Saturday, February 20, 2016

ஊரான் வீட்டு நெய்யே.. ......

ஒரு பிரபலமான சோப்புக் கம்பெனியில்
ஒரு பெரும் பிரச்சனை.

சோப்பின் தரம்,சோப்பின் பெயர், மார்கெட்டிங்
எல்லாம்மிகச் சிறப்பாக இருந்தும்,எவ்வளவுதான்
கவனமாக இருந்தும்,இயந்திரத்தில் ஏற்படும்
சில தவறுதல்கள் காரணமாக சில சோப்பு பேக்கில்
சோப்பு இல்லாமல் மார்கெட்டுக்குப் போய்விடுகிறது.

இதனால் ஏற்படும் கம்பெனியின் மெரிட்
குறைவினைச்சரி செய்ய அந்தக் கம்பெனியின்
 உயர் மட்டஅதிகாரிகள் கூடி  விவாதித்து
முடிவுக்கு வந்தார்கள்

அதன்படி சோப்பு முடிவாக பேக் ஆகி செல்லும்
இடத்தில் எக்ஸ்ரே கருவியையப் போன்று ஒரு
கருவியை நிறுவுவதென்றும் அதன் மூலம்
சோப்பு இல்லாத பேக்கைக் கண்டு பிடித்து
எடுத்துவிடலாம் எனவும்,அதற்குச் சில இலட்சங்கள்
செலவாகும் என்றாலும் கம்பெனியின் தரம்
நிலை நிறுத்தப்படும் என்பதால் அந்தச் செலவு ஒரு
பெரிய பிரச்சனையில்லை என முடிவு செய்தார்கள்

அந்த உயர் அதிகாரிகளில் ஒருவர் மட்டும்
எப்போதும்கீழ் நிலை ஊழியர்களிடம் கலந்து பேசி
ஒருபிரச்சனைக்குத் தீர்வு கண்டால் அது
நடைமுறைக்குச் சாத்தியப்பட்டதாக இருக்கும்
என்கிற கருத்துக் கொண்டவர்.

அதனால் எப்போதும் கீழ் நிலை ஊழியர்களிடம்
கேண்டீனில் டீ சாப்பிடுகிற சாக்கில் எப்போதும்
அவர்களுடன் ஒரு சுமுக உறவினையும்
தொடர்பினையும் வைத்திருப்பார்

அதன்படி  மறு நாள் கேண்டீனில் டீ சாப்பிட்டபடி
இந்தக் காலி டப்பா பிரச்சனைக் குறித்தும்,அதற்கு
ஒரு மிஷின் வாங்க இருக்கிற விஷயம் குறித்தும்
மெல்லச் சொல்ல...

ஒரு ஓரம் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த
ஒரு தொழிலாளி

" ஐயா நாங்களும் இது விஷயம் கேள்விப் பட்டோம்
எக்ஸ்ரே மிஷினுக்கு என அத்தனை இலட்சங்கள்
செலவு செய்வதற்குப் பதிலாக , சோப்புபேக் ஆகி
வருகிற இடத்தில் கொஞ்சம் வேகமாக
காத்துவரும்படி ஏற்பாடு செய்தால்
காலி டப்பா விழுந்து விடும்
அதற்கு அதிகம் செலவாகாது.சரியாகச் சொன்னா
ஒரு ஃபேன் செலவுதான் " என்றார்

அந்த அதிகாரி இந்த சின்ன விஷயம் நமக்கு
எப்படித் தோன்றாது போயிற்று எனவெட்கப் பட்டுப்
போனார்

இந்தக் கதை இப்போது எதற்கெனில்..

நமது தமிழ் நாடு அரசு பல ஊதாரிச் செலவுகள்
செய்துஇலட்சம், கோடியென கடன் தொல்லையில்
இருக்கிற நிலையில், தமிழில் பெயர் வைத்தால்
அந்தத் திரைப்படத்திற்கு வரி விலக்கு எனச்
சொல்லி பல இலட்சம் வருவாயை வீணாக்குவதை விட
தமிழ் அல்லாது வேறு மொழியில் பெயர்
இருக்குமானால்கொஞ்சம் வரி கட்டணும் எனச்
சொன்னால் வீண் செலவுகள் குறையுமே

கோடிக் கோடியாய் நடிகர் நடிகையருக்கு
கருப்புப்பணம் கொடுத்து படம் எடுக்கும் நபருக்கு
எதுக்கு மக்கள் பணத்தை வீணாய்க்
கொட்டித் தொலைக்கணும் ?

தமிழில் பெயர் வைப்பதும் நிச்சயம் தொடருமே

இதை  இவர்கள் யோசிக்காததன் காரணம்
தலைப்பில் சொன்னதுதான்......

சிம்மாசனம் அமர்ந்த பிச்சைக்காரன்

 நாட்டு நிலையறிய
ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்திகள்  கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
எதற்கோ ஏங்கித தவிக்கிறது  ?

இருப்பதையெல்லாம்
முற்றாக மறந்துவிட்டு
பறப்பதைப்   பிடிக்கத் துடிக்கிறது  ?

காரணம் அறிந்தவன்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கிறான்

காரண்ம் அறியாதவனே
 சிம்மாசனதிலமர்ந்தும்
 பிச்சைக்காரனாய்  தினம்புலம்பித் தவிக்கிறான் 

Thursday, February 18, 2016

மறை பொருள்

புரிகிறபடி மிகத் தெளிவாகச்
சொல்லப்படுபவையெல்லாம்
அலட்சியத்தால்
கவனமின்மையால்
மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்படாதுபோக

புதிராக  துளியும் புரியாதபடி
 சொல்லப்படுபவைகள்தான்
ஆர்வத்தால்
கூடுதல் கவனத்தால்
அதிகமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனவோ ?

பட்டப் பகலில் வெட்ட வெளியில்
எவ்வித குழப்பமுமின்றி
தெளிவாகத் தெரிபவையெல்லாம்
நம் கவனத்தைக் கவராது போக

நடுஇரவில்  கரிய இருளில்
மின்னித் தொலைக்கும் ஏதோ ஒன்று
கூடுதல் ஆர்வத்தால் தான்
நம் கற்பனையை அதிகம் தூண்டிப் போகிறதோ ?

அண்டசராசரங்களாயினும்
அதைப் படைத்ததாக நம்பப்படும் பேரறிவும்
நம் புரிதலுக்கும் கொஞ்சம் தள்ளியே நின்று
முழுமையாய் வெளிக்காட்டாது இருப்பது கூட

அவரவர்கள் தகுதிக்கேற்பவும்
முயற்சிக்கேற்பவும்
தன்னைப் புரிந்து கொள்ளட்டும்
அதுவே சரியான புரிதலாய் இருக்கும் எனும்
முடிவான எண்ணத்தில் தானோ ?

Tuesday, February 16, 2016

ஆயாசம்

அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தபடி
"கொஞ்சம் சீக்கிரம் 
அடுத்த காரியத்துப் போகவேண்டும் "
அவசரப் படுத்தினார் சாஸ்திரிகள்

"ஜங்ஷனுக்கு அரை மணி நேரத்தில்
போய் விடலாம் இல்லையா"

பக்கத்திலிருந்தவரிடம் பதட்டத்துடன்
கேட்டுக் கொண்டிருந்தார் சித்தப்பா"

ப த்து மணிதான் அதுக்கு மேலே தாங்காது
படபடன்னு வந்திரும்
சாப்பிட்டு மாத்திரை போட்டாகனும் " என
யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார் சம்பந்தி

தூரே மொத்தமாய் நின்றபடி
இன்றைய அரசியல் நிகழ்வு குறித்து
சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தனர்
அலுவலக நண்பர்கள்

"குளத்துத் தண்ணி ரொம்ப மோசம்
வீட்டில் போய் நன்றாகக் குளிக்க வேணும் "என
அவனாகவே முனங்கிக் கொண்டிருந்தான
"அவரின் "  மூத்த மகன்

கண் கலங்கியபடி பேரன் மட்டுமே 
"அதனையே  "பார்த்துக் கொண்டிருந்தான்

"அதுக்கும் " கூட
"அதன்  "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது

அம்மணமானவர்களின் ஊரில்.........

மந்தைகளாய்த் தொண்டர்கள் இருத்தலே
தான் தலைவானாகத் தொடர்வதற்கான
மிகச் சரியான தகுதியென்பதில்
தலைவர் மிகக் கவனமாய் இருந்தார்

அதுவரை எதிரியாயிருந்த அணியுடன்
கூட்டு சேரவேண்டிய அவசியம் குறித்து
அடுக்குமொழியில் மிக அழகாகக்
காரணங்களை  அவர் அடுக்கிப் போக
தொண்டர்கள் "அசந்தே" போயினர்

கரகோஷத்தை எதிர்பார்த்த தலைவருக்கு
அவர்களின் மௌனமான சம்மதம்
சங்கடமளிக்க, அதிர்ச்சியளிக்க,
புரியவில்லையோ என்கிற குழப்பத்தில்
கதை சொல்லி விளக்கத் துவங்கினார்

"நமக்கும் அவர்களுக்கும் இடையில்
கொள்கைகளில் கோட்பாடுகளில்
மாறுபாடு இருக்கத்தான் செய்கிறது\
அது குறையவில்லை
அதை நான் மறுக்கவுமில்லை
ஆனாலும் கூட
பொதுவான எதிரியை வீழ்த்துவதற்காக
நாம் ஒன்று சேருவது என்பது
காலத்தின் கட்டாயம் "
என்ற முன்னுரையோடு
கதை சொல்லத் துவங்கினார் தலைவர்

"ஒரு கிராமத்து தோட்டத்தில்
செழித்து வளர்ந்திருந்தது ஒரு வாழைமரம்
அதன் அடியில் கிடந்தது ஒரு மண்ணாங்கட்டி
இருவரும் அருகருகே இருந்தும்
இருவரும் எதிரிகளைப் போலிருந்தனர்
ஒருவருக்கொருவர் உதவியாயில்லை
இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட
ஆதிக்க மனம் கொண்ட
காற்றும் மழையும் அவைகளை ஒழிக்கப் பார்த்தன
காற்றில் வாழை சாய்வது குறித்து
மண்ணாங்காட்டி கவலைகொள்ளவில்லை
மழையில் மண்ணாங்கட்டி கரைவது குறித்து
வாழையும்  வருத்தப்படவில்லை
அவைகள் அழிந்து கொண்டிருந்தன

அந்த சமயத்தில்தான் நம் போல
சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அந்த வாழைக்கும் வந்தது

"மண்ணாங்கட்டி நாம் மிக அருகில் இருந்தும்
சிறு சிறு வேறுபாடுகளை பெரிதுபடுத்தி
மிக விலகிப்போய்விட்டோம்
அது இந்த ஆதிக்கக் காரர்களுக்கு
மிகுந்த வசதியாய் போய்விட்டது
இனியும் இந்த அவலம் தொடரக்கூடாது
காற்று பலமாக வீசினால் நீ என் மீது
சாய்ந்துகொள் நான் சாயமாட்டேன்
மழையெனில் நான் உன்னை மூடிக்கொள்கிறேன்
நீ கரையமாட்டாய்"  என்றது
அது போலவே நாமும் அவர்களும் ..." என
கதை சொல்லி முடிப்பதற்குள்
கரகோஷம் அரங்கத்தை அதிரச் செய்தது

மிகப் பெரிய கொள்கை விளக்கத்தை
ஒரு எளிய கதையில் சொல்லிய தலைவரின்
மதியூகத்தை எண்ணி தொண்டர்கள்
புளங்காகிதம் கொண்டனர்

தலைவர் பெருமையுடன் கூட்டத்தைப் பார்த்திருக்க
முன் வரிசையில் இருந்த தொண்டர் ஒருவர் எழுந்து
"தலைவா நீங்கள் சொல்வது மிகச் சரி
ஆனால் காற்றும் மழையும் சேர்ந்து வந்தால்
என்ன செய்வது ? " என்றான்

தலைவர் அதிர்ந்து போனார்
இப்படி யோசிக்கத் தெரிந்தவன் எப்படி நம்
கட்சிக்குள் வந்தான் எனக் குழம்பியும் போனார்
இதனை வளர விடுவது ஆபத்து என்பது
அவருக்குப் புரிந்து போயிற்று
அவரது பழுத்த அரசியல் அறிவும்
உடன் கைகொடுத்தது

"கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த முயலுகிற இவன்
நிச்சயம் நம் தொண்டனில்லை
எதிரிகளின் ஒற்றன்
இவனை அடித்து வெளியேற்றுங்க்கள் " என்றார்

வெறி பிடித்த கூட்டம் அந்த "முட்டாளை " நோக்கி
அதி வேகமாய் முன்னேறிக் கொண்டிருந்தது

Monday, February 15, 2016

நமைச்சல்..

தனித்துக்  காட்டவா  ?
உயரம் கூட்டிக் காட்டவா ?

எப்போதும் பசி வெறியில் திரியும்
தன்முனைப்பு ஓநாய்க்கு விருந்தளிக்கவா ?

கும்பலுக்குள்  ஓர் அடையாளம் தேடியா ?

மன முதுகின் அழுக்கெடுக்க சில
நகங்கள் கொண்ட கைகள் தேடியா ?

யதார்த்தப் புறவெளிக் கஞ்சி
குகைக்குள் பதுங்கும் கோழைத்தனமா ?

செயலற்ற தன்மைக்கு வாங்கும்
கௌரவ வக்காலத்தா ?

அறிந்தவைகள் தெரிந்தவைகள்
செரிக்காது எடுக்கும் வாந்தியா ?

புண் மறைக்கப் போடும் பட்டுச் சட்டையா ?

போனபின் சொல்வதற்கு ஒரு
சிறப்புத் தகுதி வேண்டியா ?

நமைச்சலுக்கான காரணம் தெரியாவிடினும்
சொறியாது இருக்க முடியவில்லை
எப்படி யோசித்த போதும்
ஒரு காரணமும் தெரியவில்லை

ஆனாலும்
எழுதாது இருக்க முடியவில்லை

Sunday, February 14, 2016

மீண்டும் ஒரு காதல் கவிதை

பல்லவி கிடைத்த புலவன் போல
பாடிக் களிக்கிறேன்-பந்தய
எல்லையைத் தொட்ட வீரன் போல
தாவிக் குதிக்கிறேன்
கருவிழி பார்த்த பார்வை ஒன்றில்
கவிழ்ந்து போகிறேன்-உன்
ஒருமொழி கேட்ட கணத்தில் நானும்
கவிஞன ஆகிறேன்

நிலவு கூட நெருங்கி வந்து
சொந்தம் கொள்ளுதே -சோலை
மலரும் கூட மணந்து எனக்கு
பந்தம் என்குதே
மனது கூட எல்லை கடந்து
எங்கோ பறக்குதே-அடக்
கனவு போல கவிதை நூறு
தானாய் சுரக்குதே

உணவை நீரை மறுத்த உடலும்
சக்தி கொள்ளுதே -உன்
நினைவு ஒன்றே போதும் என்று
மனதும் சொல்லுதே- உன்
நினைவும் கனவும் கலந்த நிலையில்
சொர்க்கம் தெரியுதே -அந்த
நிலையில் உதிர்க்கும் உளறலை உலகம்
கவிதை என்குதே

பொன்னும் பொருளும் கோடி வந்து
என்னைச் சேரலாம்- இந்த
மண்ணே என்னை மன்னவ னாக்கி
மகிழ்ந்தும் போற்றலாம்-உன்
மடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு
இவைகள் ஈடாமோ-அந்தத்
துடிப்பைச் சொல்லும் கவிதை இதற்கு
என்றும்  நிகராமோ

(காதலர்களுக்கு   சமர்ப்பணம்  )