Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் எடுக்கும் "விஸ்வரூபம் "

கோரிக்கை விளக்கக் கூட்டங்கள்
பெருந்த் திரள் ஆர்ப்பாட்டங்கள்
பேரணி வேலை நிறுத்தங்கள்
தராத பலனை
ஒரு வன்முறை மிரட்டல்
சாதித்துவிடுமோ . என்கிற எண்ணத்தையும்

மத நல்லிணக்கம் என்பது
பெரும்பான்மையினரின் சிறுமைகளை
எப்படி வேண்டுமாலும் தாக்கலாம என்பதுவும்
சிறுபான்மையினரின் சிறுகுறையினையும்
எந்த வகையிலும்  எந்த நிலையிலும்
சொல்லக் கூடாதோ என்கிற கருத்தினையும்

சகிப்புத்தனமை சகோதரத்துவம்
சமதர்மம் என்பதெல்லாம்
பொதுவானது என்பது
பொய்யானது போலியானது என்பதுவும்
ஒரு சார்பானது என்பதே
உண்மையானதுஎன்னும் நம்பிக்கையையும்

வனத்தோடு  வெறிபிடித்து வாழும்
விலங்குகள் மட்டுமல்ல
நாகரீகம் பேசி
நாட்டில் வாழ்வோரும்
இனத்தோடு இணைந்திருத்தலே
பாதுகாப்பனது என்கிற உணர்வையும்

இப்படி அல்லது அப்படி
இருப்பதே இனி சரியெனவும்
இப்படியும் அப்படியும் என்பதெல்லாம்
இனி கதைக்காகாது என
"மதவாதிகளின்" கூற்று இனி
எடுபட்டுவிடுமோ என்கிற கவலையையும்

கண்டு கொள்ளாது மழுங்கச் செய்யவேண்டிய
 "விஸ்வரூபத்தை "
அதன் வீரியம் அறியாது
விஸ்வரூபமெடுக்கவிட்டு
 நாமே உண்டாக்குகிறோமோ?
துவங்கத் தெரியாது துவங்கி
முடிக்கத் தெரியாது திணருகிறோமோ ?

சகித்துக் கொள்ளக் கூடிய
லேசான அரிப்புக்கு
கொள்ளிக் கட்டையை எடுத்து
சொறிந்து கொண்டு சுகம் காண்கின்றோமோ
பூத்துக் குலுங்கும் சமதர்மப் பூங்காவை
நாமே தீயிடத் துணிகிறோமோ

சிந்திக்கச் சிந்திக்க
 பூதாகாரமாய்விஸ்வரூபமெடுக்கிறது
வாமன விஸ்வரூபமே
இனியும்  எதிர்ப்பென்னும் போர்வையில்
அதனை விஸ்வரூபமெடுக்கவிடுவது
நிச்சயம் அறிவீனமே

Monday, January 28, 2013

மனிதனை விலங்காக்கும் "அது "

நான் அழகு எனச் சொல்லிக் கொள்வது
தற்பெருமை தான்
இருப்பினும்
அது ஒரு பெரும் பிரச்சனை இல்லை

நான் மட்டுமே அழகு என்பதுதான்
பெரும் பிரச்சனை
அது ஆணவம் மட்டும் இல்லை
அனைத்துப் பிரச்சனைகளுக்கும்
அதுவே மூல காரணமும் கூட

நான் அறிவாளி என
பறைசாற்றிக் கொள்வது கூட
பெரும் பிரச்சனை இல்லை

நீ முட்டாள் என அடுத்தவனை
கை நீட்டுவதுதான் பெரும் பிரச்சனை
அதுவே அனைத்து  மன முரணுக்கும்
காரணமாகிப் போகிறது

கடவுள் ஒருவனே என்பது கூட
புரிதலின்மைதான்
ஆயினும் அது கூட
பெரும் பிரச்சனையில்லை

கடவுள் ஒருவனே
அவன் இவன் மட்டுமே என்பதுதான்
அனைத்து சமூகக் கொந்தளிப்புக்கும்
காரணமாகிப் போகிறது

அன்புக்கடிமையாய் சகோதரனாய்
பூமிக்கு அழகு சேர்க்கும் மனிதனை க் கூட
திசை மாற்றிப் போகிறது
அவனை மிருகமாக்கியும் போகிறது


குப்பை முதல் காவியம் வரை

சொல்வதற்கு ஏதுமற்று
சொல்லும் திறனுமற்று
சொல்லிச் செல்ல முயலுகையில்
 அது"குப்பை"யாகிப் போகிறது

சொல்வதற்கு  நூறிருந்தும்
சொல்லும் திறனின்றி
சொல்லி விட  எத்தனிக்கையில்
அது"கூளம் "ஆகிப் போகிறது

சொல்லுகிற திறமிருந்தும்
சொல்வதற்கு ஏதுமற்று
சொல்லிவிடத் துடிக்கையில்
அது"மொக்கை"யாகிப் போகிறது

சொற்திறத்தின் சிறப்போடு
கருப்பொருளும் உடனமைய
சொல்லிச் செல்ல முனைகையில்
அது"படைப்பாகிப் "போகிறது

ஆயினும்
பயனதனைப் பண்பாகக்
கொள்ளுகின்ற படைப்பொன்றே
காலம் கடக்கவும் செய்கிறது
அதுவே
"காவிய "மாகியும் போகிறது


Wednesday, January 23, 2013

கடுங் காஃபியும் கமலஹாஸனும்

காபி டிகாக்ஸனைப் போல
பல உண்மைகள் கசப்பானவைகளே
அதிலும்
நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மைகள்
அதீதக் கசப்பானவைகளே

பாலைப் போல
பெருகும் கற்பனைகள் ருசியானவைகளே
அதிலும்
யதார்த்தம் தொடாத கற்பனைகள்
அதிக ருசி கொண்டவைகளே

சர்க்கரையைப் போல
மகிழ்வூட்டும் சுவாரஸ்யங்கள் சிலிர்ப்பூட்டுவைகளே
அதிலும்
கிளுகிளுப்பூட்டும் சுவாரஸ்யங்கள்
அடி மனம் தொடுபவைகளே

நுனி நாக்கில் கசப்பினை நிறுத்தாத காஃபியை
சிலர் காஃபியென ஒப்புக் கொள்வதில்லை
சமூகத்தை புரட்டிப்போட முயற்சிக்காத
எந்தப் படைப்பினையும்
சிலர் படைப்பென ஏற்றுக் கொள்வதில்லை

அந்தச் சிலர் இப்போது வெகு சிலரே

பலராக  அந்தச் சிலர் பரவிப்பெருகும் வரை
பாலையும் சீனியையும் அதிகம் கூட்டி
காஃபியின் கலரை மட்டும் காட்டி
கல்லாக் கட்டுதலே இன்று பிழைக்கும் வழி
படைப்பாளிகள் விழிமூடி ஓடி
காலம் காலமாய் தொடர்ந்து நிலைத்த வழி

உலக நாயகனே

இந்தச்  சிறு மொழியை இனியேனும்
தெளிவாய்அறியா முயல்வாயா ?
உன் பங்காளியைப் போல்
மாயத் திரையுலகில் இனியேனும்
பிழைக்கும் வழியை அறிவாயா?


Tuesday, January 22, 2013

ஞானம் பெற எளிய ( ? ) வழி

தேவைகளை
எவ்வளவு சுமக்க முடியுமோ
எவ்வளவு குறைக்க முடியுமோ
அவ்வளவு குறைத்தபடி

சேர்த்தவைகளை
எவ்வளவு  இழக்க முடியுமோ
எவ்வளவு விலக்க முடியுமோ
அவ்வளவு விலக்கியபடி

நினைவுகளை
எவ்வளவு மறக்க முடியுமோ
எவ்வளவு துறக்க முடியுமோ
அவ்வளவு துறந்தபடி

அறிந்தவைகளை
எவ்வளவு எரிக்க முடியுமோ
எவ்வளவு புதைக்க முடியுமோ
அவ்வளவு புதைத்தபடி

திசைகளை
எவ்வளவு கடக்க முடியுமோ
எவ்வளவு  தகர்க்க முடியுமோ
அவ்வளவு தகர்த்தபடி

குருவற்ற  சீடனாய்
எவ்வளவு  ஓட  முடியுமோ
எவ்வளவு தேட முடியுமோ
அவ்வளவு தேடியபடி

அலைதல் ஒன்றே
உலகில் ஞானம் பெற
எளிய வழியென அறிவோம்
அதனைப் பயில்தலே
உண்மை ஞான நெறியென
அறிந்து தெளிவது கொள்வோம்

Saturday, January 19, 2013

பயணங்களும் அனுபவங்களும்-1

எப்படியும் அடிக்கடி திருமலை செல்கிற வாய்ப்பு
எனக்கு ஏற்பட்டுவிடும்.இந்தமுறை
அண்ணன் மகன் திருமணம்
திருமலையில் நடப்பதற்கு ஏற்பாடாகி இருந்ததால்
நாங்கள் குடும்பத்துடன் சென்றிருந்தோம்.

நான் ஏற்கெனவே  அங்கு ஒரு வாரம்
தங்கி இருந்து சேவா செய்தவன் என்கிற முறையில்
திருப்பதியின் நடை முறைகள் அத்துப்படி.எனவே
வெங்கடேஷனை தரிசிக்க மிகச் சரியான
திட்டமிடுதலுடன் செல்ல வில்லையெனில்
அதிக நேரம்காக்க வேண்டியிருக்கும்
என்பதால் அதற்கான பதிவுகள் எல்லாம் செய்து
மிகச் சரியாகப் போய் தரிசித்து வந்தேன்.

ஆயினும்
கூடுதலாக பிரசாத லட்டுகள் பெறுவது நாங்கள்
தொட்ர்ந்து புனே செல்ல ரயில் பிடிக்க
வேண்டி இருந்ததால்அத்தனை சுலபமாக இல்லை.
கிடைத்த லட்டுடன்புறப்பட்டுவிட்டாலும் கூட
பூனே மற்றும் பாம்பேஉறவினர் இல்லங்களுக்குச்
செல்கையில் எப்படிபிரசாதங்கள் இல்லாமல்
செல்வது என்கிற குழப்படி
இருந்து கொண்டே இருந்தது

சரி எப்படியும் இருப்பதில் சமாளித்துக் கொள்வோம்
 என நினைத்து திருமலையில் இருந்து
திருப்பதி செல்லும்பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டோம்.
ஆனாலும்அனைவருக்கும் கொடுக்கும்படியான
பிரசாதங்கள் வாங்கி வராதது கொஞ்சம்
மனச் சங்கடமாகவே இருந்தது

நான் அமர்ந்திருந்த சீட்டுக்கு அருகே
வட இந்தியர் ஒருவர் கையில் ஒரு
பெரிய பிளாஸ்டிக் பையுடன் அமர்ந்திருந்தார்
பஸ் ஐந்து மலைகளைக் கடந்து இறங்கிக்
கொண்டிருக்கையில்திடுமேன ஏதோ ஒன்று
சறுக்கி என் மடியில்விழுவதை ப் போலிருக்க
 திடுக்கிட்டு விழித்தேன்


நான்கு லட்டுகளுடன் கூடிய ஒரு பை
என் மடியில் இருந்தது.பக்கத்து இருக்கையில்
அந்தவட நாட்டவர் குறட்டைவிட்டுத்
 தூங்கிக் கொண்டிருந்தார்

நிச்சயமாக அவர் விழித்து  எழுந்தாலும் கூட
பையிலிருந்தது விழுந்தது தெரியாத அளவு
பை பெரியதாக இருந்தது.எனவே  நாமே
வைத்துக் கொள்ளலாமா ?
நம்முடைய மனக் குறை அறிந்து வெங்கடேசன்தான்
இப்படி இந்த வட இந்தியர் மூலம் ஏற்பாடு செய்கிறாரா ?
இல்லையெனில் இப்படி மிகச் சரியாக பக்கத்தில்
அமர்ந்தஒருவரிடம் இருந்து லட்டு மட்டும் நமக்குக்
கிடைக்கும்படியானநிகழ்வு நடக்குமா என
எனக்கு சாதகமாக உள்ள அனைத்து
விஷயங்களயும் குரங்கு மனம்
பட்டியலிடத் துவங்கிவிட்டது

ஆனாலும் மனச் சாட்சி மட்டும் இதே நிகழ்வை
அவன் போக்கில்நினைத்துப் பார் .அவன் பிரசாதம்
இல்லாததை இழந்ததைஒரு அபசகுனமாக
நினைத்தால் அந்தப் பாவம்உன்னைத்தான் சேரும் என அறிவுறுத்திக்கொண்டே வந்தது

முடிவாக தவறு செய்வதற்குக் கூட
ஒரு தைரியம் வேண்டும் என்பார்கள்.
அந்தத் தைரியும் இல்லாததாலோ அல்லது
வழக்கம்போல மனச் சாட்சியே இம்முறையும்
வெற்றி கொண்டதாலோ என்னவோ
தூங்கிக்கொண்டிருந்த அவரை எழுப்பி
ஜாடையில் லட்டு விழுந்த விஷயத்தைச் சொல்லி
அவரிடம் அந்தப் பையைக் கொடுத்தேன்

அவர் நன்றி சொல்லும் முகமாக இந்தியில்
 ஏதோ ஒன்றைச் சொல்லிஅதை என்னிடமே
திரும்பக்கொடுத்து அதை வைத்துக் கொள்ளச்
சொல்லிவிட்டு பின்னால் அமர்ந்திருந்த
குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு
கீழே இறங்கிவிட்டார்

இறங்கியவர் ஏனோ திருமலை நோக்கித்
தரையில் விழுந்துஒரு கும்பிடு போட்டபடி
பின் என் பக்கம் திரும்பிப் பார்த்து
பின் திருமலை நோக்கி என்னவோ
 சொல்வது போல இருந்தது

அவர் முகக் குறிப்பை வைத்து நிச்சயம்
அந்தப் பி ரசாத லட்டுகள்அவரைச் சேர்ந்ததில்லை.
அவரும் எப்படியோ கிடைத்து
கொண்டு வந்திருக்கிறார் என புரிந்து கொண்டேன்.

நானும் கெட்டிக் காரத் தனமாக இதை கவர்ந்திருந்தால்
நானும் நிச்சயமிதை இழந்திருப்பேன் என
என் மனச் சாட்சிஅறிவுறுத்திக் கொண்டே வந்தது.

அந்த அறிவுறுத்தல் நம்பிக்கையின் விளைவா அல்லது
மூட நம்பிக்கையின் விளைவா என்கிற குழப்பம் மட்டும்
இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது

Sunday, January 13, 2013

தமிழர் திரு நாளிதன் உட்பொருள்........

விதைத்த  ஒன்றை
நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர்  வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது

இணைந்து இயைந்து
 இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது

அனைத்து இயக்கங்களுக்கும்
 மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது

நம்மிருப்புக்கு காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக  நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது 

ஜாதி மதம் கடந்து
உழைப்பின் பெருமை  சாற்றும்
 தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து  மகிழ்வோம் 
அதன் உன்னதம் காத்து உயர்வோம்

( பதிவர்கள் அனைவருக்கும்
பொங்கல்  திரு நாள்
நல்வாழ்த்துக்கள்  )