
என்றால்

வேலைபெறாதோருக்கு உதவித் தொகை
வேலையற்றோரின் கடன் தள்ளுபடி
என்கிறார்கள்

நீர் நிலைகளைப் பராமரியுங்கள்
நீ ஆதாரத்தைப் பெருக்குங்கள்
என்றால்

பத்து ரூபாய்க்குக் குடி நீர்
கடல் நீரிலிருந்து குடி நீர்
என்கிறார்கள்

சாலைகளைச் சீர்ப்படுத்துங்கள்
சாலைப் போக்குவரத்தை  மேம்படுத்துங்கள்
என்றால்

வாகனத்திற்கு மானியம்
பஸ் கட்டணச் சலுகை
என்கிறார்கள்

மது விலக்கை  அமல்படுத்துங்கள்
மதுக் கடைகளை மூடுங்கள்
என்றால்

பெண்களுக்கு நிவாரணம்
தாலிக்குத் தங்கம்
என்கிறார்கள்
......................................
................................................

நிஜமாகவே
நம் கோரிக்கைகள் அவர்கள்
காதுகளில் மாறித்தான்  விழுகிறதா
அல்லது
நம்மையெல்லாம் பார்க்க
மடையர்களாய்த் தெரிகிறதா ?

இனியும் ஏமாற மாட்டோம் என
நாம் சொல்லும் நாள்
மே 16

நமக்கான அரசை நாம்
தேர்ந்தெடுக்கும் நாள்
மே 16

மறக்காது வாக்களிப்போம் வாரீர் ! !
நம் பலத்தை நிரூபிப்போம் வாரீர் ! !

Sunday, May 8, 2016

பாடையில் பணம், செத்த வீட்டில் சுடுகாட்டில் பணம் பட்டுவாடா

ஒரு நல்ல பேச்சாளரை பேச்சாளராகவே
வைத்திருக்காதுத்
தலைவராகக் கொண்டாடியதால்தான்

கட்சியில் பிளவு எனச் சொல்லத்  தக்க அளவு
பெரும்போலோர் அவர் பின் வந்தும்
அவர்களைத் தங்கவைத்துக் கொள்ள இயலாது
இன்று மிகச் சிலருடன் கட்சி நடத்தும்
வை. கோ அவர்கள்


ஒருங்கிணைப்பாளர் என மக்கள் நலக் கூட்டணிச்
சொல்ல இப்போது தினம் அந்த வேலையையும்
ஒழுங்காகப் பார்க்காது.....

ஆயிரம் கோடி ஐநூறு கோடி பேரம்,
கண்டெய்னரில் கோடிக் கோடியாய்ப் பணம்
கலைஞரின் பூர்வீகத் தொழில்,
ரேசன் கடையில் பட்டுவாடா என

தினம் தினம் பேப்பரில் பெயர் வரவேண்டும்
என்பதற்காக ஒரு கமர்சியல் கதாசிரியரைப்போல
மூன்றாம்தரப் பேச்சாளரைப் போல
தினம் ஒரு கதை விட்டுக் கொண்டிருக்கிறார்

அவருக்கு உதவும் விதமாக
வித்தியாசமாக உங்களுக்கு ஏதும் ஐடியா
தோன்றினால் சொல்லலாம்

நிஜமாய் இருக்கவேண்டும் என அவசியமில்லை
பொய்யை நம்ப வைக்கவேண்டுமெனில் அதில்
கொஞ்சம் உண்மை இருக்கவேண்டுமென்பது போல
கொஞ்சம் " இருக்கலாமோ " என எண்ணும்படியாய்
ஒரு இடம் பொருள்  இருந்தால் போதும்

எனக்கொரு யோசனை தோன்றுகிறது

இன்னும் அனைவரும் அவரைக் கவனிக்க வேண்டுமெனில்
பாடையில் பணம், செத்த வீட்டில்
சுடுகாட்டில் பணம் பட்டுவாடா எனச் சொல்லலாம்

இரண்டு நாள் கழித்து
உண்மையில் செத்ததாகச் சொன்னவர்
சாகவே இல்லை, சுடுகாட்டில் இரண்டு நாளில்
எந்தப் பிணமும் எரிக்கப் படவில்லை
இதோ ஆதாரம் என போடோவைக் காட்டலாம்

அதன் மூலம் இன்னும் இரண்டு நாள்
மக்கள் அவரை நினைக்கும்படியாகச் செய்யலாம்

அவருக்காக  என் ஐடியா  எப்படி ?