Saturday, May 7, 2016

மே 16 இல் தமிழகத்தின் விடியலுக்கு.....

சமூக அக்கறைக் கொண்ட
சில அமைப்புகள் மட்டும்
குடிக்கெதிராய்ப்
போராடிக் கொண்டிருக்க

குடியால்
குடும்பமே
சீரழிவது குறித்துப்
பெண்கள் மட்டுமே
தவித்துக் கொண்டிருக்க

குடித்துப் பழகிய
பெருங் கூட்டத்தின்
பேரமைதி
 பயமுறுத்துவதாய் இருக்கிறது

கூடவே
 குடியின் தீமைகள்  குறித்து
தம் தொண்டர்களுக்கு
அறிவுறுத்தாத தலைமை "களின்
 "கெட்டிக்காரத்தனமும்.

"படிப்படியாய்  "என்பது
குடிகாரர்களுக்கு
இப்போது இல்லை என்ற
சந்தோசமளிக்கும்
சமிக்கையோ என்றும்

சலுகைகளும்
இலவசங்களும்
" துயரில் அழுதிடும்
பெண்களுக்குத் தருகிறக்
"குச்சிமிட்டாயாய் "
இருக்கலாமோ என்றும்

மிக லேசாய்
மனதில் ஒருஎண்ணம் பரவ
மனம் மிகப் படபடக்கிறது
என்ன செய்யப் போகிறோம் ?

மே 16 இல்
தமிழகத்தின்
விடியலுக்கு
வித்திடப் போகிறோமா ?

இல்லை
அஸ்தமனத்திற்குத்தான்
மீண்டும்
ஆரத்தி எடுக்கப் போகிறோமா?

Thursday, May 5, 2016

மடங்கிய விரல்களே நிஜம் காட்டுகிறது...

வெள்ளையன்
கொள்ளையன்
அவனை விரட்டினால்
பாலும் தேனும் ஓடும்
என்றார்கள்

இப்போது நீருக்கே
திண்டாடுகிறோம்

தொழிற்புரட்சிக்குப் பின்
உற்பத்திப் பெருக்கத்தில்
எல்லாருக்கும் எல்லாம்
எளிதாய்க் கிடைக்கும் என்றார்கள்

வேட்டியிலிருந்து
கோவணத்திற்கு வந்து விட்டோம்

பசுமைப் புரட்சியில்
விளைச்சல் பெருக்கத்தில்
தன்னிறைவு
அடைந்துவிட்டோம் என்றார்கள்

கருப்பை கெட்டதைப்போல்
நிலம் விஷமானதே மிச்சம்

வெண்மைப் புரட்சியில்
பால் உற்பத்தியில்
உலகில் நாம்தான்
முன்னணி என்றார்கள்

மாட்டுத் தீவனமே
குதிரைக் கொம்பாகிப் போனது

ஜனநாயகமே
சிறந்த அரசியல் நெறி
தேர்தலே அதற்கு
அச்சாணி என்றார்கள்

தேர்தலில் சர்வாதிகளையே
தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்

பிள்ளையார்ப் பிடிக்க
குரங்கான கதையாய்
எல்லாமே மாறுபட
காரணம் எதுவாயிருக்கும் ?

சுட்டுவிரல் எதை எதையோ சுட்ட
மடங்கிய  மூன்று விரல்களே
நிஜம் காட்டுகிறது

Wednesday, May 4, 2016

அக்னி நட்சத்திரம் ?

"சித்திரைப் பின் ஏழு
வைகாசி முன் ஏழு
அக்னி நட்சத்திரம்

சூரிய பகவான்
அனலாய் தகிப்பான்
இதில் மாற்றம் இருக்காது  "
என்கிறான் ஆன்மீகவாதி

"விஞ்ஞானத்தின்படி
அக்னி நட்சத்திரம்
என ஏதும் இல்லை

அந்த நாட்களில்
கூடுதல் வெட்பம் இருக்கும்
இதில் மாற்றம் இருக்காது"
என்கிறான் பகுத்தறிவுவாதி

"ஆண்டவனின்
ஆணைக்குட்பட்டதே
பிரபஞ்ச இயக்கம்
அவன் வைத்ததே விதி"
என்கிறான் ஆன்மீகவாதி

"பிரபஞ்ச இயக்கம்
ஒரு விதியின் படியே
தொடர்கிறது
அந்த விதி ஆண்டவனில்லை"
என்கிறான பகுத்தறிவு வாதி

வாதங்கள்  முடியாது
காலம் காலமாய்த்
தொடர்ந்து கொண்டிருக்கிறது

அக்னி நட்சத்திரமும்
காலம் காலமாய்
விடாது தொடர்தலைப் போலவே

Tuesday, May 3, 2016

அவன் பிரம்மனாக மாறத் துவங்குகிறான்

மெல்லத்  தலைத் தூக்கும்
 தன் முனைப்பினை
முற்றிலும் களை ந்து
அவன் அவனை
மிகச் சரியாய் அறியும் விதமாய்...

மெல்லக்
கிளர்ந்து
முன் பின் நகர்ந்து
முற்றிலும் திரும்பி
கறையற்ற அந்த
ஆடியில் அவனை இரசிக்க

அவனுக்கு அவன்
இரசிக்கத் தக்க
அழகனாகவே  விரிகிறான்

"இந்தச்  சுய இரசிப்பில்
உயர்ந்தவனை விட
வீழ்ந்தவனே அதிகம்  "
என்னும்  ஒரு சிறு முனகல்
அவனுள்
மெல்லத் தலைக்காட்ட

உக்கிரமாய்
ஒரு  எதிர்க்குரல்

"நீ காவியத் தாயின்
இளைய மகன்
காதல் பெண்களின்
பெருந்தலைவன்
நீ நிரந்தரமானவன்
உனக்கு  என்றும் அழிவே இல்லை

 இதனை    நீயே உணராது
உலகினை
உணரவைத்தல்
எங்ஙனம்   சாத்தியம் ? "
என மிரட்ட

மொட்டவிழும்
வித்தியா கர்வம்
மெல்ல மெல்ல வளர்ந்துப் பெருகி
மனம் மொத்தமும்
ஆக்கிரமித்து  அவனை
மற்றொரு நிலைக்குக் கடத்திப் போகிறது

உருவற்றதாயினும்
காற்றின் இசைக்கு
பல உருவம் ஏந்தும் மேகமாய்..

சக்கையான
வார்த்தைகள்
அவன் உணர்வுகளின்
இசைக்கேற்ப
மெல்ல மெல்ல
உயிர்   கொள்ளத் துவங்க

"படைப்பதனால்  என் பேர் இறைவன் "
எனும்  அமுத வாக்கியம்
அவனே  அறியாது
அவனுள் கருவாகிச் சிரிக்கிறது 

அவன்   பிரம்மனாக மாறத் துவங்குகிறான்  
         

Monday, May 2, 2016

அழகுத்தமிழ் வார்த்தைகள்.....

அசைவற்றச்   சவத்துக்கு
இனியும்
மாலையாகி
வாடிச் சாக மனமில்லை
என முகம் சுழித்தது....

மயக்கும் மனம் கொண்ட
அந்த அழகிய மலர்கள்

வெற்று உருவுக்கு
இனியும்
மெருகூட்டி
என்தரம் இழக்க மனமில்லை
என ஒதுங்கத் துவங்கியது....

தன் அளவில்
தனித்துவம் கொண்ட வண்ணங்கள்

சுடும் பாலையில்
இனியும்
பொழிந்து
பயனற்றுப் போக மனமில்லை
எனக் கடக்க முயன்றது

கருவுற்றப் பெண்ணாய்
நீர்சுமந்த கருத்த மேகங்கள்

ஒடுங்கிய சட்டத்துள்
இனியும்
ஒடுங்கி
என் பலம் சுருக்க மனமில்லை
என வெறுப்பில் புலம்பியது...

ஒன்றுக்குப் பத்துப்
பொருள்கொண்ட  அழகுத்தமிழ் வார்த்தைகள்

Sunday, May 1, 2016

வாழ்த்துரை...



தாய்மையின் வாஞ்சையுடன்
சமூகத்தின் பால் கொண்ட அதீத அக்கறையுடன்
ஒவ்வொரு படைப்பையும் கொடுக்கும்
திருமதி. கௌரி சிவபாலன் அவர்களின்
எழுத்தின்  தீவிர இரசிகன் நான்.

இதுவரை நேரடியாகவோ குரல் வழியோ கூட
தொடர்பு கொண்டதில்லை என்றாலும் கூட
ஒரு நாள் மின் செய்தி வழி , அவர்கள்
தங்கள் படைப்புகளை நூல்வடிவாகக்
கொண்டு வரத் திட்டமிட்டிருப்பதாகவும்
அதற்கு ஒரு நான்கு வரி வரும்படியாக
ஒரு வாழ்த்துப்பா  வழங்க முடியுமா
எனக் கேட்டிருந்தார்கள்

மனதிற்குப் பிடித்து நான் தொடர்கிற அனைத்துப்
பதிவுகளையும் முழுவதுமாகப்  படித்து
அதில் உள்ள சிறப்புகளை மிகச் சரியாகக்
குறிப்பிட்டுப்  பின்னூட்டமிடுவதாலும்

சில சமயங்களில், இது இப்படி இருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என
உரிமை எடுத்துப் பின்னூட்டமிடுவதாலும்,

பதிவர்கள் சிலர் தங்கள் நூல் வெளியீட்டின் போது
என்னிடம் உரிமையுடன் வாழ்த்துரையோ,
முன்னுரையோ கோருவது உண்டு

அந்த வகையில் இது என்னுடைய ஐந்தாவது
வாழ்த்துரை என நினைக்கிறேன்

ஜெர்மெனியில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு
திருமதி. கௌரி சிவபாலன்  அவர்களின் 
"முக்கோண முக்களிப்பு "என்னும் நூல்
 ஸ்ரீலங்காவில் வெளியிடப்படுவது
மிக்க மகிழ்வளிக்கிறது

திருமதி.கௌரி சிவபாலன் அவர்கள்
பதிவுலகிலும், எழுத்துலகிலும் தொடர்ந்து
தன் சிறப்பான பதிவுகளைக் கொடுத்து
சிகரத்திலேயே தொடர்ந்து நிலைக்க
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைப்
பதிவு செய்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்

என்னுடைய வாழ்த்துப் பா

"தாய்மை நிரம்பி வழியும்
  தூய விரிந்த மனமும்
  ஆய்ந்து அறிந்துத் தெளிந்த
  அன்னைத் தமிழின் திறனும்

  வரமாய்ப் பெற்று "வலையில் "
   மலையாய் நிலைத்த கௌரி
   அறம்போல் என்றும்   உந்தன்
   எழுத்தும்  நிலைக்கும். வாழி  !  "
   

வாழ்த்துக்களுடன்...


மே தினச் சிறப்புப் பட்டி மன்றம்



நமது பதிவர் கவிஞர் முத்து நிலவன் ஐயா
அவர்கள் கலந்து கொண்ட மே தினச்  சிறப்புப்
பட்டி மன்ற நிகழ்வினைக்
கலைஞர் தொலைக்காட்சியில் கண்டேன்

முத்து நிலவன் ஐயா  தன் பதிவில்
குறிப்பிட்டிருப்பதைப் போல தொழிலாளர் தினத்தை
கௌரவிக்கும்படியாக கலைஞர் தொலைக்காட்சி
சிறப்புப் பட்டி மன்றத்திற்கு ஏற்பாடு செய்திருப்பது
முதலில் பாராட்டப் படவேண்டிய விஷயம்.

மதுரைதான் பட்ட மன்றத்திற்குப் பூர்வீகம்
மதுரை அரசமரம் பிள்ளையார் கோவில்தான்
அதற்கான ஆஸ்தான இடம்.

குன்றக்குடி அடிகளார் அவர்கள்தான்
அப்போதெல்லாம் ஆஸ்தான நடுவர்
.
அந்தக் காலங்களில் தமிழகத்தின் மிகச் சிறந்த
பேச்சாளர்கள் எல்லாம் வருடம் ஒருமுறை
நடைபெறும் இங்கு நடைபெறும் பட்ட மன்ற
நிகழ்வில் கலந்து கொள்வதில் அதிக
ஆர்வம் காட்டுவார்கள்

அப்போதைய பட்டிமன்றத் தலைப்புகள் எல்லாம்
அதிகம் இலக்கியம் மற்றும் இலக்கியக்
கதாபாத்திரங்கள் சம்பத்தப்பட்டதாகவே
இருக்கும் என்பதால் பேச்சில் அதிகம் பண்டை
இலக்கிய சாராம்சங்களே இருக்கும்.

ஒருமுறை தமிழர் மரபில் தாலி கட்டும்
 பழக்கம் உண்டா என்கிற தலைப்பில்,
ஒரு புறம் தலைமைப் பேச்சாளராக
கண்ணதாசன் அவர்களும் மறுபுறம்
ம.பொ.சி அவர்களும் நடுவராக அடிகளார்
இருந்து நடத்திய பட்டி மன்றம்
மிகச் சிறப்பானது, அந்தப் பட்டி மன்றப் பேச்சுக் கூட
புத்தகமாக வந்த நினைவு இருக்கிறது

அந்த வகையில் மதுரைக்காரர்களுக்கு இந்தப்
பட்டிமன்ற விஷயத்தில் கொஞ்சம் கூடுதல்
நெருக்கம் உண்டு.அந்த வகையில்தான் எனக்கும்.

( எதற்கு இத்தனைப் பீடிகை. என்றால்
காரணம் இருக்கிறது

ஒரு மாறுபட்ட விமர்சனம் வழங்குறோம்
என்றால்அதற்கான தகுதியை கொஞ்சம் விளக்கிப்
 போனால்தானே சரியாக இருக்கும்)

விளையாட்டுப் போட்டியில் ஜெயிக்க எப்படி
அணியின் தலைவர் மிக மிக முக்கியமோ
அதைப்போல பட்டி மன்றம் சிறக்க நடுவரின்
பங்களிப்பே மிக மிக முக்கியமானது

முன்பு அடிகளார் அவர்களின் தீர்ப்புக்காகவே
பட்டிமன்றம் முடிய 11 மணிக்கு மேல்
ஆனாலும் கூட ( பத்துக்கு மேல் பஸ் கிடையாது
ஆறு கிலோ மீட்டர் நடந்துதான் ஊருக்குப்
போகவேண்டும் )இருந்து கேட்டுவிட்டுத்தான்
போவோம்

இரு அணிகளின் கருத்துக்களைத்
தொகுத்துச் சொல்வதும் அதற்கு மிக மிக
அருமையாக மறுப்புச் சொல்வதும்
இறுதி நொடி வரை எப்பக்கம் தீர்ப்பு வழங்கப் போகிறார்
என்பதை யாரும் சிறிதும் யூகித்துவிட முடியாதபடி
இறுதிச் சொற்பொழிவு இருப்பதும் மிகவும்
இரசிக்கத் தக்கதாயிருக்கும்

தற்போது பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள்
இடையிடையே கருத்துச் சொன்னாலும்
அது மிகச் சுருக்கமாக பேச்சாளரின் சிந்தனையை
தடை செய்யாவண்ணம்
சட்டென சொல்லிப் போவது போலத்தான்
அப்போதும் அடிகளார் அவர்களும்
சொல்லிப் போவார்கள்

முன்னுரை, பேச்சாளர்கள் அறிமுகம், முடிவுரை தவிர
பிற இடங்களில் நடுவரின் குறுக்கீடு அதிகம் இருக்காது

நடுவர் லியோனி அவர்களின் பேச்சில் இவையெல்லாம்
நேர் எதிர்மாறாக இருப்பது இந்தப் பட்டி மன்றத்தில்
ஒரு குறை

இடையில் நடுவர் குறுக்கிட்டுப் பேசுகையில்
எப்போது முடிப்பார் என பேச்சாளரும்
புரிந்து கொள்ளமுடியாத அளவு சில சமயம்
மிக நீண்டும் சில சமயம் மிகச் சுருக்கியும்
இருப்பதால் தாளக்கட்டைப் பிடிக்கத் திணறும்
 பாடகனின் கஷ்டம் அனைத்துப்
பேச்சாளருக்கும் இருந்தது

மிகக் குறிப்பாக அதன் காரணமாகவே
வானொலி அடுத்து தொலைக்காட்சி என்கிற
விஷயத்தில் மிக அருமையாக ஒரு கோர்வையாக
ஒரு விஷயத்தைச் சொல்ல முயன்ற
முத்து நிலவன் அவர்களால் மிகச் சரியாகச்
சொல்ல இயலவில்லை என நினைக்கிறேன்

இன்னும் நிறைய எழுத ஆசை. ஆயினும் நீளம்
கருதி ஒரே ஒரு கருத்தை மிக அழுத்தமாகப் பதிவு
செய்து முடிக்கலாம் என நினைக்கிறேன்

தொலைக்காட்சியில் தோன்றிப் பேசுவதும்
பட்டிமன்றத்திற்கென உள்ள சில ஜன ரஞ்சகமான
துணுக்குகளை அதிகம் சொல்வதும்
தலைப்பை ஒட்டியும் பேசவேண்டுமே என்கிற
விதத்தில் அது குறித்தும் கொஞ்சம்
சொல்லிப் போவதுமான இது போன்ற
பட்டிமன்ற குழுக்கள் .....

நமது முத்து நிலவன் ஐயா
போன்று, கிடைக்கிற வாய்ப்பை மிகச் சரியாக
முறையாகப் பயனபடுத்த வேண்டும்
தலைப்பை ஒட்டி விலகாது
தலைப்பை மிகவும் நீர்த்துப் போகச் செய்து விடாது
பேசவேண்டும் என்னும் கொள்கை, கோட்பாடு
கொண்டவர்களுக்கு ( ஐயா அவர்களின் பேச்சை
கேட்டவர்களுக்கு நான் சொல்ல வருகிற விஷயம்
தெளிவாகப் புரியும் ) சரிப்பட்டு வராது என்பதே
எனது ஆணித்தரமான கருத்து

வாழ்த்துக்களுடன்