Wednesday, October 14, 2015

விடாது தொடரும் உங்கள் நினைவு நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

இந்தியர்கள் அனைவருக்கும்
ஆகஸ்ட் பதினைந்து ஒரு
விடியல் நாளெனில்

இளைஞர்கள் அனைவருக்கும்
அக்டோபர் பதினைந்தை ஒரு
எழுச்சி நாளாக்கிப் போனவரே

இந்தியாவின் கடைக் கோடியில்
ஒரு சாமானியனாய்ப் பிறந்து
இந்தியா முழுமைக்கும்
ஒரு ஆதர்ஷ நாயகானாய் உயர்ந்தவரே

அலங்காரமிக்க அதிகாரமிக்கப்
ஒரு பதவியை
முதன் முதலாய்
மக்களுக்கான பதவியாக்கியவரே

வல்லமையுள்ளோருக்கானது
என்றான  ஜனாதிபதி மாளிகையை
சாமானியர்களும்  மிக இயல்பாய்
நமக்கானது என உணரச் செய்தவரே

ஓயாத உழைப்பின் மூலம்
சாமானியனும்
உச்சத்தைத் தொட முடியும் என
நிரூபித்துக் காட்டியவரே

பதவியால் அல்ல
செய்வதற்கரிய செயல்களால்
தலைநகரையே ஒரு சிற்றூருக்கு
மாற்றிக் காட்டியவரே

உங்கள் பிறந்த நாள்
இளைஞர்களுக்கான
எழுச்சி நாள் மட்டுமல்ல

இந்தியர்கள் அனைவரும்
2020 என்னும் இலட்சியத்தை
எண்ணச் செய்யும் நாள்

இந் நாளை
நீங்கள் அவதரித்த நாளாக மட்டுமல்ல
உலகத் தலைமைக்கு
இந்தியாவைத்
தயார்ப்படுத்தும் நாளாகக் கொள்கிறோம்

விடாது தொடரும் உங்கள் நினைவு
நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

வாழ்த்துக்களுடன்....

பதிவர்கள் ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

பதிவெழுத்தினை நாட்குறிப்பு எனச்
சொல்ல முடிவதில்லை
ஏனெனில் அதில்
அந்தரங்களைப் பதிவு செய்வதில்லை
ஆயினும் அந்தரங்கங்களின்
சாரத்தைப் பதிவு செய்வதால்
இது நாட் குறிப்பினும் மிகச் சிறந்ததே

பதிவர்களின் பெரும்பாலோரின்
கவிதைகளை  கவிதைகள் எனச்
சொல்லமுடிவதில்லை
ஏனெனில் பதிவர்கள்
எதுகை மோனை சீர் செனத்திக்காக
அதிகம் மெனக்கெடுவதில்லை
ஆயினும் அவர்கள் சமூக நோக்கத்திலும்
கருத்தின் ஆழத்திலும்
அதிகம் கவனம் கொள்வதால்
பதிவர்களின் படைப்புகள்
கவிதையினும் அதிகச் சிறப்புடையதே

பதிவினை ஊடகம் என்றும்
வகைப் படுத்த இயலவில்லை
ஏனெனில் ஊடகம் போல அதிக வீச்சும்
ஜனரஞ்கத் தன்மையும் இல்லை
ஆயினும் சுயக் கட்டுப்பாடும்
ஒரு நொடியில்
உலகைச் சுற்றி வரும் தன்மையிலும்
உடனுக்குடன் எதிர்விளைவுகளை
உண்டாக்கிப் போகும் திறத்தாலும்
பதிவுகள் ஊடகத்தினும் உயர்வானதே

பதிவர்கள் ஊடக எழுத்தாளர்களைப் போல
பிரபல்யமானவர்கள் இல்லை
ஆயினும் ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு
நேர் எதிரானவர்களாய் இருப்பதால்
பதிவர்கள்  ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

(மிகச் சிறப்பாக பதிவர் திரு விழாவினை
 நடத்திக் கொடுத்த புதுகைப் பதிவர்களுக்கும் 
சிறப்பாக நடைபெற அனைத்து விதத்திலும்
ஒத்துழைத்த பதிவர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்  )

Monday, October 12, 2015

சுற்றுச் சூழல் விழிப்புணர்வுப் பேரணி

மதுரையில் மிகவும் பொல்லாதபுரமாக இருந்த
வில்லாபுரத்தை எங்கள் வில்லாபுரம் புது நகர்
குடியிருப்போர் சங்கத்தின் மூலமாக
எங்கள்பகுதி காவல்துறை ஆய்வாளர்
திரு சேதுமணிமாதவன் அவர்களின்
வழிகாட்டுதலின்படி அறுபது கண்காணிப்புக்
காமிராக்களைப்  பொருத்தி
மதுரை நகரிலேயே குடியிருக்கப் பாதுகாப்பான
பகுதி என மாற்றம் செய்தோம்

அதன் தொடர்ச்சியாய் இந்தப் பகுதியில்
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு
ஒரு விழிப்புணர்வுப் பேரணியை  எங்கள்
குடியிருப்போர் சங்கம்,மற்றும் இப்பகுதியில்
மிகச் சிறப்பாக இயங்கி வரும் புது நகர்
அரிமா சங்கம் மற்றும் எங்கள்
அண்டைப் பகுதியில்மிகச் சிறந்த
பெண்கள் கல்லூரியான
சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி
நாட்டு நலப் பணிக்குழுவின் முலமாகவும்
ஏற்பாடு செய்தோம்

இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணமாக இருந்த
காவல்துறை ஆய்வாளர்
திரு, சேதுமணிமாதவன் அவர்களே
இந்த மூன்று அமைப்புக்கும் ஒரு இணைப்பை
 ஏற்படுத்திக்கொடுத்ததோடு இந்தப் பேரணி
மிகச் சிறப்பாக நடைபெறஅனைத்து பாதுகாப்பு
ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துச்
சிறப்புச் செய்தார்கள்

எங்கள் பகுதி மாநகராட்சி  உதவிப் பொறியாளர்
திருமிகு இந்திரா அவர்கள்  துவக்க நிகழ்ச்சியில்
 கலந்து கொண்டு பிரச்சார வாசகங்கள்
அடங்கிய பிரதியை பொதுமக்களிடம்
விநியோகித்து பேரணியைத் துவக்கி வைத்தார்கள்

சேர்மத்தாய் கல்லூரி துணைப்பேராசிரியர்
நாட்டு நலப் பணிக்குழுத் தலைவர் திரு மிகு
ஜி. மீனலோசினிமற்றும் அவரது குழுவினரும்
 மிகச் சிறப்பாக இந்தப் பேரணி
நடைபெற அனைத்து பொறுப்புக்களையும்
எடுத்துக் கொண்டுஎங்களுக்கு  முழுமையாக
ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்

அவனியாபுரம் மாநகராட்சி  பகுதி அலுவலகத்தில்
துவங்கிய 200 மாணவிகள் மற்றும் 50 சமுக நல
ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணி
அவனியாபுரம் மற்றும் வில்லாபுரம் மீனாட்சி நகர்
மற்றும் வில்லாபுரம் குடியிருப்புப் பகுதியில் உள்ள
அனைத்து பொது மக்களிடமும் சுற்றுச் சூழல்
பாதுகாப்பின்அவசியத்தை விளக்கி
(சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை )
துண்டுப் பிரசுரங்கள்  கொடுத்துப் பிரச்சாரம்  செய்தது

இந்தப் பேரணி மிகச் சிறப்பாக நடைபெற
 நிதிப் பொறுப்புமுழுவதையும் தானே ஏற்றுக் கொண்ட
 புது நகர் அரிமாசங்க துணைத் தலைவரும்
குடியிருப்போர் சங்கபகுதித் தலைவர்
லயன்.சக்திவேல் அவர்களுக்கும்
(முதல் புகைப்படத்தில் இடது ஓரம்
தொப்பியுடன் இருப்பவர் )

புது நகர் அரிமா சங்கத் தலைவர்
மற்றும் புது நகர் குடியிருப்போர் சங்கச்  செயலாளர்
ஏ.இப்ராஹிம் சுல்தான் சேட்

செயலாளர்.ஜி.சரவணன் பொருளாளர்.எஸ்.சீனிமுகமது
மற்றும் உறுப்பினர்களுக்கும்

புது நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர்
எஸ் கே.எஸ் காதர் மைதீன், பொருளாளர்
எஸ் கே பிரகாஷ் மற்றும் உறுப்பினர்கள்
அனைவருக்கும்அரிமா வட்டாரத் தலைவர்
என்கிற முறையில் எனது நன்றியையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

அது குறித்த புகைப் படங்கள் சில தங்கள் மேலான
பார்வைக்காக இணைத்துள்ளேன்

வாழ்த்துக்களுடன்..

எஸ்.வெங்கட சுப்ரமனியன் என்ற ரமணி
அரிமா சங்க வட்டாரத் தலைவர்






Sunday, October 11, 2015

புதுகைப் பதிவர் விழா ( 1)






தலைவர் உள்ளிட்ட இந்த அறிஞர் சபைக்கு
எனது பணிவான வணக்கம்

இந்த இனிய விழாவில் தனது
முற்றத்து நிலா என்னும்
கவிதை நூலுக்கு வாழத்துரை  வழங்கப் பணித்த
நன்பர் கவிஞர்ரூபன்  அவர்களுக்கும்
அவர் வேண்டுகோளுக்கிணங்கி எனக்கு
வாய்ப்புக் கொடுத்தவிழாக் குழுவினருக்கு
எனது நன்றியையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு
எனது சிற்றுரையைத் துவங்குகிறேன்

நான் எழுதிய பதிவுகளில் கவிதை குறித்தான
பதிவுகள் கொஞ்சம் அதிகமே இருக்கும்

மிகக் குறிப்பாக ஒரு கவிதையில் கவிதை என்பது
உணர்வு கடத்தி எனக் குறிப்பிட்டிருப்பேன்

ஒருவர் தன்னைப் பாதித்த விஷயத்தைச்
சொல்வார் எனிலோ
அருமையாக விளக்குவார் எனிலோ
,அல்லது மிகத் தத்ரூபமாக
புரிந்து கொள்ளும்படியாக
எழுதிச் செல்வார் எனிலோ
அது கவிதை ஆவதில்லை

மாறாக தன்னைப் பாதித்த விஷயத்தை
தான்பாதித்தபடி  படிப்போரும்  பாதிப்பினைப்
படிப்பதன் மூலமே உணரும்படிச்
சொல்லிச் செல்லும் எதுவோ அதுவே கவிதையாக
இருக்க முடியும்

அந்த வகையில் ரூபனின் கவிதைகள் அனைத்தும்
நிச்சயமாக  அவர் அனுபவித்த பாதிப்பினை
நம்மையும் உணரச் செய்து போகும் என்பது
நீங்கள் ஒருமுறைப் படித்துப்பார்த்தாலே புரியும்


மற்றொரு கவிதையில் கவிதை என்பது
ஒட்டக் காய்ச்சிய உரை நடை
எனக் குறிப்பிட்டிருப்பேன்

எப்படி கோவா செய்ய பாலைக் காய்ச்சுகையில்
நீர்த்தன்மை முற்றாக இல்லாதபடியும்
இதற்கு மேல் காய்ச்சினால் பதம் முறிந்து போகும்
என்கிற ஒரு நிறைவான நிலையில்
நிறுத்தக் கற்றுக் கொண்டிருக்கிறோமோ

அதைப் போலவே தேவையற்ற
நீர்த்த சொற்களைஎவ்வளவுகெவ்வளவு முற்றிலுமாக வெளியேற்றுகிறோமோஅந்த வகையிலும்
இதிலிருந்து ஒரு சொல்லை எடுத்தாலும்
கவிதையின் பொருள் மிகச் சரியாகப்
புரிந்து கொள்ளாமல்போகும் என்கிற நிலையிலும்
சொற்களை பயன்படுத்துதலே
கவிதைக்கும் அழகு,கவிஞருக்கும் அழகு

அந்த வகையில் மட்டும் கவிஞ்ர் ரூபன் அவர்கள்
சொற்சிக்கனத்தைக் கையாளப் பழகினார் ஆயின்
மிகச் சிறந்த கவிஞராக பரிமளிப்பார் என்பதை
உறுதியாக கூறி...

கால அவகாசம் கருதி விரிவான நூல் அறிமுகம் செய்ய
இயலாத நிலையில் கவிஞர் ரூபன் அவர்களின்
கவிதைகள் கவிதை வானில் நிச்சயம் ஒரு
என்றும் ஒளி குன்றா நட்சத்திரமாய்
காலம் கடந்தும் ஒளிரும்
எனபதே  ரூபன் கவிதைகள் குறித்தான
எனது மதிப்பீடுஎனப் பதிவு செய்து வாய்ப்பிற்கு
மீண்டும் ஒருமுறை
நன்றி கூறி விடைபெறுகிறேன்

நன்றி வணக்கம்


( புதுகைப் பதிவர் விழாவில்  ரூபனின்
கவிதை  நூலுக்கான  என் வாழ்த்துரை )

Thursday, October 8, 2015

அரிமா லியோ சங்கத் துவக்க விழா

324 பி 3 அரிமா மாவட்டத்தின் சார்பில் 
நான் வட்டாரத்தலைவராக பொறுப்பில்  இருக்கிற 
மதுரைவில்லாபுரம் புது நகர் அரிமா சங்கத்தின் சார்பில்
கடந்த மாதம் அரிமா இயக்கத்தின் துணை அமைப்பாக
இருக்கிற லியோ சங்கத்தைத் துவக்கினோம்

அதன் தொடர்ச்சியாக என் பொறுப்பில் இருக்கிற
மற்றொரு சிறந்த சங்கமான மதுரை டிலைட்
சங்கத்தின் சார்பில் அதன் தலைவராக இருக்கிற
லயன் எம்.ஜி உமா அவர்களின் சீரிய முயற்சியால்
மற்றுமொரு லியோ சங்கத்தை திருமங்கலம்
பாய்ஸ் டவுனில் நேற்றுத் துவக்கினோம்( 8/10/2015 )


சிறு வயது முதலே தலைமைப் பண்புப் பயிற்சியும்
பொதுவாழ்வில் அனுபவமும்,கிடைக்கிற வாய்ப்புக்களை
மிகச் சரியாக பொது நல நோக்கத்திற்காக பயன்படுத்திக்
கொள்ளுகிற ஆற்றலையும் கற்றுக் கொள்வதற்காகத்தான்
இந்தப் பயிற்சி என்பதை  முன்னாள் ஆளுநர் பெருந்தகை
பாண்டியராஜன் எம்.ஜே ஃப் அவர்களும்
மண்டலத் தலைவர் ஏ மோஹன் எம் ஜே ஃப் அவர்களும்
மிக மிக அருமையாக பயிற்சிக் கொடுத்தார்கள்

திரு நகர் பெஸ்ட் அரிமா சங்க்கத்தின் தலைவர்
டாக்டர் சுப்ரமணியம் அவர்கள் ஒரு சிறந்த 
விளக்கவுரை ஆற்றியதோடு யோகா குறித்த
ஒரு செயல் விளக்கப் பயிற்சியும் கொடுத்தது
நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்புச் சேர்த்தது

இந்த அருமையான விழாவிற்கு மதுரை திரு நகர் பெஸ்ட் 
அரிமா சங்கமும் திருமங்கலம் சுப்ரீம் சங்கமும்
மதுரை டிலைட் சங்கமும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச்
செய்திருந்தார்கள்

அதற்கான சில புகைப்படக் காட்சிகள்
தாங்கள் கண்டு மகிழ்வதற்காக....

...


Wednesday, October 7, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு (16 ) பூனைக்கு மணி கட்டலாம்

சென்னையில் நான் ஒவ்வொருமுறை புலவர் ஐயா
இராமானுஜம் அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம்
ஒரு பதிவு பெற்ற அமைப்பாக நமது வலைப்பதிவர்
அமைப்பை ஆக்க வேண்டும் என
வலியுறுத்திச் சொல்வார்

இது ஒருவகையில் அது அவரது இலட்சியக் கனவு என்று
கூடச் சொல்லலாம்

எனக்கும் இந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு

இதுவரை நடந்த பதிவர் சந்திப்புகளை விட இந்த
புதுகைப் பதிவர் சந்திப்பு அனைத்துத் தரப்பினரையும்
அரவணைத்துச் செல்வதில் ஆகட்டும், மிகத் திட்டமிட்டு
செயல்பாடுகளை பிரித்துப் பரவலாக்கி
செயல்படுத்துவதிலாகட்டும்,
அனைத்து செயல்பாடுகளையும்
ஒரு வெளிப்படைத்தன்மையாகச் செய்வதிலாகட்டும்
ஒரு நிறைவான பதிவர் சந்திப்பாக
இந்தச் சந்திப்பு இருக்கும்
என்பதை பதிவர்கள் அனைவரும் உணரும்படி
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

இந்தச் சந்திப்பில் ஒரு பதிவு பெற்ற அமைப்பாக இந்த
அமைப்பை உருவாக்கலாமா என்பது
குறித்த கேள்வியைமுன்வைத்தும்,
பதிவர்களிடமிருந்து  எதிர்பார்க்கின்ற
வேறு பல கருத்துக்கள் குறித்தும் ஒரு மாதிரிப் படிவம்
தயார் செய்து ( கூடுமானவரையில் ஆம் அல்லது இல்லை
என இருக்கும்படியாக) நமது பதிவர் சங்கத்திற்கான
வலைத்தளத்தில் பதிவிடலாம்

பதிவர்களின் பெருவாரியான கருத்தின்
அடிப்படையில் இது குறித்து பரிசீலிக்கலாம்.

பெருவாரியோரின் கருத்து அமைக்கலாம் என்பதாக
இருக்குமாயின் அது குறித்து ஒரு தெளிவான விதிகளை
வகுக்க ஒரு அமைப்புக் குழுவை அனைத்து மாவட்டம்
மற்றும் ஆர்வமுள்ள அயல் நாட்டில் வாழ்
பதிவர்களையும்  உள்ளடக்கிய
குழு ஒன்றைஇந்தச் சந்திப்பில் அமைக்கலாம்.

"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்  "

என்கிற வள்ளுவன் குரல்
நமக்கெல்லாம் அதிகப் பரிச்சியம் உள்ள குறள் தான்
இல்லையா ?

புதுகைப் பதிவர் திருவிழா ( 15 )

முகம் மட்டுமா மனம் காட்டும்
ஒருவரின் பேச்சும் எழுத்தும்
செயலும் கூடத்தான்
துல்லியமாய் மனம் காட்டும்

உள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் அது
வாக்கினில் உண்டாம் என்கிற கவிதையின்
 பொருள் கூட அதைத்தானே சொல்கிறது

கையில் கிடைத்த ஒரு முடியைவைத்து
சாமுத்திரிகா லட்சணத்தின் விதிகளின்படி
அந்தஅழகு நங்கையின் உருவை வரைந்து
அந்த மகாராணியைத் தேடிப்பிடித்த
விக்ரமாதித்தன் கதை நாம் அனைவரும்
அறிந்ததுதானே

அதைப்போன்றே முகக்கண்ணால் காணாது
 பதிவர்கள்அனைவரையும் அவர்களது
பதிவின் முலம் அவர்களது பரந்த உயர்ந்த
உள்ளத்தினை அகக்கண்ணால்
 புரிந்து கொண்ட நாம் அவர்களை
 நேரடியாகச் சந்தித்துஉரையாடவும் தொடர்ந்து
அவர்களுடன் பாசத் தொடர்பினை
ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த
 புதுகை ப்  பதிவர் சந்திப்புத் திருவிழா
அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக
அமையவுள்ளது என்றால் அது மிகை அல்ல

அதற்காக பெரிதும் பாடுபட்டு மிகச் சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்துள்ள புதுகைப்  பதிவுலக
நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் விதமாகவும்
நன்றி காட்டும் விதமாகவும் இந்த திருவிழாவில்
பெருந்திரளாக கலந்து கொள்வதுடன்
 இந்த விழாமிகச் சிறப்பாக நடைபெற
நம்மால் ஆனஉதவிகளை செய்வதுடன்
நாம் நம்மை முழுமையாக இந்த நிகழ்வுடன்
ஐக்கியப்படுத்திக் கொள்வோமாக

மாறுதலை நம் எழுத்து
உருவாக்குகிறதோ இல்லையோ
மாறுதலுக்கான சூழலை  நம் எழுத்து
உருவாக்கும் என்பது நிச்சயமான உண்மை

இப்போது திரைப்படங்களில் எல்லாம்
பத்திரிக்கையுலக நண்பர்களுக்கு
நன்றி சொல்லுகையில்
மறக்காது   வலையுலகத்திற்கும்   நன்றி
சொல்வதை  நிச்சயம் கவனித்திருப்பீர்கள்

ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதில்
வலைத்தளம்   எப்படி   ஒரு வலுவான
புறக்கணிக்க இயலாத சக்தியாக உள்ளது
என்பதற்கு  இது ஒரு சிறு உதாரணம்

நம் சக்தியை ஒருங்கிணைக்க    வலுவூட்ட
நிச்சயம் இதுபோன்ற   சந்திப்புகள்
உதவும் என்பது எனது
அசைக்கமுடியா நம்பிக்கை

புதுகையில் சந்திப்போம்
வாழ்த்துக்களுடன் .....