Thursday, June 8, 2017

காலக் கண்ணாடிகளே வாரீர்

கவிஞர்களே வாருங்கள்
காலக் கண்ணாடிகளே வாருங்கள்

காலத்தை நாம்
மிகச் சரியாய்
பிரதிபலிக்கவில்லையெனில்
காணாமல் போய்விடவே
வாய்ப்பு மிக அதிகம்

வாருங்கள் கவிஞர்களே வாருங்கள்
சமூகத்தை மிகச் சரியாய்
பிரதியெடுப்போம்

முன்பு வழி தேடி அலைபவருக்கு
"ஆலமரம் பக்கத்தில்,
பெருமாள் கோவிலுக்கு நேரெதிரே
சிந்தாமணித் தியேட்டருக்குப்
பக்கத்து சந்து"
எனச் சொன்னதெல்லாம் பழங்கதை

இன்று
"குமார் ஒயின்சுக்கு அடுத்து
அந்த ஏ.சி பாருக்கு இடதுபுறம்
ஏழாம் நம்பர் கடைக்கு எதிர்புறம்'"
எனச் சொல்பனே சரியான வழிகாட்டி

"கால் காசுக்குப் பயனுண்டா
அரைக்காசுக்குத் தேறாது
பைசா பெறாதப் பிரச்சனை"
என்ற ஒப்பீடெல்லம் அரதப்பழசு

இன்று
"ஆஃப்புக் தேறுமா
குவார்டருக்குப் பிரயோஜனம் இல்லை
ஒரு ஃபுல் அடிச்ச மாதிரி "
என் ஒப்பிடுபவனே சரியான மதிப்பீட்டாளன்

கதைக்கானக்  கரு எல்லாம்
பொது நீதி சொல்வதாகவும்

கதைக் களமெல்லாம்
குடும்பமாகவும், காதலாகவும்

இலக்கியத்தின் நோக்கமெல்லாம்
மென்மையுறச் செய்வதாகவும்
இருந்தது எல்லாம் பழைய பஞ்சாங்கம்

இன்று
கதைக் கரு என்பதெல்லாம்

தீயவனின் எழுச்சியையும்
வளர்ச்சியையும்

கதைக்கான களமெல்லாம்
பார்களாகவும்,
ஓட்டல்களாகவும்

இலக்கியத்தின் நோக்கமெல்லாம்
காசு சேர்ப்பதற்காகவும்
எழுச்சியூட்டுவதாகவும்

இல்லையெனில்
நாம் ஒதுக்கப்படவும்
ஒருமாதிரியாய் பார்க்கப்படவுமே
சாத்தியம் மிக அதிகம்

காலத்தோடு
ஒட்ட ஒழுகவில்லையெனில்
கஞ்சிக்கு இலாயக்கற்று
ஒழிந்து போகவும் வாய்ப்பு அதிகம்

எனவே
காலக் கண்ணாடிகளே வாரீர்

'பாரின்" சிறப்புக் குறித்துப்
பல்சுவை விருந்தளிப்போம்

போதை தரும் சண்டைகள் குறித்தான
பரணிகள் படைப்போம்

அதன் காரணமாய்
நாமும் கவிஞரென
மார்தட்டிக் கொள்வோம்

அதன் காரணமாய்
நாடு நாசமானால் என்ன ?
நாம் "ஹிட்" அடிப்போம் வாரீர்

14 comments:

ஸ்ரீராம். said...

போதைகளை ஒழிக்கும் காலம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. கொஞ்சம் பொறுத்துத்தான் பார்ப்போம். நம்மோடு காலம் சேரக்கூடும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் ஆதங்கம் மிகவும் நியாயமானது.

வஞ்சப்புகழ்ச்சி அணியாகச் சொன்னவிதம் அழகு.

பகிர்வுக்கு நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

நீங்கள் சொல்வதும் சரியே
பெண்களின் தன்னிச்சையான
போராட்டங்கள் கொஞ்சம்
நம்பிக்கையூட்டுகிறது
பார்ப்போம்

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...

வணக்கம் !

தங்கள் ஆதங்கம் புரிகிறது கவிஞரே முடிந்தவரை நாம் எழுதிக் கொண்டுதான் இருக்கிறோம் ஒரு காதல் கவிதைக்கு ஒரு குத்துப் பாட்டுக்கு இருக்கும் வரவேற்ப்பு சமூகக் கவிதைகளுக்கு இல்லையே வருந்துகிறேன் இந்தச் சுவை மாறிய சொந்தங்களை நினைத்து !

Yaathoramani.blogspot.com said...

சீராளன்.வீ //
அருமையாகச் சொன்னீர்கள்
ஆம் அந்த ஆதங்கத்தில் பதிவு
செய்ததே
எங்களுக்கே இப்படியெனில்
தங்களைப்போன்ற மிகச் சிறந்த
கவிஞர்களுக்குப்படி இருக்கும் ?
வாழ்த்துக்களுடன்..

திண்டுக்கல் தனபாலன் said...

எதற்கும் ஒரு முடிவு உண்டு... நல்ல முடிவாக இருக்க வேண்டும்...

KILLERGEE Devakottai said...

மாற்றம் வராது என்றதின் விரக்தியில் வந்த கவி அருமை.
த.ம.4

Unknown said...

வேதனையின் வடிகால் பாடலில் விளங்கு கிறது

Nagendra Bharathi said...

அருமை

Rajeevan Ramalingam said...

உண்மையான உள வேதனையை ஏக்கத்தோடும் எள்ளலாகவும் பாட்டில் வடித்திருக்கிறீர்கள் ஐயா..!!

நிலைமைகள் மாறும் அறிகுறிகள் தெரிகின்றன. நல்லதே நடக்கட்டும்.

உதாரணம் காட்டுதல், வழி காட்டுதல், ஒப்பீடு போன்றவற்றில் எல்லாம் மதுவின் தாக்கமே நிறைந்திருப்பதை அழகுற எழுதியுள்ளீர்கள் ஐயா...!!

கரந்தை ஜெயக்குமார் said...

தாங்களே
ஒரு காலக் கண்ணாடிதான் ஐயா

Yarlpavanan said...
This comment has been removed by the author.
Yarlpavanan said...

அங்கதச் சுவையோடு
அருமையான வெளியீடு
விழித்தெழுவோம்...

Post a Comment