Friday, April 5, 2013

உள்ளும் புறமும் (5)

அனைத்துப் பாவங்களிலுமே தலையாயதாக
குடியினைச் சொல்வதன் காரணமே குடி
ஒரு நொடியில் மனதில் எண்ணமாக மட்டுமே இருந்த
ஒரு தீய செயலை சட்டென வேகம் கொடுத்து
செயலாற்ற வைத்துவிடும்,சமதள நிலையை
சட்டென  முறித்து அறிவை ஓரம்கட்டி அந்த
நிமிடத்து உணர்வை செயலாற்றத் துவங்கிவிடும்
அதுவும் குடிகாரக் குழு என்றால் கேட்கவே வேண்டாம்
திருட்டு கொலை கொள்ளை பாலியல் பலாத்த்காரம்
அனைத்திலும் பிடிபடுபவர்களைப் பார்த்தால்
அவர்கள் எல்லாம் போதையில் இருந்தது புரியும்

கொசு நிறைந்த இடமே சுகாதாரக்கேடு என்றால்
சாக்கடை சூழ்ந்த இடத்தைப் பற்றிச்
சொல்லவா வேண்டும்.எனவே  இந்த வீட்டை
வாடகைக்கு விட்டு விட்டு எத்தனை சீக்கிரம்
வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாறுவதே
புத்திசாலித்தனமானது என முடிவெடுத்தேன்

நான் பார்த்த கேட்ட அந்த குட்டிப் பாண்டிச்சேரி
கதையையெல்லாம் சொல்லி மனைவியையும்
குழந்தைகளையும் பயமுறுத்த வேண்டாம் எனக் கருதி
இயல்பாகச் சொல்வதைப் போல

"இந்த இடம் மிகவும் லோன்லியாக உள்ளது
கட்டும்போது தெரியவில்லை .இருந்து
பார்க்கும்போதுதான் தெரிகிறது.கூடிய சீக்கிரம்
வேறு வீடு பார்க்கிறேன்.ஒரு நானகு ஐந்து வருடத்தில்
ஏரியா பிரமாதமாக வந்து விடும்.அப்போது
மீண்டும் வந்து விடுவோம்.அது வரை வாடகைக்கு
விட்டு விடுவோம் "என்றேன்

மனைவி சட்டென எனது கருத்தை மறுத்தாள்/

"அட நீங்க வேற
நீங்க பாட்டுக்கு ஆபீஸ் போயிருவீங்க நான்
இத்தனை வருடம் வீட்டு ஓனர்களிடம் பட்ட பாடு,
அப்பப்பா.....உங்க அப்பா அம்மா எங்க அப்பா அம்மா
வந்தாலே கூட இருக்கிற மாதிரி வந்திருக்காங்களா
இல்லேபோற மாதிரி வந்திருக்காங்களா என
ஜாடையா கேட்கிறது.உடம்பு சௌகரியம் இல்லாம
இரண்டு முறை லெட்ரின் போனா கூட இன்னைக்கு
ரெண்டு தடவை மோட்டார் போடவேண்டியதாகிப்
போச்சுன்னு நக்கலாப் பேசுறது.
இன்னும் நிறைய பட்டுட்டேன்
ஆம்பிளைகளுக்கு இதெல்லாம் தெரியாது
எனக்கு வெறுத்துப் போச்சுங்க
எலி வலையானாலும் தன் வலைங்கிறதுதான் சரி
பேசாம இங்கேயே இருப்போம் ஏரியா
முன்னேறுகிற போது முன்னேறட்டும் என்றாள்.

சரி இதற்கு மேலும் ஒளித்துப் பயனில்லை
விரிவாகச் சொல்லாவிட்டாலும் லேசாகச்
சொல்லிவைப்போம் எனக் கருதி
"இங்கே பக்கத்தில் சாராயம் விற்கிறார்கள்
உனக்கு அதெல்லாம் தெரியாது
அதனாலே இங்கே கொஞ்ச காலம் யாரும்
வீடு கட்டி வருவது கஷ்டம் .அதனாலே.... "
எனச் சொல்லி முடிப்பதற்குள் அவளே தொடர்ந்தாள்

"எனக்கு எல்லாம் தெரியுமுங்க பகலிலே மேற்கே
இருந்து இருட்ட ஆரம்பிச்சதும் பத்துப் பத்துப் பேரா
கிழக்கே போவாங்க,அதுல ஒரு பெருசுக்கிட்ட
 பேசினேன்எல்லாம் கட்டிட வேலை செய்யிரவங்க.
வேலை முடிஞ்சு போறப்ப எல்லோரும்
கொஞ்சம் குடிப்போம் தாயின்னாறு
பூரம் கிராமத்துச் ஜனங்க,கெட்டது தெரியாதவங்க
அங்கே கடை இருக்கிறது கூட எனக்கு
நல்லதாத் தான் படுது.இருட்ட ஆர்ம்பிச்சதுல இருந்து
நீங்க வரும் வரை கொஞ்சம் ஆள் நடமாட்டமாவது
இருக்கு .அது இல்லாட்டி ரொம்ப கஷ்டம் "என்றாள்

எனக்கு அவள் பேச்சு அதிக அதிர்ச்சியைக் கொடுத்தது
சரி அறியாமல் பேசுகிறாள்.இவளிடம் அதிகம் விளக்கி
பயமுறுத்திப்போனால் நம் பாடுதான் கஷ்டம்
அவள் போக்கிலேயே போய் மெதுவாகப்
புரியவைப்போம்என முடிவெடுத்து
"இப்போ என்ன செய்யலாம் சொல் "என்றேன்

"அப்படிக் கேளுங்க.முதல்ல ஆறு மணிக்குள்ள
வீடு வரப் பாருங்க காலையிலே இன்னும்
சீக்கிரம் கூடப் போங்க.முதல்ல கேஸ் ரேஷன் கார்ட்
அட்ரெஸையெல்லாம் சொந்த வீட்டுக்கு மாத்துங்க.
அப்படியே எல்லோருக்கும் பாஸ்போர்ட்
 எடுக்கப் பாருங்க அதுக்கு எப்படியும்
 மூணு மாசம் ஆகிப் போகும்
அதுக்குள்ள நமக்கும் ஏரியா ஒத்து வருமா
ஒத்து வராதான்னு நிச்சயம் தெரிந்து போகும் .
அப்புறம் நாம் மாறுவதைப் பற்றி யோசிக்கலாம் "
என்றாள்

அவள் சொற்படிக் கேட்டு பின் எதாவது
ஏடாகூடாமாக எதுவும்  நடந்து விட்டால் பின்
' ''பொமபளை நான்என்னைத் தங்க கண்டேன்.
நான் எனக்குத் தோணினதைச்
சொன்னேன்.நீங்க தான் நாலு இடம் போறவங்க
நீங்கதானே சரியா முடிவு செய்திருக்கனும் ''னு
பிளேட்டை என பக்கம் திருப்புவாள் எனத் தெரியும்
நிறைய அனுபவப் பட்டிருக்கிறேன்,

ஆனாலும்அவள் நிலையான முகவரிக்கு
அனைத்துரிகார்டுகளையும் மாற்றச் சொன்னது
சரியானதாகத்தான் பட்டது.அது மாற்றவும்
அது சமயத்திலேயே வேறு வாடகை வீடும்
பார்க்கவும் துவங்கினால சரியாக இருக்கும் என
முடிவு செய்து நான செயலில் இறங்கிவிட்டேன்

கேஸ் முகவரி ரேஸன் கார்டு முகவரி எல்லாம்
இரு மாதத்தில் மாற்ற முடிந்தது பாஸ்போர்ட் மட்டும்
அங்கு ஆன் லைனில் பதிந்த உடன் இன்னும் ஒரு
மாதத்தில் வீட்டிற்கு போலீஸ் என்கொயரி  வரும்
அது முடிந்ததும் பாஸ்போர்ட் வீட்டு விலாசத்திற்கே
வந்து விடும் எனச் சொன்னார்கள்,நானும் அதையும்
எதிர்பார்த்தபடி வெளியிலும் வீடு பார்க்கத்
துவங்கிவிட்டேன்.தோதாக இரண்டு வீடுகள் இருந்தது
பாஸ்போர்ட் வேலை முடிந்ததும் மனைவியிடம்
சொல்லிக் கொள்ளலாம் என இருந்தேன்

நான் ஒரு வெள்ளிக் கிழமை அலுவலகம்
முடிந்து வீடு வந்து வண்டியை நிறுத்தியதும்
"ஏங்க நீங்க சொன்னதுதாங்க சரி இந்த ஏரியா
நமக்கு சரிப்பட்டு வராது.
வேற இடம் பார்க்கலாங்க "என்றாள்

அவளுடைய திடீர் மாற்றம் கண்டு நான்
பயந்து போனேன்

"ஏன் என்ன ஆச்சு நான் இல்லாதப்ப ஏதும்
பிரச்சனை ஆச்சா பயப்படாம சொல் "என்றேன்

"அதெல்லாம் இல்லீங்க .மதியம் பாஸ்போர்ட்
என்கொயரிக்கு ஒரு போலீஸ்காரர் வந்தாருங்க
அவரு நீங்க எப்படிம்மா இந்த ஏரியாவிலே தனியா
இருக்கீங்க நாங்களே இருக்க மாட்டோம்,சார்
அதிகாரியா இருக்காருங்கிறீங்க .நல்லா விசாரித்து
வீடு கட்ட வேண்டாமான்னு சொல்லிட்டு
நாளைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தா அப்பத்தான்
உங்களுக்குத் தெரியும் சரியான காலிப் பயக ஏரியா
அது இதுன்னு பயமுறுத்திட்டுப் போயிட்டாருங்க
போலீஸ்காரரே இப்படிச் சொல்லவும் நான் ரொம்ப
பயந்து போயிட்டேங்க்க
அதுல இருந்து மனசே சரி இல்லீங்க
காலா காலத்திலே வேற வீடு பாருங்க "என்றாள்

நான் எடுத்து வைத்திருந்த முடிவையோ
வீடு பார்த்து வைத்திருக்க விவரங்களையோச்
சொல்லாமல் அவள் சொல்லிச் செய்வதைப் போல
"சரி பார்த்தால் போச்சு "எனச் சொல்லி முடித்தேன்
வீடு மாறுவதை விட அவள் சொல்லி மாறுவது
என்பது அவளுக்கு நிச்சயம் அதிக சந்தோஷத்தைக்
கொடுக்கும் என்பது எனக்குத் தெரியும்

மறு நாள் காலையில் ஆபீஸ் போவதற்கு
முன்பாக போலீஸ் ஸ்டேஸன் போய் விவரங்கள்
கேட்டு விட்டுப்போகலாம் எனப் போனேன்

அங்கு நடந்த ஒரு சிறு சம்பவமும்
அதற்கு ஒருவன் கொடுத்த  விரிவான விளக்கமும்
இன்னும் அதிக அதிர்ச்சி தருவதாக இருந்தது,

(தொடரும் )


Wednesday, April 3, 2013

உள்ளும் புறமும் ( 4 )


தலைவரின் சிலைக்கு மேல்
அழுது வடிந்து கொண்டிருந்த தெரு விளக்கும்
குளிர்ந்த காற்றும் சில்லு வண்டுகளின் ஓசையும்
ஏழு மணி இரவை பத்து மணிபோல்
உணரச் செய்து பயமுறுத்திக் கொண்டிருந்தது.

ஆயினும் நான் எப்போதும் இரவு எட்டு மணிக்கே
அலுவலகத்திலிருந்து வீடு வந்து பழகி இருந்ததால்
இன்னும் சிறிது நேரம் இந்த இடம் குறித்து
இவனிடம் மிகச் சரியாகப் புரிந்து கொள்வோம்
என முடிவு செய்தேன்

அவனும் தனக்குத் தெரிந்த தகவல்களை பிறருக்குச்
சொல்வதில் பெருமை கொள்பவனாகத் தெரிந்தான்.
கொஞ்சம் போதையிலும் இருந்ததால் கொஞ்சம்
உண்மையைப் பேசுவான் போலவும் பட்டது

காலை மாற்றிப் போட்டு சௌகரியமாக அமர்ந்தபடி
அவனே பேச்சைத்  தொடர்ந்தான்

"அதோ கிழக்கே தெரியிற இருபது வீடும்
அரசாங்க வீடுதான்.நாங்க எல்லாம்
கார்ப்பபரேசன் கூலிகள்
இந்தப் பொட்டல் காட்டில் மாடி வீடுகள்
கட்டும் வரை இங்கு குடி இருக்கும்படி ஓடு வீடு
போட்டுக் கொடுத்தாங்க. தண்ணீர் கிடையாது
விளக்குக் கிடையாது ரோடு கிடையாது
இருந்தாலும் வாடகை கம்மி என்பதால
சகிச்சிக்கிட்டோம்

முதல் வருஷம் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை
இரண்டாம் வருஷம் இந்தப் பொட்டல் காடெல்லாம்
கருவேலம் முள் வளர்ந்து காடு மாதிரி
ஆகிப் போனதால முதல்ல ஒருத்தன் மட்டும்
சாராயம் விற்க ஆரம்பிச்சான்

நாங்க எல்லோரும் குடிப்பவர்கள்தான் அதுவும்
உசிலம்பட்டி காளப்பன்பட்டி சரக்கு.
நாங்க அடிமையாகிப் போனாம் அடுத்து அடுத்து
ஒவ்வொருவனாகக் கடை போட்டு விற்க ஆரம்பிக்க
டவுனில் இருந்து கூட்டம் சேரச் சேர பிரச்சனையும்
வர ஆரம்பித்துவிட்டது

முதல்லே அதிக போதையிலே சிலர்
ரோட்டில கிடந்தாங்க
ரோட்டில் மல்லுக் கட்ட ஆரம்பிச்சாங்க .
அது கூடபெரிசாத் தெரியலை.
நாள் போகப் போக போதையில் தடுமாறி
வழி மாறி எங்க வீட்டுப் பக்கம் வர ஆரம்பிச்சு
 திண்ணையில் படுக்க ஆரம்பிச்சு
அப்புறம் என்ன என்னவோ ஆகிப் போச்சு "

எனச் சொன்னவன் எதையோ நினைத்தபடி கொஞ்சம்
அமைதியாயிருந்தான்.எதையோ சொல்ல வந்தவன்
சுதாரித்துக் கொண்டு சென்சார் செய்கிறான்  எனப்
புரிந்து கொண்டேன்

பின் ஒரு பெருமூச்சு விட்டபடி அவனே தொடர்ந்தான்

"சரி இனியும் இந்தச் சனியனை இங்கே
இருக்கவிடக் கூடாதுன்னு போராட ஆரம்பிச்சோம்
வழக்கம்போல போஸ்டர் மனு கொடுக்கிறது
மறியல் பண்ணுறதுன்னு என்ன
என்னவோ செய்து பாத்தோம் ஒன்னும் நடக்கல
.அப்புறம்தான் இதுக்குப் பின்னால
பெரிய பெரிய ஆளுங்களும் அதிகாரிகளும்
இருக்கிறது புரிஞ்சது
.எங்களயே  காசு கொடுத்து ஒருத்தருக்கொருத்தர்
பிடிக்காத மாதிரி செஞ்சாங்க.சிலரை மிரட்டினாங்க
ஒரு கட்டத்துல இவகள எதுத்து எதுவும் செய்ய
முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு,

நாங்க ரொம்ப நம்பின ஜாதித் தலைவரும்
கவுன்சிலரும்கடை ஓட்டறதைப் பத்திப் பேசாம
 வேற உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க
செய்து தர்ரோம்னு சாராயக் காரனுக்கு
 வக்காலத்து வாங்க ஆரம்பிச்சுட்டாங்க

எங்களுக்கு கரண்ட் கேட்டோம் குழாய் கேட்டோம்
இந்தத் தலைவர்  சிலை வைக்கனும்னும் கேட்டோம்
நாங்காளா கேட்டப்ப கிடைக்காததெல்லாம்
 கடை ஓட்ட சம்மதிச்சதும் தானா கிடைச்சது.

குடிச்சவங்க இங்குட்டு வராதபடி பாத்துக்க
நாலு ஆளுங்கள போட்டாங்க்க இந்தச் சிலையைப்
பாத்துக்கிறது எங்கள்லேயே இரண்டு ஆளுங்களையும்
இருக்கச் சொல்லி மாசச் சம்பளம் கொடுத்திடுராங்க
நாங்க ஓசியிலே குடிக்சுக்கலாம்
,இன்னைக்கு என் டூட்டி
இதான் சாரே இந்த இடத்தோட வரலாறு..
இது மாறுங்க்கிற...சான்ஸே இல்லை.
நீதான்  யோசித்திருக்கனும்,
பேசாம கரச்சல் பார்ட்டி எவனுக்காவது
அஞ்சு  ஆறு வருஷம் வாடகைக்கு விட்டுட்டு
பிறகு குடி வா சாரே. உனக்கு இந்த ஏரியாவெல்லாம்
ஒத்து வராது  சாரே  "என்றபடி எழுந்தான்

உள்ளே குடித்து வந்த போதை இப்போதுதான்
வேலை செய்ய ஆரம்ப்பிக்கிரது என்பதை
அவன் பேச்சில்மரியாதை குறைவதைக் கொண்டே
 புரிந்து கொண்டு நானும் சொல்லிக் கொண்டு
 கிளம்பினேன்

எவ்வளவு சீக்கிரம்  வீட்டைவாடகைக்கு
விட்டு விட்டு கிளம்புகிறோமோ அதுதான் நல்லது
 என முடிவெடுத்தபடி வீடு நோக்கி
நடக்க ஆரம்பித்தேன்

எனக்கு நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ
நிச்சயம் தெரியவில்லை.காரணம் எனக்கு நேர் எதிரான
முடிவில் என் மனைவி இருந்தாள்

Monday, April 1, 2013

உள்ளும் புறமும் (3 )

தூர  த்தில் இருந்ததாலா அல்லது முதல் குரல்
அப்படி இருந்தால்தான் பயமிருக்கும் என நினைத்து
மிரட்டல் தொனியில் பேசினானா எனத்
தெரியவில்லை கொஞ்சம் அருகில் வந்ததும்
"யார் சார் நீங்க எங்கே இந்தப் பக்கம் போறீங்க "
என்றான் குரலில் கொஞ்சம் பணிவு கூட்டி.

அவன் இந்த குட்டிப் பாண்டிச்சேரிக்கு ஆதரவாளனா
அல்லது எதிர்ப்பாளனா எனத் தெரியவில்லை
ஆயினும் இவனை விட்டாலும் இந்தப் பகுதி
ஏன் இப்படி ஆனது என மிகச் சரியாக
தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை என்பதால்
இவனிடன் கொஞ்சம் மனம் திறந்தே பேசிப் போகலாம்
என நினைத்து அந்த சிலையின் திட்டில்
அமரப் போனேன்

சட்டென பதறிய அவன் " அங்கே உட்காராதீர்கள்
நாங்கள் விளக்கேற்றி பொங்கல்  வைக்குமிடம்
இந்தத் திண்டில் உட்காருங்கள் " என பக்கத்தில்
இருந்த பட்டியக் கல்லைக் காட்டினான்

நானும் அந்தச் சூழலைப் புரிந்து கொண்டு
அந்தத் திட்டில் இருந்த திரு நீரை எடுத்து
நெற்றியில் பூசிக் கொண்டு அந்த தலைவரின்
சிலைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு உட்கார்ந்தேன்
அவனும் எனக்கு அடுத்த கல்லில் அமர்ந்தபடி
"இப்போ சொல்லுங்க " என்றான்
அவனுக்கும் கொஞ்ச நேரம் பொழுது போக
ஒரு நபர் கிடைத்த திருப்தி எனப் புரிந்து கொண்டேன்

நான் பின் எனது சொந்த ஊர், வேலை பார்க்கும் இடம்.
இங்கு இடம் வாங்கியது,வீடு கட்டியது, இப்போது
இந்தச் சூழலைப் பார்த்ததும் ஏன் வீடு கட்டினோம் என
சங்கடப்படுவது என அனைத்தையும் விளக்கமாகச்
சொல்லிஅவன் முகத்தைப் பார்த்தேன்

அவன் எந்த விதக் குழப்பமும் இல்லாமல் சட்டென
"அவசரப்பட்டு தப்பு பண்ணிடீங்களே சார்.
இது  ரொம்ப மோசமான ஏரியா சார்.
அடிதடி வெட்டுக் குத்து பொம்பளை சமாச்சாரம்
குடி,திருட்டுத்தனம் எல்லாம் இங்கே சாதாரணம் சார்
இன்னும் குறஞ்சது ஐந்து பத்து வருஷத்துக்கு இந்த
ஏரியா முன்னேறுவது ரொம்பக் கஷ்டம் சார் "என்றான்

இவனிடம் பேசப்  பேசப் பேச எவ்வளவு பெரிய
முட்டாள்தனம் செய்து விட்டோம் எனப் பட்டது
இவனிடம் பேசாமல் போயிருந்தால் கூட கொஞ்சம்
நம்பிக்கை இழக்காமல் இருந்திருப்போனோ எனப் பட்டது

(தொடரும் )


Sunday, March 31, 2013

உள்ளும் புறமும் (2 )


அந்தப் புதிய குடியிருப்புப் பகுதியில்
இடம்  வாங்கும்போதே என் இடத்திற்கும்
கிழக்கே மூன்ற பர்லாங்க் தூரத்தில் இருக்கும்
பிரதான சாலைக்கும்இடையில் இருக்கும்
அந்த முள் காட்டில் சாராயம் விற்கிறார்கள்
எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆயினும் அந்தப் பக்கம் அதிகம் வரவேண்டி
இல்லாதபடிவேறு பாதைகள் இருந்ததால்
அது குறித்து நான்அதிகம் விசாரித்துத்
 தொலைக்கவில்லை

வீடு கட்டி குடியேறிய ஒரு வாரத்தில் என் வண்டியைப்
பராமரிப்புக்கு விட வேண்டியிருந்ததால் அன்று மாலை
அலுவலகம் விட்டு பஸ்ஸிலேயே வீடு வர வேண்டி
இருந்தது.பிரதான சாலையில் உள்ள ஸ்டாப்புக்கு
டிக்கெட் எடுத்துவிட்டு ஸ்டாப் வந்தவுடன் இறங்கத்
துவங்குகையில் கண்டக்டர்குட்டி பாண்டிச்சேரி
-யெல்லாம்இறங்கு என குரல் கொடுத்ததும்
 பஸ்ஸில் இருந்தமொத்த ஆண்கள் கூட்டமும்
 இறங்கத் துவங்கியது.

இறங்கியவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக
முள் காட்டுக்குள் அவசரம் அவசரமாக நடையைக்
கட்டினார்கள்.நானும்  அந்த ஸ்டாப்பிலேயே
நின்று இருபுறமும் வருகிற பஸ்ஸைக் கவனிக்கத்
துவங்கினேன்.வருகிற பஸ்ஸில் எல்லாம்
அதிகமாக ஆண்கள்கூட்டமும்  இருப்பதும்
அவர்கள் அனைவரும் இறங்கிமுள்காட்டுக்குள்
 பறப்பதும்  வயிற்றைக் கலக்கவும் துவங்கியது
கொஞ்சம் அவசரப்பட்டுஇந்த ஏரியாவில்
வீடு கட்டிவிட்டோமோ எனப் பயமும்
 தோன்ற ஆரம்பித்துவிட்டது

முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்கிற
பழமொழிப்படி இனி யோசித்துப் பயனில்லை இங்கு
என்னதான் நடக்கிறது எனப் பார்ப்போம் என
நானும் அந்த முள்காட்டு ஒத்தையடிப்பாதையில் போய்
உள்ளே பார்க்க அதிர்ந்து போனேன்.

உள்ளே கிராமத்தில் குட்டி திரு விழாவுக்கு
கடைகள் போட்டது போல  ஒரு இருபது முப்பதுக்கு
குறையாமல் பந்தல் போட்டு கடைபோட்டிருந்தார்கள்.
ஒவ்வொரு கடைக்கு முன்னும் குறைந்த பட்சம்
இருபது முப்பது பேருக்குக் குறையாமல்
குடித்துக் கொண்டும் கையில் கொண்டு வந்திருந்த
 திண்பண்டங்களைக்கொறித்துக் கொண்டும் இருந்தார்கள்.

அது மது விலக்கு அமலில் இருந்த காலம்.
பக்கத்தில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில்
போலீஸ் ஸ்டேஸனும் இருக்கிறது.இந்த நிலையில்
இப்படி ஒரு மிகப் பெரிய அளவில்
 கள்ளச் சாராய வியாபாரம் நடப்பதை என்னால்
 ஜீரணிக்கவே முடியவில்லை
கூறு கெட்டவ்ர்கள் சூழ இருக்கிற இடத்தில் கூட
நிம்மதியாய் வாழ்ந்து விட முடியும்.இத்தனை
குடிகாரக் கூட்டம் தினம் புழங்குகிற ஏரியாவில்
பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக
வீடு கட்டிக் கொண்டது எத்தனை பெரிய முட்டாள்தனம்
என எண்ணியபடி வீடு  நோக்கி நடக்கத் துவங்கினேன்
மனம் மிகச் சஞ்சலப்பட்டுப் போனது

போகிற வழியில் சாலைக்கு நடுவில்
ஒரு இந்தியத் தலைவரின் சிலையும்
அதை ஒட்டிஒரு தெரு விளக்கும் உண்டு.
அதைத் தாண்டினால்வீடு வரை ஒரே இருள்தான்.
எனவே சிறிது நேரம் அந்த சிலையின் அடியில்
உள்ள  திட்டில் அமர்ந்து போகலாம்
என எண்ணி அந்தத் திட்டை நோக்கி நடந்தேன்

திடுமென்று " அங்கே யாரப்பா  அது "'
எனக் கத்தியபடி கையில் ஒரு
வேல் கம்புடன் ஒரு கை ஓசை சங்கிலி முருகன் மாதிரி
கருப்புப் போர்வையைப் போர்த்தியபடை மீசையை
ஏற்றிவிட்டபடி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்

(தொடரும் )

Friday, March 29, 2013

உள்ளும் புறமும்


இதைக் கதையாகக் கொள்வதுதான் நல்லது.
உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான்
ஏன் ? எல்லோருக்குதான்.

வயது நாற்பதை வயதை ஒட்டிய சமயத்தில்
மனைவியின் தொடர் வற்புறுத்தலாலோ அல்லது
அடுத்து அடுத்து வீட்டுச் சொந்தக் காரர்களின்
அடாவடித்தனத்தால் வீடு மாற்றி மாற்றி
நொந்து போனதாலோ எனக்கும் சுயமாக
வீடு கட்டவேண்டும் என ஆசை இருந்தது
ஆனால் எதனாலோ அதிக ஆர்வமில்லை

இந்தச் சூழலில்

எனது அலுவலகத்தில் எனது வயதை ஒத்த
உதவியாளன்ஒருவன் இருந்தான்.
அவன் அந்த சமயத்தில் அவனுடையபையனுக்கு
 தீவீரமாகப் பெண் பார்த்துக் கொண்டிருந்தான்.
நேற்று என்னிடம் பெண் பார்க்கப் போவதாக விடுமுறை
சொல்லிவிட்டுப் போயிருந்ததால் அவன் வந்தவுடன்
 ஆர்வமாக"என்ன ஆயிற்று " எனக் கேட்டேன்

அவன் சலித்தபடி சொன்னான்
"பெண் அழகாயிருக்கிறதுவசதியான குடும்பம் தான்.
பவுனும் 30 க்கு  குறையாமல்போடுகிறேன் எனச்
சொல்கிறார்கள்.சம்பாதிக்கிற அண்ணன்கள்
இருவரும் தாட்டியமாக இருக்கிறார்கள்.
ஆனாலும்... 'எனச் சொல்லி நிறுத்தினான்

எனக்கு எரிச்சலாகிப் போனது.
"இதற்கு மேல் உனக்கு எப்படிச்   சம்பந்தம்
 வேண்டும் எனநினைக்கிறாய்  "
என்றேன் எரிச்சலுடன்

"எல்லாம் இருந்து என்ன சார்.வாடகை வீட்டில்
 இருக்கிறார்கள்வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு
 எப்படி சார் பெண்ணைக்கொடுப்பது " என்றான்

எனக்கு அவன் பதில் சட்டென யாரோ மண்டையில்
 தடி கொண்டுதாக்கியது போல இருந்தது.

நான் கௌரவமான ஒரு அரசுப் பணியில் இருக்கிறேன்
இரண்டு பெண்களையும் பொறியியல் கல்லூரியில்
 சேர்த்துபடிக்கவைத்துக் கொண்டுள்ளேன்.
மிகச் சிறப்பான முறையில்திருமணம் செய்து
 கொடுக்கக் கூடிய வகையில்திருமணத்திற்கு
த்தேவையான அனைத்தையும்
சிறிது சிறிதாக சேமித்தும் வைத்துள்ளேன்
வீடு கட்டுவதற்கு ஏதுவாக இரண்டு மூன்று
 இடங்களைவாங்கியும் வைத்துள்ளேன்
.பொறியல் துறையிலேயேஇருப்பதனால்
வடிவமைப்பதுகுறித்தோ வேலை ஆட்களிடம்
வேலை வாங்குவது குறித்தோ கவலை இல்லை

.ஆனாலும்

எப்போது வேண்டுமானலும் கட்டிவிடமுடியும் என்கிற
நமபிக்கையினாலோ அல்லது அலட்சியத்தினாலோ
 உடன்சொந்தமாக வீடு கட்ட நான் முயற்சிக்கவே இல்லை

இன் நிலையில் என் உதவியாளர் சொந்த வீடு
 இல்லாதவர்கள்வீட்டில் எப்படி சம்பந்தம் செய்வது
 என்கிற வார்த்தை என்னுள்ஒரு பெரும் பாதிப்பை
ஏற்படுத்திவிட்டது,இவன் அளவிலேயேஇப்படிப்பட்ட
எண்ணம் இருக்குமாயின் நான் மாப்பிள்ளை பார்க்கத்
துவங்குகையில் நல்ல சம்பந்தம் அமைந்து
 இதன் காரணமாகதட்டிப் போனால் என்ன செய்வது
என்கிற எண்ணம் வர அவனுடைய வார்த்தையை
 ஏதோ அசரீரியின் வாக்காக எடுத்துக்
-கொண்டு உடன் வீடு கட்டது துவங்கிவிட்டேன்.

ஆறு மாதத்தில் புதிய வீட்டில் குடியேறியும் விட்டேன்
இதிலெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லை
.நான் வீடு கட்டியபகுதி புதிய குடியேற்றப் பகுதியாய்
 இருந்ததால் என் வீட்டை ஒட்டிஒரு இரண்டு பர்லாங்க்
 தூரத்திற்கு வீடு ஏதும் இல்லை
அது கூட  பெரிய பிரச்சனையாய் இல்லை.
என் வீட்டிற்குகிழக்கே இரண்டு பர்லாங்க் தூரத்தில்
 மிகப் பெரியமுள் காடு ஒன்று இருந்தது.
அதனால் இத்தனை பிரச்சனைகள் இருக்கும் என
 எனக்கு முதலில் தெரியாது.

(தொடரும்

Wednesday, March 27, 2013

இறுதிப் போட்டி ?


உடலே மத்தாக
மூச்சே வடமாக
ஐம்புலனும் ரசிகனாக
காலமும் இதயமும் நடத்தும்
கயிறிழுக்கும் போட்டிதான்
நாம் வாழும் வாழ்வா ?

இழுத்து ஓய்ந்து
அலுத்த இதயம்
இயலாது தன் நுனியை
மருத்துவரிடம் சேர்க்க
எரிச்சலுற்ற காலம் தன் நுனியை
காலனிடம் சேர்க்கும் நாள்தான்
நமக்கு கடைசி நாளா ?

வார்த்தைகளை எளிதாய் வெல்லும்
அதீத மௌனம் போல
ஹிம்ஸையின் பேயாட்டத்தை
எதிர்க்காதே வெல்லும்
சக்தி மிக்க அஹிம்ஸைபோல்
ரூபத்தை வெட்டிச் சாய்த்து
அரூபம் வெல்லும்
அதிசயத் திரு   நாள்தான்
நமக்கெல்லாம் இறுதி நாளா ?

Tuesday, March 26, 2013

அதிசய உறவுகள்


மீண்டு வருதலும்
மீண்டும் வருதலும்
ஒன்றுபோலத் தோன்றினும்
ஆழ நோக்கின்
இவைகள் இரண்டும்
வேறு பொருள் கொண்டவையே

உயிரோடிருத்தலும்
வாழுதலும் நமக்கு
ஒன்றுபோலப் படினும்
கொஞ்சம் சிந்தித்தால்
இவைகளிரண்டும்
எதிர் அர்த்தம் தருபவையே

ஒன்றை அறிதலும்
ஒன்றை உணர்தலும்
ஒன்று போலப் பொருள்தரினும்
சிறிது உற்று நோக்கின்
உறுதியாய் இவையிரண்டும்
இருவேறு துருவங்களே

கவிதையும் கவித்துவமும்
ஒரு பொருள் இரு சொல்லென
மயக்கம் தருகிற போதும்
கவனமாய் சீர்தூக்கிப் பார்க்கின்
இவைகளிரண்டும்
எப்போதேனும் ஒன்றுசேரும்
அல்லது  சேராதேத்  திரியும் 
அதிசய உறவுகளே