Saturday, January 12, 2013

பதிவுகளும் பதிவர்களும்

பதிவெழுத்தினை நாட்குறிப்பு எனச்
சொல்ல முடிவதில்லை
ஏனெனில் அதில்
அந்தரங்களைப் பதிவு செய்வதில்லை
ஆயினும் அந்தரங்கங்களின்
சாரத்தைப் பதிவு செய்வதால்
இது நாட் குறிப்பினும் மிகச் சிறந்ததே

பதிவர்களின் பெரும்பாலோரின்
கவிதைகளை  கவிதைகள் எனச்
சொல்லமுடிவதில்லை
ஏனெனில் பதிவர்கள்
எதுகை மோனை சீர் செனத்திக்காக
அதிகம் மெனக்கெடுவதில்லை
ஆயினும் அவர்கள் சமூக நோக்கத்திலும்
கருத்தின் ஆழத்திலும்
அதிகம் கவனம் கொள்வதால்
பதிவர்களின் படைப்புகள்
கவிதையினும் அதிகச் சிறப்புடையதே

பதிவினை ஊடகம் என்றும்
வகைப் படுத்த இயலவில்லை
ஏனெனில் ஊடகம் போல அதிக வீச்சும்
ஜனரஞ்கத் தன்மையும் இல்லை
ஆயினும் சுயக் கட்டுப்பாடும்
ஒரு நொடியில் உலகைச் சுற்றி வரும் தன்மையிலும்
உடனுக்குடன் எதிர்விளைவுகளை
உண்டாக்கிப் போகும் திறத்தாலும்
பதிவுகள் ஊடகத்தினும் உயர்வானதே

பதிவர்கள் ஊடக எழுத்தாளர்களைப் போல
பிரபல்யமானவர்கள் இல்லை
ஆயினும் ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு நேர் எதிரானவர்களாய் இருப்பதால்
பதிவாளர்கள்  ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

(பதிவுலக சகோதர சகோதரிகளுக்கு
இனிய பொங்கல்  திரு நாள் நல்வாழ்த்துக்கள் )

Friday, January 11, 2013

நம்மவரை வாழ்த்துவோம் வாருங்கள்

Add star


நாடக உலகில் தன்னை நன்றாக மெருகேற்றிக் கொண்டுதிரை உலகில் பல சானைகள் நிகழ்த்துகிற கலைஞர்களைப் போலபதிவுலகில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுபதிப்பக உலகிற்குள் வெற்றி வீர்ர்களாய் நுழைகிற"நம்மவர்கள்  " இப்போது பெருகி வருகிறார்கள்
பதிவர்கள் சந்திப்பில் முதன் முதலாக தனது அருமையானகவிதை நூலை வெளியிட்டு முத்திரை பதித்த கவிதாயினி சசிகலா அவர்களைத் தொடர்ந்துபுத்தகக் கண்காட்சியில்
 கவியாழி கண்ணதாசன் அவர்கள்"அம்மா நீ வருவாயா அனபை மீண்டும் தருவாயா "என்கிற அருமையான கவிதை நூலை வெளியிட இருக்கிறார்கள்
இவரிடம் போனால் நல்லவிதமாக நாலு வார்த்தை சொல்வார்என நம்பி பெரியவர்களிடம் நல்ல நாளில் ஆசி பெறுதலைப் போன்றேஅல்லது முழுவதும் படித்து விட்டுத்தான் கருத்தினைச் சொல்வார்என்கிற நம்பிக்கையிலோ கவிதாயினி சசிகலாவைத் தொடர்ந்துகவியாழி அவர்களும் தன்னுடைய கவிதைகளை எனக்குஅனுப்பி என்னுடைய கருத்தினைக் கோரி இருந்தார் 
மன்னர் வருகையின் முன்னால் " ராஜாதி ராஜ ராஜ கம்பீரராஜ  மார்த்தாண்ட ராஜகுல திலக "என மன்னரின்அருமை பெருமைகளைச் சொல்லிப் போதல்தானேசிறப்பு மற்றும் நமது மரபும் கூட. அந்த வகையில்அவருடைய கவிதைகளுக்கு  நான் அளித்த வாழ்த்துரையைஇங்கே பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன்அவர் மென்மேலும் பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுகவி உலகுக்கு மட்டுமின்றி பதிவுலகிற்கும் பெருமை சேர்க்கவேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
"கவிஞன் என்பவன் உணர்வுப்பூர்வமானவன்
அவன் கதாசிரியனைப் போல தனது கதாபாத்திரத்தையும்
சூழலையும் ஊதி ஊதிப் பெரிதாக்கி தான் சொல்லவேண்டிய
கருத்தை காது சுற்றி மூக்கைத்தொடுபவன் இல்லை

கவிஞன் நெத்தியடியாய் மனதோடு மட்டும்
 பேசக் கூடியவன்தனது கருத்தைச் சாதிக்கவேண்டும் என்பதற்காக கட்டுரையாளரைப்போல வாதத்தின் திறனையும் அறிவையும்  
வால் பிடித்துத் திரிபவன் இல்லை
இந்த இரண்டு விஷயங்களையும் மிகத் தெளிவாகத்
தெரிந்திருப்பதனால்தானோ என்னவோ 
கவியாழி அவர்களின்கவிதைகளில் சுற்றி வளைத்துப் 
பேசுபவையும்தேவையற்ற விளக்கங்களும் அறவே இல்லை 
தீமைகளைச் சாடுவதில் உள்ள புயல்போன்ற
 வேகமாகட்டும்மனிதாபிமானம் கொள்ளுமிடங்களில் 
கொள்ளுகிறமயிலிறகின் மென்மையாகட்டும் 
அவை வரிந்துதிணிக்கப் படாமல் இயல்பாகவே 
அமைந்து விடுவதேஅவரது கவிதைகளின் சிறப்பு
ஒரு சராசரி மனிதன் கவிஞனாக பிறப்பெடுக்கவேண்டும்
 எனில்அவன் காதலிக்கத் தெரிந்தவனாக இருக்கவேண்டும்,
காதலிப்பவனாக இருக்கவேண்டும்

 இன்னும் சிறப்பானகவிதைகள் அவனிடம் இருந்து 
வரவேண்டும் எனில்அவன் காதலில் தோற்றவனாக 
இருக்கவேண்டும் என்பார்கள்

கவியாழி அவர்கள் அப்படித் தோற்றவராகத் 
தெரியவில்லையாயினும்அவரது கவிதைகளில் 
சொட்டும் காதல் ரசம்உண்மையில்படிப்பவர்களை
 பிரமிக்கச் செய்வதோடுஇதுவரை காதல் உணர்வு
 கொள்ளாதவர்களையும்நிச்சயம் 

காதல் செய்யத் தூண்டும்அவரது கவிதைத் தொகுப்பில்
 இந்த மூன்று சுவைகளும்அதிகமாக விரவிக் 
கிடந்தாலும் நவரசங்களுக்குக் குறைவில்லை

பாயாசத்தில் முந்திரி என்றால் பொறுக்கி எடுக்கலாம்
அனைத்துமே முந்திரியெனில்அப்படியே தட்டோடு 
தருதல்தானேஅறிவுடமை,

எனவே தனித்தனியாக கவிதை வரிகளை
தேர்ந்தெடுத்து விளக்கிக் கொண்டிராமல்  
அவரது கவிதைகளைப்படித்து யான் பெற்ற  இன்பத்தை 
முழுமையாக  நீங்களும் பெறுவதோடுமேலும் 
கவியுலகுக்கு இன்னும் சிறப்பான பங்களிப்பை 
கவியாழி அவர்கள்தர வாழ்த்த வேணுமாய் 
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் "


அன்புடன் 
ரமணி

மறை பொருள்

புரிகிறபடி மிகத் தெளிவாகச்
சொல்லப்படுபவையெல்லாம் கவனமின்மையால்
மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்படாதுபோக
புதிராக  துளியும் புரியாதபடி
சொல்லப்படுபவைகள்தான்
கூடுதல் கவனத்தால்
அதிகமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனவோ ?

பட்டப் பகலில் வெட்ட வெளியில்
தெளிவாகத் தெரிபவையெல்லாம்
நம் கவனத்தைக் கவராது போக
நடுஇரவில்  கரிய இருளில்
மின்னித் தொலைக்கும் ஏதோ ஒன்று
கூடுதல் ஆர்வத்தால் தான்
நம் கற்பனையை அதிகம் தூண்டிப் போகிறதோ ?

அண்டசராசரங்களாயினும்
அதைப் படைத்ததாக நம்பப்படும் பேரறிவும்
நம் புரிதலுக்கும் கொஞ்சம் தள்ளியே நின்று
முழுமையாய் வெளிக்காட்டாது இருப்பது கூட
அவரவர்கள் தகுதிக்கேற்பவும் முயற்சிக்கேற்பவும்
தன்னைப் புரிந்து கொள்ளட்டும்
அதுவே சரியான புரிதலாய் இருக்கும் எனும்
முடிவான எண்ணத்தில் தானோ ?

Wednesday, January 9, 2013

ஊழினை உட்பக்கம் காணல்


காலச் சுற்றினுள்
அடங்காது தனித்து நிற்கும்
ஒரு தினத்தில் வாழ்ந்து பார்க்கவும்
அதன் காரணமாய் காலம் கடக்கவும்

உடல் கூட்டை
உடைத்து வெளியேறும் உயிர்பறவையை
ஒரு நொடியேனும் விழியால் காணவும்
அதன் மூலம் அழிவினை அழிக்கவும்

அண்ட சராசரங்களை
இம்மி பிசகாது இயக்கும் அந்த மாயக் காரனை
கை குலுக்கிப் பாராட்டி மகிழவும்
அவன் மூலமாகவே அவனை அறியவும்

பல காலம்
முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருப்பினும்
நாம் நம்பிக்கையை இழந்தா நிற்கிறோம் ?

வர்ணங்களையே
நீர்த்துப் போகச் செய்யும்
அழகிய ஓவியம் படைக்கத் தெரிந்த
ஓவியர்களாகிய நமக்கு

வார்த்தைகளையே
அர்த்தமற்றதாக்கிப் போகும்
வண்ணக் கவிதைகள் படைக்கத் தெரிந்த
கவிஞர்களாகிய நமக்கு

கற்பனைகளையே
அதிஅற்புத  படைப்புகளாக
உரு கொடுத்து அனுபவிக்கத் தெரிந்த
மனிதர்களாகிய நமக்கு

புரியாத புதிர்கள் எல்லாம்
என்றுமேயொரு   பொருட்டா என்ன ?
இன்னும் கொஞ்சம் முயன்றால்
ஊழினையும் உட்பக்கம் காணல்
அத்தனை கடினமா என்ன ?


Tuesday, January 8, 2013

அவரவர் அளவுக்கு

என் நண்பன் தன் மகனை
குச்சியால் விளாசிக்கொண்டிருந்தான்
தடுத்து நிறுத்திக்  காரணம் கேட்டேன்

"எத்தனைமுறை சொல்லியபோதும்
கேட்காது தொடர்ந்து
பக்கத்து பையனிடம்
பேனா பென்சில்
திருடிக்கொண்டு வருகிறான்
நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்

கூடியிருந்த பக்தர்களை நோக்கி
கைகளை மிக உயர்த்தி
"கதவுகளைத் திறவுங்கள்
காற்று வரட்டும் "என்றார்
காவியில் இருந்த இளைய துறவி

தனித்து ஆசிரமத்திருக்கையில்
கதவருகில் இருந்த
ஆத்ம சீடனை நோக்கி
"கதவை மூடிப் போ
அவள் மட்டும் இருக்கட்டும்"ஏன்றார்
ஜாலியில் இருந்த அதே துறவி

தமிழர்களின்
பண்பாடு குறித்து
கலாச்சார பெருமை குறித்து
கோடை மழையென
மேடையில்
கொட்டித் தீர்த்தார்
மக்கள் தலைவர்

கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

Friday, January 4, 2013

பெண்களுக்கான சுதந்திரமும் உரிமையும்

காட்டுக்குள்
வேட்டையாடச் செல்பவர்கள்
உல்லாசச் சுற்றுலா செல்பவர்கள்
முதலில் காடு குறித்த அறிவும்
மிருகங்களின் தடமறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்
காட்டுக்கென பிரத்யேக உடைகளும்
கூடுமானவரையில் இரவுப் பயணம்  தவிர்த்தலும்
மிக மிக அவசியம்

ஏனெனில்
மிருகங்கள் பசி ஒன்றையே
பிரதானமாகக் கொண்டவை
கலை கலாசாரம் பண்பாடு என்கிற
பாசாங்கெல்லாம் அவைகளுக்கில்லை

அதைப் போலவே
நாட்டுக்குள்ளும்
பணி நிமித்தம் செல்லும் பெண்களாயினும்
பள்ளி செல்லும் பிள்ளைகளாயினும்
ஏன் பச்சிளம் பெண் குழந்தைகளாயினும்
முதலில் காடாகிப்போன நாடு குறித்த அறிவும்
இரண்டு கால் மிருகங்களின் வெறியறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்
ஒட்டுமொத்தமாய் மூடிய உடலுடனும்
கூடுமானவரையில் பகலில் பயணித்தலுமே
மிக மிக  நல்லது

எனெனில்
பசியெடுத்தபுலியும்  வெறி பிடித்தசிங்கமும்
பயமின்றி உல்லாசமாய் உலவித் திரிய
பாவப்பட்டஅணிகளும்  பரிதாபக்குருவிகளும்
பதுங்கித் திரிகிற "புண்ணிய பூமியில் "
பெண்களுக்கான சுதந்திரமும்  உரிமையும்
வேறெப்படி இருக்கச் சாத்தியம் ?

Wednesday, January 2, 2013

ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்

செய்யக் கூடாதை செய்து
பாழ்படுத்தியவர்களை விட
செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
என்பதைத் தெளிவாய்ப் இப்புத்தாண்டில் உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம்