Sunday, January 26, 2014

கண்ணாடி பிம்பக் கறை

தேடித் தேடி ஓடியும்
கிடைக்காத பொருள்
வெறுமையை விதைத்துப் போக

வேண்டாம் வேண்டாம் என
ஒதுக்கத் தொடரும் பொருள்
சலிப்பைத் தந்து போக

அளவாகக் தேட
அளவாகக் கிடைத்த பொருள்
உண்மை மதிப்பில் இருக்க

தேடாதே இருக்க
தானாக மடிவிழுந்த பொருள்
சுய மதிப்பிழந்து தவிக்க

பொருளுக்கென தனியான
மதிப்பேதும் இல்லையெனத்
தெளிவு கொள்கிறேன் நான்

கண்ணாடி பிம்பத்தில்
கறைதுடைக்கும் மடமையை
தவிர்க்கத் துவங்குகிறேன் நான்

Saturday, January 25, 2014

எனது விமர்சனம் :

பதிவுலகப் பிதாமகர் மரியாதைக்குரிய
திரு.வை. கோ அவர்கள்  நடத்திவரும்  சிறுகதை
விமர்சனப் போட்டியில்  முதல் பரிசு
எனக்குக் கிடைத்துள்ளது என்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

நான்  விமர்சனம் எழுதிய ஜிலேபி  கதைக்கான
இணைப்பையும்  எனது விமர்சனத்தையும்  தங்கள்
பார்வைக்காக  இங்கே பதிவு செய்கிறேன்

ஜிலேபி  கதைக்கான இணைப்பு :
 http://gopu1949.blogspot.in/2014/01/vgk-01.html

எனது விமர்சனம் : 

இனிப்பான தலைப்பில் வாழ்வின் விளிம்பு நிலை
மனிதர்களின்  கசப்பான வாழ்வை கோடிட்டுக்
காட்டிப் போகும் "ஜாங்கிரி  " சிறுகதை மிக மிக அருமை

சிறு பின்சுவர் கட்டமுடியாமல் தினம் கட்டிட
வேலைக்குப் போகும் கொத்தனாரும்
வண்ண வண்ண ஆடைகளைத் தைத்துக் கொடுத்தும்
ஒரு எளிய கதர் ஆடையில் திரியும் தையல்காரரும்
வருடம்முழுவதும் பட்டாசு ஆலையில்
கந்தகத்தில் வெந்தும் தீபாவளிக்கு முதல் நாள் தரும்
ஒரு சிறு பட்டாசு பண்டலுக்காகக் காத்திருக்கும்
தொழிலாளியும் நமக்கு அதிகம் பழக்கப்பட்ட அளவு
இந்தச் சமையல் நாகராஜன்கள் நமக்குப்
பழக்கப்படச் சாத்தியமில்லை

அதனால்தான் பொதுவாகவே தண்ணீரில்
 கிடக்கும் தவளைதண்ணீர் குடித்ததா இல்லையா
என யார் கண்டதுஎனப் பழமொழி சொல்லுகிறமாதிரி
இந்த அடுப்படிப் பணியாளர்கள் எல்லாம்
 சாப்பிட்டிருப்பார்களாசாப்பிட்டிருக்கமாட்டார்களா
என்கிறசிறு சந்தேகம் கூட நமக்கு வருவதில்லை
நாமாகவே அவர்கள் திட்டவட்டமாகச்
சாப்பிட்டிருப்பார்கள் என்கிற முடிவுக்கே
பல சமயங்களில் வந்து விடுகிறோம்

வேலை அலுப்பில் தொடர் வேலையில் அல்லது
சமையல் வாடை தொடர்ந்து முகத்திலடிக்கிற
 எரிச்சலில்அவர்கள் பெரும்பாலான சமயங்களில்
விஷேஷ வீடுகளில்முறையாகச் சாப்பிடுவதே இல்லை.
பல சமயங்களில் கொஞ்சம் சோற்றை மட்டும் போட்டு
அனைத்து காய்கறிகளையும் சாம்பார் ரசம்
அனைத்தையும்போட்டுக் கலந்து கலவையாக
இரண்டு மூன்றுகவளங்கள் மட்டும் சாப்பிடுவதை
 பலசமயம் நானே பார்த்திருக்கிறேன்

சமையல் நாகராஜன்களே இப்படி எனில்
சுவீட் போடும் நாகராஜன்க ளைச்
சொல்லவேண்டியதே இல்லை
அதுவும் வறுமையில் செம்மை என்பதே சிறப்பு என
தன்மானமும் கொஞ்சம் கூடிவிட்டால்
 நாகராஜன்களின் பாடு ஜிலேபி  கதை நாயகன்
 நாகராஜன் மாதிரிஅதோ கதிதான்

அதை மிகச் சரியாக உணர்ந்து வடித்த இந்தக் கதை
என்னை அதிகம் கவர்ந்ததில் ஆச்சரியமே இல்லை

ஒரு கருத்தைச் சொல்ல நிகழ்வைத் தேடுவது
அல்லது தன்னைப் பாதித்த நிகழ்வை ஒரு கருத்தோடு
இணைத்துத் தர ஒரு கதை செய்வது என இல்லாமல்
இப்படி நிகழ்வும் கருத்தும் மிகச் சரியாக
 இணையும்படியாககதை எழுதுதல் என்பது
அதுவும் சிறுகதை எழுதுவது
என்பது சாதாரண விஷயமேயில்லை.

அதுவும் காதாபாத்திரத்தை உயர்த்திச்
சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில்
கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிற
ஆரம்பத்திலேயே கோவில் குளம் சாமிபடம் முன்பு
 எனச்சொல்லாமல் திண்ணையில்
வெட்டி ஆபீஸர்கள் எல்லாம்
சீட்டாடிக் கொண்டிருப்பதைச் சொன்னவிதமும்
சீட்டில் அவர் கெட்டிக்காரத்தனத்தைச்
சொன்னவிதமும்இயற்கையாக இருந்ததோடு
இல்லாமல் மிகச் சரியாகஅந்தக் கதாபாத்திரத்தின்
 சாமர்த்தியத்தையும் (?) மிகச் சரியாக
நாம் புரிந்து கொள்ள உதவுகிறது

தன் கதாபாத்திரத்திற்கு அதன் உணர்வுக்கு
வலு சேர்க்க வேண்டும் என்பதற்காக
எதிர் கதாபாத்திரங்களின் தன்மையைக் குறைக்கும்
 வேலைப்பாட்டைச் செய்யாதது
என்னை இந்தப் படைப்பில் மிகக் கவர்ந்தது

இயல்பாக சமையல்காரரின் நோக்கத்தில்
இல்லாமல்நம்முடைய சுய நல எண்ணத்திலேயே
இரண்டுபாராட்டு வார்த்தைகளை சம்பிராதயத்துக்குப்
போட்டுவிட்டுஅடுத்த விசேஷத்திற்கு நீங்கள்தான் என
பொய்யான உறுதி மொழியைக் கொடுத்திவிட்டு
வேலையாளின் கூலியைக் குறைக்க முயலும்
அல்பத்தனம்நம் அனைவரிடத்தும் உண்டு

நல்ல வேளை அந்த அளவு மோசக்காரராக
அந்த விஷேஷ வீட்டுக்காரர் இல்லையென்றாலும் கூட
தன் சுயநல நிலையில் இருந்தே  நாகராஜனை டீல்
செய்கிற விஷயம் என்னை மிகவும் பாதித்தது

வியர்வை காயும் முன் கூலி கொடுப்பது
சிறந்ததுதான்சரியான கூலி கொடுப்பதும்
மிகச் சிறந்துதான்

ஆயினும் அவன் உழைப்பைக்
கௌரவப்படுத்தும்படியாகக் கொடுக்கவேண்டும்
 என்கிற எண்ணத்தை இந்தக் கதை
என்னுள் விதைத்துப் போனது

நிச்சயம் படிப்பவர்கள் அனைவரின் மனங்களிலும்
விதைத்துப் போயிருக்கும்

ஒரு படைப்பின் வெற்றி என்பது வாசகனை
தன் இருப்பு நிலையில் இருந்து கொஞ்சம்
 இதுபோல்மேல் நோக்கி உயர்த்துவது
என்பதல்லாது வேறு ஏதாயிருக்க முடியும் ?

ஒரு படைப்பாளி வாசகனிடம் ஏற்படுத்த
முயல்கிற பாதிப்பினை

அந்தப் பாதிப்பினை மிகச் சரியாகச்
சுட்டிக் காட்டி தன்னுள் அது நேர்ந்தது என
ஒரு வாசகன் சொல்வதை விட

ஒரு படைப்பாளிக்கு
அதிக மகிழ்வும் உற்சாகமும் தருவது
வேறு  ஏதாயிருக்க முடியும் ?

வாழ்த்துகள் வை.கோ. சார்

மேலும் படிக்க : http://gopu1949.blogspot.in/2014/01/vgk-01-01-03.html

Friday, January 24, 2014

இதுவும் ஒருவகை ,,,,,,,,,

தற்சமயம் மாநிலங்களவை தேர்தலுக்கான
வேட்பாளர்களை அ,தி,மு, க அதிகாரப் பூர்வமாக
அறிவித்துள்ளது.அதில் இருவர் தற்போது
மாநகராட்சி மேயராக இருப்பவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது

தென்மாவட்டங்களைக் குறிவைக்கும்
அண்ணா தி.மு.க.

வேட்பாளர் தேர்வில் புதிய வியூகம்
,
அனைத்து சமுகத்தினருக்கும்
வாய்ப்பளிக்கும் விதமாக
அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்

என்றெல்லாம்
வித்தியாசம் வித்தியாசமாக விதம் விதமாக
அலசி ஆராயும் பத்திரிக்கைகள்----

வேண்டுமென்றே நாம் யோசித்து விடக்கூடாது
என்பதற்காகவே இவர்கள் மேயர் பதவியை
ராஜினாமா செய்வதால் மீண்டும் தேர்தல்
நடக்க வேண்டி இருப்பது குறித்தோ
அதற்காக ஏற்படுகிற தேவையற்ற
 செலவு குறித்தோ
லேசாகக் கூட முனகவில்லை

தாம் விரும்புகிற இனத்தவருக்கு மதத்தவருக்கு
அவர்கள் மாநிலங்களவை பதவியைத் தரட்டும்
அவர்களுக்கு போதுமான வாக்குகள் இருப்பதால்
அது அவர்கள் இஷ்டம்.
அதை நாம் விமர்சிக்க முடியாது

ஆனால்  அதை ஏற்கெனவே பதவியில் இருப்பவர்களை
ராஜினாமா செய்யச் சொல்லி
அவர்களுக்குத்தான் தர வேண்டும்
என்பது என்ன கட்டாயம். ?

அவர்கள் பதவி கொடுக்க விரும்புகிற
 இனத்தில்,  மதத்தில்
இவர்களை விட்டால் மாநிலங்களவைக்குத்
தகுதியானவர்கள்இல்லையென்பது போல்
செயல்படுவது கூட
குறிப்பிட்ட இனத்தாரையும் மதத்தாரையும்
இழுவுபடுத்துதல் போலத்தான் இல்லையா ?

இந்த ராஜினாவால் நடக்கும் தேர்தலுக்கான செலவுக்கு
யார் பொறுப்பேற்றுக் கொள்வது ?

இதை ஏன் எந்தப் பத்திரிக்கையும்
மக்கள் முன் ஒரு கருத்தாக
 எடுத்து வைக்க முயலவில்லை ?

பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் இறந்தால்
மீண்டும் தேர்தல் வைக்காது வென்ற கட்சியிலேயே
ஒரு வேட்பாளரை அறிவிக்கச் செய்வதன் மூலம்
தேவையற்ற தேர்தலைத் தவிர்க்கலாமா  எனக் கூட
யோசிக்கிற கால கட்டத்தில் இது போன்று மீண்டும்
மீண்டும் தேவையற்ற செலவுகளை செய்ய முயல்வது
எந்த விதத்தில் நியாயம் ?

இது குறித்து  பதிவர்களின் விரிவான அலசலை
எதிர்பார்த்து இப்பதிவின் தலைப்பின் வாசகத்தை
முடிக்காது விட்டுள்ளேன்.

தங்கள் கருத்தை எதிர்பார்த்து..

வாழ்த்துக்களுடன் ...

Tuesday, January 21, 2014

கவிதையைப் போலவும்...

"இப்படி விழுந்து விழுந்து ரசிப்பதற்கும்
தொடர்ந்து விடாது ரசிப்பதற்கும்
இதில் அப்படி என்னதான் இருக்கு ? "
என விலகி நின்று பார்த்தே
விலகிப் போயினர் சிலர்

"அதில் இறங்க விருப்பமில்லை
தேவையுமில்லை "என
அதனால் விரிந்த முன்பரப்பில்
உருண்டு விளையாடி
மனம் களித்துப் போயினர் பலர்

"முழுதும் நனைந்திடாது
பட்டும் படாமலும் ரசிப்பதே சுகம் "என
உணவுக்கு  ஊறுகாயாய்
அளவோடு இணைந்துப் பின் விலகி
உற்சாகம் கொண்டனர் சிலர்

"அதனுள் வீழ்ந்துக் கிடப்பதும்
நீந்திக் களிப்பதும்தான் பேரானந்தம் "என
செயற்கை அணிகலன்கள்
அனைத்தையும் அகற்றி முற்றாக
மூழ்கிச் சுகித்தனர் வெகு சிலர்

"இந்த விரிந்து பரந்த
பிரமாண்டம்தான் எத்தனைப் பேரின்பம் "என
வியந்தும் விக்கித்தும்
தனைமறந்தும் சூழல் மறந்தும்
தவசியாய்க் கிடந்தனர் வெகு வெகு சிலர்

தன்னிலை மாறாது எப்போதும்போல்
அதுவாகவே அது இருப்பினும்
எல்லோரின் நினைப்புக்கும்
ஏற்றதாகவும் இருந்தது
விரிந்து பரந்துக் கிடந்த அந்த நீலக்கடல்

கவிதையைப் போலவும்... 

Friday, January 17, 2014

பிரிவும் புரிதலும்

ஒருவாரம் ஊர்போய் வந்து
கதவைத் திறந்ததும்
ஒரு வெறுமை வாடை
முகம் சுளிக்கவைத்தது
"வீடு அடைத்துக் கிடந்தால்
அப்படித்தான் " என்றாள் மனைவி

மொட்டில்லாது பூவில்லாது
செடிகள் வாடிக் கிடந்தன
காவலாளியிடம்
 "நீர் ஊற்றவில்லையா "என்றேன்

"இரண்டு நேரமும் ஊற்றினேன்
மழை கூட நன்றாகப் பெய்தது"என்றான்

ப்ளாக்கி மெலிந்து
நோஞ்சானாகி இருந்தது

"சரியாக வேளாவேளை
சோறு வைக்கவில்லையா "
என்றேன் எரிச்சலுடன்

" முதல் நாள்
சோறு சாப்பிடவில்லையென்று
மறு நாள் ரொட்டி கூட
வாங்கிப் போட்டுப் பார்த்தேன்
மண்ணில் கோபத்துடன் புதைத்ததே தவிர
சாப்பிடவில்லை "என்றான் காவலாளி

நான் பிளாக்கியில் அருகில் நெருங்கி
தடவிக் கொடுத்தபடி
"ஏண்டா சாப்பிடலை "என்றேன்

உடலைச் சுருட்டி
என் மடியில் அமர்ந்தபடி
வித்தியாசமாக குரல் கொடுத்தது

சென்ற முறை எக்ஸாம் காரணமாக
சின்னவனை பாட்டி ஊருக்கு
அழைத்துச் செல்லாமல் விட்டுப் போய்
திரும்ப வந்ததும்
அவன் இரண்டு நாள்
சிணுங்கித் திரிந்ததை ஒத்திருந்தது அது

Thursday, January 16, 2014

மேற்கில் தோன்றும் உதயம்

பச்சை விளக்கைப் பார்க்கும் போதே
போதை ஏறுமே-கால்கள்
இச்சை கொண்டு பாதை மாறி
போக ஏங்குமே
மொத்த உடம்பும் பித்தம் ஏற
ஆட்டம் போடவே-மனசில்
மிச்சச் சொச்சக் கூச்சம் கூட
விலகி ஓடுமே

வீடு போக எந்தப் பாதை
மாறிப் போயினும்- இந்தக்
கேடு கெட்ட" பாரு "அங்கே
இருந்து தொலைக்குமே
தாறு மாறா விலையைக் கூட்டி
விற்கும் போதிலும்-காசை
வீசி எரிந்து வாங்கிக் குடிக்க
மனசு தாவுமே

கடனைக் கேட்டு வட்டிக் காரன்
வந்து போனதும்-ரோட்டில்
கிடக்கப் பார்த்த மனிதர் எல்லாம்
முகத்தைச் சுளித்ததும்
நினைப்பில் வந்து தடுக்கப் பார்த்தும்
வெட்கம் இன்றியே-இந்த
வலையைக் கிழிக்கும் பலத்தை இழந்து
புலம்பித் தவிக்குமே

செத்துக் காடு போன பிணமே
வீடு திரும்பினால் -பெண்
பித்துப் பிடித்துத் திரிவோன் மனசில்
இரக்கம் அரும்பினால்
போதைப் பாதைப் போன யாரும்
திருந்தக் கூடுமே-கதிரோன்
பாதை மாறி மேற்கில் கூட
உதிக்கக் கூடுமே

Tuesday, January 14, 2014

இனியொரு விதியது செய்வோம்

வலையதை  அறிந்திடும் முன்னால்-அதன்
வலுவினைப் புரிந்திடும் முன்னால்
அறையதைச் சிறையெனக் கொண்டோம்-தனிமை
வலியினில் அனுதினம் வெந்தோம்

விண்வெளி ஒருநொடிக் கடக்கும்-புதிய
மின்மொழி அறிந்திடும் முன்னால்
மண்ணடிக் கிடந்திடும் பொன்போல்-நாமும்
மண்னெனக் கிடந்தோம் பலநாள்

சொல்லிட ஆயிரம் இருந்தும்-அதைச்
சொல்லிடும் வழிவகை அறிந்தும்
சிற்பியின் உளிபடாக் கல்லாய் -நாமும்
சவமெனக்  கழித்தோம் வெகுநாள்

விதைத்ததும் விளைந்திடும் பயிராய்-பதிவைப்
படைத்ததும் அதுபெறும் பலத்தை
பிழையது இன்றியே தெளிவாய்-இன்று
அனைவரும் அறிந்தோம் மகிழ்வாய்

கூர்மிகு வாள்வலி அறிந்து-அதனைச்
சுழற்றிடும் வீரனைப் போல
சீர்மிகு வலைப்பலம் உணர்ந்து-அதனைச்
சிறப்புறச் செய்வோம் வாரீர்

இனியொரு விதியது செய்யும்-மிக்க
வலிவது வலையினுக் குண்டு
எனும்மொழி மனதினில் கொண்டு-நம்
எழுத்தினைத் தொடர்வோம் வாரீர்