Friday, February 14, 2014

தேர்தல் புயல்

எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்
கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும்
வழக்கம்போல்
 மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'

(அடுத்த தேர்தல்  வந்துவிட்டது  ஆயினும்
நிலைமைகள் எப்போதும்போல்தான்  உள்ளது 
எனவே புதிதாக  ஒரு பதிவு  போடாமல் 
பழைய பதிவையே  மிண்டும்  பதிவாகத
தந்துள்ளேன்  )

Wednesday, February 12, 2014

கெட்டிக்காரனும் அரைவேக்காடும்

மிகத் தீவீரமாகச்
செயல்படும்
மிக மிக
மோசமானவனும்

துணிவின்றி
செயல்படத் தயங்கித்
தினம் திரியும்
மிக மிக நல்லவனுமே

நாடு நாளும்
நாசமாக மூல காரணம்

சொல்லும் திறனிருந்தும்
மோசமானதைச் சொல்லிப்
புகழ் பெற விழையும்
"கெட்டிக்காரப்  "படைப்பாளியும்

சொல்லும் பாங்கறியாது
மிகச் சிறந்ததைச் சொல்லி
உலகைத் திருத்த முயலும்
"அரைவேக்காட்டுப்  "படைப்பாளியும்

படைப்புலகை நாளும்
பாழ்படுத்துதல் போலவே

Monday, February 10, 2014

எதிர்மறையே எப்போதும் முன்னே வா.

..பசியே வா
ஊழிக்கால நெருப்பாய்
குடல் முழுதும் பரவி
முற்றாக என்னை எரி
எனக்கு ருசியின் அருமையை
முழுமையாய் ருசிக்க வேண்டும்

பிரிவே வா
இதயத்தோடு
இரண்டறக் கலந்தவைகளையெல்லாம்
கிழித்துத் தூர எறி
நான் அருகாமையின் சுகத்தை
அணுஅணுவாய் ரசிக்க வேண்டும்

பகையே வா
உன் போர்த்தந்திரங்களையெல்லாம்
வெறியோடு பயன்படுத்தி
என்னை நிர்மூலமாக்க முயற்சி செய்
இருக்கும் பலம் போதாது
நான் இன்னும் பலம் பெற வேண்டும்

அஞ்ஞானமே வா
நீர் மறைத்த நிலமாய்
ஞானத்தை என்னிடமிருந்து
முற்றாக மறைத்துவை.
அசுர வெறியோடு தோண்டித் தேடி
நானாக அதை அடைதல் வேண்டும்

எதிர்மறையே வா
பகலுக்கு முன்வரும் இரவாய்
சுகத்திற்கு முன் வரும் துயராய்
எப்போதும் நீயே முன்னே வா
நேர்மறையின் அருமையையும் பெருமையையும்
உனைவைத்தே நான் முழுமையாய்உணர  வேண்டும்

Saturday, February 8, 2014

முக்கா முக்கா மூணுன்னும் சொல்லலாம்

ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய்
பதிவுலகப் பிதாமகரின் சிறுகதை விமர்சனப்
போட்டியில் மூன்றாவது கதைக்கானப் போட்டியிலும்
எனக்கே முதல் பரிசு கிடைத்துள்ளது என்பதைப்
பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-03-01-03-first-prize-winners.html

விமர்சனம் எழுதியது யார் என நடுவருக்குத்
தெரியாதபடி பெயரை எடுத்துவிட்டுதான்
விமர்சனங்களை அனுப்பிவைப்பதாக
ஏற்கெனவே தனது அறிவிப்பில்
திரு வை, கோ அவர்கள் குறிப்பிட்டிருந்தார்

நமக்கும் இதுவரை நடுவர் யார் எனத் தெரியாது

அந்த வகையில் மிக நேர்மையாக நடத்தப்படுகிற
இந்த சிறுகதை விமர்சனப் போட்டியில்
மூன்றாம் முறையாகக் கிடைத்த முதல் பரிசு
எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதோடு தொடர்ந்து
விமர்சனமும் எழுதலாம் என்கிற தைரியத்தையும்
தருகிறது

பதிவுலகில் அதிகமாய் இருக்கிற
சிறந்த  எழுத்தாளர்கள் இனியும் ஒதுங்கி இறாமல்
 இப்போட்டியில்பங்கு கொண்டு போட்டியை  மேலும்
சிறப்படையச் செய்யவேணுமாயும்
அதன் மூலம் பதிவர்கள் அனைவரும்
விமர்சனக் கலையிலும் சிறந்து விளங்க
நல்வழிகாட்டுமாறும்அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இத்துடன் போட்டிச் சிறுகதைக்கான இணைப்பையும்
எனது விமர்சனத்தையும் கீழே தங்கள்
உடனடிப் பார்வைக்காக இணைத்துள்ளேன்

http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html

எனது விமர்சனம்

சுடிதார் வாங்கப் போறேன்

சுடிதார் வாங்கப் போன இந்தக் கதை
எனக்கு மிக அசாதாரணமான ஒரு விஷயத்தை
வேண்டுமென்றே மிகச் சாதாரணமாகச் சொல்லிப்
போனதைப் போலப்பட்டது

ஒருவேளை எனக்குத்தான் இப்படிப்படுகிறதோ
என எனக்குச் சந்தேகம் வந்ததால் என் நண்பனை
ஒருமுறைப்படிக்கச் சொல்லி அவன் கருத்தைச்
சொல்லுமாறு கேட்டேன்

அவனும் எனக்காகப் படித்து" சுடிதார் வாங்கிய
விஷயத்தை விரிவாக எழுதியுள்ளார்.
எழுத்துத் திறமை மிக்க படைப்பாளியாய்
இருப்பதால் நாமும் அவருடன்
இருந்து சுடிதார் வாங்குவதைப் போன்று
உணரவைக்கிறார் "என்றான்

"வேறு எதுவும் தோன்றவில்லையா ?"என்றேன்

"இல்லை " என்றான்

அவன் பதில் எனக்கு ஆச்சரியமளிப்பதாகத்தான் இருந்தது

இந்தக் கதை படிப்பதற்கு முன்னால் இப்படி ஒரு
சூழல் நேர்ந்திருக்குமெனில் "சட்டென உனக்கு
இலக்கிய ரசனை கம்மி என்றோ அல்லது
இன்னும் ஆழமாகப் படித்து பொருள் கொள்ளும்
பக்குவத்தை நீ வளர்த்துக் கொள்ளவேண்டும் "என்றோ
உரிமை கொடுத்த தைரியத்தில் அசட்டுத்தனமாகப்
பேசி இருப்பேன்

இந்தக் கதைப் படித்து நேர்ந்த பாதிப்பில் அப்படிப்
பேசத் தோன்றவில்லை

"மிகச் சரியாகத்தான் சொல்கிறாய் .ஆயினும் இன்னும்
சற்று ஊன்றிப் படித்திருந்தால் இன்றைய வாழ்வில்
நாம் உறவு முறையிலும் நட்பு வகையிலும்
நெருக்கத்தையும் இறுக்கத்தையும் இழந்து வருவதற்கான
உண்மையான காரணம் புரியும் "என்றேன்

அவன் புரிந்து கொள்ள முயல்பவன் போல
ஆர்வத்துடன் என்னைக் கவனிக்கத் துவங்கினான்

நான் தொடர்ந்தேன்
 "ஒரு மூன்று மாமாங்க காலமாக
மிகச் சரியாகச் சொன்னால் திருமணம் ஆனதிலிருந்து
 இன்றுபேரன் பேத்தி எடுக்கிற காலம் வரை
 தன் மனைவியிடம் ஒரு சிறு அங்கீகாரத்தைப்
 பெறுவதற்காக கதை நாயகனிடம்
இருக்கும் பெரும் ஏக்கமும் அதைத் தீர்ப்பத்தற்காக
அவர் செய்து தோற்கும் முயற்சிகளையும்
சேலையை ஒரு குறியீடாகக் கொண்டு மிக மிக
அருமையாக விவரிக்கிறார்.

இத்தனைக்கும் இந்த தம்பதிகள்  இருவரும்
சராசரித் தம்பதிகளைப் போல அல்லாது
ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த அன்பினையும்
 பற்றுதலையும்கொண்ட அருமையான தம்பதிகள்தான்
ஆயினும் ஒருவருக்காக ஒருவர் செய்கிற செயல்களை
அங்கீகரித்துப் பாராட்டும் ஒரு சிறு நற்பழக்கம்
இன்மையால்அவர்களுக்கும் இருக்கும்
அன்னியோன்யம் இருந்தும் வெளிப்படாது
 பூமிக்கடிப் புதையல் போல்
இருப்பதை பூடகமாகச் சொல்லிப் போனது
மிக மிக அருமை

உண்மையில் நம் போன்ற பழைய
 தலைமுறை நபர்களின்பெரிய குறைபாடே
இதுதான்

கதாசிரியர் சேலையையும் சுடிதாரையும்
 மிக மி கஅருமையாக தலைமுறைக்கான
 குறியீடாகக் கொள்வதுதான்
இந்தப் படைப்பின் மிகச் சிறப்பு

மிகச் சரியான சுடிதாரைத் தேடுவதற்கான
அதீத முயற்சிக் கூட அடுத்த தலைமுறையின்
ரசனையை, பண்பை, அவர்கள் வாழ்க்கை முறையை
புரிந்து கொள்வதற்கான முயற்சியும்
தன் தலைமுறை புரிந்து கொண்டு அங்கீகரிக்காத
பாராட்டாத நம் முயற்சியை அடுத்த
 தலைமுறையிடமாவதுபெற்று விட வேண்டும்
என்கிற அதிக ஆவலைச் சுட்டிக்காட்டத்தான்
கதாசிரியர்  அந்தப் பகுதியில்
அதிக கவனம் கொண்டிருக்கிறார் என்பதை
கொஞ்சம் கருத்துடன் படித்தால் புரியும்

நம் தலைமுறையைச் சேர்ந்த
கணவன் மனைவி இருவரும் இருபத்தி நான்கு
 மணி நேரமும்தொட்டுக் கொள்ளும் படியான
நெருக்கத்தில் இருந்தும்
மனதளவில் வெகு தூரம் விலகி இருப்பதும்

படிப்பு பணிச் சூழல் காரணமாக இந்தத் தலைமுறையினர்
இடத்தால் வெகு தூரம் விலகி இருந்தாலும்
மனத் தளவில் மிக நெருக்கமாக இருப்பதுவும்

கஞ்சத்தனமின்றி பாராட்ட வேண்டிய விஷயங்களை
காலம் தாழ்த்தாது மிகச் சிறப்பாக எப்படிப்
 பாராட்டவேண்டுமோ அப்படிப் பாராட்டி
 உரியவர்களை மகிழ்விப்பதோடு அல்லாமல்
தானும் மகிழ்ச்சி கொள்வதும்

இப்படி மூன்றாம் பகுதியில் மிக அருமையாகச்
சொல்லிப்போன விஷயங்களையெல்லாம் நான்
ஒவ்வொன்றாக விளக்கினால் அதிக நேரமாகும் "
என நான் சொல்லி முடிப்பதற்குள் என் நண்பனே
சட்டென என் கையைப் பிடித்து இப்படிச் சொன்னான்

"போதும் போதும்.எனக்கு உண்மையில் இதுவரை
குறியீடுகளைப் புரிந்து கொள்ளுகிற
 பக்குவம் மட்டும் அல்ல
புரியச் சொல்லுகிற விஷயத்தைத் தாண்டி
நாமாகவே புரிந்து தெளியட்டும் என விட்டுச் செல்லும்
விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை

இப்போது நீ சொன்ன விஷயங்களை உள்வாங்கி
இன்னொரு தடவை இந்தக் கதையைப் படித்து
மிகச் சரியாக விமர்சனம் செய்கிறேன் "
என்றான் நம்பிக்கையுடன்

எனக்கும் அவன் நிச்சயம் இனி கதைகளை
புரிந்து படிக்கத் துவங்குவான் மிகச் சரியாகவும்
விமர்சிப்பான் என்கிற நம்பிக்கை எனக்குள்ளும்
துளிர்விடத் துவங்கியது

விமர்சனம் என்பது படைப்பை உதறிக்
காயப்போடுவதும், அலசி உலற வைப்பது
மட்டும் அல்ல

அது வாசகனின் ரசனைத் தன்மையை
உயர்த்துவதும் நல்ல படைப்புகளைத் தேடும்படி
அவனை ஆற்றுப்படுத்துவதும் தான் என்பதை
நிச்சயம் அவன் புரிந்து கொண்டுவிட்டான்
என்றேப் படுகிறது எனக்கு

 உங்களுக்கு ?

Wednesday, February 5, 2014

தலைமையின் பலமும் பலவீனமும்

அந்த முக்கியப் பிரமுகர் கடந்து செல்வதற்காக
எங்கள் வண்டியை ஓரம் கட்டினார் காவலர்
நாங்கள் எரிச்சலுடன் காத்திருந்தோம்

அந்தச் சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய வண்டி
அதற்கான நூற்றுக்கும் அதிகமான
இணைப்பு வண்டிகளுடன் கடந்து செல்ல
அரை மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது

போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விட்டது

போரடிக்காது இருப்பதற்காகவோ அல்லது
நிஜமான சந்தேகத்திலோ
நண்பன் இப்படிக் கேட்டான்
"சமூக வாழ்வில் இத்தனை உயரம் தொட்டு
நம்மை வியப்பிலாழ்த்தும் இவர்கள்
தனி மனித வாழ்வில் ஏன்
சராசரிக்கும் கீழாகக் கிடக்கிறார்கள்
சமூகத்தையே சீர்திருத்து இவர்களுக்கு
தன் குடும்பத்தை சரியாக்கத் தெரியாதா ?"என்றான்

எல்லோரும் அமைதியாக என் முகத்தைப் பார்த்தார்கள்

"இதோ உனக்கான பதில் நடு ரோட்டிலேயே நிற்கிறது "என்றேன்

"புரியவில்லை "என்றனர் கோரஸாக

"இதோ சில நிமிடங்களில்
சீர்கெட்டுப் போன இந்த போக்குவரத்தை
சீர் செய்யும் காவலருக்கு
கார் ஓட்டத் தெரியுமா என்பது கூட சந்தேகமே

ஆயினும்
மற்றவர்கள் முறையாக பயணம் செல்ல
மிகச் சரியாக வழிகாட்டத் தெரியும்
அவருடைய முழுத் திறனையும் அதில் ரசிப்போம்
அவருக்கும்  நம்மைப் போல் கார் ஓட்டத் தெரிந்து
என்ன ஆகிவிடப் போகிறது "என்றேன்

அவர்களுக்கு என் பதில் புரிந்ததாகத் தெரியவில்லை

போக்குவரத்து சீராகிக்  கொண்டிருந்தது

Tuesday, February 4, 2014

கவிதை சிறக்கவும் காலம் வெல்லவும்


நிலையான உறவுக்கும்
நெருக்கமான நட்புக்கும்
பின்னிப்பிணைந்த நெருக்கமும்
மூச்சுவிடாத பேச்சும்
நிச்சயம் தேவையில்லை என்பதும்
இதழ் விரித்த சிறு புன்னகையும்
மனம் திறந்த ஒரு சொல்லும்
போதும் என்பது கூட
உறவும் நட்பும்
உருக்குலைந்த பின்புதான்
புரிந்து தொலைக்கிறது

உறுதியான உறுப்புக்கும்
பலமான உடலுக்கும்
அண்டாச் சோறும்
அடுக்குக் குழம்பும்
அவசியம் தேவையில்லை என்பதும்
சரிவிகித சிற்றுண்டியும்
சத்துள்ள பழவகையும்
போதுமென்பது கூட
குடலும் உடலும்
கெட்டுத் தொலைந்த பின்புதான்
புத்திக்குப் புரிகிறது

ஆனந்த வாழ்வுக்கும்
அமைதியான மனதிற்கும்
வங்கிக் கணக்கில் இருப்பும்
வகைதொகையில்லாச் சொத்தும்
என்றேன்றும் தேவையில்லை என்பதும்
போதுமென்ற மனமும்
ஆரோக்கிய உடலும்
போதுமென்பது கூட
ஏழை எளியவர்களின்
முகம் பார்த்தபின்புதான்
மூளைக்கு உறைக்கிறது

கவிதை சிறக்கவும்
காலம் வெல்லவும்
வார்த்தை ஜாலங்களோ
பாண்டித்திய மாயங்களோ
அவசியத்  தேவையில்லை என்பதும்
எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே
பிரதான மென்பது கூட
ஔவையையும் பாரதியையும்
படித்தறிந்த பின்புதான்
புரியவே துவங்குகிறது

Sunday, February 2, 2014

இரண்டாம் முறைக் கிடைத்த லட்டு

பதிவுலகப் பிதாமகரின்
இரண்டாவது சிறுகதைக்கான போட்டியில்
(தை வெள்ளிக்கிழமை  )
நான் தவறாது விரும்பித் தொடரும் பதிவர்
திருமதி.ராஜலெட்சுமி பரமசிவம் அவர்களுடன்
முதல் பரிசைப் பகிர்ந்து கொள்ள  கிடைத்த
யோகத்தை பெருமையாகக் கருதுகிறேன்

சரியோ தவறோ படைப்பாளியின் கருத்துக்கு
என் கருத்து உடன்பட்டுப் போகிறதோ இல்லையோ
கதையைப் படித்ததும் நான் உணர்கிற கருத்தை
குழப்பமின்றி பதிவு செய்வதால் கிடைத்த
அங்கீகாரமாக இந்தப் பரிசைக் கருதுகிறேன்

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-02-01-03.html

திரு .வைகோ அவர்கள் போட்டிக்கான அறிவிப்பில்
குறிப்பிட்டிருப்பதைப் போல இந்தப் போட்டியில்
கலந்து கொள்வதன் மூலம் ஒரு படைப்பை
ஊன்றிப் படிப்பதற்கான பயிற்சியாகவும்
நமது விமர்சனத் திறனை வளர்த்துக் கொள்ள
ஒரு நல்ல வாய்ப்பாகவும் இந்த சிறுகதை
விமர்சனப் போட்டி இருப்பதால் பதிவர்கள்
அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு
பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இத்துடன் இந்த இரண்டாம் சிறுகதைக்கான
இணைப்பையும் அதற்கான எனது  விமர்சனத்தையும்
இத்துடன் பகிர்ந்துள்ளேன்

http://gopu1949.blogspot.in/2014/01/vgk-02_24.html



எனது விமர்சனம் 



துவங்கியதும் தெரியாது தொடர்ந்ததும் தெரியாது
சட்டென  கனத்துப் பெய்து 
ஓய்ந்த  கோடை மழைபோலவும்...

வளைவுகள் நெளிவுகள் அற்ற ஒரு
நெடுஞ்சாலையில் சட்டெனத் தோன்றி
வேகமாக நம்மைக் கடந்து போகும் ஒரு
அதி வேக அழகியக் கார் சட்டென நம்முள்
ஏற்படுத்திப் போகும் அதிர்வினைப் போலவும் ...

இக்கதை நம்முள் ஒரு எதிர்பாராத 
ஆயினும் ஒரு அழுத்தமான பாதிப்பை 
ஏற்படுத்திப் போகிறது
என்றால் நிச்சயம் அது மிகையில்லை

"ருக்குவுக்கு இடுப்பு வலி எடுத்துவிட்டது " என
எடுத்தவுடன் கதைக் கருவின் கழுத்தை அழுத்தப்
பிடிப்பதற்கு உண்மையில் கொஞ்சம் கூடுதல்
"தில் "தான் வேண்டும்.அது வைகோ சாருக்கு
கூடுதலாக இருக்கிறது என்பதற்கு இக்கதையே சாட்சி

வேறு யாரேனும் இக்கதையைச் சொல்லி இருந்தால்
நிச்சயமாக செக்- அப்புக்கு வருவது முதல் துவங்கி
பின் குழந்தை இல்லாத தம்பதிகளின் மன நிலையை
விளக்கி பின் விலாவரியாக பேரம் பேசுதலை
விவரித்து உச்சக் கட்டமாக பிரசவ வலியெடுத்து
மருத்துவ மனையில் சேர்ப்பது என்கிற வகையில்தான்
யோசித்திருப்பார்கள்.அதுவும் ஒரு சாதாரணக்
கதையாகிப் போயிருக்கும்

நிச்சயம் எத்தனை குழந்தை பெற்றாலும்
எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் பத்து மாதம்
சுமந்து பெற்றவள் நிச்சயம் மனசார தன் குழந்தையை 
விற்கத் துணியமாட்டாள்

இது கதாபாத்திரமாக வருகிற மருத்துவருக்கும்
நிச்சயம் தெரிந்திருக்கிறது.அதனால்தான் குழந்தையை
வாங்க நினைப்பவர்களை வரச் சொல்லிவிட்டு
இவர்களிடம் அவர்களை வரச் சொல்லவா எனக் கேட்கிறார்

குழந்தையைப் பெற்றவர்களுக்கும் குழந்தையை
ஆரோக்கியமாகப் பெற்றுவிட வேண்டும் அதற்காக
மருத்துவர் மூலம் பெற முடிந்த உதவிகளைப்
பெற்றுக் கொள்வோம்,அதுவரை மருத்துவரிடம்
முரண்பாடு வேண்டாம் எனத் தான்  முடிவு
எடுத்திருக்கவேண்டும்.இல்லையெனில் மருத்துவர்
கேட்டவுடன் இருவரும் இப்படி திட்டவட்டமான
பதிலைக் கூறி இருக்க வாய்ப்பே இல்லை

கதை மாந்தருக்கும் தெரிந்த கதைபடிப்பவருக்கும்
புரிந்த விஷயம் கதையை எழுதியவருக்குத்
தெரியாமலா இருந்திருக்கும்.நிச்சயம் தெரிந்திருக்கும்

கதாசிரியரைப் பொருத்தவரை அவர் குழந்தையைப்
பெற்றுக் கொடுக்கும் நிகழ்வினைப் பயன்படுத்திக் 
கொள்கிறாரே ஒழிய அவரது முழுக் கவனமும் 
நிச்சயம் அதில் இல்லை எனவே எனக்குப் படுகிறது

உண்மையோ பொய்யோ தப்போ சரியோ
காலம் காலமாக பண்பாடு ரீதியாக கலாச்சார ரீதியாக
நாம் பல நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறோம்

தப்பிக்கவே முடியாமல் சிக்கிக் கொள்கிற சூழலில்
மிக எளிதாக தப்பித்துக் கொள்ள இது போன்ற
நம்பிக்கையின் மீதான  நம்பிக்கைகள் கை கொடுக்கின்றன

"ஐந்தாவது குழ்ந்தை " "தை வெள்ளிக்கிழமை " என்கிற
சென் டிமெண்டானநம்பிக்கையை தவிர்த்து  
வேறு எந்தக் காரணத்தைஸ் சொல்லி இருந்தாலும் 
அதற்குமருத்துவர் மாற்று ஒன்று சொல்லி இருக்கமுடியும்
இந்த நம்பிக்கைக்கு எதிராக நிச்சயம் அவர்
எந்த வாதத்தையும் வைக்க முடியாது
கதையில் வைக்கவும் இல்லை

எனக்கு இந்தக் கதையின் மையக் கருத்தே
இதுதான் எனப்படுகிறது 

இல்லையெனில் கதை ஆசிரியர் ஐந்தாவது குழ்ந்தை
மற்றும் தை வெள்ளிக் கிழமை என்கிற வரிகளுக்கு
அத்தனை அழுத்தம் கொடுத்திருக்கமாட்டார்.

அந்த வகையில்  நிலாவைக் காட்டி சோறு
ஊட்டுகிற தாயினைப் போல ஏதோ ஒரு
நிகழ்வை  எடுத்துக் கொண்டு தான் வாசகருக்கு
ஊட்ட நினைக்கிற கருத்தினை மிகச் சுருக்கமான
கதையாகச் சொல்லிப்போனாலும் சரியாக சொல்லிப்
போனவிதம் மிக மிக அருமை

அதே சமயம்

கலையை முன் வைத்துவிட்டு கலைஞன்  ரசிகனே
தேடி அறியட்டும் எனச் சொல்கிற மாதிரி
அந்த இரண்டு சொற்களை அத்தனைப் பெரிதாக
உருவத்திலும் நிறத்திலும் அழுத்திச் சொல்லாமல்
படிப்பவர்களே புரிந்து கொள்ளட்டும் என
மிகச் சாதாரணமாகச் சொல்லி இருக்கலாமோ
எனத் தோன்றிய எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை

இருப்பினும் வருடத்தில் வருகிற வெள்ளிக் கிழமைகளில்
தை வெள்ளி மிகச் சிறந்தது என்பதைப் போல
இந்தத் "தை வெள்ளிக் கதையும் " மிகச் சிறந்தது
என்பதை முத்தாய்ப்பாகச் சொல்லித்தான் ஆகவேண்டும்