Tuesday, February 28, 2012

பாவப்பட்ட ஆண்டிகள்

தன்னையொத்தவர்கள்
தன்னருகில் இருக்கக் கூட
அதிர்ஷ்டம் வேணுமோ ?

சிறுவயதில் கிராமத்தில்
தன் வீட்டுக்கு எதிரே
பண்ணையார் வீடிருக்க
தன் வீடு குடிசை போல் தெரிய
நொந்துதான் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த ஓட்டுவீடு
கண்ணில் படவே இல்லை

படித்து முடித்து
அரசு வேலைக்குப் போய்
குடியிருப்பில் குடியேற
அடுத்த வீடாய்
அதிகாரியின் வீடாய் அமைய
வெறுத்துப் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவன் வீட்டுக்கு எதிரிலிருந்த
தன்னொத்த வீடு
சரியாகத் தெரியவில்லை

முப்பது ஆண்டு கால சேமிப்பில்
சொந்தமாய் ஒரு வீடு கட்டி முடிக்க
நேர் எதிரே ஒரு அரசியல்வாதி
வீடுகட்டித் தொலைய
மனமொடிந்து போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த
அறு நூறு சதுர அடி வீடு
வீடாகவே தெரியவில்லை

எல்லாம் முடிந்து
சுடுகாட்டில் புதைத்துத் தொலைக்கையில்
ஒரு புறம
ஒரு ஐ.பி. ஸ் அதிகாரியின் சமாதியும்
மறுபுறம்
உள்ளூர் சேர்மன சமாதியும்
கம்பீரமாய் எழுந்து நிற்க
இரண்டாம் முறை
செத்தே போனான ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு எதிர் இருந்த
சமாதி மண்மேடு
சமாதியாகவேப் படவில்லை

முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் எனும்
 ஒருசிறு படிப்பினையை அறியாததால்
ஆண்டி பாவம்
வாழும் போதும்
மகிழ்ச்சியாய் இல்லை
பாவம் ஆண்டி
இப்போது செத்துப் புதைத்தும்
நிம்மதியாய் இல்லை

பாவம் பாவப்பட்ட ஆண்டிகள்


Sunday, February 26, 2012

காதல் கடலில் படகே ஊடல்


ஆண்
 :
அகில உலகும் சுத்திப் பாத்தேன்
அகிலா போல பொண்ணே இல்லை
உலகம் முழுசும் தேடியும் பாத்தேன்
ஷகிலா போல ஃபிகரே இல்லை
சல்லடை போட்டு அலசியும் பாத்தேன்
ஷண்முகி போல சிக்கவே இல்லை-அட
என்னவோ சொல்லுநீ பொண்ணை விட்டா
பூமிக்கு அழகு இல்லவே இல்லை

வீதி வீதியா சுத்தியும் பாத்தேன்
விமலா போல பொண்ணே இல்லை
மாடி வீடா போயும் பாத்தேன்
மாலா போல  அமையவே இல்லை
கோவில் குளங்கள் சுத்தியும் பார்த்தேன்
கமலா போல கிடைக்கவே இல்ல-நீ
ஆயிரம் சொல்லு பொண்ணு போல
அழகு உலகில் எதுவுமே இல்லை

பீச்சு பூங்கா அலசியும் பாத்தேன்
பாமா போல பார்க்கவே இல்லை
பீட்சா கார்னர் போயும் பார்த்தேன்
பமீலா போல யாருமே இல்லை
நாத்து நடுகிற வயலும் போனேன்
நமீதா போல எவளுமே இல்லை-யாரும்
மாத்திப் பேச வழியே இல்லை
பொண்ணை விட்டா உலகே இல்லை


பெண்
 ;
செக்ஸ் கதைகள் நாலு ஐஞ்சு
எனக்கும் கூட தெரியும் மச்சான்
சிக்ஸ் பேக் உடம்புக் காரன்
மூனு பேரைத் தெரியும் மச்சான்
அத்தை ம்கனே அர்ச்சுனன கூட
என்னைக் கேட்டு தவமாய் கிடக்கான்
மொத்த பொண்ணையும் கனவிலே பாரு-நான்
ஊரு போரேன் உருப்படா மச்சான்

செக்கு மாடு போல என்னை
தினமும் சுத்தி வார மச்சான்
கிக்கு கொஞ்சம் ஏறிப் போனா
திமிரும் கொஞ்சம்  ஏறுமோ மச்சான்
மத்த பொண்ணை நினைச்சு நாயாய்
நாடு பூரம் சுத்தும் மச்சான்-உன்
ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்-உன்னை
விட்டுப் போறேன் விளங்கா மச்சான்

ஆண்
 :
மேலே சொன்னது எல்லாம் டூப்பு
போதை செஞ்ச எடக்கு மடக்கு
நீயே எனக்கு என்றும் டாப்பு
வைச்சுப் புடாதே எனக்கு ஆப்பு
கையைக் காலாய் நெனைச்சுப் புட்டேன்
கண்ணில் நானும் ஒத்திக் கிட்டேன்
போதைச் சனியனை விட்டும் புட்டேன்-என்னை
விட்டுப் புடாதே அழிஞ்சித் தொலைப்பேன்

இருவரும்

குஞ்சு உடம்பில் கோழி மிதித்து
காயம் இதுவரை வந்ததே இல்லை
அன்பு கொண்டோர் கொள்ளும் பிணக்கில்
வன்மம் அதற்கு வாய்ப்பே இல்லை:
வாழ்வில் காதல் கடலைப் போல
அதிலே ஊடல் படகைப் போல
தாழ்வோ உயர்வோ சேர்ந்தே இருப்போம்
வாழ்க்கைக் கடலை எளிதாய்க் கடப்போம்

 (ஒரு பபூன் வேஷம் கட்டும் நண்பருக்காக
மேடையில் பாடி ஆடி நடிக்க வென எழுதிக் கொடுத்தது
ஆணை சு.பானா கெட்டப்பிலும் பெண்ணை
கோவை சரளா கெட்டப்பிலும் கற்பனை செய்து
எழுதியது )


Saturday, February 25, 2012

டியூப் லைட் படைப்பாளியும் தடாலடி வாசகனும்

எப்போதும் மூன்று விஷயங்களை
தனித்தனியாகச் செய்யும் என் நண்பன்
இன்று ஒன்றாய்ச் செய்திருந்தான்

"என்ன விஷேசம் " என்றேன்

"ஒரு கிடாவெட்டு " என்றான்
மது வாடை குப்பென அடித்தது 

"சரி வரட்டுமா " என்றேன்

"உன்னிடம் பேசத்தான்
செட்- அப் பாக வந்திருக்கிறேன்
நீ போனால் எப்படி " என்றான்

அவன் பேசவில்லை
மப்பு  பேசுகிறது எனத் தெரிந்து கொண்டேன்

இந்த நண்பன் என்னோடு பள்ளி
இறுதி வகுப்புவரை தொடர்ந்து வந்தவன்
அப்போது அவனுக்கு வந்த காதலினால்
படிப்பையும் வாழ்வையும் குட்டிச் சுவராக்கி
கொண்டவன் .எழுதுபவ ன் எல்லாம் எல்லாம்
தெரிந்தவன் என்றோ அல்லது இப்படிப்
பேசினால் தானும் எல்லாமும் தெரிந்தவன்
என எண்ணிக்கொள்வார்கள் என  எண்ணியோ
என்னை சந்திக்கிறபோதெல்லாம் இப்படி
"பெண்களின் முடிக்கு     இயற்கையில் மணமுண்டா "
என்பது மாதிரியான ஏதாவது ஒரு
அசட்டு பிசட்டான கேள்வியை வைத்திருப்பான்
நானும் வார இதழ்களில் தாடி மீசை மற்றும்
பட்டை அடித்துக் கொண்டு வாராவாரம்
 பசு மாட்டுக்கு எந்தக் கிழமையில் எது கொடுத்தால்
செத்த மாமனார் சொர்க்கத்தில் சந்தோஷமாகச்
சாப்பிடுவார் என்பதற்கு பதில் சொல்லும்
ஆன்மிகப் பெரியவர் போல எதையாவது
நான்தான்  அதாரிட்டி போலச் சொல்லிப் போவேன்
அவனும் மகிழ்ந்து போவான் '

அது மாதிரித்தான் இன்றும் பிடித்துக் கொண்டான் 

  அவனே தொடர்ந்தான்
" முதலில் கிடாவெட்டுக்குத் தயாராக
ஒயின்ஸ் போனேன்அங்கே குடி குடியைக்
கெடுக்கும் எனப் போட்டிருந்தது
படித்துவிட்டு ஒரு ஃபு ல் போட்டேன்.
கரி சூப்பரா இற்ங்கிச்சு.செமிக்க வெத்தலை பாக்கு
போடப்போனா புகையிலை விளம்பரத்திலே
புகையிலை புத்து நோயை வரவழைக்கும்ன்னு
போட்டிருந்தது.அதைப் படிச்சுப் பாத்து ஒரு
பொட்டலம் வாங்கிப் போட்டேன்.இதோ இந்த
சிகரெட் விளம்பரத்திலே புகைபிடித்தல் கேடுன்னு
போட்டிருக்கு.படிச்சுட்டு ஒன்னு பத்தவச்சிருக்கேன்
ஏனப்பா இப்படியெல்லாம் எழுதி வைக்கிறாங்க
எழுதறதுல என்னப்பா பிரயோஜனம்  "என்றான்

அவன் சுற்றி வளைத்து எங்கு வருகிறான் எனத்
தெரிந்தது

" எந்த எழுத்தைச் சொல்றே.அதுல இருக்கிறதயா
இல்லை நாங்கள் எல்லாம் எழுதறதையா " என்றேன்

"இரண்டையும்தான் "என்றான் நக்கலாக

இவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை
இந்த எழுதுவது குறித்து எனக்கே குழப்பம்
இதனால் பயன் இருக்கிறதா அல்லது நம்மை
உயர்த்திக் காட்டிக் கொள்வதற்காக நாமும்
கஷ்டப்பட்டு அடுத்தவரகளையும் கஷ்டப்-
-படுத்துகிறோமாஎன்கிற எண்ணமும்
எனக்கு    பல நாட்களாக உண்டு

இந்த நிலையில் இவனுக்குஎப்படி பதில் சொல்வது
அல்லது எப்படித் தப்பிப்பது என
யோசித்துக் கொண்டிருந்தேன்

நல்லவேளையாக ஆபத்பாந்தவனாக  என நண்பன்
மணி எதிரே சைக்கிளில் வந்து நின்றான்
அவன் எங்கள் இருவருக்கும் ஒரு வருடம் சீனியர் .
அவன் எழுதுவதில்லையென்றாலும் வாசிப்பில் அதிக
ஆர்வம் உள்ளவன்

அவன் எடுத்த எடுப்பில் என்னைப் பார்த்து
லேசாக கண்ணடித்துவிட்டு " அதிகமாக மது வாடை
அடிக்கிறதே யார் குடித்திருக்கிறீர்கள் ?
தூரே இருந்து பார்க்கையில்
இருவரும் குடித்துப் பேசுவது போலத்தான் பட்டது
குடித்திருப்பவர் சைக்கிளில் ஏறலாம்
வீட்டில் விட்டு விடுகிறேன் " என்றான்

நண்பன் சட்டென குரலை உயர்த்தினான்
"இப்போது பிரச்சனை குடிப்பது
குடிக்காம இருப்பது பத்தி இல்லை
பேச்சை மாற்றாமல்  நீயாவது பதில் சொல்லு
இவன் முழிக்கிறான் " எனச் சொல்லி மீண்டும்
ஏற்கெனவே சொன்னபடி "கிடாவெட்டுக்கு
ஒயின்ஸ் போனேன் ".. எனத் தொடர்ந்து
பேச ஆரம்பித்துவிட்டான்

மணிக்கு நிலைமை புரிந்து போனது
"தம்பி நீ கேட்கிற கேள்வி பெரும் கேள்வி
இதற்கு பதில் சொல்லும் அளவு
நான் அறிவாளி இல்லை ஆனாலும்
தீயணைப்புத் துறையில் நான் வேலைக்குச்
சேர்ந்தபோது ட்ரைனிங்கில் ஒரு விஷயம் சொல்லிக்
கொடுத்தார்கள் அதை வேண்டுமானால்
சொல்கிறேன் " என்றான்

போதை நண்பன் சப்தம் போட்டு சிரிக்கத்
துவங்கினான் " அப்ப நீயும் போட்டுகிட்டுத்தான்
வந்திருக்கையா எதையோ கேட்டால்
எதையோ சொல்கிறாயே " என்றான்

"எல்லாம் தண்ணி  சம்பத்தப்பட்டதுதானே
போதையேறவும் தண்ணி வேணும்
தீ அணைக்கவும் தண்ணி வேணும்
முதலில் நான் சொல்றதைக் கேளு
அப்புறம் உன் கேள்விக்கு பதில் தேடுவோம் "
எனச் சொல்லிவிட்டுசொல்ல ஆரம்பித்தான்

"முதலில் தீ பிடித்த வீட்டுக்குப் போனவுடன்
அந்த வீட்டில் உயிருடன் எவரும் உள்ளே
மாட்டிக் கொண்டிருக்கிறார்களா எனப்
பார்க்கச் சொல்வார்கள் இல்லையெனில்
உயரிய பொருட்கள் எதுவும் இருந்தால்
அதை மீட்கச் சொல்வார்கள்.
அதுவும் இல்லையென்றால்
எரிகிற வீட்டைவிட தீ பரவாமல்
பார்த்துக் கொள்வதில்தான்
அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என
சொல்லிக் கொடுத்தார்கள்  "
எனச் சொல்லி சிறிது நிறுத்தி பின் போதை
நண்பனை உற்றுப் பார்த்துவிட்டு "எந்த பயனும்
அற்றதை காப்பதை விட வேறு பயனுள்ளவை
எரிந்துவிடாமல் காப்பதில்தான் அதிகம் கவனம்
கொள்ளவேண்டும் எனபதைத்தான் பால பாடமாகச்
சொல்லிக் கொடுத்தார்கள்" என்றான்

"என் கேள்விக்கு பதில் சொல்லாமல்
வேறு எதையோ சொல்கிறாயே " என்றான்

"  அவசரப்படாதே  ஒவ்வொன்னா
சொல்லிவாரென்  " என சைக்கிளை
ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு விவரமாக்ப்
பேசத்துவங்கினான்

"ஒயின்ஸ் கடை வாசலில் ஒயின்ஸ் ஷாப்
என எழுதி இருப்பது குடிகாரர்கள் கடையைத்
தெரிந்து கொள்வதற்காகவும் உள்ளே நுழைந்து
குடித்து மகிழ்வதற்காகவும்தான்

.குடிப்பது உடல் நலத்திற்கு
தீங்கானது  என எழுதி இருப்பது என்பது
குடிக்காதவர்கள் மனதில்
தொடர்ந்து பதியவைத்துக் கொள்வதற்காகவும்
தொடந்து குடிப் பழக்கத்திற்கு
அடிமையாகாமல் இருப்பதற்காகவும்தான்

நல்ல விசயங்களைத் தொடர்ந்து
எழுதுவது கூட கெட்டுக் குட்டிச் சுவர்
ஆனவர்களைத் திருத்துவதற்காக இல்லை
நல்லவர்களை தொடர்ந்து நல்லவர்களாகவே
இருக்கவைக்கத்தான் " என்றான்

போதை நண்பனுக்கு இந்தப் பதில்
உடன்பாடானதாகத் தெரியவில்லை       
"இது சரியில்லை உளறுகிறாய்
இன்னும் விளக்கமாகச் சொல்" என்றான்

"சரி சரி அப்படியே இருக்கட்டும் இப்போது
தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு மூன்றுபேரும்
குடித்து பினாத்துவது போல் தெரியும்
நான் இவனை சைக்கிளில் கூட்டிப் போகிறேன்
நாளை விளக்கமாகப் பேசிக் கொள்ளலாம் "
எனச் சொல்லி என்னை ஏற்றிக் கொண்டு
சைக்கிளைக் கிளப்பினான்

நானும் அவஸ்தையில் இருந்து தப்பினேன்
இவன் விளக்கம் என்னுடைய நெடு நாளைய
குழப்பத்திற்கு சரியான பதில் போலவும் பட்டது  

எனக்கென்னவோ வர வர  வித்வானை விட ரசிகனும்
படைப்பாளியைவிட வாசகனுமே எப்போதும்
தெளிவானவர்களாகவும் யதார்த்தவாதிகளாகவும்
 இருப்பதாக மனதிற்குப்படுகிறது


Thursday, February 23, 2012

மீண்டும் ஒரு காதல் கவிதை

பல்லவி கிடைத்த புலவன் போல
பாடிக் களிக்கிறேன்-பந்தய
எல்லையைத் தொட்ட வீரன் போல
தாவிக் குதிக்கிறேன்
கருவிழி பார்த்த பார்வை ஒன்றில்
கவிழ்ந்து போகிறேன்-உன்
ஒருமொழி கேட்ட கணத்தில் நானும்
கவிஞன ஆகிறேன்

நிலவு கூட நெருங்கி வந்து
சொந்தம் கொள்ளுதே -சோலை
மலரும் கூட மணந்து எனக்கு
பந்தம் என்குதே
மனது கூட எல்லை கடந்து
எங்கோ பறக்குதே-அடக்
கனவு போல கவிதை நூறு
தானாய் சுரக்குதே

உணவை நீரை மறுத்த உடலும்
சக்தி கொள்ளுதே -உன்
நினைவு ஒன்றே போதும் என்று
மனதும் சொல்லுதே- உன்
நினைவும் கனவும் கலந்த நிலையில்
சொர்க்கம் தெரியுதே -அந்த
நிலையில் உதிர்க்கும் உளறலை உலகம்
கவிதை என்குதே

பொன்னும் பொருளும் கோடி வந்து
என்னைச் சேரலாம்- இந்த
மண்ணே என்னை மன்னவ னாக்கி
மகிழ்ந்தும் போற்றலாம்-உன்
மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு
இவைகள் ஈடாமோ-அந்தத்
துடிப்பைச் சொல்லும் கவிதை இதற்கு
என்றும்  நிகராமோ

Wednesday, February 22, 2012

புரியாத பேரதிசயம்


அவன் குழந்தையும்
அவள் குழந்தையும்
அவர்கள் குழந்தைகளோடு
அளவளாவி மகிழ்வது
அவர்களுக்கு அதிசயமேயில்லை
நமக்குத்தான் அதிசய்ம்

ஆயினும்
பத்தாண்டுக்கு முன் எனினும்
முறையற்ற பாலியல் தொடர்புகொண்டவன்
பொதுவாழ்வில்
எத்தனை உயர் பதவியிலிருந்தாலும்
சகித்துக் கொள்ளாது
பதவி நீக்கம் செய்யத் துணிவது
அவர்களுக்கு அதிசயமேயில்லை
நமக்குத்தான் அதிசயம்

மனதால் மட்டுமே நினைத்திருந்தும்
வேரொருவனை மணக்க நேரின்
கற்பிழந்தவளாக கருதப்படுதலும்
ஒருவனுக்கு ஒருத்தி என்பதே
உன்னதக் கோட்பாடாகக் கொள்வதுமே
நமது பண்பாட்டு
இது அவர்களுக்கு அதிசயமே
நமக்கு இது அதிசயமேயில்லை

ஆயினும்
பட்டப் பகலில் கொட்டடித்து
விபச்சாரி வீட்டுக்குப் போனாலும்
ஊரறிய உறவறிய
இரண்டு மூன்று
வீடு வைத்துக் கொண்டாலும்
வேறு தகுதிகள் இருப்பின்
தலைவனாக்கி கொண்டாடுதல் என்பது
நமக்கு அதிசயமேயில்லை
ஆயினும் உலகிற்கு
இது ஒரு பேரதிசயமே

Monday, February 20, 2012

நிஜமல்ல கதை

இன்னும் இன்னுமென பசியில்
குடல் ஆவலுடன் துடிக்கையில்
விஷத்தையே உணவாய் ஊட்டி

இன்னும் இன்னுமென அறிவு
வெறியுடன் தேடித் திரிகையில்
குப்பையை முன்னால் பரப்பி

உடலையும் மனத்தையும்
விஷமிருக்கும் கூடாக்கி
செரிமானமாகாது பின் அது
கக்கித் தொலைக்கையில்தான்

வெந்துச் சாகிறோமோ ?
 மனம் நொந்து வீழ்கிறோமோ ?

"அழகானவர்கள் என்றால் கெட்டவர்களா
அதைவிடக் கொஞ்சம்
சுமாரானவர்கள்தான் நல்லவர்களா"
என்றாள் என் பேத்தி

"அப்படி இல்லையே யார் சொன்னது " என்றேன்

"சும்மா கேட்டேன் " என்றாள்

நானும் விட்டுவிட்டேன்

"கலெக்டர் ஆனாலும்
வீட்டிலும் ஊரிலும் முட்டாளாகத்தான் இருப்பார்களா
அலுவலகத்தில்தான் புத்திசாலிகளா " என்றாள்

அப்படியெல்லாம்  கிடையாதே யார் சொன்னது
அவர்கள் எப்போதும் புத்திசாலிதான் "என்றேன்

பின் ஒரு நாளில் இப்படிக் கேட்டாள்
"நல்லவர்கள் எல்லாம் கடைசி நாள்வரை
கஷ்டப்படுகிறார்களே
தீயவர்கள் எல்லாம் கடைசி ஒரு நாள் மட்டும்
கஷ்டப்படுகிறார்களே
நாம் ஏன் நல்லவர்களாக இருந்து
எப்போதும் கஷ்டப்படவேண்டும் " என்றாள்

துளித்துளியாய் விஷமேற்றும்
அந்த மாயப் பெட்டியின் அற்புத வேலைதான்
இது என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது

பள்ளிச் சூவினிற்குள் தேளிலிருப்பதை
கவனியாது மாட்டிவிட்டு
சட்டையின் தூசிதனைப் பாசமாய்த்
 தட்டித் துடைத்துவிடும்
பாசமிக்க தாயினைப் போல்

நல்ல பள்ளி
நல்ல சூழல்
நல்ல நண்பர்கள் எல்லாம்
வெளியிலே பாடாய்ப் பட்டுத் தேடிக் கொடுத்து
வீட்டுக்குள் மட்டும் விஷக்காற்றை
பரவவிட்டுக் கொண்டிருப்பதை
அப்போதுதான் அறிந்து தொலைத்தேன்

அவளின் எதிகாலம் கருதி
இப்போதெல்லாம் அபத்தத் தொடர்களை
நாங்கள் அடியோடு பார்ப்பதில்லை

முட்டாள் பெட்டி சொல்வதெல்லாம்
நிஜமல்ல கதை என்பதனை
நிஜமாக அந்தப் பிஞ்சு உள்ளம்
தெளிவாகத தெரிந்து கொள்ளும் வரை
நாங்கள் இப்போதெல்லாம்
கதையல்ல நிஜம் கூட
கண்விழித்துப் பார்ப்பதில்லை

Sunday, February 19, 2012

முடிவு தெரியாக் கதைகள்

எல்லோருமே கால்கேட்டிலும் குலோஸ்-அப்பிலும்
முதலில் துவங்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் இல்லை
என்னைப்போல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய
பெரும்பாலோர் அனேகமாக கோபால் பல்பொடியில்
துவங்கியவர்களாகத் தான் இருப்பார்கள்

அது போல இலக்கிய பரிச்சியம் கூட எடுத்தவுடன்
கணையாழியிலோ கசட தபறவிலோ
இருக்க சந்தர்ப்பமில்லை.எல்லோரும் அம்புலி மாமா
கண்ணன் கல்கண்டு குமுதம் ஆனந்தவிகடன்
எனத் தான்துவங்கி இருக்க அதிக வாய்ப்புண்டு
என்னைப் போலவே

அம்புலிமாமா வந்தவுடன் முதலில் நூலகத்தில்
அதைப் படிக்கவேண்டும் என்பதற்காக நான்
ஒரு வாரத்திற்கு முன்பே கொள்ளும் பரிதவிப்பும்
முயற்சியும் இப்போது நினைத்தாலும்
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது

நூலகத்தில் நூலகரின் பழக்கம் வேண்டும் என்பதற்காக
அதிகாலை எட்டு மணிக்கே நூலகம் சென்று
அந்த வருவோர் பட்டியல் பதிவேட்டுக்கு
கோடு போட்டு வைப்பது,பென்சிலை சீவிவைப்பது
கலைந்து கிடைக்கும் மாத வார இதழ்களை
சரியாக அடுக்கிவைப்பது ,அவர் எத்தனை முறை
சொன்னாலும் பியூன் சும்மா உட்கார்ந்திருக்க
பத்து தடவைக்கு மேல்  கடைக்குப்
போய் டீ வாங்கி வரச்சொன்னாலும்
வாங்கி வருவது ஆகிய எல்லாம்
மிகச் சரியாகச் செய்வேன்
அதையெல்லாம்இப்போதுநினைத்துப் பார்த்தாலும்
சிரிப்புத்தான் வருகிறது
.
இத்தனையும் செய்து முடித்தாலும்
நூலகர்  தபாலில் வந்தவுடன் அந்த தபாலைப்
பிரிக்க மாட்டார்.ஒரு நாள் இரண்டு நாள்
அதுஅவர் டேபிளிலேயே அப்படியே கிடக்கும்
நான் கேட்டாலும் " கொஞ்சம் பொறு என்ட்ரி
போடாவிட்டால் விட்டுப் போகும்  " என
வெறுப்பேற்றுவார்.இத்தனை இடர்கள் இருந்தாலும்
அந்தப் புதுப் புத்தக வாசனையோடு முதலில்
படிப்பதுவும்  அடுத்தவர்கள்  படிக்கும் முன்பாக
படித்த கௌரவத்தில் என்னொத்தவர்களிடம்
கதை சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதுவும்
இப்போது  நினைத்துப் பார்த்தாலும் ,
அது ஒரு  இனி பெறவே முடியாத
அரிய சுகமாகத்தான் படுகிறது

இந்தச் சுழலில் ஒரு மாத அம்புலிமாமாவை
இப்படி புதுவாசனைச் சுகத்தோடு படித்துக்
படித்துக் கொண்டிருந்தேன்.கதை இப்படிப் போனது

ஒரு கிராமத்தில் விவசாய வேலை செய்யும்
தன் கணவனுக்கு அவள் மனைவி தினமும்
மதிய சாப்பாட்டிற்கு பழைய சோறு கொண்டு போவாள்
அவர்கள் வயல் சுடுகாட்டை ஒட்டி இருந்ததால்
பேய் பிசாசு அதிகம் என்பதால் அவைகள்
சாப்பாட்டை  மட்டும் தனியாக வைத்துக்
கொண்டு போனால் எடுத்துச் சாப்பிட்டுவிடும்
என்பதால் தினமும் சாப்பாட்டுத் தூக்கில்
சாப்பாட்டின் மேல் அடுப்புக்கரியோ அல்லது
தேய்ந்த லாடமோ அல்லது இரும்பு ஆணியோ
வைத்துக் கொண்டு போவாள்
அப்படிக் கொண்டு போனால் பேய் சாப்பாட்டைத்
தொடாது என அவள் மாமியார்  அவளுக்கு
சொல்லிக் கொடுத்திருந்தாள்
இவளும் தவறாது  அப்படியே செய்து வந்தாள்

ஒரு நாள் ஏதோ அவசரத்தில்  எல்லாம் சரியாக
வைத்திருக்கிறோம் என நினைத்து பழைய சோற்றை
மட்டும் தூக்குப் போணியில் வைத்துவிட்டு
ஆணியோ கரியோ தேய்ந்த லாடமோ
வைக்காமல்  வந்து வயலில் பக்கம் உள்ள
மரத்தடியில்  வைத்துவிட்டு அவளும்
 வயலில் இறங்கி வேலைபார்க்கத்
துவங்கிவிடுகிறாள்.

இதுவிஷயம் தெரிய வர ஒரு சுதாரிப்பான  பேய்
தூக்கைத் திறந்து பழைய சோற்றை
முழுவதுமாக தின்று விடுகிறதுஅந்தக்
கருவாட்டுத் துண்டுக்கும் பழைய சோற்றுக்கும்
இருக்கிற ருசியை சப்புக்கொட்டிசாப்பிட்டுவிட்டு
அப்படியே மதி மயங்கிப் போகிறது.இந்தப் பழைய
சோற்றுக்காகவாவது இவர்கள் வீட்டில்
வேலைக்காரியாகக்  கூட  சேர்ந்து விடலாம்
என்கிற முடிவுக்கு அந்தப் பேய் வந்து விடுகிறது

பாவம்.இதுவிவரம் எதுவும் இந்த இரண்டு பேருக்கும்
சுத்தமாகத் தெரியாது.அவர்கள் வேலை முடித்து
கைகால் கழுவிக் கொண்டு தூக்கைத் திறந்தால்
தூக்கில் ஏதும் இல்லை.மூடி திறந்து கிடக்க
சுற்றி பருக்கைகள் சிதறி இருக்க  "ஏதோ நாய்தான்
தின்றிருக்கும் ,இனிமேல் கீழே சாப்பாட்டை
வைக்காதே மரத்தில் கட்டித் தொங்கவிடு  " என
கணவன் சொல்ல  மனைவியும் " சரி தப்புத்தான்
இனிமேல் மரத்திலேயே  கட்டிவைத்துவிடுகிறேன் "
என மன்னிப்புக் கேட்டுக் கொள்ள இருவரும்
வீட்டுக்குப் புறப்படுகிறார்கள்.
பழைய சோற்று ருசியில்சொக்கிப் போன பேயும்
ஒரு வேலைக்காரி மாதிரிதெரியும் படியாக
ஒரு உருவம் எடுத்துக் கொண்டு அவர்கள்
பின்னாலேயே சென்று வீட்டைத்தெரிந்து கொள்கிறது

பின் சிறிது நேரம் கழித்து அவர்கள் சாப்பிட்டு
முடித்து சற்று ஓய்வாக இருக்கும் நேரத்தில்
வாசலில் இருந்து வேலைக்காரி
உருவில் இருக்கும் பேய் "அம்மா "
என குரல் கொடுக்கிறது

அவர்கள் வெளியே வந்து  யார் என்ன வேணும்
எந்த ஊர் எனக் கேட்க   "தான் அசலூர் எனவும்
பஞ்சம் பிழைக்க வந்திருக்கிறேன் எனவும்
என்னவேலை சொன்னாலும் செய்வேன்
சம்பளம் கூட வேணாம் வயிறார
பழைய சோறு மட்டும் கொடுத்தால் போதும் "
என்கிறது

இவர்களுக்கு இந்த டீல் ரொம்பப் பிடித்துப் போகிறது
அவர்களும் பாவம் பேய் எனத் தெரியாது
வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்
எவ்வளவு வேலைக் கொடுத்தாலும் கொஞ்சமும்
முகம் கோணாது  தீயாக வேலையைச் செய்து முடிக்கிறது
வம்பு தும்பு இல்லை. பழையசோறு மட்டும்
கொஞ்சம் அதிகமாகத் தின்கிறது என்பதைத் தவிர
வேறு குறை இல்லை.எல்லாம் சந்தோஷமாகவே
போகிறது

ஒரு நாள்அந்த கிராமத்தான் மட்டும்  ஒரு
உறவினர்  வீட்டு விஷேசத்திற்காக வெளியூர்
போகவேண்டி வந்தது.இரவு லேட்டாகத்தான்
வருவேன்எனச் சொல்லிப் போனதால்
முன் பத்தியில் கிராமத்தான் மனைவியும்
உள்ளே தூரே  பின்பத்தியில் பேய் வேலைக்காரியும்
படுத்துத்தூங்கிப் போனார்கள்

நடு ராத்திரியில் கிராமத்தான்
வந்து கதவைத் தட்ட,அவர் மனைவிக்கு
கொஞ்சம் வேலை அசதி. என்வே எழுந்திரிக்கச்
சஙகடப்பட்டு விழித்த படியே படுத்தபடி
 வேலைக்காரப் பேயை கதவைத்திறக்கச் சொல்கிறாள்
,வேலைக்காரப் பேய்க்கும்
அன்று கொஞ்சம் தீனீ ஜாஸ்தி.அதற்கும்
எழுந்து போய்கதவைத் திறக்க
சோம்பேறித்தனமாக இருக்கிறது
வீட்டுக்கார அம்மாள்தான் நன்றாகத் தூங்குகிறாளே
தெரியவாபோகிறது என நினைத்து
 அது  படுத்த இடத்தில் இருந்தே கையை நீட்ட
கை கிராமத்தான் மனைவியின்  தலையைத்
தாண்டி போய் கதவைத் திறந்து விட்டு மீண்டும்
வேலக்காரப் பேய் உடலிலேயே 
சாதாரண கைப் போல் சேர்ந்து கொள்கிறது

கை இருபது அடி நீண்டதையும் திரும்பவும் போய்
சாதாரண கை போல் ஒட்டிக்கொண்டதையும்
நேரடியாகப் பார்த்த கிராமத்தான் மனைவிக்கு
அடிவயிறு கலக்குகிறது,ஆஹா நம் வீட்டிற்குள்
பேய் அல்லவா வேலைக்காரி போல் இருக்கிறது
மோசம் போனேமா என்ன செய்வது எனத்
தெரியவில்லையே என அரண்டுபோய்
மறு நாள் தன் கணவனை த்னியாக அழைத்து
நடந்த விவரத்தைச் சொல்ல
இருவருமே என்ன செய்வதேன்று
தெரியாது முழித்துக் கொண்டிருக்கிறார்கள் .....

இதுவரை படித்துக் கொண்டிருந்தபோது
நூலகர் என்னை அழைத்து கடை வரை
போய் வரச் சொன்னார்.தட்ட முடியவில்லை
நான் படித்த அம்புலிமாம புத்தகத்தை
கூட்டுறவு மஞ்சரி கொல்லிப் பாவை முதலான
யாருமே எடுக்காத புத்தகங்க்களுக்கு அடியில்
ஒழித்துவைத்துவிட்டு கடைக்குப் போய்விட்டேன்
நான கடையில் இருந்துவர மணியும் பதினொன்று
ஆகிவிட நூலகத்தை மூடத் துவங்கிவிட்டார்கள்
அதனாலென்ன மாலையிலே நான்கு மணிக்கு
முதல் ஆளாக வந்து எடுத்துக் கொள்வோம் என
நானும்போய்விட்டேன்

வீட்டுக்குப் போனால் ஒரே அமளி துமளி
என் ஒன்றுவிட்ட்ட பாட்டி ஊரில் இற்ந்துபோய்
விட்டதாகவும் எல்லோரும் இரண்டு மணி டிரெயினுக்கு
கிளம்ப வேண்டும் எனவும் பேரன் என்கிற முறையில்
நானும் தீப்பந்தம் பிடிக்க நானும் வரவேண்டும் எனவும்
என்னையும் கிளம்பச் சொல்லிவிட்டார்கள்
எனக்கு பேயை எப்படி விரட்டினார்கள் எனப்து
தெரியாமல் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது
சரி  நான்கு நாள் தானே வந்து பார்த்துக் கொள்வோம்
அம்புலிமாமா  நூலகத்தில் தானே இருக்கும்
என சமாதான செய்து கொண்டு வேண்டா வெறுப்பாக
 அவர்களுடன் கிளம்பிவிட்டேன்

நான்கு நாள் முடிந்து ஊருக்கு  வந்த்தும் வராததுமாக
மாலையில் நூலகத்திற்குத்தான் ஓடினேன் .
அங்கு போய் நான் வைத்த இடம் n
வேறு எங்கெல்லாம் இருக்கச் சாத்தியமோ
எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன்.
எங்கும் இல்லைநூலகரிடமும்கேட்டுப் பார்த்தேன்.
அவர் " நீ தானேகடைசியில் எடுத்துப் படித்திருக்கிறாய்
அதற்குப் பின் தான் அதைக் காணோம்
நீ எடுத்துப் போகவில்லையே " என  என்னையே
கேள்வி கேட்கத் துவங்கிவிட்டார்
பழி போடுவது கூட போய்த்தொலையட்டும்
அந்தப் பேயை எப்படி விரட்டினார்கள் எனத்
தெரிந்து கொள்வதுதான் என முக்கியமாகப் பட்டது
என் வயதுடைய அம்புலிமமா படிக்கும் எல்லோரையும்
கேட்டுப் பார்த்துவிட்டேன்.யாரும் படிக்கவில்லை எனச்
சொல்லிவிட்டார்கள்.
எங்கள் ஊர்  மதுரையை ஒட்டியகிராமம்
அங்கு பேப்பரே அப்போது கடைக்கு வராது
வீட்டில் போடுவதோடு சரி.எங்கள் தாத்தாவிடம்
மதுரைக்குப் போனால் வாங்கிவரச் சொல்ல
"என்ன தைரியம் இருந்தால் பாடப் புத்தகம்
 படிப்பதைவிட்டுஎன்னையே கதை புத்தகம்
வாங்கி வரச் சொல்கிறாய் "
 எனச் சொல்லி முதுகில் நான்கு போடு போட்டார்

அப்புறம் வளர்ந்த பின்பு கூட எனக்கு எப்படி
அதை விரட்டி இருப்பார்கள் என யூகித்துச் சொல்லும்படி
எனது எழுத்தாள நண்பர்களையெல்லாம் கூடகேட்டு
தொந்தரவு செய்து இருக்கிறேன்

சிலர் என்னை ஒரு முட்டாளைப் பார்ப்பது போல
பார்த்துச் சிரித்திருக்கிறார்கள். பலர் சொன்ன கதை
எனக்கு ஏனோ ஒப்புக் கொள்ளும்படியாக இல்லை

முடிவு தெரியாத நான் முடிவு  தேடித் திரிகிற
 கதைகள் இப்படி இரண்டு மூன்று
என்னிடம் இருக்கத்தான் இருக்கிறது

முடிவு தெரியாமல்  இருக்கிற
வாழ்வின் போக்கைப் போலவே
 இப்படி முடிவு தெரியாது போய்விடுகிற
கதைகள் கூட  உண்மையில்
சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது