Saturday, August 29, 2015

கவிஞனே நினைவில் கொள்ளவேண்டும்

அறியாமைச் சிறையில்
அகப்பட்டிருக்கும் வரையில்
தெளிவின்மையும் குழப்பமும்
தவிர்க்கமுடியாததென்று
அறிவுக்குத் தெரியும்
மனம்தான் புரிந்து கொள்ளவேண்டும்

உடற்கூட்டினுள்
ஒடுங்கிக் கிடக்கத் துவங்கின்
பிறப்பதுவும் இறப்பதுவும்
அனுபவித்தே ஆகவேண்டியதென்பது
ஆன்மாவுக்குத் தெரியும்
அறிவுதான் தெளிவு பெறவேண்டும்

நிற்காது சுழலும்
பூமியினின்று காணும் வரை
உதித்தலென மறைதலென
பொய்யாய் உணரப்படுவோமென்பது
பகலவனுக்குத் தெரியும்
பகுத்தறிவாளரே தெளிவு கொள்ளவேண்டும்

வார்த்தைகளை மட்டுமேநம்பி
பயணம் செய்கிற வரையில்
சிறப்புறவும் நிலைபெறவும்
நிச்சயமாய் வாய்ப்பில்லையென்பது
கவிதைக்கும் தெரியும்
கவிஞனே இதனை நினைவில் கொள்ளவேண்டும்

Thursday, August 27, 2015

தமிழகத்திலும் வியாபம் ?

சமீபத்தில் எனது உறவினர் ஒருவர்
ஏதோ ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு
 அலைந்து திரிந்துஅவதிப்பட்டுக் கொண்டிருந்தார்
எனக் கேள்விப்பட்டேன்

என்ன ஏதென்று விசாரிக்கையில்
 வேலை வாங்கித் தருவதாக
ஒருவர்  பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி
அலைய விடுவதாகச் சொன்னார்கள்

தினமும் இதுபோன்றச் செய்திகள் பத்திரிக்கைகளில்
வருவதால் இது எனக்குப் பெரிய விஷயமாகப்
படவில்லை

ஆனாலும் நம்பிக் கொடுக்கத் தக்க நபராக அந்த
ஏமாற்றியவன் தெரியாததால் எப்படி அவரை நம்பி
பணத்தைக் கொடுத்தீர்கள் எனக் கேட்டபோதுதான்
அவர் ஒரு அதிர்ச்சித் தரும் செய்தியைச் சொன்னார்

ஒரு முன்னாள் மத்திய மந்திரியின் அரசு சார்ந்த
நேர்முக உதவியாளருக்கு தனிப்பட்ட எடுபிடியாக
இருந்த ஒருவர்இந்தபணம் கொடுத்து ஏமாந்தவருக்கு
நெடு நாள் பழக்கமாக இருந்திருக்கிறார்

அந்தப் பழக்கத்தில் ஒருநாள் அந்த ஏமாற்றுப் பேர்வழி
இந்த ஏமாந்தப் பேர்வழியிடம் தேர்வாணையத்திடம்
இருந்து அவர் பெயருக்கு வந்த வேலை
உத்திரவினைக் காட்டி

"நான் நான்காவது  பிரிவில் தட்டச்சருக்கு
பரிட்சை எழுதியது நிஜம்
ஆனால் பாஸாகவில்லை
.நேரடித் தேர்வுக்கும் போகவில்லை
அந்த அமைச்சரின் நேர்முக உதவியாளர் மூலம்
(தற்சமயம் அவர் ஓய்வு பெற்றுவிட்டார் )
கொஞ்சம் பணம் செலவழித்தேன்.
அவர் இந்த வேலைக்கு ஏற்பாடு செய்து
கொடுத்துவிட்டார் " எனச் சொல்லியுள்ளார்

அந்த உத்திரவு உண்மையாகத்தான்
இருப்பதனால் உடன் வேலையில் சேரவும் என
இந்த ஏமாந்தப் பேர்வழிச்
சொல்லியுள்ளார்

அவரும் சென்னையில் ஒரு அலுவலகத்தில்
பணியில் சேர்ந்து மூன்று நான்கு
மாதங்களாகப் பணியாற்றி வருகிறார்

விஷயம் இத்துடன் முடிந்திருந்தால் ஒன்றுமில்லை

அந்த ஏமாற்றுப் பேர்வழி இந்த ஏமாந்தப்
பேர்வழியிடம் "இதுபோல் உனக்குத் தெரிந்தவர்கள்
 யாரும் இருந்தால் சொல்
இவர் முலம் இப்படி எளிதாக அரசு
வேலை வாங்கிவிடலாம் "
என் ஆசை காட்டி வலைவிரித்திருக்கிறார்

வலைவிரித்த விதமும் விழுந்தவிதமும்
 வெகு சுவாரஸ்யம்

(தொடரும் )

Monday, August 24, 2015

புதுகை பதிவர் திருவிழா ( 2 )

பதிவர் ஒவ்வொருவரைக் குறித்தும் தொடர்ந்து
அவரது பதிவுகளைப் படிப்பதன் மூலம்
மிகத் தெளிவாகத் தெரிந்தும்
புரிந்தும் வைத்திருக்கிறோம்

எனவே அவர் குறித்து அவர் மீண்டும்
தன்னை விரிவாக அறிமுகம் செய்து கொள்வதை விட
அவர்தான் இவர் என பெயரையும் அவருடைய
வலைத்தள முகவரியையும்
அறிமுகம் செய்தாலே போதும்

சிலருடைய எழுத்துக்கு சிலர் மானசீக
இரசிகர்களாகவே இருக்கிறார்கள்
அவரை சந்தித்து உரையாடி மகிழவேண்டும் என்கிற
ஆவலோடு சந்திப்புக்கு வருகிறார்கள்

அப்படிபட்டவர்களுக்கு அந்தக் கூட்டத்தில்
அவர்தான் இவர் என்பது தெரியாததால்
தேடிக் கொண்டிருக்கவேண்டியதாய் இருக்கிறது
அவரை மேடையில் அறிமுகம் செய்துவிட்டால்
சந்திக்க விரும்புவர்கள் அவரை உடன் தொடர்பு
கொள்ள வசதியாக இருக்கும்

மற்றபடி பதிவர் தன் பதிவுகள் மற்றும்
பதிவராய் இருப்பதன் நோக்கம்
அதன் மூலம் தான் பெற்ற இன்பம்
மற்றும் நண்பர்கள் என விலாவாரியாகப் பேசத்தான்
வலைத்தளமே இருக்கிறதே

மீண்டும் அதையே சந்திப்பிலும் தொடர்தல்
"கூறியது கூறல் "என்பது மட்டுமல்லாது
பிற நிகழ்வுகளுக்கு குறிப்பாக புத்தக வெளியீடு
சிறப்பு விருந்தினரின் சிறப்புரை முதலான
நேரத்தை விழுங்கிவிடும் சாத்தியமும் உள்ளது

இரண்டாவது நிதிவிஷயம்

சிலர் நிதியைத் திரட்டுவது போல
எளிதான விஷயம் இல்லை என்பார்கள்

பலர் நிதி திரட்டுவதைப் போல
கடினமான விஷயம் இல்லை என்பார்கள்

என்னைப் பொறுத்தவரை இரண்டும் சரிதான் என்பேன்

நோக்கமும் நடத்துபவர்களும் இதற்கு முன்பு
நடந்த நிகழ்வின் தாக்கமும் மிகச் சரியாக
இருக்கும்பட்சத்தில் சிலர் சொல்வது சரி

மாறுபட்டிருப்பின் பலர் சொல்வதுதான் சரி

நாம் எப்போதும் சிலர் சொல்கிறபடித்தான்
மிகச் சிறப்பாக மூன்று பதிவர்கள் சந்திப்பையும்
நடத்தி முடித்திருக்கிறோம்

எனவே நம் போன்று வருடா வருடம் தொடர்ந்து
பதிவர் விழா நடத்துகிற நாம் நிதி விஷயம் குறித்து
ஒரு பொதுவான கருத்தை உருவாக்கிக்
கொண்டால் நல்லது

இந்த விசயத்தில் சென்னைப்பதிவர்கள் சில
மிகச் சிறந்த முன்னுதாரணங்களை ஏற்படுத்திச்
சென்றிருக்கிறார்கள்

உதாரணமாக நிதி வழங்குதல் என்பது கட்டாயமில்லை
விரும்புபவர்கள் தரலாம்

வரவையும் செலவையும் முறையாகப் பராமரித்து
அனைவருக்கும் தெரிவிப்பது

மீதத் தொகை ஏதும் இருப்பின் அடுத்த பதிவர் சந்திப்பு
நடத்த இருக்கிற மாவட்டத்திற்குத்
தந்து உற்சாகப்படுத்துவது

(அந்த வகையில் சென்னைப் பதிவர்கள்
மதுரை பதிவர் சந்திப்புக்கு
நிதி கொடுத்து உதவினார்கள்.மதுரைப் பதிவர்
சந்திப்புக்கு பொறுப்பேற்றவர்கள் இரண்டாவதைச்
சரியாகச் செய்யாததால் மூன்றாவதை இயல்பாகவே
செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் )

இது நீங்களாக நிதி திரட்டுதல் தொடர்பாக
பதிவர்களுக்கு ஏதும் தனித்த சிறந்த கருத்து இருப்பின்
( நிச்சயம் இருக்கும் ) தெரிவித்தால் நிகழ்ச்சிப்
பொறுப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் தானே

வாழ்த்துக்களுடன்..



Friday, August 21, 2015

புதுகை பதிவர் திருவிழா 2015 ( 1 )

ஒரு பேச்சாளர் மேடையேறி
மைக் பிடிக்கும் தன்னம்பிக்கையை வைத்தே
இவர் சிறந்த பேச்சாளரா இல்லையா என்பதை
பெரும்பாலும் அனுமானித்துவிடமுடியும்

அதைப்போலவே ஒரு பெரும் நிகழ்ச்சிக்கு
பொறுப்பேற்கிறவர் நிச்சயம் அவர் மிகச் சிறப்பாகச்
செய்து முடித்துவிடுவார் என்பதை அவர்
செய்கின்ற பூர்வாங்க ஏற்பாடுகளை வைத்தே
மிகச் சரியாக அனுமானித்துவிடமுடியும்

அந்த வகையில் முத்து நிலவன் ஐயா அவர்கள்
தலைமையில் புதுகை பதிவர் திருவிழா
ஏற்பாடுகளைச்செய்யத் துவங்கி இருக்கிற
புதுகை பதிவர்கள் பதிவர் சந்திப்பினை
மிகச் சிறப்பாகச் செய்து முடிக்க பல்வேறு
புதிய முயற்சியினை மேற்கொண்டுவருகிறார்கள்

இருந்தாலும் கூட பதிவர்கள் இதுவரை முடிந்த
பதிவர் சந்திப்பை விட இந்தச் சந்திப்பை
மிகச் சிறப்பான சந்திப்பாக்க ஏதேனும் ஆலோசனைகள்
இருப்பின் அதைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்
என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது
இன்று மதுரையில் அந்தத் துடிப்பு மிக்க பதிவர்கள்
சிலரைப் பார்த்துப் பேசுகையில் புரிந்தது

முதலாவதாக

எப்போதும் பதிவர் சந்திப்பில் மிகச் சரியாகவும்
முறையாகவும் விரைவாகவும் பதிவர்கள்
அனைவரையும் அறிமுகம் செய்வது
ஒரு சவாலான விசயமாகவே இருக்கிறது

என்னுடைய ஆலோசனையாக பதிவர்கள்
தங்களைக் குறித்து அவர்களே அறிமுகம் செய்யாது
மாவட்ட வாரியாக பதிவர்களை மேடையேற்றி
மாவட்டத்தின் சார்பாக யாரேனும் ஒருவர் வரிசையாக
அறிமுகம் செய்தால் சரியாக இருக்கும் என்பது
என்னுடைய கருத்து

ஏனெனில் எப்படித்தான் வலியுறுத்திச் சொல்லியும்
மிக நன்றாகப் பேசவும் தெரிந்த பதிவர்கள்
அவர்களையும் அறியாது கொஞ்சம் கூடுதல் நேரம்
எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள்

அது குறித்து பதிவர்கள் தங்கள் கருத்துக்களைப்
பதிவு செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்
என நினைக்கிறேன்

தொடர்புக்கு
bloggersmeet2015@gmail.com

(தொடரும் )

Wednesday, August 19, 2015

சிரிக்கும் நாளே திரு நாள்

நாலே நாளு நிகழ்வுக்ளுக்காக
நம் வாழ்நாள் எல்லாம்
உழைத்துக் களைக்கிறோம்
என்பதுதான் எத்தனை அவலமானது

இப்போது
எந்தப் பிரசவமும்
இயற்கையானதில்லை
எல்லாமே ஆயுதம்தான்
இதற்கு கால் ஆஸ்தி போகும்

இப்போது
பள்ளிக் கூடங்கள் எதுவும்
கல்விக் கூடங்கள் இல்லை
எல்லாமே கொள்ளைக் கூடங்கள்தான்
இதற்கொரு கால் ஆஸ்தி போகும்

இப்போது
எந்தத் திருமணமும்
மனவிழாவாக இல்லை
எல்லாமே ஜம்பம் காட்டும் பெருவிழாதான்
இதற்கென கால் ஆஸ்தி போகும்

இப்போது
எந்தச் சாவையும்
துக்க நாளென முடிப்பதில்லை
எல்லாமே சடங்கு சம்பிரதாயத் திருவிழாதான்
இதிலிமொரு கால் ஆஸ்தி போகும்

இதிலும் மீறி
மிஞ்சும் ஆஸ்தியை
ஆசையும் ஆடம்பரமும்
கொண்டாட்டங்களும்
துடைத்தெடுத்துப் போகும்

ஆரோக்கியம் விடுத்து
நோய்க்கெனச் செலவழித்தலைப் போல

வாழ்க்கையைக்
கொண்டாடுதலை விடுத்து
கொண்டாட்டங்களையே
வாழ்க்கையெனக் கொண்டதை
என்று மாற்றிக் கொள்ளப் போகிறோம் ?

நாற்றினை வாடவிட்டு
களைகளுக்கு நீர்ப்பாய்ச்சும்
மடமையை என்று ஒழிக்கப் போகிறோம் ?

சிரிக்கும் நாளெல்லாம்
நிச்சயம் திருநாள்தான் என்பதை
வருத்தத்தில் இருக்கும்
எந்தத் திரு நாளும்
நிச்சயம் வெறும் நாளே என்பதை
என்று உணரப் போகிறோம்  ?

Tuesday, August 18, 2015

ஐந்தில் இரண்டேனும் ......

"வயல்வெளி
நாற்றிடை வளர்
களையினைக் காணலும் களைதலும்
எளிதானதைப்போல் அல்லாது

முற்றியக்
கதிருடன் திகழ்
பதரினைக் காணலும் களைதலும்
அரிதாகுதே என் செய்வேன்"
என்றேன்

"மனத்திடை வளர்
கருவதன் குறையதை நிறையதை
காணுகிற அளவு

படைத்திட்ட
படைப்புடன் திகழ்
பதரதை களையதை குறையதை
காணல் அரிதாகிறது என்கிறாய்
அப்படித்தானே "என்றார் குரு

மௌனமாய்த் தலையாட்ட
குருவே தொடர்ந்தார்

" களத்தினில்
கதிரடித்துக் காற்றினில் வீச
பதர் பறக்கும் கதிர்மட்டுமே
உயர்ந்துக் குவியும்

காலக் காற்றினில்
படை ப்பதைத் தூற்ற
குப்பைகள் பறக்கும்
தக்கதே நிலைக்கும் "என்றார்

இப்போதெல்லாம்

போக்கும்வழியறிந்ததால்
 பதர் குறித்து
பதற்றமடைவதில்லை

களையும்  முறைதெரிந்ததால்
களைகுறித்தும்
கவலை கொள்வதில்லை

 நாளெல்லாம்

 கூடுதலாய் விதைப்பது குறித்தும்
அதிக விளைச்சல் குறித்துமே
அக்கறை கொள்கிறேன்

பழுதற்றதாய்
ஐந்தில் இரண்டேனும்
காலம் கடக்குமெனும்
அசையாத நம்பிக்கையோடு

Monday, August 17, 2015

அதிர்ஷ்டக்காற்று

கல்லூரி நாட்களில்
மூன்று மைல் தொலைவிலிருந்த கல்லூரிக்கு
மிதிவண்டியில்தான் செல்வேன் நிதமும்

சில சமயங்களில்
கல்லூரி செல்கையிலோ
திரும்ப வருகையிலோ
"தள்ளுக் காற்று" இருக்கும்

அப்போது
சக்தியும் குறைவாய்ச் செலவழியும்
தூரமும் விரைவில் கடப்பேன்

பலசமயங்களில்
கல்லூரி செல்கையிலோ
திரும்ப வருகையிலோ
"எதிர்க்காற்றே "அதிகம் இருக்கும்

அப்போதெல்லாம்
சக்தி விரையமும் அதிகம் இருக்கும்
தூரம் கடக்கவும் நேரம் பிடிக்கும்

ஆயினும்
எப்போதும் நான்
காற்றின் போக்கினைக் குறித்து
கவலைகொண்டதில்லை

எப்போதும்
அதற்கு ஏற்றார்ப்போல
என்னை தகவமைத்துக் கொள்வதிலேயே
அதிகக் கவனம் கொள்வேன்

அதிர்ஷ்டம் துரதிஷ்டம் குறித்து
கவலை கொள்ளாது
அன்றாடம் என் பயணத்தைத்
தொடர்வதைப் போலவே....