Friday, January 10, 2020

வலைத்தள வீதி

முகநூல் நகரத்தின் பளபளப்பா
டுவிட்டர் வீதிகள் தந்த குதூகலமா
வாட்ஸ்அப் வீடுகளின் வசதி வாய்ப்புகளா
எதுவென சரியாக அனுமானிக்க முடியவில்லை..

மந்தையைப் பிரிந்த ஆடாக
சுற்றித் திரிந்து
மீண்டும்
வளைத்தள வீதி நுழைகையில்...

கூத்தும் கும்மாளமாயும்
இருந்த வீதி
குண்டு வீழ்ந்த சிறு நகரமாய்
சிதிலமடைந்துக் கிடக்கிறது...

சிரிப்பின் சப்தமும்
சந்தோஷ சங்கீதமும்
பொங்கித் ததும்பிய வீடுகள் எல்லாம்..

வெறுமை வெக்கையும்
சோம்பல் தூசியும் மண்ட
உட்பக்கத் தாளிட்டுக் கிடக்கின்றன

கூடவைத்துக் களித்த
சேர்த்துவைத்து இரசித்த
வலைமண்டபங்கள். இருந்த இடம்
நினைவூட்டும் மண்மேடுகளாய்....

ஆண்டுக்கொருமுறை
சுளுக்கெடுத்து உணர்வேற்றும்
சந்திப்புத் திருவிழாக்கள் எல்லாம்
வெறும் கனவாய்...பொய் நினைவாய்...

வெறுமை தந்த வேதனையுடன்
மெல்ல மெல்ல என் வலைவீட்டினை
சீர் செய்வதன் மூலமும்
மீண்டும்
வலைவீதியை உயிர்ப்பிக்க முயல்கிறேன்...

வலையகச் "சித்தர்களின் "
எழுச்சியும் சீரிய முயற்சியும்
வலைத்தள வீதியினை
நிச்சயம்
உயிர்ப்பிக்கும் எனும் உன்னத நம்பிக்கையுடனும்......

Thursday, January 9, 2020

யானைக் கொரு காலம் வந்தா..

நான் மதுரை வாசி.பிறந்து வளர்ந்ததெல்லாம்
மதுரையை ஒட்டிய பழைமையில் ஊறிய
ஒரு சிறு கிராமத்தில்தான்.

பச்சைப் பசேலென வயல்வெளி. நீர் நிறைந்த குளம்
காலையும் மாலையும் ஒலிபெருக்கியை விட அதிகச்
சப்தமெழுப்பி விடியலுக்கும் மாலைக்கும்
கட்டியம் கூறும் பறவைகள்..
திண்ணையுள்ள எப்போதும் திற்ந்தே
இருக்கும் வீட்டு வாசல்கள்.
சாப்பாட்டு வேளையில் எங்கிருக்கிறோமே அங்கேயே
உணவு அருந்தித்தான் ஆகவேண்டும் எனக்
கட்டாயப் படுத்தும் உறவுகள்....

இப்படி இப்படியென சொல்லிச் சொல்லிப்
பெருமைப் பட்டுக் கொள்ளும்படியாக நிறைய
இருந்தாலும்.....

சினிமா விஷயத்தில் ஒரு பெரும் குறை உண்டு
ஊருக்கு வெளியே வயல் நடுவே
ஒரே ஒரு டூரிங் டாக்கிஸ் மட்டும் உண்டு.
அந்த டூரிங் டாக்கீஸ் ஓனரும் உள்ளூர் காரர்
என்பதால் சமூகத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு
தனக்கும் உண்டு எனக் காட்டிக் கொள்ளவோ
என்னவோ அதிகமாகப் புராணப் படங்களையும்
அதிகப் பட்சம் குலுங்கிக் குலுங்கி அழும்படியான
படங்களையோ தான அதிகம் போடுவார்.
அதுமாதியான படங்கள்தான் எங்கள் ஊரிலும்
அதிகப் பட்சமாக நானகு நாட்கள் ஓடும்.

அதிலும் எங்கள் வீட்டுப் பெரியவர்கள்
ரொம்ப ரொம்பச் சுதாரிப்பானவர்கள்..
அந்த நாலு நாளில் படத்தைப் பார்த்தவர்கள்
கதை நல்லா இருக்கு கட் எதுவும் இல்லை என
சான்றிதழ் எல்லாம் கொடுத்தால் தான்
படம் போவது குறித்து யோசிப்பார்கள்.
அப்படி அவர்கள் விசாரித்து விசாரித்து
மாதம் ஒரு படம் போனாலும் படிக்கிற பையன்
அடிக்கடி படம் பார்க்கக் கூடாது எனச் சொல்லி
கால் பரிட்ச்சை அரைப்பரிட்ச்சை லீவில் ஒரு படமும்
கொஞ்சம் மனசு வந்தால் முழுப்பரிட்சை லீவில்
இரண்டு படமும் பார்க்க அனுப்புவார்கள்

எங்களுக்கு அதுவே போதும் எனத்தான் படும்
ஆனால் எங்கள் தெருவிலேயே ஊரில்
எட்டாம் வகுப்புக்கு மேல் இல்லாததால்
டவுனில் சென்று படிக்கும் பையன்கள்
வீட்டுக்குத் தெரியாமல் எப்படியோ
பணம் புரட்டி புதுப் படம் பார்த்து எங்களை
நாலு நாள் கெஞ்சவிட்டு இரண்டு மணி நேரப்
படத்தை நாளோன்றுக்கு ஒரு மணி நேரம்
என மூன்று நாள் சொல்லுகையில் தான்
வெறுத்துப் போவோம்

கதை கேட்கிற ஆர்வம் அதிகம் இருக்கிற
அதே வேளையில்
அவர்கள் மீதான பொறாமையும் என்று நாமும்
இப்படி ஒரு நாள் டவுனில் போய்
பக்கா தியேட்டரில் புதுப்படம் பார்ப்போம் என்கிற
ஏக்கமும் ஆதங்கமும் அதிகமாகவே பெருகும்

இப்படிப் பட்டச் சூழலில் ஒருநாள்....
எங்கள் நெருங்கிய  உறவினர் வீட்டில்
ஒரு அசுப காரியம் காரணமாக வெளியூர்
செல்ல நேர்ந்ததால் ஒரு நூறு ரூபாய்க்குக்
குறையாதபடி அறிவுரைகள் சொல்லி எதற்கும்
இதைக்கைக்காவலுக்கு வைத்துக் கொள் எனச் சொல்லி
ஒரு ரூபாயும் கொடுத்துப் போனார்கள்.

எப்போதுதான் விடியும் என பையில் இருந்த
அந்த ஒரு ரூபாயை ஆசையாய் தடவிப் பார்த்தபடி
இருந்த நான் விடிந்ததும் அந்த டவுனில் படிக்கும்
பையனைச் சந்தித்து என ஆசையைச் சொல்ல...
அவனும் "இன்று வெள்ளிக் கிழமை நான்கு காட்சிகள்
நிச்சயம் இருக்கும்.படம் வந்து முப்பது நாளும்
ஆகிப் போச்சு எனவே எழுபது பைசா டிக்கெட்
உறுதியாய் கிடைக்கும்.. போகையில் பஸ்ஸில்
போனாக் கூட வரும்போது கண்மாக்கரை
சுருக்கு வழியில் வந்து விடலாம் "எனச் சொல்லி
அழைத்து போனான்.

இவ்வளவு விளக்கமாக என கதையைச் சொல்லியபின்
என் ஆர்வம் குறித்து விரிவாக ஒரு பத்தி எழுத
வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

பஸ்சை விட்டு இறங்கும் முன்பாகவே வெளியே
எட்டிப் பார்க்க கூட்டம் இல்லாமல் இருந்ததும்
வாட்ச்மென் மட்டும் ஒற்றைக் கதவை மட்டும்
திறந்து வைத்து உட்கார்ந்திருந்ததும்
நிச்சயம் ஷோவும் இருக்கும் டிக்கெட்டும் கிடைக்கும்
என்கிற நம்பிக்கை வர குஷியாகிப் போனேன்

இருவரும் பஸ்ஸை விட்டு இறங்கி டிக்கெட்
கவுண்டர் அருகில் போய் நின்றோம்
கவுண்டர் இன்னும் திறக்கவில்லை நேரம்
இருக்கிறது போல நினைத்துக் கொண்டிருக்க
எங்களை பார்த்த வாட்ச்மென் " தம்பிங்களா
இன்னைக்கு காலைக் காட்சி இல்லை
மதியக் காட்சிதான் உண்டு அப்ப வாங்க "
எனச் சொல்லிக் கொண்டிருக்குக் போதே
நான்கு கார்கள் வாசல் பக்கம் வர வாட்ச்மென்
அவசரம் அவசரமாக ஓடி முழுக் கதவையும்
திறக்கத் துவங்கினார்.

அந்த நான்கு கார்களிலும் பெரியவர்களும்
சிறியவர்களும்  பெண்களும் இருந்தார்கள்.
அவர்கள் ஆடை அலங்காரங்களைப் பார்க்க
சினிமாவுக்கு வந்தவர்களைப் போலத்தான்
எனக்குப் பட்டது..

நான் மெல்ல வாட்ச்மெனை நெருங்கி
"படம் இல்லைன்னு சொல்றீங்க..
இவங்களைப் பார்த்தா சினிமாவுக்கு வந்தது
போலத் தானே தெரியுது " எனக் கேட்டே விட்டேன்

அவர் என்ன நினைத்தாரோ எங்களை
"இந்தப் பக்கம் வாங்க "என கிழக்குச் சுவரோரம்
கூட்டிப் போய் " தம்பிங்களா இவங்க முதலாளிக்குச்
சொந்தக் காரங்க.. ஊரில இருந்து வந்திருக்காங்க
இவங்களுக்காக மட்டும்தான் இன்னைக்கு
காலை ஷோ..வெள்ளிக் கிழமை நாலு ஷோவை
போனவாரமே எடுத்தாச்சு " என்றார்.

எனக்கு ஷோ இல்லாதது கூடப் பெரிதாகப்
படவில்லை. ஒரு இருபது பேருக்காக
ஒரு படத்தை ஓட்டுவதென்றால் எவ்வளவு செலவு
அவ்வளவு செலவு செய்கிற அளவுக்கு இவர்களுக்கு
அப்படியென்ன வசதி வாய்ப்பு என எண்ணி
மலைத்துப்ம்போனேன்

பின் வெகு நாட்களுக்கு ஒரு தியேட்டரில்
எத்தனை சீட்  இருக்கும் அதில் 40 பைசா
எவ்வளவு 70 பைசா 80 பைசா எவ்வளவு
மாடியில் ஒரு ரூபா சீட் எவ்வளவு
ஒரு ரூபா ஐம்பது பைசா எவ்வளவு
என எல்லாம் பெருக்கிப் பார்த்து நிச்சயம்
ஒரு நாள் நாமும் இப்படி முழு ஷோவையும்
நம் ஒரு குடும்பத்திற்கு என மட்டும் என
ஒதுக்கிப் பார்க்கவேண்டும் என தீர்மானிக்கத்
துவங்கிவிட்டேன்....

இந்தத் தீர்மானம் எத்தனை நாள் இருந்தது
கால வெள்ளத்தில் எப்படிக் கரைந்து போனது\
என்பது எல்லாம் என் நினைவில்
நேற்று வரை இல்லை.

நேற்று நண்பர்களுடன் டவுனில் இருக்கையில்
மாலையில் மீண்டும் டவுனில் வேலை இருப்பதால்
வீடு போய் திரும்புவது வெட்டி அலைச்சல்
அதற்குப் பதில் இங்கு பக்கம் உள்ள ஏ.சி தியேட்டரில்
ஏதாவது படம் பார்க்கலாம்.படம் எவ்வளவு
டப்பாவாக இருந்தாலும் பரவாயில்லை.
தியேட்டர் மட்டும் நல்லதாகப் பார்த்துப்
போவோம்..என முடிவெடுத்து ஒரு நல்ல தியேட்டர்
பார்த்துப் போனோம்..

நாங்கள் போவதற்குள் படம் போட்டிருந்தார்கள்
தட்டுத் தடுமாறி ஐந்து பேரும் சீட்டைத் தேடி
உட்கார்ந்துவிட்டோம்.படத்தையும் ஒருவழியாய்
இரசிக்கவும் துவங்கிவிட்டோம்.

இடைவேளைக்கு லைட்டைப் போட்டார்கள்
நான் மகிழ்ச்சியில் ஆஹா...ஹா என சப்தமாகக்
சிரிக்கத் துவங்கிவிட்டேன்
இவ்வளவு பெரிய சப்தம் என்னை
அறியாமல் வந்தது என எனக்கே ஆச்சரியமாக
இருந்தது..

வெளியில் ஸ்னாக்ஸ் விற்றுக் கொண்டிருந்த
பையன் கூட என்னவோ ஏதோ என
எட்டிப் பார்த்துப் போனான்.

அவனுக்கு எப்படித் தெரியும்
என ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய கனவு
மிக மிக எளிதாய் இப்படி எதிர்பாராத விதமாய்
நிறைவேறி இருக்கிறது என்று....

"என்ன விஷயம் இப்படித் திரும்பத் திரும்ப
இப்படி லூசுப் போல தொடர்ந்து
சிரிக்கிறாய் " என எரிச்சல்படத் துவங்கினர் நண்பர்கள்

"வாருங்கள்  காஃபி சாப்பிட்டபடிச் சொல்கிறேன்..
என அவர்கள் ஐவரையும் தியேட்டரை விட்டு
கேண்டீன் அழைத்து வந்தேன்

மொத்த தியேட்டரும் இப்போது காலியாக இருந்தது

Wednesday, January 8, 2020

முரண்....

தனியார்மயமாக்களுக்கு எதிரான
போராட்டத்திற்கு
ஆதரவு தேடும் நிமித்தம் அவர்கள்
முக நூல் டுவிட்டர்  பிளாக்கர் என
அத்தனை பிரச்சார வாய்ப்புகளையும்
பயன்படுத்த முயன்றார்கள்

ஆயினும்
தனியார் வசம் இருந்த
நெட் ஒர்க்குகள் பயன்பட்ட அளவு
விசுவாசமாக வைத்திருந்த
பி.எஸ் என் எல்.
கைகொடுக்கவில்லை..

ஆகவே பாவம்
தனியார் தயவினாலேயே அவர்கள்
தனியாரை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்

மாவட்டத் தலைவர்களை
முடிக்கிவிட பயணப்பட்ட
,மாநிலத்தலைவர்களுக்கு
வசதியான குளிரூட்டப்பட்ட
தனியார் பேருந்துகள்
கொடுத்த சுகப் பயணத்தை
அரசுப் பேருந்துகள் தர இயலாததால்
தலைவர்களால்  பாவம் அதையும்
பயன்படுத்த இயலவில்லை...

ஆகவே பாவம்
தனியார் உதவியுடனேயே
பொதுத் துறையை ஆதரித்துக் கொண்டுள்ளார்கள்

பொதுமக்களுக்கான
நல்வாழ்வுச் சட்டங்களுக்காக
பொதுமக்களை ஒன்றாகத் திரட்டும் பணிக்கு
தங்கள் கொள்கை முரண்பாடுகளும்
சுய நலங்களும் இடம் தரவில்லை
ஆகவே அவர்களால்
அரசுக்கு எதிரான பெருந்திரள்
போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை

ஆகவே பாவம்
பொதுத்துறை ஊழியர்களைத் தூண்டியே
அதைக் காப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள்

ஜன நாயகம் காக்க என இவர்கள்
போடுகிற வேஷமெல்லாம்
ஜன நாயகத்தை அழிக்கவும்
தொழிலாளி வர்க சர்வாதிகாரத்தை
வேரூன்ற வைக்கவுமே எனத் தெரிந்த பாமரனுக்கு
இவையெல்லாம் தெரியாமலிருக்க சாத்தியமே இல்லை

ஆகவே அவனும் எப்போதும் போல
தனக்குச் சம்பந்தே இல்லாததைப் போல
இவர்கள் ஆர்ப்பாட்டத்தை இரசித்துக் கொண்டிருக்கிறான்

Sunday, January 5, 2020

சின்ன விஷயந்தான் ...

பிளாஸ்டிக்  பையில் மீந்திருக்கிற உணவு இருக்கும்படியாக வெளியில் வீசி எரிய வேண்டாம் .இது போல சிறு உயிரினங்கள் உணவுடன் பிளாஸ்டிக்கையும் தின்று அதன் காரணமாகவே உயிரிழக்கின்றன
அனைவரின் மேலான கவனத்திற்காக

மீண்டும்..

மீண்டும் நான் ஓடத் துவங்குகிறேன்

என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் மீண்டும் எப்போதும் போல் ஓடத் துவங்குகிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடத் துவங்குகிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

மீண்டும் சீரான வேகத்தில்
முன்போலவேநான் என்னைக் கடக்கத் துவங்குகிறேன்

Saturday, October 5, 2019

நெத்தியடி என்பது யாதெனில்...

இன்னும் கொஞ்சம்
நாகரீகமாய்ச் சொல்லி இருக்கலாம்

இதை இவ்வளவு அழுத்தமாய்ச்
சொல்லி இருக்கவேண்டியதில்லை

இதைச் சொல்லும் முன்
இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்

எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க
இது ஏன் இப்போது ?

இந்த அசட்டுத் தைரியம்
நிச்சயம் ஆபத்தானதுதான்

இப்படியெல்லாம்
உன் எழுத்துக்கு விமர்சனம் வருகிறது எனில்...

சரியான நேரத்தில்
மிகச் சரியாக
மிகச் சரியானதைத்தான்
சொல்லி இருக்கிறாய் எனச்
சொல்லத்தான் வேண்டுமா என்ன ?

Sunday, September 22, 2019

மனச்சாட்சியும் அரசியல் தெளிவும்

"மன்னராட்சியின் நீட்சியாய்
வாரீசுக்கு பட்டம் சூட்டிய
மேடையிலேயே
ஜனநாயகத்தின் சிறப்புக் குறித்து
எப்படிப் ,பேசுவது "

கடைசிச் சொட்டு இரத்தம் போல
கடைசி முயற்சியாய்
மெல்ல முனகியது மனச்சாட்சி..

"குவாட்டருக்கும்
நூறு ரூபாய் பணத்திற்கும்
காத்திருக்கும் கூட்டத்தில்
இதை மட்டுமல்ல
 எதையும் பேசலாம்
 எப்படியும் பேசலாம் "
என எக்காளமிட்டது
அரசியல் தெளிவு