Friday, August 16, 2024

நேர்த்திசையில் ஓரடி

 புரியாது என புலம்பித் திரிந்ததைவிட

புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுத்துத் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட இருக்கிறது என
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருப்பதை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைப்பது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்கிறது..

5 comments:

ஸ்ரீராம். said...

நம்பிக்கை... முயற்சி... வெற்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை அருமை

Jayakumar Chandrasekaran said...

கவிதையைப் புரிந்துகொள்ள இருமுறை வாசித்தேன்.
ஆனாலும் சில காரியங்கள் 100 சதவீதம் முடியாமல் இருக்கும். உதாரணமாக நீங்கள் பிரதமர் ஆக முடியாது. முயற்சி வீண்.

ஆகவே சொல்லப்பட்ட கருத்து சிறிதேனும் சாத்தியதை உள்ள காரியங்களுக்கே பொருந்தும்.
Jayakumar

Yaathoramani.blogspot.com said...

அதனால்தான் அனைத்திலும் கொஞ்சம் என்கிற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறேன்..பிரதமராக முயற்சித்தால் கவுன்சிலராகவாவது ஆகிவிட சாத்தியமுண்டு..

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பு.

Post a Comment