Thursday, September 15, 2016

நாளைநாம் களத்தில் நிற்போம் வாரீர்...

தனக்கென
ஒரு நிறமற்றுக் -கூடும்
நிலமதன்
நிறம்பெற்று..

தனக்கென
ஒரு சுவையற்றுச் -சேரும்
பொருளதன்
சுவைப்பெற்று..

தனக்கென
ஒரு திசையற்றுச் -சரிவு
இழுத்திடும்
திசைப்பெற்று

தனக்கென
ஒரு சுகமற்றுப் -பரவும்
வழிகளில்
சுகமீந்து

சீரும் சிறப்புமாய்
திகழ்ந்தக்  காவேரி-நாளும்
சீறிப் புலியாகப்
பாய்ந்தக்  காவேரி

தமக்கிது
உரியதென்று-வன்மம்
கூட்டுவோர்
நிலைக்கண்டு

தமக்குள்
அடக்கிடவே-முயல்வோர்
அடாவடிச்
செயல்கண்டு

தமதெல்லைத்
தாண்டுதலைப் -பொறாதுச்
சீறுவோர்
வெறிகண்டு

தனக்குள்
எரிகிறாள்-ஊழிக்
காலத்து
நெருப்பாக

கௌரவர்
சபையினில்-பாஞ்சாலி
நின்றிட்ட
நிலைபோல

எதிர்கட்சி
எல்லோரும்- ஊமையாய்ப்
பாண்டவர்
நிலைகொள்ள

ஆளூவோர்
எல்லோரும்-குருட்டுத்
திருதிராஷ்டிரன்
நெறிகொள்ள

தவியாய்த் தவிக்கிறாள்
நம்தாய்க் காவேரி-தன்னை
விடுவிக்கத் துடிக்கிறாள்
பூம்புகார்க் காவேரி

வீடெரிய
வெற்று வீதியினைக்
காத்தல்
காவலனின்
கடமை ஆமோ ?

அன்னையின்
கரமிழுக்கும்
காமுகனைப்
பொறுத்திடுதல்
கண்ணியம் ஆமோ ?

காவிரியின்
வழிமறிக்கும்
கயவர்களின்
செயல்பொருத்தல்
கட்டுப்பாடு ஆமோ ?

இனம் வாழ
ஜாதிகடந்து
மதம் கடந்து
கட்சிகடந்து
நாளைநாம்
களத்தில் நிற்போம் வாரீர்

பொறுப்பதில்
பூமியெனினும்
பொங்கிடின்
எரிமலையென
உலகிது
உணரச்  செய்வோம் வாரீர்

9 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

காவிரியின் நிலையைப் பார்த்து வேதனைப்பட வேண்டிய நிலையாகிவிட்டதே. உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தும் கவிதை.

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் உணரச் செய்ய வேண்டும் ஐயா

Thulasidharan V Thillaiakathu said...

வேதனைதான் அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள் வேதனையை.

G.M Balasubramaniam said...

/நாளைநாம்
களத்தில் நிற்போம் வாரீர்/ எந்த களத்தில்..?

கோமதி அரசு said...

நாம் அனைவரும் இந்தியர் என்ற களத்தில் நின்று நம்நாட்டு மக்களுக்கு எல்லாமும் எல்லோருக்கும் என்ற நிலை வரவேண்டும்.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam said...
/நாளைநாம்
களத்தில் நிற்போம் வாரீர்/ எந்த களத்தில்..?//

போராட்டக் களத்தில்
அது வீதியா, வீடா
அது அவரவர் நிலைப் பொறுத்து..

வெங்கட் நாகராஜ் said...

வேதனை....

Bhanumathy Venkateswaran said...

வேதனையும், ஆத்திரமும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன.

Bhanumathy Venkateswaran said...

வேதனையும், ஆத்திரமும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன.

Post a Comment