Sunday, May 22, 2016

வாழ்க "குடி" அரசு வாழ்க "குடி" மக்கள்

புரட்சித் தலைவியின்
மக்களால் நான் மக்களுக்காக நான்"
என்னும் பிரச்சாரத்தின் உறுதி
நம்மை உருக வைத்துவிட்டது

வாக்குக் காணிக்கைகளை
வரையின்றிச் செலுத்திவிட்டோம்

இப்போது
வாக்குறுதியை நிறைவேற்றும்
நிலையில் அவர்கள்
பெறும் நிலையில் நாம்

நிதிப்பெருக்கமின்றி
இது எப்படிச் சாத்தியம் ?

நம்மால் ஆன அரசை
நமக்கான அரசைத்
தவிக்க விடலாமா?

அரசுக்காக நாம்
நம்மாலானதைச்
செய்யவேண்டாமா ?

இனி
சாவு வீடுகளில்
சந்தோஷ தருணங்களில்
குடித்து மகிழ்வோர்
வார இறுதியிலும் முயல்வோம்

"வார இறுதிக்காரர் "
இனி தினம் குடிக்க முயல்வோம்

இப்படியே
கட்டிங் விடுத்து குவாட்டராய்
குவாட்டர் ஆஃப்பாய்
ஆஃப் ஃபுல்லாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
கூட்ட முயல்வோம்

நிதித் தேவை முடிந்ததும்
அரசும்
"படிப்படியாய்"
செய்ய வேண்டியதைச் செய்யும்

நாமும்
சக்தியுள்ளோர்
 "படிப்படியாய்"
சம நிலை அடைவோம்

சக்தியற்றோர்
"படிப்படியாய்  "
சவ நிலை அடைவோம் 

ஆம்
மே 23 முதல்

"மக்களால் நான்
மக்களுக்கான நான்" என்பதை
அவர்கள் செயல்படுத்தத் துவங்க

நாமும்
நம்மால் அரசு
அரசுக்காக நாம் " என்பதை
நிரூபிக்கத் துவங்குவோம்

வாழ்க "குடி" அரசு
வாழ்க "குடி" மக்கள்

Saturday, May 21, 2016

மயக்கும் கோடை மழை மாலை

மழை அழகு
கோடை மழை
பேரழகு
கோடை மழை மாலை
பெரும்பேரழகு

பார்ப்போருக்கு நனையாதபடி
ஆயினும் மிகச் சரியாய்
நனையும்படியான வாயிற்படியில்
பேத்தியும் நானும்..
அவள் பாட்டிக்குப் பயந்தபடி

நீண்ட வெள்ளி ஊசியாய்ப்  பொழியும்
மென் சாரலை
நெளித்து உடைத்துப் போகும்
குளிர்காற்று
எம் இருவரையும்  மெல்லச் சீண்டி
இரசித்துக் கடக்கிறது

நாங்களும் இமை இறுக்கிப்
பற்கள் கடித்துப்
பயந்தது போல்
நடுங்கிச் சிரிக்கிறோம்

சுவரோரம்
நனைந்து நடுங்கி நின்ற
சிட்டுக்குருவி
மெல்லப் பறக்க எத்தனிக்கிறது

நான் ஆறுதலாய்ச்  சப்தமாய்
"நாங்கள் சைவம் தான்
பயப்படாமல் இரு " என்கிறேன்
சிறுபிள்ளைத்தனமாய்

" அதுக்குத் தமிழ் தெரியுமா
லூஸ் தாத்தா " என
தலையில் அடித்துக் கொள்கிறாள் பேத்தி
பெரியமனிதத்தனமாய்

பேசியது புரிந்ததாலோ
தாங்க முடியாததாலோ
எங்களை நோக்கி மெல்ல நகருகிறது
மொத்தமாய் நனைந்த
அந்த அழகுக் குருவி

நாங்கள் சந்தோஷத்தில்
இன்னும் சப்தமாய்ச் சிரிக்கிறோம்

எங்களுக்குப் போட்டியாய்
மழையும்  வலுக்கத் துவங்குகிறது

நிச்சயமாக

மழை தான்
அழகு

கோடை மழை தான்
பேரழகு

கோடை மழை மாலை தான்
பெரும்பேரழகு

Thursday, May 19, 2016

தேர்தல்--ஒரு நுணுக்கப்பார்வை

செத்தவனுக்கு ஜாதகம் பார்ப்பதும்
தோற்றதற்குக் காரணம் பார்ப்பதும்
எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்பது
நிஜம்தான் ஆயினும் கூட.

சில சந்தேக மரணங்களுக்கு உடல் பரிசோதனை
பல சந்தேகங்களை தீர்க்கும் என்கிற வகையிலும்
அடுத்து அதுபோல் நேராமல் இருக்க வழிவகுக்கும்
என்கிற வகையிலும் இந்த தேர்தல் முடிவுகள்
குறித்து கொஞ்சம் நுணுக்கமாகப் பார்க்கையில்
ஒரு விஷயம் புரிந்தது

குழந்தைக்கு வான வேடிக்கை காட்டுவது போல்
காட்டி நைஸாக சங்கிலியை லவட்டுகிற
மாதிரி, பீ டீம் என மக்கள் நலக் கூட்டணியைச்
சொல்லி அது ஓட்டைப் பிரிப்பதற்காகவே
ஏற்படுத்தப்பட்டக் கூட்டணி என எல்லோரும்
பிரச்சாரம் செய்து கொண்டிருக்க , நாமும்
அனைவரும் நம்பிக் கொண்டிருக்க,

உண்மையாகவே  புதிதாகச் சேர்க்கப்பட்ட
வாக்காளர்கள் மத்தியில் அவர்களைக்
குழப்பும் நோக்கில், அந்த  வாக்காளர்களே
மிகச் சிறிய எண்ணிக்கையாயினும்
முடிவு மாறக்  காரணமாய் இருப்பார்கள்
என்கிற வகையில்

எல்லா கட்சிகளும் மோசம்
புதிய சிந்தனை புதிய பாதை
என்கிற சாக்கில் மிகச் சாதுர்யமாக
சீமான் அவர்களை வைத்து ஆளும் கட்சி
செய்த திருவிளையாடலே  திராவிட
முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெறாமல்
போனதற்குக் காரணம் என்றால் அது மிகையில்லை

ஏனெனில் புதிதாக இணைக்கப்பட்ட
இளம் வயதினர் நிச்சயமாக அ.இ.அ.தி.மு.க விற்கு
ஓட்டளிக்க வாய்ப்பே இல்லை

விஜயகாந்தும்.வை.கோ அவர்களும் மீம்சில்
பட்டபாடு அவர்கள் மீது அவர்களுக்கு
பூரண நம்பிக்கையில்லை என்பதையே
தெளிவாக்க காட்டியது

அதை விடுத்தால் அவர்களுக்கு
ஸ்டாலின் அவர்களே நம்பிக்கையூட்டக் கூடியவாராய்
இருந்தார் ( கலைஞர் நிச்சயம்  இல்லை
அன்புமணி அவர்கள் அந்த ஓட்டைக் கவரவே
நடை உடை பாவனைகளில் அதிகம் முயன்றாலும்
பா.மா.க மீது பூசப்பட்டிருக்கும் ஜாதிச் சாயம்
அவர்களை ஒட்ட விடவில்லை )

யாரும் மிகக் கவனம் கொள்ளாத அந்தப்
பகுதியை மிகக் கவனமாகக் கையாளும் விதமாக
ஆளும் கட்சி செய்த திருவிளையாடலே
நாம்தமிழர் கட்சியின் தனித்த போட்டி

அவர்கள் கணக்கு சரியாக வந்தது
என்பதற்கு கீழ்க்குறித்த தேர்தல் முடிவுகளே
அத்தாட்சி )

மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில்
திராவிட முன்னேற்றக் கழகம் வாய்ப்பிழந்த
கீழ்க்குறித்த தொகுதிகளில் நான் தமிழர் கட்சிப்
பெற்ற வாக்குகள் இருந்தாலே தி. மு. க
வென்றிருக்கும்

1 ) ஆவடி 2 )பெரம்பூர் 3 )விருகம்பக்கம்

4 )திருப்போரூர் 5)கிணத்துக்கடவு 6 )கரூர்

7 )காட்டுமன்னார் கோவில் 8 )பேராவூரணி

9 )கோவில்பட்டி 10 )ஒட்ட்டப்பிடாரம்

11 )தென்காசி  (காங் ) 12 )ராதாபுரம் 13 ) சிவகாசி

இன்னும் கொஞ்சம் கவனமாகக் கணித்தால்

13 )மதுரவாயல்  14 )மொடக்குறிச்சி

15 ) சிதம்பரம்

உண்மையாக பழம் தின்னவர் தமிழரின்
தன்மான வுணர்வினைத் தட்டி எழுப்புவதாக
நாடகம் போட்ட சீமான் தான்

கொட்டையைத் தின்னவர்கள் தான்
பாவம் மக்கள் நலக் கூட்டணியினர்

(அலசல் தொடரும் )

தேர்தல் அலசல்-- முடிவுக்குப் பின்

ஜெயித்தால் மக்கள் அரசியல்    
தெளிவு பெற்றுவிட்டார்கள்
தோற்றால் மதுவுக்கும் பணத்திற்கும்
அடிமையாகி விட்டார்கள் எனப் பேசுவது
ஒருவகையில் போதையில் பிதற்றுவதைப்
போலத்தான்

ஓட்டுப்போடாதவர்களுக்கு முதல்வராக
அவர்களது சர்வ அதிகாரப்போக்கு
மிகத் துரிதமாக செயல்படவேண்டிய நேரத்தில்
செயலின்மை,எதிர்காலம் குறித்த நீண்ட நோக்கில்
திட்டமிடாது ஓட்டுக்கான குறுகிய நோக்கில்
திட்டமிடுதல் செயல்படுதல்,அரசு நிர்வாகத்தில்
வெளிப்படைத்தன்மை இன்மை,
மது விற்பனைப் பெருக்கதின் மூலமே அரசை
நிர்வகிக்க முயல்வது போன்ற பல
காரணங்கள் இருந்தாலும்

இதையும் மீறி கலைஞருக்குப் பதில்
இவரே தேவலாம எனச் சொல்லும்படியாக
பெரும்பாலான மக்களுக்கு ஒரு எண்ணம்
இருப்பதே இந்தத் தேர்தலின் முடிவாக
எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது

ம. ந. கூட்டணி  சோதனை முயற்சியாக
மாற்று அரசியலுக்கு முயன்றது கூட
நல்ல முயற்சிதான்

ஆனாலும் கூட கூட்டணியின் ஒருங்கிணப்பாளராக
வை. கோ செயல்பட்டவிதம், முதல்வர் வேட்பாளரான்
விஜயகாந்த அவர்கள் நடந்து கொண்ட விதம்
மக்களுக்கு அந்த அணியின் மீது நம்பிக்கை
ஏற்படுத்தவில்லை என்பதையே
இந்தத் தேர்தல்  முடிவுகள்
திட்டவட்டமாகக் காட்டிவிட்டது

சீமான் தன் பலம் அறியாது
கொஞ்சம் ஓவராகக் கூவி விட்டார்

மருத்துவர் அன்புமணி அவர்களின் தேர்தல்
அறிக்கைகளும்  பிரச்சாரங்களும்
கொஞ்சம் கவனிக்கும்படியாக இருந்தது
என்றாலும் அவர் கட்சியின் மீது
விழுந்துள்ள ஜாதிப் பூச்சைக் கடக்க
இன்னும் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்

நிச்சயமாக தி. மு. க பொறுப்பான
எதிர்க்கட்சியாகத் திகழும்

அதற்காகத்தானே மக்கள் இத்தனை
அதிக இடங்களைக் கொடுத்துள்ளார்கள்

வென்றவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Wednesday, May 18, 2016

தேர்தல்... கிழக்கில் ஒளி

"வரப்புயர "
எனச் சொல்லிப் பின்
அதன் காரணமாய்
நீர் உயரும்
நெல் உயரும்
குடி உயரும்
கோன் உயரும்
எனச் சொன்ன
ஔவையைப் போல்

"மது ஒழிய "
நிச்சயம்
அதன் காரணமாய்
மடி ஒழியும்
மடிமை ஒழியும்
மடமை ஒழியும்
மிடிமை ஒழியும்

அதற்காகவேனும்
அதற்காக மட்டுமேனும்

அடர்ந்த இருள்
இன்றோடு
விலகி ஒழியட்டும்

கிழக்கில் ஒளி
மெல்ல எழுந்துப்
படர்ந்து விரியட்டும்

( மடி--நோய்,,மடிமை ..சோம்பல்
மடமை  ..அறியாமை
மிடிமை...வறுமை
வார்த்தைகளுடன் சிநேகம்
கொள்ளும் நோக்குடனும் )

Tuesday, May 17, 2016

ஓட்டுக்காக வாக்களித்து ஒய்யாரமாய் பதவியேற்கும்.....

மெல்லப் பணிவாய் நுழைந்து
பின் மென்னியை பிடிக்கும்
சாகசப் பிசாஸை

குடல் கருக விட்டு
மெல்ல உடல் கருக வைக்கும்
மாய அரக்கனை

தவறென்ற மனச்சாட்சியை
மெல்ல மெல்ல நிறம்மாற்றும்
மாய மோகினியை

திரவமாய் உட்புகுந்து
நெருப்பாய் உருமாறும்
கொள்ளிவாய்ப் பிசாஸை

இலைஅகற்றி கிளைவெட்டி
"படிப்படியாச்" சாய்த்தலென்பது
கனவு விருந்து

வேரறுத்து வென்னீர் ஊற்றி
"உடன் "அடியோடழித்தலே
வீரிய மருந்து

நண்பனுக்காகத் துவங்கி
தனியாகக் குடிக்கும்
 "குடி " அடிமையாயினும்

ஓட்டுக்காக வாக்களித்து
ஒய்யாரமாய் பதவியேற்கும்
"எந்த " அரசாயினும்

மனதில் இதை ஏற்றலே
"உய்யும் " வழிமட்டுமல்ல
நிலைக்கும் வழியும் கூட

Monday, May 16, 2016

தேர்தல்...... ஒரு மொய்க்கணக்கு

இருபது பேருக்கு ஒருவர் என்கிற கணக்கில்
பணம் பட்டுவாடாவை
கட்சிதமாய்
ஒரு கட்சி செய்தது
உலகிற்கே தெரிந்தது

பாவம் தேர்தல் கமிஷன்

கொடுப்பவனும் பெறுபவனும்
கூட்டணி வைத்திருக்கையில்
அது என்ன செய்ய இயலும் ?

வடிவேலுவை மிஞ்சும் வகையில்
மீம்ஸுக்கு தீனி கொடுத்த
"கேப்டன்"
கடைசி ஒருவாரம்
நார்மலாய் இருந்தது
ஆச்சரியமளித்தது

இது முதலில் இருந்து
இருந்திருக்குமானால்
இன்னும் சில தொகுதிகள் கிடைக்க
வாய்ப்பிருந்திருக்கும்.

தொண்டன் நிதானமிழக்கலாம்
தலைவன் நிதானம் இழப்பின்
தோல்வி நிச்சயம்

உலக அரசியல் பேசும் வை. கோ
அதை அறிந்திராதது
ம. ந. கூ, யின் துரதிஷ்டம்

நல்லவேளை
விவசாயிகளைக் கவர
தலையில் பச்சைத் துண்டு கட்டியவர்

இளைஞர்களைக் கவர
பர்முடாஸ் போடாதது
நம் அதிர்ஷ்டம்

சிம்லாச் சூழலில் தானிருந்து
ஊட்டிச் சூழலில்
வேட்பாளர்களை வைத்து
பாலையில் மக்களை வைத்து
" தாய்க்குத் தான் தெரியும் "
என வசனம் பேசியது
உட்சபட்சக் கொடூரம்

அப்படியும்
பெரும்பாலோர்  வாக்களித்திருக்கும்
தன்மையது புரிந்துத்  தெளிய
ஒரு திறந்த மனம் வேண்டும்

இனியேனும்
உப்பரிகையிலிருந்து
வீதி அளத்தல் விட  வேண்டும்

தோழர்கள் இனியெனும்
பிறர் முதுகு தேடி
காத்திருக்கும் நேரத்தில்
கொஞ்சம்
நடைப்பயிற்சிப் போய்
கால்களுக்கு
வலுவேற்ற முயற்சிக்கலாம்

ஒரு வேட்டி காய
பத்து நிமிடம் எனில்
பத்து வேட்டி காய
நூறு நிமிடமென்னும்
சதவீதக் கணக்கை நம்பும்
முட்டாள்தனைத்தை இனியேனும்
விட்டுத் தொலைக்கலாம்

புத்திசாலித்தனான
கூடுதல் செலவிலான
விளம்பர யுக்திகளுக்கோ

அவர்கள்  மீது கொண்ட
அவர்கள்  சொன்ன
சலுகைகள் மீது கொண்ட
ஈர்ப்பினாலோ அவர் களுக்கு
அதிக ஆதரவென்பதில்லை

எல்லாம்
மனக் கசப்பில் மாறி விழுந்தவை
என்பதை மட்டும் மறவாதிருந்தால்
உதய சூரியனின்
வெற்றிப் பயணம் தொடரும்

இல்லையேல்
அடுத்ததுஅவர்களும்
"அஸ்தமனத்தைச் சந்திப்பதைத் தவிர
வேறு வழி இல்லை


(பெரிய கவர்களை பிரித்து
எண்ணி இருக்கிறேன். சிறு கவர்களை
இனி பிரிக்க உத்தேசம்
உங்கள் மொய்க்கணக்கையும் பதியலாமே
ஆவலுடன் எதிர்பார்த்து )