Wednesday, June 13, 2018

காலா







ஒவ்வொரு முறை இங்கு (யு.எஸ் )
வரும்போதும் அவசியம் பார்க்கவேண்டும் என
நான் எண்ணும் ஒரு திரைப்படம்  வெளியாகும் .
ஒருமுறை கபாலி ,ஒருமுறை
பாகுபலி 2 ,இப்போது  காலா

நான் சிறுவயதில் மதுரையை ஒட்டிய ஒரு
சிறிய கிராமத்தில்வளர்ந்தவன் .
அங்கு சினிமா என்றால்
எங்கள் ஊரில் டெண்ட்   கொட்டகையில்
வெளியாகும் சினிமாதான்

அதுவும் காலாண்டு   அரை அரையாண்டு
முழு ஆண்டுதேர்வு விடுமுறைக்கு
தலா ஒருபடம் வீதம் வருடத்திற்குமூன்று படம்
மற்றும் தீபாவளி பொங்கல் பண்டிகைக்கு
வெளியாகும் ஒரு சிறப்புத் திரைப்படம்.
அதுதான் வாய்க்கும்
(இந்தச் சிறப்புத் திரைப்படம் கூடுமானவரையில்
ஒரு புரட்சித்தலைவரின் படமாகத்தான் இருக்கும் )

இந்தப் படம் பார்க்கக் கூட அதிக மெனக்கெட
வேண்டியிருக்கும்விடுமுறை முடிந்து
பள்ளிக்கூடம் போனதும் லீவில்
என்ன படம் பார்த்தாய் என்பதுதான் உடன் படிக்கும்
மாணவர்களின் முதல் கேள்வியாயிருக்கும் .
பார்க்கவில்லை என்றால்அதுவே ஒரு தகுதிக்
 குறைவு போல் மதிக்கப்படும்

அதற்காகவே வீட்டில்   அழாத குறையாக அடம் பிடித்து
ஒரு திரைப்படம்  எப்படியும் பார்த்து விடுவோம்
வீட்டிலும் இதை சாக்காக வைத்து பல்ப் துடைப்பது
மாடி கூட்டுவது ,கொல்லைப்புற அறையைச் சுத்தம்
செய்ய வைப்பது முதலான பல வேலைகளை
வாங்கி விடுவார்கள்   என்பது வேறு விஷயம்

அப்படிப் பார்த்துப் போய்ப் கதை சொன்னால் கூட
நம்பாமல் கதை யாரிடமோ கதையை கேட்டு
கதை விடுகிறாய் என சொன்னதற்காக சினிமா
டிக்கெட்டைக் கூட பத்திரமாய் கொண்டு போய்
காண்பித்த நிகழ்வெல்லாம் இப்போதும் நினைவில்
இருக்கிறது

இப்படி சினிமா பார்த்துப் போய் பெருமையைப்
பீத்தலாம் எனப் போனால் வசதியான வீட்டுப்
பசங்க இரண்டொருவர் டவுனில் படம் பார்த்து விட்டு
அந்தப் பெருமையைப் பீத்த நாங்கள்
ஒன்று மத்தவர்களாய்கவனிக்கப்படாமல் அவர்கள்
பீத்தலுக்கு அடிமையாகிஅவர்கள் சொல்கிற
கதையைக் கேட்க வாய்ப்பிளந்துக்கிடப்போம்

அதிலும் சுப்பையான்னு ஒரு பையன் .ஒரு சினிமா
கதையைப் பகுதி பகுதியாய்  நான்கு ஐந்து நாள்
சுவாரஸ்யம் குறையாமல் சொல்வான்
முத்து  மண்டபம்  என்று ஒரு சஸ்பென்ஸ் படம்
அதில் கொலைகாரன் யாரென்று சொல்லாமல்
எங்களை ஐந்து நாள் திண்டாடவிட்டு பின் ஒரு நாள்
இரக்கப்பட்டு முடிவைச் சொன்னான் .அதுவும்
அவன் புத்தகத்திற்கு அட்டைப்போட்டுக் கொடுத்த பின்பு

இப்படி வளர்ந்த சூழ் நிலையில் பின் உயர் நிலைப்
பள்ளி வந்ததும்   டவுனில் சினிமா பார்ப்பதற்காக
காசு சேர்த்த கதை ,காலைப்  பத்து மணி
காட்சிக்குப் போய்தொடர்ந்து இரண்டு காட்சிக்கு
 டிக்கெட் கிடைக்காது போயும் மனம் தளராது
நள்ளிரவுக்கு காட்சிப் பார்த்து
ஊருக்கு நடந்தே திரும்பிய கதை ,பெண்கள் மற்றும்
சிறுவர்களுக்கென இருந்த 70 பைசா டிக்கெட்
எடுப்பதற்காக  (பெரியவர்களுக்கு 80 பைசா )  முட்டி
மடித்து குள்ளமாய் நடந்த கதை ,என எம் வாழ்வோடு
பின்னிப்பிணைந்த சினிமா தொடர்பான
நினைவுகள் எல்லாம் இந்தக் காலா படம் பார்க்க
அந்தத் திரைப்படத் தியேட்டர் வாயிலில் காரை விட்டு
இறங்கியதும்  தொடர்ச்சியாய் வந்து போனது
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை

                                                                  ( தொடரும்   )

   

Monday, June 4, 2018

மூல மந்திரம்

உயிரின் அருமை
அறிந்து தெளிந்தோம்
அதன் காரணமாய்
உடல் மீது கவனம் கொண்டோம்

உடல் மீது
கவனம்  கொண்டோம்
அதன் பொருட்டு
உட்கொள்பவைகளின் மீது
அக்கறை   கொண்டோம்

உட்கொள்பவைகளின் மீது
அக்கறை   கொண்டோம்
அதன் தொடர்ச்சியாய் 
நிலம், நீர்,வெளி இவைகளின்
அருமை அறிந்தோம்

நிலம், நீர் ,வெளியதன்
அருமை அறிந்தோம்
அதன் நீட்சியாய்
அதன் தூய்மையைக்  காத்தலே
முதல் நெறி என உணர்ந்தோம்

'எதிரிலிருக்கும்  கோன் உயர
வெளியே விரவிக்கிடக்கும்
வரப்புயர்தல்  அவசியம் "என்ற
அவ்வையின் அறிவுரை
அறிந்த நமக்கு

 "உடல் வளர்த்தேன்
உயிர் வளர்த்தேனே  " என்று
விரிந்த ஒன்றை சுருங்கச் சொன்ன 
திரு மூலரின்  வாக்கினைப்
புரிந்த நமக்கு

"சுற்றுப்புறச் சூழல் காத்தலே
நம் உடல் காக்கும்
நம் உடல் மூலம் நம் உயிர்  காக்கும்
மூல மந்திரம்  "என்பதனை
பிறர் விளக்கவேண்டுமா என்ன ?

Friday, June 1, 2018

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

அதிகாலைச் சூரியனோடு
கைகோர்த்து நடை பயிலுங்கள்
அது உடலினை உறுதி செய்யும்

மாலை நேரத் தென்றலோடு
மனம் திறந்து பேசுங்கள்
அது மனப்பளுவைக் கனவாக்கிப் போகும்

முழு நிலவின் ஒளியோடு
கரையக் கற்றுக் கொள்ளுங்கள்
அது பல உன்னதங்களை அறிமுகம் செய்து போகும்

பூத்துச் சிரிக்கும் மண  மலரோடு
சினேகம் செய்து கொள்ளுங்கள்
அது வாழ்வின் அர்த்தத்தை தெளிவாக்கிப் போகும்

நீலக் கடலின்  பிரமாண்டத்தில்
இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அது  பேரறிவாளனை உணரச் செய்து போகும்

காட்டோடும் மலையோடும்
தனித்திருக்கப் பழகுங்கள்
அது   அமைதியின்  அருமை  உணர்த்திப் போகும்

 இவை எதற்கும் நேரமில்லையெனில்
குழந்தைகளோடு  இணைந்திருக்க  முயலுங்கள்
நிச்சயம்  அது
இவை அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்துத் தரும்

Wednesday, May 30, 2018

பிரசவ சங்கல்பம்

தன்னைப் பாதிக்கிற
ஒவவொரு நிகழ்வும்
ஒவவொரு உணர்வும்
கருவாகி
அவனுள் வளர்ந்து
கவியாக வரும் வரை
கவிஞன் படும் பிரவச அவஸ்தை
அவன் மட்டுமே அறிந்தது

ஆயினும்
கருவானது கவியாகி
கால் கொண்டு நடக்கையில்
அது தரும் அவஸ்தை
அது கூட அவன் மட்டுமே அறிந்தது

இளைஞர்களை கொள்ளை கொண்ட
'இழந்த காதலை'
இயற்றிய அவனே
மறந்து போன நிலையில்...

கவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்
'யார் அந்த அழகு சுந்தரி
இப்பொது கூட விலகி கொள்கிறேன்
இடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என
கண் கசக்கிப் போனாள்
இந்தப் பிரச்சனை ஒயவே
ஆறு மாதங்கள் ஆகிப்போனது

'நண்பனின் நயவஞ்சகம்'
கவிதை வெளிவந்த பின்னே
கவிஞனின் நெருங்கிய நண்பன்
தொடர்பு எல்லையை விட்டு
தொலைந்தே போனான்

அதற்கான காரணம்
இதுவரை
கவிஞனுக்கு விளங்கவே இல்லை

'சம்பந்திகளின் தர்பார்'
கவிதைக்கு பின்னே
மாப்பிள்ளை முகம் கொடுதது பேசுவதே இல்லை

'தவறினை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்
கவிதையாக்கி
அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
சொல்லி போன சம்பந்தி
கவிஞனின் வீட்டுப் பக்கம்
இன்று வரை வரவே இல்லை

முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?

கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்

கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்

ஆனாலும் என்ன.....
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன

Saturday, May 26, 2018

கால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்...

கால எல்லைகளை
கடக்கத் தெரிந்தால்
இணக்கமாய் மனத்துள்
நினைக்க முடிந்தால்
புரியாத புதிர்கள்
புரிந்து போகுமோ ?
குழப்பிய நிகழ்வுகள்
சீராகிப் போகுமோ ?

கவிஞராக இல்லாது
வணிகராக இருந்தவர்
ஒருசிறு அதிர்வினில்
பெருங்கவிஞர் ஆவது
எங்ஙனம் சாத்தியம் ?

முத்தான கவிதை
என்பது கூட
நிச்சயமாய் சாத்தியம்
"முத்தைத்தரு பத்தித் திரு நகை.."
எங்ஙனம் சாத்தியம்  ?

முருகனடியாரின்
கதைகேட்டு நானும்
குழம்பித் தவித்ததுண்டு
நம்பாது கதையென்று
நாளும் நினைத்ததுண்டு

ஒரு நாள்..
கைபேசி மாற்றாது
"சிம்"மதனை மட்டுமே
சில நேரம் மாற்றிவிட
அலைபேசியின் உள்ளடக்கம்
அடியோடு மாறிவிட
புதிருக்குத் தெரிந்தது புதிய வழி
எனக்குள் புகுந்தது புதிய ஒளி

உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?

Friday, May 25, 2018

அமைதியில் நிலைப்போம்..

மன அமைதியை இரசிப்போம்
மன அமைதியில் இலயிப்போம்
மன அமைதியில் நிலைப்போம்

மன அமைதியே பேரானந்தத்தின்  ஊற்று
மன அமைதியே கலைகளுக்கு ஆசான்
மன அமைதியே சக்திக்கு ஆதார மையம்

பரந்து விரிந்த புல்வெளி
பனிபடந்த மலைச் சிகரம்
சலசலத்து ஓடும் சிற்றோடை
ஆரவாரமற்ற தெய்வ சன்னதி
மழலையின் மயக்கும் சிரிப்பு ...

இன்ன பிற  எல்லாம்
அமைதியின்
உற்பத்திச் சாலைகள் இல்லை

அமைதியின்
 சுகம்காட்டும்
அற்புத ஆதாரமையங்கள்

ஆதாரமையங்கள்  வழி
நம் மன இரசிப்பைத் துவங்குவோம்

மனம் அமைதியை இரசித்தல்
 வெறும் துவக்கமேஎன அறிந்தபடி...

மனம் அமைதியில் இலயித்தல்
ஒரு  தொடர்ச்சியேஎன உணர்ந்தபடி..

மனம் அமைதியில் நிலைத்தேலே
 முதிர்ச்சி எனத்  தெளிந்தபடி ....

Thursday, May 24, 2018

ஆலையில்லா ஊரில்...

அவசரத்தில் போகிறப்  போக்கில்
எதிர்ப்படும் நண்பனை
விசாரித்துப்போகும்
 "மினிச் சுகத்தை "
"டுவீட்டுகளிலும்

அவசியமாகத்  தவிர்க்க முடியாதுக்
காத்திருக்கும் தருணங்களில்
சந்தித்த நண்பனுடன்
உரையாடும்
 "தனிச் சுகத்தை "
"முக நூலிலும் "

விடுமுறை நாட்களில்
ஊர்க்கோடிப்  பாலத்தில் அமர்ந்து
சாவகாசமாகப் பேசும்
 "அற்புதச் சுகத்தை"
"பதிவுப் பக்கங்களிலும் "

அனுபவித்தபடி என்னை நான்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்

என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்தக்
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக்  காட்டுக்குள்
அன்றாடம் அலைந்து திரிந்துத்   ...
தன்  சுயம் தொலைப்பவன் ...

முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர்விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்

குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
மெய் நிகர்க்  காட்சிகளைக் கண்டு  தானே
" மெய்மறக்க  " முடியும்