Tuesday, October 30, 2018

நீதி மன்றமும் நியாய சபையும்

குற்றவாளிக் கூண்டில் பதட்டத்தில்
கைகளைப் பிசைந்தபடி நீதிபதியைப் பார்க்கிறேன்
அவர் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கிறார்

"எனவே சந்தர்ப்பச் சாட்சியங்களை தீர விசாரித்த
வகையில் இவர் மீதுள்ள குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபணம் ஆன படியால்...."

அவர் தொடர்ந்து படிக்கிறார்

நான் சத்தமாய்க் கதறுகிறேன் " ஐயா நல்ல
விசாரிங்க ஐயா.. இது ஒரு தப்புத்தான்
ஏதோ ஒரு கோபத்தில் நடந்து போனது.
மத்தபடி ஊருக்கு ஆயிரம் நன்மை
செய்திருக்கிறேன் ஐயா......கொஞ்சம்
கருணை காட்டுங்க ஐயா....

என்னை இடைமறித்த நீதிபதி ' இது
நியாய சபையல்ல. உன்னைப்பற்றி
முழுவதும் தெரிந்து கொள்வதற்கு
நீ செய்த இந்தக் குற்றம் குறித்து மட்டுமே
இந்த மன்றம் கவனத்தில் கொள்ளும்....
எனவே நீதி மன்றம் ஏற்கெனவே வழங்கிய
10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை
இந்த நீதிமனறம் உறுதி செய்கிறது...

இதற்கு மேல் என் செவியில் எதுவும்
விழவில்லை.சடாரென மயங்கிக் கீழே சரிகிறேன்.

நான்விழித்துப் பார்க்கையில் எம கிங்கரர்கள்
புடை சூழ வேறு ஒரு குற்றவாளிக் கூண்டில்
நிற்கிறேன்

எதிரே சிம்மாசனத்தில் ஆஜானுபாவனாய் அமர்ந்திருந்த
எம தர்மன் தீர்ப்பை வாசிக்கக் துவங்குகிறார்

கொஞ்சம் தைரியத்தை கூட்டியபடி "ஐயா
விசாரிக்கவே இல்லை. அதற்குள் தீர்ப்பைப்
படிக்கிறீர்களே ..." என்கிறேன்

அவர் கடகடவென சிரித்தபடி "சாட்சி, சந்தர்ப்பம்
மண்ணாங்கட்டி மட்டை எல்லாம் உங்கள்
நீதிமன்றங்களில் தான்.இங்கு நாங்கள் எவரையும்
விசாரிக்க வேண்டியதில்லை.உன் பிறப்பு முதல்
இறப்பு வரையிலான செயல்பாடுகள் எல்லாம்
எங்களுக்கு அத்துப்படி... எனவே...

அவர் படிக்கத் துவங்க எனக்குள் எண்ணைக்
கொப்பறை சவுக்கு,முள்படுக்கை எல்லாம்
நினைவுக்க் வர உடல் நடுங்கத் துவங்குகிறது

அவர் தொடர்கிறார் " இவர் கோபத்தில்
சில பாவங்களைச் செய்திருந்தாலும் கூட
அதையும் தாண்டிய வகையில் ஏழை எளிய
மக்களுக்கு தன்னாலான சேவையை தொடர்ந்து
செய்துள்ளபடியால்..இவரை இரண்டாம் நிலை
சொர்க்கத்துக்குப் பரிந்துரை செய்கிறேன்..

என்னால் நம்பவே முடியவில்லை.என்னைக்
கிள்ளிப்பார்த்துக் கொள்கிறேன்.

" ஐயா இப்படின்னு தெரிஞ்சா இன்னும் நிறைய
நனமை செய்திருப்பேனே. முதல் நிலைக்குப்
போயிருப்பேனே.. ஐயா ஐயா இன்னொரு
சந்த்ர்ப்பம் கொடுங்கையா.. ஐயா.. ஐயா..

நான் கதறுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை
என்னை வலுக்கட்டாயமாக அங்குள்ள பல்லக்கில்
ஏற்றுகிறார்கள்..

நான் திமிரத் திமிர என் முகத்தில் சட்டென
ஏதோ ஈரப்பதம் தென்பட முகத்தைத் துடைக்கிறேன்

எதிரே பித்தளைச் செம்புடன் என் மனைவி..

Monday, October 29, 2018

ஆனந்தத்தின் அற்புதம்

அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்

யானையக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்க பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடித்
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேடையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

Saturday, October 27, 2018

மார்கெட்டிங்கும் பிசினெஸ்ஸும்

'இத்தனை நாள் நான் பிஸினெஸ்ஸில்
இருக்கிறேன் எனத்தான் பேரு
நிஜமாகவே இந்த பயிற்சி வகுப்புக்குப் போய்த்தான்
மார்கெட்டிங்கிற்கும் பிசினெஸ்ஸுக்குமான
வித்தியாசம் புரிந்தது "என்றான் நண்பன்

நான் மெல்லச் சிரித்தபடிக் கேட்டேன்
"இந்தப் பயிற்சி வகுப்புக்கு எவ்வளவு செலவு"

'ஒரு முழு நாளுக்கு பத்தாயிரம்
உணவு உட்பட "என்றான்

'இதோ வெளியே எட்டிப்பார்
அந்தப் பயிற்சி இலவசமாகவே "என்றேன்

வெளியே நடுரோட்டின் கொட்டடித்துக்
கீரிப் பாம்புச் சண்டையென கூட்டம் கூட்டி
நல்ல கூடம் சேர்ந்ததும் தன் தாயத்தின்
மகிமையை விளக்கி விறபனை செய்து
கொண்டிருந்தான் அந்தப் பாம்பாட்டி

நண்பனின் முகம் இறுகிக் கொண்டிருந்தது.

Tuesday, August 28, 2018

வெள்ள நிவாரண சேவைப்பணி

உலகில் எங்கு தேவை உள்ளதோ
அங்கு நிச்சயம் உடன் உதவ அரிமாக்கள்  இருப்பார்கள்
என்பது உலகம் முழுதும் அறிந்த மொழி

மிகக் குறிப்பாக வில்லாபுரம் அரிமா சங்கமும்
அது துவங்கக் காரணமாக இருந்த
வில்லாபுரம் புது நகர் குடியிருப்போர்
நலச் சங்கமும் இருக்கும்   என்பது
மதுரை மாவட்டம் அறிந்தச் செய்தி

சென்னை நகரம் புயலால் பாதிக்கப்பட்டபோது
சுமார் பத்து இலட்சம் மதிப்பிலான
நிவாரணப்பொருட்களுடன் பாதிக்கப்பட்ட
பகுதிக்கு  (முடிச்சூர்) நேரடியாகச் சென்று
வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றதன்
தொடர்ச்சியாய் ..... அதன் மூலம் பெற்ற
அனுபவத்தின் தொடர்ச்சியாய் ...

(அப்போது வழிப்பறி கொள்ளையர்களாய்
சில கட்சிக்காரர்களே இருக்க அதனைத்
தடுக்கும் விதமாய் காவல்துறை
அதிகாரிகளை உடன் அழைத்துச் சென்றது,
வெறும் உணவுப் பொட்டலங்கள் மட்டுமின்றி
சமையல் சாமான்கள் பத்து நாட்களுக்கு
வரும்படியாக தனித்தனியாக பேக் செய்து
கொண்டு போனது ,  மெழுகுவர்த்தி
தீப்பெட்டி ,டார்ச் லைட் ,மருந்துப்  பொருட்கள்
என உடனடியாகவும்   தொடர்ந்து சிலநாட்களுக்கு
அவர்களுக்குத் பயன்படும்படியாய் பார்த்துப் பார்த்து
சேகரித்துக் கொண்டு போனது , மிகச் சரியாக
முறையாக பாதிக்கப்பட்டோரை நிவாரணப் பொருட்கள்
சேரவேண்டும் என்பதற்காக முடிச்சூரில் இருந்த
சேவை மனப்பான்மை கொண்ட அமைப்புடன்
இணைந்து பகிர்ந்தளித்தது இத்யாதி ..இத்யாதி )

..இம்முறை கேரளாவில் அதிகம் பாதிக்கப்பட்ட
ஆலுவா என்கிற பகுதியினைத் தேர்ந்தெடுத்து
அப்பகுதியில் சுமார் 1500 பேருக்குப் பயன்படும்படியாக
சுமார் பதினைந்து இலட்சம் மதிப்பிலான
நிவாரணப் பொருட்களை சேகரம் செய்து
மிகச் சரியாக முறையாக பகிர்ந்துதளித்து
திரும்பி இருக்கிற சேவைச் செம்மல்களை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்

இந்த மாபெரும் சேவைப் பணியினை
முன்னின்று முறையாகச் செய்து தந்த

வில்லாபுரம் புதுநகர் குடியிருப்போர் சங்க
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் ,

வில்லாபுரம் புது நகர் அரிமா சங்க முன்னாள் ,
மற்றும் இவ்வருட  நிர்வாகிகளுக்கும்
துடிப்புமிக்க உறுப்பினர்களுக்கும்

வில்லாபுரம் புதுநகர் பேட்மிண்டன் சங்க
பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்

மிக  முக்கியமாய் இவர்கள் அனைவரையும்
மிகக் சரியாய் ஒருங்கிணைத்து இந்த
வெள்ள நிவாரண சேவைப்பணிமிகச் சரியாய்
நடைபெறக் காரணமாய் இருந்த
வில்லாபுரம் புது நகர் அரிமா சங்க
பட்டயத் தலைவர் /குடியிருப்போர் சங்கச்
செயலாளர் லயன் இப்ராகிம் சுல்தான் சேட்
அவர்களுக்கும்

எங்கள் மனமார்ந்த நன்றியினைக்
காணிக்கையாக்கி அது  தொடர்பான
புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்வதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்










:





Tuesday, August 21, 2018

விஸ்வ ரூபம் எடுத்த வாமனர்கள்

சாதாரண நாட்களில் படித்துக் கொண்டும்
விளையாடிக் கொண்டும் ஒய்வு நேரங்களில்
ஜாலியாகச் சினிமா மற்றும் வெட்டி அரட்டை
அடித்தபடி   சிரித்துப்  பேசி
கலாய்த்துக் கொண்டு  மட்டுமே
இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும்
இளைஞர்களுக்குள்  ,

நீறுபூத்த நெருப்பாக சமூகப் பொறுப்பும்
சேவை மனப்பான்மையும்  எவ்வளவு
கனன்று கொண்டிருக்கிறது  என்பதற்கு
வெள்ளம் புயல் போன்ற அசாதாரண
சூழல்கள்  வரும்போதுதான் நமக்கே
புரியவும் செய்கிறது ,நம் நாட்டின் வருங்காலம்
குறித்து பெரும் நம்பிக்கையும் துளிர்க்கச் செய்து போகிறது

மதுரை டி .வி.ஸ்  நகரில் இயங்கிவரும்
இளைஞர்கள் அமைப்பின் சார்பில்
சில தினங்களுக்குள் சுமார் ஒன்றரை
மதிப்பிலான மருந்துப்பொருட்கள் நாப்கின்
டவல்ஸ் , பிஸ்கெட்ஸ்,டார்ச் லைட் /உடைகள்
மற்றும்   உடனடி அவசரத் தேவைக்கான
பொருட்களை ச் சேகரித்து நிவாரண
முகாம்களுக்கு அனுப்பிவைத்த நிகழ்வு
மிக்க பெருமிதம் தருகிறது

அவர்களது சேவையைப்  போற்றும் விதமாக
விஸ்வரூபம் எடுத்த வாமனர்களின்
புகைப்படங்களை இங்கு பகிர்வதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்






Monday, August 20, 2018

இம்முறையும் எப்போதும் போலவே ..

இம்முறையும் நாங்கள்
உறுதிமொழி   எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

இயற்கைக்கு எதிராக
எங்கள்  வசதியான வாழ்க்கைக்காக
நாங்கள்  செய்தக்  கொடுமைகளை

அது  தானாகத்  தன்னைச்
 சரிசெய்து கொள்ளச்
தன்னைச் சீர்திருத்திக் கொள்ள முயல

அது  எங்களுக்குப்   பேரிடராய்
பெரும் அழிவாய்
எம்  அன்றாட வாழ்வைப் பாதிக்க

இனியும் அது தொடர்ந்தால்
எம் நிலை அதோ கதிதான் என
மிகத்  தெளிவாய்ப் புரியக்

காடுகளை அழிப்பதில்லை
மண்வளம் கெடுப்பதில்லை
நீர் வளம் காக்கத் தவறுவதில்லை என

இன்னும் அற்புதமான
மிக மிக அவசியமான
உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

ஒவ்வொரு முறையும்
குடலும் உடலும்
குடியால் பாதிக்கப்பட

இனியும் குடித்தால்
உயிருக்கு உ த்தரவாதமில்லை என
மருத்துவர் கைவிரிக்க

இனியும் குடிப்பதில்லை என
மருத்துவருக்கு உறுதி தரும்
ஒரு மொடாக்   குடிகாரனைப்போலவே

இம்முறையும் நாங்கள்
உறுதிமொழி  எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

செயலால் துரும்பசைக்கக் கூடக்
சிறிது குனிந்து நிமிரும் சிரமம் இருக்கிறது என்பதால்

எண்ணத்தால் இமயம் அசைப்பதில்        வெற்றுச் சொல்லால் அதன் சிகரம் தொடுவதில்
சிறிதும் சிரமம் இல்லை என்பதால்

இம்முறையும் .....


Thursday, August 16, 2018

"தமிழனென்பேன் கன்னடியன் என்பேன்...

கையில் காசு குறைகிறதெனில்
வீட்டில்
சட்டிப் பானை உருட்டி
ஆர்ப்பாட்டம் செய்து...

காசு வ்ந்தவுடன்
அதனை
மதுக்கடையில் கொண்டு சேர்ப்பவனை
என்னவென்பாய் " என்றது
கருத்துப் பெருத்திருந்த
அந்தக் கார் மேகம்

"இதிலென்ன சந்தேகம்
குடிகாரன் என்பேன்
கூறு கெட்டவன் என்பேன்
இன்னும் சரியாகச் சொன்னால்
வாழத் தகுதியற்றவன் என்பேன்"
என்றேன்

இகழ்ச்சியாய் மின்னலாய்ச்
சிரித்த மேகம்...

"அது சரி
அப்படியானால்
குறைவாய்க் கொடுக்கையில்
அதன் அருமை புரிந்து
பகிர்ந்துவாழப் பழகாது
அரசியல் செய்பவனை

அதிகமாய்க் கொடுக்கையில்
சேமிக்கத்  தெரியாது
அதனை வீணாய்க்
கடலில் சேர்ப்பவனை
என்னவென்பாய் " என்றது நக்கலாய்..

சுருக்கென்றது

"தமிழனென்பேன்
கன்னடியன் என்பேன்
இன்னும் சரியாகச் சொன்னால்
இந்தியன் என்பேன் "
எனத் தான் சொல்லத் தோன்றியது

ஆனாலும்
இனப்பற்றும் நாட்டுப்பற்றும்
இடையிலிருந்துத் தடுக்க
மௌனமானேன்

மௌனத்தில் எரிச்சல் கொண்ட மேகம்
இடியெனச் சிரித்து
இன்னும் கருத்துக் கனக்கத் துவங்கியது

கோபத்தில் அது
இன்னமும் "கொட்டித்" தீர்க்கலாம்
எனப்படுகிறது எனக்கு